சிதம்பரம் - 0631. சுடர்அனைய திருமேனி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சுடரனைய திருமேனி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
தேவரீர் தரிசனம் தந்து அடியேனை ஆட்கொள்ளவேண்டும்.

தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான


சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
     
சொருபகிரி யிடமேவு ...... முகமாறும்

சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
     
துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச

அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
     
அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி

அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
     
அதிசயமெ னருள்பாட ...... வரவேணும்

விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
     
மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன்

மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
     
மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
     
னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா

இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
     
யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சுடர்அனைய திருமேனி உடை, அழகு முது ஞான
     சொருப கிரி இடம் மேவு ...... முகம் ஆறும்,

சுரர் தெரியல் அளி பாட, மழலை கதி நறை பாய,
     துகிர் இதழின் மோழி வேத ...... மணம் வீச,

அடர் பவள ஒளி பாய, அரிய பரிபுரம் ஆட,
     அயில் கரமொடு, எழில் தோகை ...... மயில் ஏறி,

அடியன் இருவினை நீறு பட, அமரர் இது பூரை
     அதிசயம் என, அருள் பாட ...... வரவேணும்.

விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட,
     மிடறு அடைய விடம் வாரி ...... அருள்நாதன்,

மினல் அனைய இடை மாது இடமருவு குருநாதன்
     மிக மகிழ, அநுபூதி ...... அருள்வோனே!

இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குறமாதின்
     இணை இளநிர் முலை மார்பில் ...... அணைமார்பா!

இனியமுது புலிபாதனுடன் அரவு சதகோடி
     இருடியர்கள் புகழ் ஞான ...... பெருமாளே.


பதவுரை

      விடை பரவி --- இடப தேவரைத் துதித்து,

     அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட ---  பிரமன், திருமால், மற்ற தேவர், முனிவர் ஆகிய இவர்கள் கயிலைமலையில் ஓடி முறையிட

      விடம் வாரி --- ஆலகால விடத்தை வாரி எடுத்து,

     மிடறு அடைய --- கழுத்தில் பொருந்தி இருக்க உண்டு,

     அருள்நாதன் --- திருவருள் புரிந்த சிவபெருமானும்,

      மினல் அனைய இடைமாது --- மின்னலைப் போன்ற இடையை உடைய உமாதேவியார்,

     இடம் மருவு குருநாதன் --- இடப்பாகத்தில் பொருந்திய குருநாதரும் ஆகிய பரம்பொருள்,

      மிக மகிழ --- மிகவும் திருவுள்ளம் மிகிழுமாறு,

     அநுபூதி அருள்வோனே --- மெய்ஞ்ஞானத்தை உபதேசித்தவரே!

      இடர் கலிகள் பிணி ஓட --- துன்பமும் வறுமையும் பிறவிப் பிணியும் என்னை விட்டு ஓட,

     எனையும் அருள் --- அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு அருள் புரிந்த,

      குற மாதின் ---  வள்ளியம்மையாரினது,

     இளநிர் இணை முலை மார்பின் --- இளநீர் போன்ற இரு தனபாரங்களில்,

     அணை மார்பா --- தழுவுகின்ற திருமார்பை உடையவரே!

     இனிய முது --- இனிய குணங்களை உடைய பழையவரும் ஆகிய

     புலிபாதன் உடன் --- புலிக்கால் முனிவரோடு,

     அரவு ---  பதஞ்சலி முனிவரும்,

     சத கோடி இருடியர்கள் --- நூறு கோடி முனிவர்களும்    

     புகழ் ஞான --- சிதம்பரத்தில் பரவிப் புகழ ஞானமே வடிவாக எழுந்தருளி உள்ள

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

       சுடர் அனைய திருமேனி உடை அழகு --- சோதிப் பிழம்பு போன்ற திருமேனியினுடைய அழகு மிகுந்த,

