சிதம்பரம் - 0633. செங்கலச முலையார்பால்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

செம்கலச முலையார்பால் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
விலைமாதர் மேல் அன்பு வைத்து அழியாமல்,
தேவரீர் திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள்.



தந்ததன ...... தனதான
     தந்ததன ...... தனதான


செங்கலச ...... முலையார்பால்
     சிந்தைபல ...... தடுமாறி

அங்கமிக ...... மெலியாதே
     அன்புருக ...... அருள்வாயே

செங்கைபிடி ...... கொடியோனே
     செஞ்சொல்தெரி ...... புலவோனே

மங்கையுமை ...... தருசேயே
     மன்றுள்வளர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


செம்கலச ...... முலையார்பால்
     சிந்தைபல ...... தடுமாறி,

அங்கம் மிக ...... மெலியாதே,
     அன்புஉருக ...... அருள்வாயே.

செம்கை பிடி ...... கொடியோனே!
     செம்சொல் தெரி ...... புலவோனே!

மங்கை உமை ...... தருசேயே!
     மன்றுஉள் வளர் ...... பெருமாளே!


பதவுரை

      செம் கை பிடி கொடியோனே --- சிவந்த கையில் சேவல் கொடியைப் பிடித்தவரே!

     செம் சொல் தெரி புலவோனே --- செம்மையான சொற்களைத் தெரிந்த புலவரே!

      மங்கை உமை தரு சேயே --- மங்கை உமாதேவி ஈன்ற குழந்தையே!

     மன்று உள் வளர் பெருமாளே --- தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமையில் மிக்கவரே! 

      செம் கலச முலையார் பால் சிந்தை பல தடுமாறி --- செம்புக் குடம் போன்ற முலைகளை உடைய விலைமாதர் மீது வைத்த மையலால் மனம் பலவாகத் தடுமாறி

      அங்கம் மிக மெலியாதே --- உள்ளம் மெலிந்து, அதனால் உடலும் மெலியாதபடிக்கு,

     அன்பு உருக அருள்வாயே --- தேவரீர் மீது வைத்த அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.


பொழிப்புரை


      சிவந்த கையில் சேவல் கொடியைப் பிடித்தவரே!

     செம்மையான சொற்களைத் தெரிந்த புலவரே!

      மங்கை உமாதேவி ஈன்ற குழந்தையே!

     தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமையில் மிக்கவரே!

      செம்புக் குடம் போன்ற முலைகளை உடைய விலைமாதர் மீது வைத்த மையலால் மனம் பலவாகத் தடுமாறி, உள்ளம் மெலிந்து, அதனால் உடலும் மெலியாதபடிக்கு, தேவரீர் மீது வைத்த அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.

விரிவுரை

செம் கலச முலையார் பால் சிந்தை பல தடுமாறி ---

செம்புக் குடம் போன்ற முலைகளை உடைய விலைமாதர் தம்மை மிகவும் அழகு உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள தம்மை மிகவும் புனைந்து கொள்வார்கள். மீது வைத்த மையலால் மனம் பலவாகத் தடுமாறி, உள்ள பொருள் எல்லாம், இழந்து, உடம்பையும் நோவுக்கு இடமாக்கி, உள்ளம் பாவத்துப்பட்டு ஆடவர்கள் மிகவும் துன்புறுவர்.

ஆன்மாவுக்கு இயல்பாகவே உள்ள ஆணவமானது அறிவை மறைக்கும். புலன்களால் ஈர்க்கப்பட்டு, பொருள் அல்லவற்றைப் பொருளாக எண்ணி, காம வயப்பட்டு மயங்கி பலப்பல அல்லல்களையும் ஆன்மா படும். அதனால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவகை ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்டு அல்லல் உறும்.  மண்ணாசை, பொன்னாசை ஆகிய இரண்டும் மனிதப் பிறவி எடுத்த பிறகே உண்டாகும். ஆனால், பெண்ணாசையானது எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வருவது.

இதைப் பின்வருமாறு அறிந்து தெளியலாம்.

பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

4. எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.

எந்தப் பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.                --- திருக்குறள்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு’        --- திருவாய்மொழி.

