சிதம்பரம் - 0645. நாலு சதுரத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாலு சதுரத்த (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
சிவயோகத்தை அடியேனுக்கு அருள் புரிந்து,
திருச்சபை நடனத்தைத் தரிசிக்க அருள்


தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
     தானதன தத்த தந்தன ...... தந்ததான


நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
     நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே

நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
     நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற்

கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
     கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங்

கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
     கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன்

ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
     ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி

ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
     ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே

வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
     வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா

வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
     வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


நாலு சதுரத்த பஞ்சறை, மூலகமலத்தில் அங்கியை,
     நாடியின் நடத்தி, மந்திர ...... பந்தியாலே,

நாரண புரத்தில், ந்துவின் ஊடுஉற இணக்கி, நன்சுடர்
     நால்திசை நடத்தி, மண்டல ...... சந்தி ஆறில்

கோலமும் உதிப்ப, கண்டு உள நாலினை மறித்து, இதம்பெறு
     கோ என முழக்கு சங்கு ஒலி, ...... விந்துநாதம்

கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு, ரு
     கோடி நடனப் பத அம் சபை ...... என்றுசேர்வேன்?

ஆலமலர் உற்ற சம்பவி, வேர் இலி, குலக் கொழுந்து இலி,
     ஆரணர் தலைக் கலம் கொளி, ...... செம்பொன் வாசி,

ஆணவ மயக்கமும் கலி, காமியம் அகற்றி, என் தனை
     ஆள், உமை, பரத்தி, சுந்தரி ...... தந்த சேயே!

வேல் அதை எடுத்தும், இந்திரர் மால் விதி பிழைக்க, வஞ்சகர்
     வீடு எரி கொளுத்தி, எண் கடல் ...... உண்டவேலா!

வேத சதுரத்தர், தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர்,
     வீறு நடனர்க்கு இசைந்து அருள் ...... தம்பிரானே.


பதவுரை

      ஆலம் மலர் உற்ற சம்பவி --- கை விரல்களினின்றும் கங்கை முதலிய நதிகளை விரித்த சாம்பவியும்,

     வேர் இலி --- ஆதி இல்லாதவளும்,

     குலக் கொழுந்து இலி ---  அந்தம் இல்லாதவளும்,

      ஆரணர் தலைக் கலம் கொளி --- வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை பாத்திரமாகக் கொண்டவளும்,

     செம் பொன் வாசி --- செம்பொன் போன்ற மேரு மலையில் வசிப்பவளும்,

       ஆணவ மயக்கமும் கல்லி --- (மாயா மலத்தையும் கன்ம மலத்தையும் தோண்டி எடுத்ததோடு) மூல மலமாகிய ஆணவ மலத்தையும் தோண்டி எடுத்து,

     காமியம் அகற்றி --- பயன் கருதிச் செய்தலை நீக்கி,

     என் தனை ஆள் --- அடியேனை ஆட்கொண்டவளும்,

     உமை --- உமையம்மையும்,

       பரத்தி --- பரனுக்கு சக்தியும்,

     சுந்தரி தந்த சேயே --- அழகு உடையவளும் ஆகிய பார்வதி பெற்றருளிய திருக்குமாரரே!

       வேல் அதை எடுத்தும் --- வேல் படையை எடுத்தும்,

     இந்திரர் மால் விதி பிழைக்க --- தேவர் கோமான், திருமால், பிரமன் முதலியோர் உயிர் பிழைத்து உய்யவும்

       வஞ்சகர் வீடு எரி கொளுத்தி --- வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளையும், ஊரையும் எரித்தும்,

     எண் கடல் உண்ட வேலா --- மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்து போர் புரிந்த வேலாயுதக் கடவுளே!

       வேத சதுரத்தர் --- நான்கு வேதங்களையும் அறிவிக்கும் முற்றறிவு உடையவரும்,

     தென் புலியூர் உறை --- தென் திசையில் விளங்கும் சிதம்பரத்தில் விளங்குபவரும்,

     ஒருத்தி பங்கினர் --- ஒப்பற்ற உமையம்மையை ஒரு பாகத்தில் தரித்தவரும் ஆகிய

     வீறு நடனர்க்கு --- பெருமை தங்கிய திருக்கூத்தருக்கு

      இசைந்து அருள் பெருமாளே --- மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமையின் மிக்கவரே!