      முதுஞான சொருப கிரி இடமேவு முகம் ஆறும் --- பழுத்த அறிவு மயமாகிய மலையின் மீது விளங்குகின்ற ஆறு திருமுகங்களுடனும்,

      சுரர் தெரியல் அளிபாட --- தேவர்கள் சூட்டிய தெய்வ மலர் மாலைகளில் வண்டுகள் இனிது பாடவும்,

      மழலை கதி நறைபாய --- தேவரீருடைய மழலை மொழியினின்று முத்தித் தேன் பெருகிப் பாயவும்,

      துகிர் இதழின் மொழி வேத மணம் வீச --- பவளம் போன்ற இதழிலிருந்து வெளிப்படும் செஞ்சொற்களில் வேத மணம் வீசவும்,

      அடர் பவள ஒளி பாய --- மிகுதியான பவள ஒளி திருமேனியில் இருந்து வெளிப்படவும்,

     அரிய பரிபுரம் ஆட ---  அருமையான திருவடிகளில் பரிபுரம் ஆடிக் கொண்டு ஒலிக்கவும்,

      அயில் கரமொடு --- வேலைத் தாங்கிய திருக்கரத்தோடு,

     எழில் தோகை மயில் ஏறி --- அழகிய தோகை உடைய  மயில் வாகனத்தின் மீது ஏறி,

      அடியன் இருவினை நீறு பட --- அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு ஒழியும் பொருட்டு,

      அமரர் இது பூரை அதிசயம் என --- தேவர்கள் இது அதிசயத்திலும் அதிசயம் என்று வியந்து,

     அருள்பாட --- தேவரீருடைய திருவருளைப் பாடவும்,

     வரவேணும் --- அடியேன் முன் வந்து அருள வேணும்.


பொழிப்புரை


         பிரமன், திருமால், மற்ற தேவர், முனிவர் ஆகிய இவர்கள் கயிலைமலையில் ஓடி, இடப தேவரைத் துதித்து, சிவபெருமானிடம் முறையிட, அவர்கள் முறைக்கு இரங்கி, ஆலகால விடத்தை வாரி எடுத்து, கழுத்தில் பொருந்தி இருக்க உண்டு, திருவருள் புரிந்த சிவபெருமானும், மின்னலைப் போன்ற இடையை உடைய உமாதேவியார் இடப்பாகத்தில் பொருந்திய குருநாதரும் ஆகிய பரம்பொருள் மிகவும் திருவுள்ளம் மிகிழுமாறு, மெய்ஞ்ஞானத்தை உபதேசித்தவரே!

         துன்பமும் வறுமையும் பிறவிப் பிணியும் என்னை விட்டு ஓட, அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு அருள் புரிந்த, வள்ளியம்மையாரினது, இளநீர் போன்ற இரு தனபாரங்களில், தழுவுகின்ற திருமார்பை உடையவரே!

     இனிய குணங்களை உடைய பழையவரும் ஆகிய புலிக்கால் முனிவரோடு, பதஞ்சலி முனிவரும், நூறு கோடி முனிவர்களும் சிதம்பரத்தில் பரவிப் புகழ ஞானமே வடிவாக எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

     சோதிப் பிழம்பு போன்ற திருமேனியினுடைய அழகு மிகுந்த, பழுத்த அறிவு மயமாகிய மலையின் மீது விளங்குகின்ற ஆறு திருமுகங்களுடனும், தேவர்கள் சூட்டிய தெய்வ மலர் மாலைகளில் வண்டுகள் இனிது பாடவும், தேவரீருடைய மழலை மொழியினின்று முத்தித் தேன் பெருகிப் பாயவும், பவளம் போன்ற இதழிலிருந்து வெளிப்படும் செஞ்சொற்களில் வேத மணம் வீசவும், மிகுதியான பவள ஒளி திருமேனியில் இருந்து வெளிப்படவும், அருமையான திருவடிகளில் பரிபுரம் ஒலிக்கவும், வேலைத் தாங்கிய திருக்கரத்தோடு, அழகிய தோகை உடைய மயில் வாகனத்தின் மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு ஒழியும் பொருட்டு, தேவர்கள் இது அதிசயத்திலும் அதிசயம் என்று வியந்து, தேவரீருடைய திருவருளைப் பாடவும், அடியேன் முன் வந்து அருள வேணும்.

