சிதம்பரம் - 0617. காவி உடுத்தும்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காவி உடுத்தும் (சிதம்பரம்)
 
சிதம்பர முருகா!
திருவடி அருள்வாய்

தான தனத்தம் தான தனத்தம்
     தான தனத்தம் ...... தனதான


காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
     காடுகள் புக்குந் ...... தடுமாறிக்

காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
     காசினி முற்றுந் ...... திரியாதே

சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
     தேற வுதிக்கும் ...... பரஞான

தீப விளக்கங் காண எனக்குன்
     சீதள பத்மந் ...... தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா

தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
     சோலை சிறக்கும் ...... புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும்
     காடுகள் புக்கும் ...... தடுமாறி;

காய்கனி துய்த்தும், காயம் ஒறுத்தும்,
     காசினி முற்றும் ...... திரியாதே;

சீவன் ஒடுக்கம், பூத ஒடுக்கம்
     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண, எனக்கு உன்
     சீதள பத்மம் ...... தருவாயே.

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட, உக்ரம் ...... தருவீரா!

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சும் ...... கதிர்வேலா!

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும்
     சோலை சிறக்கும் ...... புலியூரா!

சூரர் மிகக் கொண்டாட நடிக்கும்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.


பதவுரை


      பாவ நிறத்தின் --- பாவச் செயல்களையே இயல்பாகச் கொண்,

     தாருக வர்க்கம் --- தாருகாசுரன் முதலாகிய அசுரர் கூட்டமானது

     பாழ்பட --- பாழ் பட்டு அழியுமாறு,

     உக்ரம் தருவீரா --- வேகத்தை உடைய வீரரே!

      பாணிகள் கொட்டும் --- கைகளைக் கொட்டித் தாளமிட்டு,

     பேய்கள் பிதற்றும் பாடலை --- பேய்கள் பிதற்றுகின்ற பாடல்களில்

     மெச்சும் கதிர்வேலா --- மகிழும், ஒளிமிக்க வேலாயுதரே!

       தூவிகள் நிற்கும் --- அன்னப் பறவைகள் இருந்து வாழ்கின்,

      சாலி வளைக்கும் --- நெல்பயிர் சூழ்ந்துள்ள,

      சோலை சிறக்கும் --- சோலைகள் விளங்கும்

      புலியூரா --- பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ளவரே!

       சூரர் மிகக் கொண்டாட நடிக்கும் --- சூரர்கள் மிகவும் கொண்டாட நடனம் செய்கின்ற

      தோகை நடத்தும் --- தோகையுடன் கூடிய மயிலை நடத்தி வருகின்ற

       பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

         காவி உடுத்தும் --- காவித் துணியை உடுத்திக் கொண்டும்,

         தாழ்சடை வைத்தும் --- தொங்கும் சடையை வளர்த்து வைத்தும்,

         காடுகள் புக்கும் தடுமாறி --- காடுகளில் புகுந்து தடுமாறியும்,

         காய்கனி துய்த்தும் --- காய், பழவகைகளைப் புசித்தும்,

         காயம் ஒறுத்தும் --- உடம்பை விரத முதலானவைகளால் வருத்தியும்,

         காசினி முற்றும் திரியாதே --- உலகம் முழுவதும் அலைந்து திரியாமல்,

         சீவன் ஒடுக்கம் --- உயிரைப் பற்றி அறிகின்ற பசு ஞானத்தை நீக்கும் தன்மையும்,  

         பூத ஒடுக்கம் --- பாச ஞானத்தை நீக்கும் தன்மையும்,

        தேற உதிக்கும் --- தெளிந்த போது உதிப்பதாகிய

         பரஞான தீப விளக்கம் காண --- மேலான பதிஞான ஒளி விளக்கத்தினை அடியேன் கண்டு களிக்குமாறு,

         எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே --- அடியேனுக்கு உமது குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும்.


பொழிப்புரை


         பாவச் செயல்களையே இயல்பாகச் கொண், தாருகாசுரன் முதலாகிய அசுரர் கூட்டமானது பாழ்பட்டு அழியுமாறு, வேகத்தை உடைய வீரரே!

     கைகளைக் கொட்டித் தாளமிட்டு, பேய்கள் பிதற்றுகின்ற பாடல்களில்  மகிழும், ஒளிமிக்க வேலாயுதரே!

         அன்னப் பறவைகள் இருந்து வாழ்கின், நெல்பயிர் சூழ்ந்துள்ள, சோலைகள் விளங்கும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ளவரே!

         சூரர்கள் மிகவும் கொண்டாட நடனம் செய்கின்ற தோகையுடன் கூடிய மயிலை நடத்தி வருகின்ற பெருமையில் சிறந்தவரே!

