கீழ் மக்கள் கீழ் மக்களே




தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது,
பாம்புக்கு பால்வார்த்து என்றும் பழகினும் நன்மை தாரா,
வேம்புக்கு தேன் வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா,
தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

இதன் பொருள் ---

     தூம்பினில் புதைத்த கல்லும் --- பலரும் நடந்து செல்லும் வழியில் புதைக்கப்பட்ட கல்லானது (பலராலும் மிதிக்கப்பட்டுத் தேய்ந்தாலும்)

     துகள் இன்றிச் சுடர் கொடாது --- அதன் மீது படிந்து உள்ள தூசு நீங்கி (பொன் முதலியன தேய்ந்தால் ஒளி தருவதைப் போல்) ஒளி தராது.

     பாம்புக்கு பால் வார்த்து --- நஞ்சை உடைய பாம்புக்குப் பாலைக் கிண்ணத்தில் ஊற்றி

     என்றும் பழகினும் நன்மை தாரா --- நாளும் வளர்த்து, அதனோடு பழகி வந்தாலும், அது நஞ்சைத் தான் தருமே ஒழிய நன்மையைத் தராது.

     வேம்புக்கு தேன் வார்த்தாலும் ---  வேப்ப மரத்திற்குத் தேனை ஊற்றி அதனை வளர்த்தாலும்,

     வேப்பிலை கசப்பு மாறா --- அந்த வேப்ப மரத்து இலைகள் கசப்புத் தன்மை நீங்கி, தேனின் இனிமையைத் தராது.

     இவை போலவே,

     துர்ச்சனர் தாம் பல நூல் கற்றாலும் --- துர்க்குணம் படைத்த கீழ்மக்கள் பல நீதி நூல்களைப் படித்தாலும்,

     தக்கோர் ஆகார் --- சான்றோர் ஆக மாட்டார்.

     கருத்து --- கீழ் மக்களின் இயல்பு காட்டப்பட்டது.

கப்பி கடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும்,
குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல் --- மிக்க
கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும், கீழ் தன்
மனம் புரிந்த வறே மிகும்.               ---  நாலடியார்.

     நொய் அரிசியைத் தவிடு போகத் தெள்ளி, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னத் தான் கோழி செல்லும். அது போலவே, என்ன தான் பெரிய உயர்ந்த அறிவு நூல்களின் கருத்துக்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழி செயல்களைச் செய்துகொண்டு தான் இருப்பர்.

பொன் கலத்து ஊட்டிப் புறம் தரினும், நாய் பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்து இருக்கும் --- அச்சீர்
பெருமை உடைத்தாக் கொளினும், கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.                  ---  நாலடியார்.

     தங்கத் தட்டிலே சோறு வைத்துப் பாராட்டி வளர்த்தாலும், நாயானது அடுத்த வீட்டு எச்சில் இலை எப்போது விழும் என்றே கண்ணை இமைக்காது காத்து இருக்கும். அதைப் போலத்தான், கீழ் மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும், அவர்களின் குணமும் செயலும் நல் வழியில் செல்லாது, தீயதையே நாடி இருக்கும். 


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...