விரிவுரை

சுடர் அனைய திருமேனி ---

முருகப் பெருமானுடைய அருள் திருமேனி ஜோதிமயமாய் இருக்கும். "பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அது ஒரு மேனி ஆகி" என்ற கச்சியப்பர் திருவாக்கு சிந்திக்கத் தக்கது. "தீப மங்கள ஜோதீ நமோ நம" என்று திருப்புகழடியையும் ஊன்றி உணர்க. பல கோடி இளஞாயிறுகள் ஏக காலத்தில் உதித்ததுபோல் எம்பெருமான் திருமேனி ஒளி செய்யும் என அப் பரம்பதியைக் காணும் தவம் பெற்ற ஆன்றோர் கூறுகின்றனர். "சதகோடி சூரியர்கள் உதயம் என" என்றார் சீர்பாத வகுப்பில்.


முதுஞான சொருப கிரி ---

ஞானம் - அறிவு. அறிவு சிறிது சிறிதாக நமக்கு வளர்ச்சி உறுகின்றது. இறைவனிடம் உள்ளது முற்றறிவு, பேரறிவு. தானே எல்லாவற்றையும் அறிவது முழுஞானம். பழுத்தஞானம். அந்த ஞானமே இறைவனுக்கு வடிவம். நம்மைப் போன்று, ஏழு தாதுக்களால் ஆன உடம்பு இறைவனுக்கு இல்லை.


"ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?
மோனம் தீர்கலா முனிவரும் காண்கிலர், முழுவதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தன்மை".   --- கந்தபுராணம்.


அறிவும் அறியாமையும் கடந்த
     அறிவு திருமேனி என்று உணர்ந்து, ன்
     அருண சரண அரவிந்தம் என்று ...... அடைவேனோ?   --- (குகையில்) திருப்புகழ்.

அறிவே சொரூபமாகிய ஆண்டவனை அறிவினாலேயே தான் அறியவும் அடையவும் முடியும்.

ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்
      நாட்டமே! நாட்டத்துள் நிறைந்த
வானமே! எனக்கு வந்துவந்து ஓங்கும்
      மார்க்கமே! மருளர்தாம் அறியா
மோனமே! முதலே! முத்திநல் வித்தே!
      முடிவிலா இன்பமே! செய்யும்
தானமே! தவமே! நின்னைநான் நினைந்தேன்,
      தமியனேன் தனை மறப்பதற்கே.        --- தாயுமானார்.


முகம் ஆறும் ---

இறைவன் திருமேனி ஞானம் எனப்பட்டது.  ஞானத்தினால் அடைவது ஒளி. அறிஞர் உள்ளமும் முகமும் ஒளி மயமாகத் திகழும். அறியாமை உடையார் உள்ளமும் முகமும் இருள் மூடி அசடு வழியும்.

அருள்ஞான மலையின் மீது ஆறு ஒளிகள் விளங்குகின்றன. அவை,  1. ஞானப்பிரகாசம், 2. ஞானானந்தப் பிரகாசம், 3. சர்வஞான வியாபகப் பிரகாசம், 4. சுத்த ஞான சாட்சிப் பிரகாசம், 5. சர்வ பரிசுத்த பிரம ஞானானந்த அருட்பிரகாசம், 6. அநாதி நித்திய பிரம ஞானானந்த சிவப்பிரகாசம் எனப்படும்.

அறிவின் பயன் இரக்கம். "பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை, அறிவினால் ஆகுவது உண்டோ" என்பார் திருவள்ளவர். எனவே, அறிவு மயமாகிய இறைவனுடைய முகங்கள் ஆறும், ஆறுதிசைகளில் வழிந்த கருணையே ஆகும். "கருணை கூர் முகங்கள் ஆறும்", "முகம் பொழி கருணை போற்றி", "கருணை பொழி கமல முகம் ஆறும்", "உனது முக கருணை மலர் ஓர்ஆறும்" என்ற அமுத வாக்குகளை உய்த்து உணர்க.