பாத்திரங்களில் பற்று உண்டாகும் என்பதை நாம் அறிவோம்.  அது எப்படி உண்டானது? முன்னரே சமைத்து உண்ட பாத்திரங்களை, துப்புரவாகக் கழுவாமல் அப்படியே போட்டதால் உண்டாகும். அந்த பற்று எளிதில் போகாது. அதைப் போக்க, நீரைத் தெளித்து வைத்து, சாம்பல் முதலானவைகளைக் கொண்டு அழுந்தத் தேய்க்க வேண்டும்.

அது போலவே உள்ளத்தில் உண்டாகும் பற்று அறவேண்டுமானால், அன்பு என்னும் நீர் வேண்டும். திருநீறு என்னும் சாதனமும் வேண்டும்.

பாத்திரங்களை வெளியில் மட்டும் அழகாக இருக்கும்படி கழுவி வைத்தால், அந்தப் பாத்திரத்தில் சமைத்தல் இயலாது. உள்ளே இருக்கும் பற்று அற்றுப் போகுமாறு தேய்த்து வைக்க வேண்டும்.

அது போலவே, புறத்தில் வேடமிட்டு அடியவர் போல இருப்பதால் பயன் விளையாது. மாறாகப் பாவமே சேரும். அகத்தில் பற்று இற்றுத் தூய்மையாக இருத்தில் வேண்டும். வேடநெறி நிற்க வேண்டும்.

வேடநெறி நில்லார் வேடம்பூண்டு என்னபயன்?
வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே,
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடுஅது ஆகுமே.                     --- திருக்குறள்.

பொய் வேடம் பூண்டால் அழிவு நிச்சயம். மெய்ப்பொருள் நாயனாரை அழிக்கப் பொய் வேடம் பூண்டு வந்தான் முத்த நாதன்.

மெய் எலாம் நீறுபூசி, வேணிகள் முடித்துக் கட்டி,
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.     --- பெரியபுராணம்.

நமது இல்லத்திற்கு ஒருவர் வந்தால், உடனே தூய்மையான இருக்கையைத் தருகின்றோம். வந்தவரும், தன்னிடத்திலே உள்ள மேலாடையால், தூசு தட்டியே அமருவதைக் காணலாம்.

இறைவன் எழுந்தருளுவதற்கு உரிய இடமான நமது உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையான உள்ளத்திலேயே இறைவன் எழுந்தருளுவான். பகட்டு எடுபடாது.

பூசலார் நாயனார் மறவாமையால் அமைத்த மனக்கோயிலுக்கு மகிழ்ந்து இறைவன் எழுந்தருளினான். பல்லவ மன்னன் அமைத்த புறக் கோயிலுக்கு எழுந்தருளவில்லை.

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்; பிறப்பைக் கொடுக்கும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.                --- திருக்குறள்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்.


பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினை விடவும்,  அவாவை விடவும் மிகவும் கொடிது.

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது பெண்ணாசை.பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

உலகமெல்லாம் கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கடங்காது, கங்கு கரையின்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுர தாண்டவமே பேராசை.

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரைமீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

குதிரை மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையைக் கொடுங்கள்” என்றான்.

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

நான் அடிக்கிறேன்; நீ சிரிக்கிறாய்; என்ன காரணம்?” என்று கேட்டான்.

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன்; நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்று, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

ஆசைக்குஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
         ஆளினும், கடல் மீதிலே
     ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
         அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
         நெடுநாள் இருந்த பேரும்
     நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
         நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில், பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
     உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
          ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்,
     பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.                       --- தாயுமானார்.

ஆசைச் சுழற் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.  --- தாயுமானார்.

ஆசைஎனும் பெருங் காற்றுஊடுஇலவம்
         பஞ்சுஎனவும் மனது அலையுங்காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும்
         கேட்டதும் தூர்ந்து, முத்திக்கு ஆன
நேசமும்,நல் வாசமும்போய், புலனாய்இல்
         கொடுமை பற்றி நிற்பர், அந்தோ!
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!
         நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?    --- தாயுமானார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி
                                     
கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டுள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

  ஆசா நிகளம் துகள் ஆயின பின்
 பேசா அநுபூதி பிறந்ததுவே”             --- கந்தரநுபூதி
  
வாட்டி எனைச் சூழ்ந்த வினை, ஆசைய முஆசை, அனல்
     மூட்டி உலைக் காய்ந்த மழுவாம் என விகாசமொடு
     மாட்டி எனைப் பாய்ந்து, கடவோடு, டமொடு ஆடி விடு ......விஞ்சையாலே