         காவித் துணியை உடுத்திக் கொண்டும், தொங்கும் சடையை வளர்த்து வைத்தும், காடுகளில் புகுந்து தடுமாறியும், காய், பழவகைகளைப் புசித்தும், உடம்பை விரத முதலானவைகளால் வருத்தியும், உலகம் முழுவதும் அலைந்து திரியாமல், உயிரைப் பற்றி அறிகின்ற பச் ஞானத்தை நீக்கும் தன்மையும், பாச ஞானத்தை நீக்கும் தன்மையும் தெளிந்த போது உதிப்பதாகிய மேலான பதிஞான ஒளி விளக்கத்தினை அடியேன் கண்டு களிக்குமாறு, அடியேனுக்கு உமது குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

விரிவுரை


இத் திருப்பாடலில் இறைவனிடத்து உள்ளன்பு இல்லாத வெறும் வேடத்தால் பயனில்லை என்று சுவாமிகள் தெரிவிக்கின்றனர்.

காவி உடுத்தும் ---

இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும், செம் பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்று குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு.

தாழ்சடை வைத்தும் ---

நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான்.  நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.

மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது ஒழித்து விடின்.                     ---  திருக்குறள்.

காடுகள் புக்கும் தடுமாறி ---

நாட்டை விட்டு காடு போய், மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும், தண்ணீரில் நின்றும், வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும்தவம் இயற்றுதல். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.

காடே திரிந்து என்ன, காற்றே புசித்து என்ன, கந்தை சுற்றி
ஓடே எடுத்து என்ன, உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே, இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர் பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!       --- பட்டினத்தார்.

அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாது, உயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடையார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்றுக் கொண்டனன். அன்பு இல்லாதவர் மலர் விட்டு எறியினும் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். இறைவன் திருமுடியின் இடத்து தலையாய அன்பு கொண்டு, திருவருள் தாகம் கொண்டு நிற்றலே அவன் அடியை அடைவதற்கு எளிய வழியாகும்.

காய்கனி துய்த்தும்............... காசினி முற்றும் திரியாதே ---

காய் கனி கிழங்குகளைத் தின்று உடம்பைத் துன்புறுத்தி உலகமெங்கும் ஓடி ஓடி உழன்று திரிவதனாலும் பதியை அடைய முடியாது. இது பற்றி பட்டினத்தடிகள் கூறுமாறும் காண்க.

புண்ணிய! புராதன! புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கயிலை நாயக!
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந!
பூத நாத! பொருவிடைப் பாக!
வேத! கீத! விண்ணோர் தலைவ!
முத்தி நாயக! மூவா முதல்வ!

பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி ஆயினுஙம் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர்
கருஇடைப் புகாமல் காத்துஅருள் புரியும்
திருவிடை மருத! திரிபு ராந்தக!

மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ,
மனையும் பிறவும் துறந்து, நினைவுஅரும்
காடும் மலையும் புக்கு, கோடையில்
கைம்மேல் நிமிர்த்து, காலொன்று முடக்கி,
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று,
மாரி நாளிலும், வார்பனி நாளிலும்,
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்,

சடையைப் புனைந்தும், தலையைப் பறித்தும்,
உடையைத் துறந்தும், உண்ணாது உழன்றும்,
காயும் கிழங்குமு காற்றுஉதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியும்,
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்,
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து,
ஆங்கு அவர்
அம்மை முத்தி அடைவதற்காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்,

ஈங்குஇவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின்று உயர்ந்த எழுநிலை மாடத்தும்,
செழுந்தாது உதிர்ந்த நந்தன வனத்தும்,
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்,
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்,
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்,

மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்,
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்டு இட்ட
மருப்பின் இயன்ற வாள்அரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்

தண்மலர் கமழும் வெண்மடி விரித்து,
பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பி,
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்ற,
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றி,
பொன் தோரணத்தைச் சுற்றிய துகில்என
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப,
ஆடரவு அல்குல், அரும்பெறல் நுசுப்பு,
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப,
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித்து ஒளிர்தர,
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்து மீதிட்ட
உத்தரீ யப்பட்டு ஒருபால் ஒளிர்தர,
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத்து அருகாத் தரளம் நிரைத்தாங்க்,
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்து,
காலன் வேலும் காம பாணமும்

ஆல காலமும் அனைத்தும்இட்டு அமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர,
மதியென மாசறு வதனம் விளங்க,
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்,

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,
ஆடினர்க்கு என்றும், பாடினர்க்கு என்றும்,
வாடினர்க்கு என்றும் வரையாது கொடுத்தும்,
பூசுவன பூசியும், புனைவன புனைந்தும்,

தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்,
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்,
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி,
இவ்வகை இருந்தோம், ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின், அந்த
முத்தியும் இழந்திலம், முதல்வ! அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.