துகிர் இதழின் மொழி வேத மணம் வீச ---

முருகப் பெருமானுடைய திருமோழியே வேதாகமங்கள்.  அத் திருவாயில் ஞானமே ஊறுகின்றது. வேதமணம் வீசும்.

செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு
செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே..       --- (வஞ்சகலோப) திருப்புகழ்.

அமரர் இது பூரை அதிசயம் என அருள் பாட ---

பூரை - வியப்பு. "தேவரீர் அடியேனுக்கு எளிதில் வந்து காட்சி தரும்போது தேவர்கள் அதிசயித்து, நெடும் காலம் தவம் புரியும் முனிவரருக்கும் நமக்கும் கிடைக்காத சேவை அருணகிரிக்குக் கிடைத்தது என்ன ஆச்சரியம்! அம்மம்ம! என்று விம்மிதம் உற்றுப் பாடுமாறு கருணை புரிந்து வருவீராக" என்கின்றனர்.   

இங்ஙனம் வானவர்க்கும் மாதவர்க்கும் அரிய பிரான், அடியார்க்கு எளிய பிரான் ஆவதை அடியிலு காணும் திருவாக்குகளால் அறிக.

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்து அன்றி நின்றசிவம் வந்து, நம்மை
உருக்கும், பணிகொள்ளும் என்பது கேட்டு, உலகம் எல்லாம்
சிரிக்கும் திறம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ.

ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூவார் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே
தேவான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ.

பூமேல் அயனோடு மாலும் புகல்அரிது என்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய்மேல் தவிசுஇட்டு, நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.           --- திருவாசகம்.


விடை பரவி அயன் மாலொடு ----விடம் வாரி அருள்நாதன் ---

மாலயனாதி வானவர்கள் இறவாமையைப் பெறுதல் வேண்டி, திருப்பற்கடலைக் கடையல் உற்றனர்.  மந்தரகிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு, தேவாசுரர் பன்னெடும் காலம் வருந்தி, பலப்பல ஔடதங்களைக் கடலில் விடுத்து, மெய்யும் கையும் தளரக் கடைந்தனர். அமிர்தத்திற்கு மாறாக, ஆலகால விடம் தோன்றியது. அது கண்ட அரி, அயன், இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அஞ்சி, அந்தோ ஒன்றை நினைக்க ஒழிநிதிட்டு வேறு ஒன்று ஆகியதே இதனுடைய வெம்மை உலகங்களை எல்லாம் கொளுத்துகின்றது. நமது உயிர் வெதும்புகின்றது. என் செய்வோம் என்று புலம்பி, வாடி, திருக்கயிலையை அடைந்தனர்.  திருநந்தி தேவரிடம் விடை பெற்று, திருக்கோயிலுள் சென்று, சிவபெருமானுடைய திருவடியில் வீழ்ந்து, எழுந்து கரங்களைக் கூப்பி முறையிடுவாரானார்கள்.

