அடங்காதவற்றை அடக்குதற்கு வழி




42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
     கோத்துவச விர்த்தி கொள்வார்;
  குவலயந் தனின்மதக் களிறுஅதனை அங்குசங்
     கொண்டுவச விர்த்தி கொள்வார்;

படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
     பற்றிவச விர்த்தி கொள்வார்;
  பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
     பழக்கிவச விர்த்தி கொள்வார்;

விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
     வீசிவச விர்த்தி கொள்வார்;
  மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
     விலக்கிவச விர்த்தி கொள்வார்;

அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
     தையனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அடியவர் துதிக்க வரு செந்தாமரைப் பதத்து ஐயனே ---
அடியார்கள் (முதலில் புறத்திலும், பின்னர் அகத்திலும்) போற்றித் துதிக்க, அவர்களுக்கு அருள் புரிய, (அவர்கள் உள்ளத்தில் எழுந்தருளி) வருகின்ற, செந்தாமரை மலரைப் போன்ற திருவடிகளை உடைய பெருமானே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     கொடிய பொலி எருதை இரு மூக்கிலும் கயிறு ஒன்று கோத்து வச விர்த்தி கொள்வார் --- கொடுந்தன்மை உள்ள பொலி காளையை அதன் இரண்டு மூக்கிலும் மூக்கணாங்கயிறு என்னும் ஒரு கயிற்றைக் கோத்து அதனைத் தமது வசப்படுத்துவர்,

     குவலயம் தனில் மதக்களிறு அதனை அங்குசம் கொண்டு வச விர்த்தி கொள்வார் --- உலகத்தில் மதம் கொண்ட யானைகளை அங்குசத்தைக் கொண்டு தாக்கி வசப்படுத்துவர்,       

     படியில் விட அரவை மந்திர தந்திரத்தினால் பற்றி வச விர்த்தி கொள்வார் --- உலகில் நஞ்சுடைய பாம்பை மந்திரத்தாலும் தந்திரத்தாலும் பிடித்து வசப்படுத்துவர்,

     பாய் பரியை நெடிய கடிவாளம் அது கொடு நடை பழக்கி வச விர்த்தி கொள்வார் --- தாவிச் செல்லும் குதிரையை நீண்ட கடிவாளத்தைக் கொண்டு நடை பழக்கி வசப்படுத்துவர்,

     விடம் உடைய துட்டரைச் சோர் பந்து கைக்கொண்டு வீசி வச விர்த்தி கொள்வார் --- நச்சுத் தன்மை கொண்ட தீயவரைச் சவுக்கைக் கொண்டு அடித்து வசப்படுத்துவர்,

     மிக்க பெரியோர்களும் கோபத்தை அறிவால் விலக்கி வச விர்த்தி கொள்வார் --- பெரிய சான்றோர்களும் தமது சினத்தை, (தாம் கற்ற நூல்களால் பெற்ற) அறிவின் திறத்தினால் நீக்கிக் கொண்டு, மனம் அடங்கப் பெறுவர்.

 

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...