     மூல கமலத்தில் அங்கியை --- மூலாதார கமலத்துள்ள அக்கினியை,

     நாலு சதுரத்த பஞ்ச அறை ... நாலு சதுரப் பிரம பீடமாகிய, சங்காரக் கிரமத்தின் ஐந்தாம் வீடாகிய சுவாதிட்டானத்தில் செல்லும்படி,

     மந்திர பந்தியாலே --- மந்திர ஒழுங்கினாலே,

      நாடியில் நடத்தி --- சுழுமுனை நாடி வழியே செலுத்தி,

      நாரண புரத்தில் --- திருமாலினது வீடாகிய மணி பூரகத்தில் உள்ள

     இந்துவின் ஊடுற இணக்கி --- அர்த்த சந்திர வடிவமாகிய பீடத்தில் பொருந்தச் சேர்த்து,

     நன் சுடர் நாற --- நல்ல ஒளி தோன்றும்படியாக,

      இசை நடத்தி --- அனாகதம் முதலிய மற்ற இடங்களிலும் இணங்க நடத்தி,

     மண்டல சந்தி ஆறில் --- அக்கினி சூரிய சந்திர மும்மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய

       கோலமும் உதிப்ப கண்டு --- விநாயகராதி சதாசிவம் ஈறாக உள்ள மூர்த்திகளின் திருக்கோலங்களும் பிறவும் காட்சி அளிக்க, அக் காட்சிகளை அகக் கண்ணால் கண்டு,

        உள நாலினை மறித்து --- சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள ஒவ்வொரு சுவாசத்திலும் நாலு அங்குலமாகக் கழியும் பிராணவாயுவை அங்ஙனம் போகவிடாமல் தடுத்து,

       இதம்பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி ---- இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கநாதமாகிய

       விந்து நாதம் கூடிய முகப்பில் --- விந்து சம்பந்தமாகிய நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில் நின்று,

     இந்திர வான அமுதத்தை உண்டு --- இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,

       ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் ---அனந்த ஆனந்த நடனம் புரியும் குஞ்சிதபாத அழகிய திருச்சபையை அடியேன் எக்காலத்தில் அடையப் பெறுவேன்?

பொழிப்புரை

             கை விரல்களினின்றும் கங்கை முதலிய நதிகளை விரித்த சாம்பவியும்,  ஆதி இல்லாதவளும், அந்தம் இல்லாதவளும், வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை பாத்திரமாகக் கொண்டவளும், செம்பொன் போன்ற மேரு மலையில் வசிப்பவளும், (மாயா மலத்தையும் கன்ம மலத்தையும் தோண்டி எடுத்ததோடு) மூல மலமாகிய ஆணவ மலத்தையும் தோண்டி எடுத்து, பயன் கருதிச் செய்தலை நீக்கி, அடியேனை ஆட்கொண்டவளும், உமையம்மையும், பரனுக்கு சக்தியும், அழகு உடையவளும் ஆகிய பார்வதி பெற்றருளிய திருக்குமாரரே!

            வேல் படையை எடுத்தும், தேவர் கோமான், திருமால், பிரமன் முதலியோர் உயிர் பிழைத்து உய்யவும், வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளை எரி மூட்டி, மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்து போர் புரிந்த வேலாயுதக் கடவுளே!

            நான்கு வேதங்களையும் அறிவிக்கும் முற்றறிவு உடையவரும், தென் திசையில் விளங்கும் சிதம்பரத்தில் விளங்குபவரும், ஒப்பற்ற உமையம்மையை ஒரு பாகத்தில் தரித்தவரும் ஆகிய பெருமை தங்கிய திருக்கூத்தருக்கு மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமையின் மிக்கவரே!

             நாலு சதுரப் பிரம பீடமாகிய, சங்காரக் கிரமத்தின் ஐந்தாம் வீடாகிய சுவாதிட்டானத்தில் செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை சுழுமுனை நாடி வழியே செலுத்தி, மந்திர ஒழுங்கினாலே, திருமாலினது வீடாகிய மணி பூரகத்தில் உள்ள அர்த்த சந்திர வடிவமாகிய பீடத்தில் பொருந்தச் சேர்த்து, நல்ல சுடர் தோன்றும்படியாக, அனாகதம் முதலிய மற்ற இடங்களிலும் இணங்க நடத்தி, அக்கினி சூரிய சந்திர மும்மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய விநாயகராதி சதாசிவம் ஈறாக உள்ள மூர்த்திகளின் திருக்கோலங்களும் பிறவும் காட்சி அளிக்க, அக் காட்சிகளை அகக் கண்ணால் கண்டு, சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள ஒவ்வொரு சுவாசத்திலும் நாலு அங்குலமாகக் கழியும் பிராணவாயுவை அங்ஙனம் போகவிடாமல் தடுத்து, இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கநாதமாகிய விந்து சம்பந்தமாகிய நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில் நின்று, இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி, அனந்தானந்த நடனம் புரியும் குஞ்சிதபாத அழகிய திருச்சபையை அடியேன் எக்காலத்தில் அடையப் பெறுவேன்?