வாய்த்த மலர்ச் சாந்து புழுகு, ன பனி நீர்களொடு
     காற்று வரத் தாங்குவன, மார்பில் அணி ஆரமொடு
     வாய்க்கும் எனப் பூண்டு அழகதாக பவிசோடு மகிழ் ......வன்பு கூரத்

தீட்டு விழிக் காந்தி, மடவார்களுடன் ஆடி, வலை
     பூட்டிவிடப் போந்து, பிணியோடு வலி வாதம் என
     சேர்த்துவிடப் பேர்ந்து, வினை மூடி, அடியேனும் உனது ...... அன்பு இலாமல்,

தேட்டம் உறத் தேர்ந்தும் அமிர்தாம் எனவெ ஏகி, நமன்
     ஓட்டிவிடக் காய்ந்து, வரி வேதன் அடையாளம் அருள்
     சீட்டுவரக் காண்டு, நலி காலன் அணுகா, நின் அருள்......  அன்பு தாராய்.
                                                                              --- திருப்புகழ்.

மண்ணாசைப் பட்டேனை மண்உண்டு போட்டதடா,
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.

ஐந்து புலனும் அடங்கேனே என்குதே,
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே.

நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமா எண்ணுதே,
ஆர்க்கும் உயர்ஆசை அழியேனே என்குதே.

கண்ணுக்குக் கணு எதிரே கட்டையிலே வேகக்கண்டும்,
எண்ணும் திரமாய் இருப்போம் என்று எண்ணுதே.

குரும்பை முலையும் கெடுப்பேனே என்குதே,
அரும்பு விழியும் என்தன் ஆவி உண்பேன் என்குதே,

மாதர் உருக் கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே,
ஆதரவும் இற்று இங்கு அரக்காய் உருகிறண்டா.

கந்தனை ஈன்று அருளும் கன்னிவன நாதா!
எந்த வித்ததில் நான் ஏறிப் படருவண்டா?         --- பட்டினத்தார் அருட்புலம்பல்.

செம் சொல் தெரி புலவோனே ---

செம்மையான சொற்களைத் தெரிந்த புலவரே!  இது உருத்திரசன்மர் வரலாற்றையும், திருஞானசம்பந்தர் வரலாற்றையும் குறிக்கும்.

மதுரை மா நகரத்தை வம்சசேகர பாண்டியனது புதல்வன் வம்ச சூடாமணி என்னும் பாண்டியன் அரசு புரிவானாயினான். நாள்தோறும் அம்மன்னர் பெருமான் சண்பக மலர்கள் கொண்டு சோமசுந்தரப் பெருமானை அருச்சிக்கும் நியமம் பூண்டிருந்தனன். அதனால் அவற்குச் சண்பக பாண்டியன் என்னும் பேரும் உண்டானது. அறநெறி வழாது அவன் அரசு புரியுங்கால் கிரக நிலை மாற்றத்தால் மழை இன்றி, மக்கள் தடுமாற்றம் அடைந்தனர். பன்னிரு வருடம் பஞ்சத்தால் உலகம் வாடியது. அது காலை ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்கள் பசியால் வருந்தி ஒருங்கு கூடி பாண்டியனை அடுத்தனர். பாண்டியன் அவர்களை அன்னை போல் ஆதரித்துப் போற்றினன்.

பின்னர் மன்னன் அச்சங்கப் புலவர்களை அன்புடன் நோக்கி, “முத்தமிழ் வல்ல உத்தம சீலர்களே! இங்ஙனே எஞ்ஞான்றும் இருந்து அமிழ்தினும் இனிய தமிழ் நூல்களை ஆய்மின்” என்றனன். புலவர் “புரவலர் ஏறே” ஐந்திலக்கணங்களுள் பொருள் நடுநாயகமாக மிளிர்வது. எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் பொருள் மாட்டன்றே? அப்பொருள் நூலின்றி யாங்கள் எவ்வாறு ஆய்வோம்?” என்று வருந்திக் கூறினார்கள். அரசன் ஆலவாய் அண்ணல் ஆலயத்து ஏகி, “தேவ தேவா! இக்குறையை தேவரீரே நீக்கியருளல் வேண்டும்; தமிழும் தமிழ்நாடும் தழைக்கத் தண்ணருள் புரிவீர்.” என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வெள்ளம் பெருக முறையிட்டனன். அன்பர் கருத்தறிந்து அருளும் எம் சொக்கலிங்கப் பெருமான், இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் நூலை அருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தருளினார்.