     "எந்தையே! சிந்தையில் தித்திக்கும் தெள்ளமுதே! கருணைக் கடலே! கண்ணுதல் கடவுளே! அடியேங்கள் தேவரீருடைய திருவருளால் அமரத்துவம் பெற நினையாமல், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற முயன்றோம். அதற்கு மாறாக ஆலகால விடம் வெளிப்பட்டது.  அதன் வெம்மையால் உலகங்களும், உயிர்களும் யாமும் துன்புறுகின்றேம். எமக்கு இன்றே இறப்பும் எய்தும் போலும். தேவரீரே எமக்குத் தனிப்பெரும் தலைவர். முதலில் விளைந்த விளைவுப் பொருளைத் தலைவருக்குத் தருதல் உலக வழக்கு. அடியேங்கள் பெரிதும் முயன்று பாற்கடலைக் கடைந்த போது, முதலில் விளைந்த பொருள் விடம். அதனைத் தங்கட்க்கு காணிக்கையாகத் தருகின்றோம்.  அதனை ஏற்றுக் கொண்டு எம்மை ஆட்கோள்வீர்" என்று இனிமையாகவும், கனிவுடனும் முறையிட்டனர். அதனைக் கேட்டு அருளிய அந்திவண்ணராகிய அரனார் சுந்தரரைக் கொண்டு, ஆலகால விடத்தைக் கொணர்வித்து, நாவல் பழம் போல் திரட்டி, உண்டால் உள்முகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும், உமிழ்ந்தால் வெளிமுகமாகிய ஆன்மாக்கள் அழியும் என்றும் திருவுள்ளம் கொண்டு, உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்திலு தரித்து, நீலகண்டர் ஆயினார். அன்று எம்பெருமான் அவ்விடத்திலே அவ் விடத்தை உண்ணாராயின், தேவர் அனைவரும் பொன்றி இருப்பர். அத்தனை பேருக்கும் வந்த கண்டத்தை நீக்கியது பெருமானுடைய கண்டம். இனிய ஒரு உணவுப் பொருளைக் கூட நம்மால் கண்டத்தில் நிறுத்த முடியாது. வாயிலோ வயிற்றிலோ வைக்கலாமேயன்றி, கண்டத்தில் நிலைபெறச் செய்ய முடியாது. எனில், எம்பெருமான் ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தது எத்துணை வியப்பு.

ஆலங்குடி யானை, ஆலாலம் உண்டானை,
ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார், ஆலம்
குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம்
மடியாரோ மண் மீதிலே.                 --- காளமேகப் புலவர்.

வானவரும் இந்திரரும் மால்பிரமரும் செத்துப்
போன இடம் புல்முளைத்துப் போகாதோ --- ஞானம்அருள்
அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனை
புத்தியுடன் கொள்ளாத போது.        --- அருணாசலக் கவிராயர்.

குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே ---

சனகாதியர் நால்வர்க்கும் கல்லாலின் புடை அமர்ந்து, எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை, இருந்து காட்டி, வாக்கு இறந்த வான்பொருளை உபதேசித்தவராதலின், சிவபெருமானே ஆதிகுரு ஆவார்.  அக் குருநாதரும் மகிழ்ச்சி உற, மெய்ஞ்ஞானத்தைக் குழந்தைக் குமரேசர் உபதேசிதத்து அருளினார்.

இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குறமாது ---

எனையும் என்றதிலு உம்மை இழிவுச் சிறப்பு.  "ஒரு தவமும் பரியாத நாயினேனையும் ஒரு பொருளாகக் கொண்டு, எனது துன்பம் முதலியவைகளை அகற்றி, வள்ளியம்மையார் ஆட்கொண்டு அருளினர் என்று சுவாமிகள் வள்ளியம்மையாருடைய கருணையின் எளிமையை எடுத்து உரைத்துப் பாராட்டுகின்றனர்.