விரிவுரை

நாலு சதுரத்த பஞ்சறை மூலகமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே ---

நாலு சதுரத்த பஞ்சறை - சுவாதிட்டானம். அது பிரம தேவருடைய இருப்பிடம். நாற்கோண வடிவு உடையது.

முக்கோண வடிவுடைய மூலாதாரத்தில் விநாயகர் எழுந்தருளி இருப்பார். அம் மூலாதாரத்தில் உள்ள குண்டலி சத்தியின் துணையால் அங்குள்ள அக்கினியை மூண்டெழுமாறு செய்து, அதனை முறையே சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்களையும் தாண்டச் செய்து மதிமண்டலம் வரை செலுத்துதல் வேண்டும்.

நாடியில் நடத்தி - சுழுமுனை நாடியின் வழியே செலுத்துதல்.  சுழுமுனை நாடி மிகவும் நுட்பமான வெள்ளை நரம்பு.  முதுகெலும்புடன் இணைந்திருப்பது. தாமரைத் தண்டின் நூல்போல இருப்பது. இடை பிங்கலை வழியே செல்லும் வழியை மறித்து சுழுமுனை வழியே செலுத்துதல்.

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணா தண்டூடே வெளியுறத் தான்நோக்கி,
காணாக் கண்கேளாச் செவிஎன்று இருப்போர்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.       ---  திருமந்திரம்.

நாரணபுரம் ---

மணிபூரகம் விஷ்ணு மூர்த்தியினுடைய இடம். அது நாபிக் கமலத்திற்கு நேரே விளங்குவது.

நன்சுடர் நாற ---

புருவ நடுவே ஒளி உண்டாகி அகிலாண்ட காட்சியையும் காணுமாறு செய்யும்.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுஉற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே.   ---  திருமந்திரம்.

கோலமும் உதிப்ப ---

ஆறு ஆதாரங்களில் எழுந்தருளி உள்ள விநாயகர், பிரமதேவர், திருமால், உருத்திரர், மகேச்சுரர், சதாசிவம் என்ற ஆறு மூர்த்திகளும் தோன்ற, அவ் அறுவரையும் அகக் கண்ணால் தெரிசித்து ஆனந்த மயமாக நிற்றல்.

நாலினை மறித்து ---

உச்சுவாச நிச்சுவாசங்கள் இரண்டையும் தடுத்து வாயுவைச் சுழுமுனையில் கும்பித்து நிறுத்துவதையே பஞ்சாக்கர ஜெபம் என்பார் திருமூலர்.

பிராணவாயு வெளியே செல்லுவது அங்குலம் பன்னிரண்டு. உள்ளே திரும்புவது அங்குலம் எட்டு.  நான்கு அங்குலம் கழிந்து விடுகின்றது.  அங்ஙனம் கழிய விடாமல் கட்ட வல்லாரே காலனையும் கட்டவல்லார் ஆவர்.

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளில் கோல அஞ்செழுத்து ஆமே.  ---  திருமந்திரம்.

இடநாசி வழியாய் சுவாசத்தை 16 மாத்திரை உள்ளே வாங்கி, 64 மாத்திரை கும்பித்து, 32 மாத்திரை வலநாசி வழியாக போகவிடில் உண்மை விளங்கும்.  அதாவது 4 அங்குலம் கழியாது.

நமது சுவாசத்தை 12 அங்குலமுள்ள ஒரு சத்தாய் பாவித்தால்...