வடமொழி பாணினியால் செய்த வியாகரணத்தை உடையது. அப்பாணியினினும் பல்லாயிரம் மடங்கு மகத்துவம் உடையவரும், கரத்தைச் சிறிது கவிழ்த்தலால் விந்த கிரியையும், நிமிர்த்தலால் ஏழ்கடலையும் அடக்கிய பேராற்றலும் பெருந்தவமும் உடையவருமாகிய அகத்திய முனிவரால் செய்யப் பெற்ற இலக்கணமே அன்றி, சிவமூர்த்தியார் செய்தருளிய இலக்கணத்தையும் உடையது இத்தமிழ் எனின் இதன் பெருமையையும் அருமையையும் அளக்க வல்லவர் யாவர்? அதனைத் தாய் மொழியாகக் கொண்ட எமது புண்ணியப் பேற்றைத்தான் அளக்க முடியுமோ?

அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது
   அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
   கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்”

என்ற சூத்திர முதலாக அறுபது சூத்திரங்களை உடையது இறையனார் அகப்பொருள். சொக்கலிங்கப் பெருமான் திருக்கோயிலில் திரு அலகு இடச் சென்ற அந்தணர் அதனைக் கண்டு எடுத்துச் சென்று அரசனிடம் அளித்தனர். அவன் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்து, அதன் பொருள் எளிதில் விளங்காமையின் புலவர்களை நோக்கி, “இதற்கு உரை செய்மின்” என்று வேண்டினன். அங்ஙனமே நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பதின்மரும் உரை செய்தனர். பிறகு அவர்களுக்குள்
தங்கள் தங்கள் உரைகளே சிறந்தன என்று கலகம் உண்டாயிற்று. “இவர்கள் உரைகளை ஆய்ந்து இதுவே சிறந்தது என்று முடிவு கூறுவதற்கு இவரினும் சிறந்த கல்வி கரை கண்ட புலவர் யாண்டு உளார்? என் செய்வேன்? ஆண்டவனே! தேவரீரே இக் கலகத்தை நீக்கி அருள்செய்ய வேண்டும்” என்று தென்னவனாகிய மன்னவன், முன்னவன் திருமுன் முறையிட்டனன்.

வேந்தனே! இவ்வூரிலே உப்பூரிகுடி கிழார் மகனாவன் உருத்திரசன்மரை அழைத்து வந்து உரை கேட்பின் மெய்யுரை அவன் தெரிக்கும். அந்தப் பிள்ளை குமார சுவாமியாகும். மெய்யுரைக்குக் கண்ணீர் சொரிந்து உடல் கம்பித்து ஆனந்தம் அடைவன்” என்று அசரீரி கூறிற்று. (அசரீரி கூறியதாக அந்நூலுக்கு உரைகண்ட நக்கீரர் பாயிரத்தில் கூறினர். இனி திருவிளையாடற் புராணத்துள் பெருமான் புலவர்போல் வந்து கூறியதாகவும் தனபதி என்னும் வணிகனுக்கும் குணசாலினிக்கும் மகனாகி வளர்ந்தார் என்றும் கூறும்).