இனிய முது புலிபாதன் உடன் அரவு ---

         தவமே தனமாகக் கொண்ட மத்தயந்தன முனிவர் என்பார் ஒருவர் இருந்தனர். அவருக்கு அருமையான புத்திரர் ஒருவர் தோன்றினார். அப்புதல்வர் கலைகள் முழுவதும் கற்று உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்ததோர் இடஞ் சென்று சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார். புதல்வரது கருமத்தை உணர்ந்த பிதா ஈசனை வழிபடுவதற்குச் சிறந்த இடம் தில்லைவனமே என்று அறிவுறுத்த, அப்புதல்வர் தந்தை பால் விடைபெற்று தில்லைவனம் எய்தி ஒர் அழகிய பொய்கையும் அதன் தென்புறத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக் கண்டு அகமிக மகிழ்ந்து, ஆண்டோர் பர்ணசாலை அமைத்து அரனாரை வழிபட்டு வந்தனர். நாள் தோறும் ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறு மலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன் உதித்த பின் மலரெடுக்கில் வண்டுகள் வந்து அம் மலர்களை எச்சில் புரிந்து விடுகின்றன; பொழுது புலராமுன் சென்று மலர் பறிப்போமாயின் மரம் அடர்ந்த இக்கானகத்தில் வழியறிதல் முடியாது. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனங்கவன்று இறைவனைத் துதிக்க, உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவரெதிரே தோன்ற, முனிமகனார் அரனாரை வணங்கி, “அரவாபரணா! தேவரீரை வழிபடுதற் பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று மலர் பறிக்க மரங்களில் வழுக்காமல் ஏறுவதற்கு என் கை கால்களில் வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப் பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாகவேண்டும்” என்று வரங்கேட்டனர்.

     வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணமருளும் விடையூர்தி அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர். அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு வியாக்ரபாதர் என்று வடமொழியிலும், புலிக்கால் முனிவர் என்று தமிழிலும் பெயர்களுண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புர மெரித்த புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.

         வியாக்ரபாதர் இங்ஙனமிருக்க இவர் தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர் பால் வந்து இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும் தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம்பேசி புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர். அன்னார் செய்த அருந்தவப் பலனாய் உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக்குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக் கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய் தந்தையர் மகனைத் தமது இருப்பிடங் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள். அம்மகவு அதனை உண்ணாது கதறியழ, தாய் தந்தையர் வருந்தி சிவ சந்நிதியிற் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப் பெருமான்பால் பால் வேண்டியழ, அடியவர்க்கருளும் அண்ணல் அருள் சுரந்து இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்தழும் போதெல்லாம் நல்கினர்.

         துன்பம் நீங்கி சிவயோக இன்பத்தில் வியாக்கிரபாதர் நிலைத்திருக்குங்கால், இறைவன் தேவதாரு வனத்தில் இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஆனந்த நடனத்தின் வரலாறு தமது அகக்கண்களுக்கு வந்து தோன்ற, ஐயன் அருள் நடனம் புரியுங்கால் அத்தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இவ்விடத்தில் இருக்கப் பெற்றனனே! ஆண்டவனது திருவருள் நடனத்தை யான் காணுமாறு எவ்விதம்? என்று மிகவும் உள்ளங் கசிந்து உருகி நிற்ப, `இத்தில்லையே இந்நிலவுலகதித்திற்கு நடுநாடியாய் இருத்ததால் இதன் கண்ணே தான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற் கூத்து நிகழ்த்துவன், ஆதலால் இத்தில்லைத் தலத்தின்கண் யான் புறத்தேயும், அத்திரு நடனத்தைக் காணப் பெறுவேன்” என்று தவக் காட்சியால் உணர்ந்து அவ்விடத்திலேயே வழிபாடு புரிந்து கொண்டிருந்தார்.

         தேவதாரு வனத்தின் கண்ணிருந்த நாற்பத்தெண்ணாயிரம் முனிவரரும் மீமாஞ்சை நூற் கோட்பாட்டின்படி கன்மமே பலனை நல்கும்; பலனை நல்குவதற்கு இறைவன் வேறு ஒருவன் வேண்டுவதில்லை என்பவை முதலிய கொள்கைகளை உடையாராய் நிற்ப, அன்னார் செருக்கை அகற்றி நல்வழி தருமாறு திருவுளங் கொண்டு சிவபெருமான் திருமாலோடு அவ்வனத்திற் சென்று அம்முனிவரது தவத்தையும் அவர் மனைவியரது கற்பையுமழித்தனர். முனிவர் தெளிந்து புலி, யானை, பாம்பு, மழு முதலியவைகளை சிவன்மேலேவ, அவைகளை ஆபரணமாகவும் ஆடையாகவுங் கொண்டார். முயலகனையும் பல மந்திரங்களையும் ஏவ மந்திரங்களைச் சிலம்புகளாக அணிந்து முயலகன் மீது பயங்கர நடனத்தைப் புரிந்தனர். அரனாரது கொடுங்கூத்தைக் கண்ட முனிவரரும் தேவரும் அஞ்சி அபயம்புக இறைவன் அக்கொடிய நடனத்தை மாற்றி ஆனந்தத் தாண்டவஞ் செய்தனர். முனிவரரது ஆணவ வலிகளெல்லாம் தம் திருவடிக் கீழ் கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள் செய்து மறைந்தனர்.