வெளியே போவது                                  1
திரும்பி வருவது                                     8/12 அல்லது 2/3.
16 மாத்திரை பூரித்தால் உள்ளே வருவது     2/3x16 – 10  2/3
64 மாத்திரை கும்பித்தால் சேர்வது            4/12X64 –  21           1/3
மொத்தம்                                              32
32 மாத்திரை ரேசித்தால் வெளியே போவது  32

இந்த சாதனத்தால் நான்கு அங்குலம் வீண்போவது இல்லை என்பது விளங்கும்.  இவ் உண்மையை சிவராஜ யோகச் சித்தாந்த சைவத்திற்கு ஒருமூலராகிய திருமூலர் கூறுமாறு காண்க.

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
எமுற்ற முப்பத் திரண்டும் ரேசித்தே
காமுற்ற பிங்கலைக் கண்ணாக அவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

இவ்வாறு வாசி வீண்போகாமல் அதை நமது வசப்படுத்திக் கொள்ளின் காயசித்தியும் உண்டாம்.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.            ---  திருமந்திரம்.

ரேசகம் - வாயுவை வெளியே விடுத்தல்.
பூரகம் - வாயுவை உள்ளே இழுத்தல்.
கும்பகம் - வாயுவை உள்ளே நிறுத்துதல்.

நாசிக்குள் ப்ராண வாயுவை
  ரேசித்து எட்டாத யோகிகள்
  நாடிற்றுக் காண ஒணாதென      நின்றநாதா...         ---  (வாசித்து) திருப்புகழ்.

இதம்பெறு கோ என முழங்கு சங்கொலி ---

இவ்வாறு பிராணவாயு ஒடுங்கியபொழுது, அது நாடிகளை எல்லாம் தட்டி எழுப்பி நிறையும்போது, நாதகீதங்கள் உண்டாகும்.

மணிகடல் யானை வளர்குழல் மேகம்
மணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே.. ---  திருமந்திரம்.

வான அமுதத்தை உண்டு ---

மூலாக்கினியைப் பிராணவாயுவினால் எழுப்பலும் அது மதிமண்டலத்தை வெதுப்ப, அங்கிருந்து அமிர்தம் பொங்கி வழியும்.  அதனைப் பருகிச் சித்திர விளக்குப் போல் அசைவற்று இருப்பர் சிவயோகியர்.

நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட
வாசி அனலுடு போய்ஒன்றி வானின்கண்
நாமமதி மீதில் ஊறுங் கலா இன்ப      அமுதூறல்
நாடி, தன்மீது போய் ஒன்றி ஆனந்த
மேலை வெளியேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ஒருநாளே”     --- (மூளும்வினை) திருப்புகழ்.

ஆலம் மலருற்ற சம்பவி ---

ஆலம் - நீர்.  மலர்தல் - வெளிப்படுதல்.

கங்கை உற்பத்தி

திருக்கயிலாய மலையில் திருநந்தனவனத்தில் சிவபெருமான் ஒரு சமயம் வீற்றிருந்து அருளினார்.  உமாதேவியார் திருவிளையாட்டாக மெல்லப் பின்புறமாக ஓசை உண்டாகாமல் வந்து, எம்பெருமான் திருக்கண் மலர்களைக் கர மலர்களால் மூடினர்.  அதனால் உலகமெல்லாம் இருண்டுவிட்டன. சந்திர சூரியர் முதலிய எல்லா ஒளியும் எம்பெருமான் திருக் கண்களினின்றே வெளிப்படும். ஆதலினால், எல்லா ஒளியும் மாய்ந்து இருண்டன.  அம்பிகை கண் புதைத்த அவ் ஒரு கணம், அமரர் முதலியோர்க்குப் பல யுகங்கள் ஆயின. அக் காலை எம்பெருமான் உலகங்கட்கு அருள் புரியுமாறு கருதி நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்கட்கு ஒளியை அருளினார். அவ் ஒளியால் உயிர்கள் யாவும் உவகை உற்றன.  கண்ணுதற்பெருமான் செயலைக் கண்ட உமாதேவியார் அஞ்சி கண்களை மூடிய கரங்களை எடுத்தார்.  அப்போது, அம்பிகையின் விரல்களில் வியர்வை உண்டாக, பத்து விரல்களினின்றும்  பத்து கங்கைகள் கடல் போலத் தோன்றின.

சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈர்ஐந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கையைத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தாய் ஆண்டுக் கடல்களில் செறந்த அன்றே.     --- கந்தபுராணம்.