கல் ஒன்றை வல்லான் ஒருவன் கைம் முயன்று எரிதல், மக்களை, மனைவியை, ஒக்கலை ஒருவுதல் முதலியவற்றைச் செய்வோர் ஐந்தெழுத்தை ஓதுதற்கும், மாட்டா ஒருவன் வாளா எறிதல், அவற்றைச் செய்யமட்டாது ஐம்புலன்களை ஆர நுகர்வார் ஐந்தெழுத்தை ஓதுதற்கும் உவமைகள். கல்லின் இயல்பு, யாவர் உயர எறியினும் தப்பாது நிலத்தில் வீழ்தல் ஆதல் போல, ஐந்தெழுத்தின் இயல்பு, யாவர் ஓதினும் முத்தியில் சேர்த்தல் என்பது இவ்வுவமைகளால் விளக்கப்பட்டது.

`சிவனை நினையாது பிறவற்றையெல்லாம் செய்வோர் அச்செயலுக்கு உரிய பயன்களைப் பெறுதலோடு ஒழிவதல்லது, பிறவி நீங்குதலாகிய முத்தியைப் பெறார்` என்பது கருத்து.

பரசிவன் உணர்ச்சி இன்றி, பல்உயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க்கு ஈறுஎய்தி வீடுபேறு அடைதும் என்றல்,
உருவமில் விசும்பின் தோலை உரித்து உடுப்பதற்கு ஒப்புஎன்றே
பெருமறை பேசிற்று, என்னில் பின்னும்ஓர் சான்றும் உண்டோ?   --- கந்தபுராணம்

மானுடன் விசும்பைத் தோல்போல் சுருட்டுதல் வல்லன் ஆயின்,
ஈனமில் சிவனைக் காணாது இடும்பைதீர் வீடும் எய்தும்;
மானம்ஆர் சுருதி கூறும் வழக்கு இவை. ஆதலாலே
ஆன்அமர் இறையைக் காணும் உபாயமே அறிதல் வேண்டும்  --- காஞ்சிப் புராணம்

 
சீவன் ஒடுக்கம் ---

உயிரைப் பொருள் என அறிவது பசுஞானம். அது கழலுதல் வேண்டும். அந்தக்கரண ஒடுக்கம் இதுவே ஆகும். விடயங்களைப் பற்றி நிச்சயித்து அபிமானித்து சிந்தித்து நிற்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் அந்தக்கரண வாசனை நீங்குதல் ஆகும்.

பூத ஒடுக்கம் ---

பாசத்தைப் பற்றி அறியும் ஞானம் பாசஞானம் ஆகும். அதுவும் நீங்குதல் வேண்டும். விடயங்களை அபகரிக்கும் கண் முதலிய பஞ்சேந்திரியங்களுக்கும், அபகரித்த போது வசன கமன தான விசர்க்க ஆனந்த விடயீகரிக்கும் வாக்கு ஆதி கன்மேந்திரியங்களுக்கும், ஆதாரமாய் நிற்கும் பூதங்களின் நீக்கம் எனினும் அமையும்.

பரஞானம் ---

பரஞானம், பதிஞானம், அநுபவஞானம், சிவஞானம் எல்லாம் ஒன்றே. இதுவே திருவருள் ஞானம். இதுவே பரகதிக்கு சிறந்த சாதனம்.

சீதள பத்மம் ---

பத்மம் என்பது உவம ஆகுபெயராகத் திருவடியைக் குறிக்கும். இறைவன் திருவடி மிகவும் குளிர்ந்து இருப்பது. பிறவியின் வெப்பத்தை ஆற்றுவது. ஈசன் எந்தை இணையடி நீழல், மாசில் வீணை போன்றது. மாலை மதியம் போன்றது. வீசு தென்றலை ஒத்தது.  வீங்கு இள வேனிலை நிகர்த்தது. மூசு வண்டு அறை பொய்கையைப் போன்றது.

கருத்துரை

அசுர குலகாலரே! சிதம்பரேசரே! மயில்வாகனரே! துன்பத்தைத் தரும் காயம் ஒறுத்தல் முதலியவைகளை மேற்கொள்ளமல், அடியேனுக்குப் பரஞானத்தை அடைய உமது திருவடிப் பேற்றைத் தந்து அருள்வீர்.1 comment:

  1. முருகா சரணம்! அழகிய விளக்கம். நன்றி.

    ReplyDelete

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...