         பின்னர் நாராயணர் தம் இருக்கை சேர்ந்து இறைவன் செய்தருளிய ஆனந்தக் கூத்தை நினைந்து பெருங்களிப்பால் கண் துயிலாதிருந்து தமது அணையான ஆதிசேடர்க்கு அத்திருநடனத்தின் திறத்தை விளம்ப, ஆதிசேடர் அதனைக் கேட்டு இறைவன் திருநடனத்தைக் காணும் விழைவு மேற்பட்டு கண்ணீர் ததும்பி நிற்க, அதுகண்ட மதுசூதனர் “நீர் இறைவனுக்கு அன்பராயின்மையின் இனி நீர் தவம் புரிதலே இயல்பு” என்று விடை தந்தனுப்ப, ஆதிசேடர் கயிலைமலைச் சார்ந்து அம்மலைக்கருகில் சிவபெருமானை நினைத்துப் பெருந்தவம் ஆற்றினர். அவர் முன் முக்கண் மூர்த்தி தோன்றி, “அன்ப! யாம் தேவதாரு வனத்தின் கண் திருநடனம் புரிகையில் அவ்விடம் நிலத்திற்கு நடு அன்மையின் அஃது அசைந்தது. ஆதலால் அருட் கூத்தை ஆங்கியற்றாது விடுத்தோம். இப்போது இங்கு அதனை இயற்றுதற்கும் இது தக்க இடமன்று. அதனைச் செய்தற்குரிய தில்லை மன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் ஆனந்த நடனம் என்றும் நடைபெறா நிற்கும். அஃது ஏனெனில் உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். உடம்பினுள்ளோடும் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவிலோடும். அங்ஙனமே இந்நிலத்திற்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பின்கண் அந் நடு நாடியின் நடுவே விளங்கும் இதயதாமரையினுள் ஞான ஆகாசத்திலே யாம் ஓவாது அருள் நடனம் புரிவது போலவே, புறத்தே தில்லைத்தலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின் கண் என்றும் இடையறாது திருநடனம் இயற்றுவோம். அதனை அங்கே காணும் ஞானக்கண்ணுடையார் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவர். ஆதலால் நீ இவ்வுருவை யொழித்து, அத்திரி முனிவர் மனைவியிடத்தே முன்னொரு கால் ஐந்தலைச் சிறு பாம்பாய் வந்தனையன்றோ? அவ்வுருவத்தினையே எடுத்து தில்லைத் தலத்தின்கண் சென்று இருப்பாயாக. அங்கு நின்னைப்போல் திருநடன தரிசனங் காண விழைந்து தவமியற்றும் வியாக்ரபாத முனிவனுக்கும் நினக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில் திருநடனத்தைக் காட்டி யருள்வோம்” என்று உரைத்து மறைந்தருளினர். பதஞ்சலியார் இறைவன் திருமொழிப்படியே தில்லவனம் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவமியற்றி நின்றனர். குன்றவில்லி அவ்விரு முனிவரருக்கும் குறித்த நாளில் திருநடனம் புரிந்தருளினர்.

கருத்துரை

சிவகுருவே! வள்ளிமணாளரே! தில்லைக் குமரேசரே! தேவரீருடைய தரிசனத்தை எளியேனுக்குத் தந்து என்னை ஆண்டு அருளும்.




















                 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...