நூறு ஆயிரம் கோடி முகங்களுடன் தோன்றிய கங்கை எங்கும் தண்ணீர் மயமாகப் பரவியது கண்ட அமரர்கள் அஞ்சி, திருக்கயிலை மலையை அடுத்து, ஆலமுண்ட நீலகண்டப் பெருமானை நெடிது வணங்கி, "ஐயனே! எம்மை ஆட்கொள்ளுவாய்..  பண்டு வந்த விஷம்போல் பரவி எம்மையும் உலகங்களையும் அழிக்கும் கங்கையைத் தடுத்து ஆட்கொள்ளும்" என்று வேண்டினார்கள்.  உடனே, இறைவன் உலகமெல்லாம் பரவியுள்ள நீரை அழைத்து, தனது சடாமகுடத்தில் ஒரு உரோமத்தில் அமைத்தனர்.  அது கண்ட அமரர் வனங்கி, "ஐயனே! இக் கங்கை ஞானாம்பிகையின் கர மலரில் தோன்றி தேவரீர் சடையில் தங்கினமையால் புனிதமாயிற்று.  எங்கள் நாட்டிலும் இக் கங்கை இருந்து புனிதமாக்குமாறு திருவருள் புரியும்" என்று வேண்டினார்கள்.  சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி, தமது சடைமுடியில் உள்ள கங்கையைச் சிறிது எடுத்து இந்திரன், பிரமதேவர், திருமால் ஆகிய மூவருடைய கைகளில் தந்தருளினார்.  அதனை அவர்கள் தத் தம் ஊர்களில் விடுக்க, மூன்று உலகங்களிலும் கங்கை பெருகியது.

பின்னர், மாதவத்தின் மிக்க பகீரதன் வேண்ட சத்திய உலகில் உள்ள கங்கை வானினின்றும் வர, சிவபெருமான் மீண்டும் உலகம் உய்ய அதனைச் சடையில் தாங்கி சிறிது உலகிற்கு உபகாரமாக விடுத்தனர்.  அது கடல் வழியே சகரர் எலும்பில் தோய்ந்து, அவர்கட்கு நற்கதி நல்கியது.  ஏனைய நதிகள் அவ்வவ் உலகில் பரவி ஆங்காங்கு புண்ணிய மயமாகி விளங்கின.

ஆரணர் தலைக்கலம் கொளி ---

பிரமதேவனுடைய தலையைக் கிள்ளி, அப் பிரமகபாலத்தை கையில் ஏந்தியவள்.  சிவத்தின் செயல் யாவும் சத்தியின் செயலே ஆம்.  இனி, "ஆரணர் தலைக்கு அலங்கு ஒளி" என்று பிரித்து, சிவபெருமானிடத்தில் விளங்கும் ஒளியாய் உள்ளவள் என்றும் பொருள் கூறுவர்.  தலை - இடம்.

ஆணவ மயக்கம் ---

ஆணவ மயக்கமும் என்றதனால், கன்ம மலத்தையும், மாயா மலத்தையும் உடன் கூட்டி பொருள் செய்யப்பட்டது.  உம்மை எச்ச உம்மை.

காமியம் அகற்றி ---

காமியமாக, பயனைக் கருதி, வழிபடுதலும் கிரியைகளைப் புரிதலும் பிறப்புக்கு ஏதுவாகும்.  ஆதலினால், அதுவும் தொலைதல் வேண்டும்.  புண்ணிய கன்மங்களை விரும்புவது பொன்விலங்கு போலவே ஆம்.

"காமியத்து அழுந்தி இளையாதே" என்றார் பிறிதோரிடத்தில்.

என்தனை ஆள் உமை ---

அருணகிரிநாதருக்கு அம்பிகையினுடைய திருவருளும் கிடைத்தது.  சுவாமிகள் பல இடங்களில் பாராட்டுகின்றனர்.

வாகு பாதி உறை சத்தி கவுரி, குதலை
வாயின் மாது, துகிர் பச்சை வடிவி, சிவை என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை ...... தந்தவாழ்வே.. ---  (ஆசைநாலு) திருப்புகழ்.

இமவரை தருங் கருங்குயில் மரகத நிறந் தருங்கிளி
     எனதுஉயிர் எனும் த்ரியம்பகி     பெருவாழ்வே...       ---  (இருகுழை) திருப்புகழ்.

கருத்துரை

உமாசுதரே, அசுரகுல காலரே, தில்லை நடேச மூர்த்திக்கு இசைந்தவரே, ஆறு ஆதாரமும் கடந்து, அமிர்த பானம் உண்டு சிவயோகியாக விளங்க அருள்புரிவீர்.







No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...