அது கேட்ட புரவலனும் புலவரும் விம்மிதம் உற்றுத் திருவருளைப் புகழ்ந்து, வணிகர் திருமனையில் அவதரித்து வளரும் உருத்திர ஜன்மரிடம் ஏகினர். அந்தக் குழந்தை, செங்கண்ணன்; புன்மயிரன்; ஐயாட்டைப் பருவத்தன்; மூகை போல் ஒன்றும் பேசலன்; இத்தகு முழுது உணர் புலவனாம் முருகக் குழந்தையை அனைவரும் வணங்கி முறைப்படி அழைத்து வந்து, சங்கப் பலகையில் இருத்தி, வாச நீராட்டி வெண்துகில் வெண்மலர், வெண்சாந்தி முதலியவற்றால் அலங்கரித்து, போற்றி செய்து புலவர் யாவரும் தத்தம் உரைகளை வாசித்தனர். உருத்திரசன்மராம் கந்தக் கடவுள் அவ்வுரைகளைக் கேட்டு வருவாராயினார். சிலர் சொல் வைப்பைக் குறிப்பினால் இகழ்ந்தார். சிலர் சொல்லழகைப் புகழ்ந்தார். சிலர் பொருளாழத்தை உவந்தார். சிலர் பொருளை பெறுத்தார் கபிலர், பரணர் என்னும் புலவர்கள் வாசிக்கும்போது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை அசைத்னர்; மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் தம் உரையை வாசித்தபோது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து மெய் புளகித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து இதுவே உண்மை உரையென விளக்கியருளினார். பாண்டியனும் பாவலரும் மெய்யுரை பெற்றேம் என்று கழிபேருவகை யுற்றனர்.

நுழைந்தான் பொருள்தொறும் சொல்தொறும், நுண்தீஞ்சுவை உண்டே
தழைந்தான் உடல், புலன் ஐந்தினும் தனித்தான், சிரம் பனித்தான்
குழைந்தான்,விழி வழிவேலையுள் குளித்தான் தனையளித்தான்
விழைந்தான் புரி தவப்பேற்றினை விளைந்தான் களி திளைத்தான்
                                                                    --- திருவிளையாடற்புராணம்

ஓலமறைகள் அறைகின்ற ஒருவனும், மூவரும் காணாத முழுமுதல்வனும் ஆகிய முருகவேள் உருத்திர ஜன்மராக வந்தார் என்பது அவருடைய முழுமுதல் தன்மைக்கு இழுக்கு அன்றோ? னின், இழுக்கு ஆகாது. முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திரஜன்மராக அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், திருஞானசம்பந்தராகவும் வந்ததையும் அங்ஙனமே ஸ்ரீகண்டருத்திரர், வீரபத்திரர், வைரவர், ஆகியோர் செயல்களைப் பரவசித்தின் செயலாக ஏற்றித் தேவார திருவாசகங்கள் கூறுவதனால் பரசிவத்திற்கு இழுக்கு இல்லையாமாறு போல், அபரசுப்ரமண்யர்கள் திருஞானசம்பந்தராகவும் உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும் வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது. இதனைக் கூர்த்த மதி கொண்டு நுனித்து உணர்ந்து ஐயந்தெளிந்து அமைதியுறுக.

திருத்தகு மதுரைதனில் சிவன்பொருள் நிறுக்கும் ஆற்றால்
உருத்திர சருமனாகி உறுபொருள் விரித்தோன்‘    --- கந்தபுராணம்

செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
    செந்தில் பதிநகர் உறைவோனே”                   --- (வஞ்சத்துட) திருப்புகழ்

உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
     மதித்திட் டுச்செறி நாற்கவிப்புணர்
          ஒடுக்கத் துச்செறிவாய்த் தலத்துறை பெருமாளே”
                                                                                 --- (வழக்குச்) திருப்புகழ்

அரிய தாதை தான் ஏவ, மதுரேசன்
   அரிய சாரதாபீடம் அதனில் ஏறி, ஈடேற
   அகிலநாலும் ஆராயும் இளையோனே”              --- (மனகபாட) திருப்புகழ்

சடிலத் தவன்இட் டவிசிட் டகுலத்து,
     ஒருசெட் டியிடத் தின்உதித் தருள்வித்
          தக,ருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே,
சநகர்க் கும்அகஸ்த் யபுலஸ்த் யசநற்
     குமரர்க் கும்அநுக் க்ரகமெய்ப் பலகைச்
          சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான
படலத்து உறுலக் கணலக் யதமிழ்த்
     த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப்
          பழுதற்று உணர்வித்து அருள்வித் தகசற் ...... குருநாதா
                                                                      --- (கடலைச்சிறை) திருப்புகழ்.

மன்றுள் வளர் பெருமாளே ---

பொன்னம்பலத்திலே எழுந்தருளி இருக்கின்ற பெருமானே முருகவேள் என்கின்றார் அடிகளார். ஐம்முகச் சிவனும், ஆறுமுகச் சிவனும் வேறு அல்ல. ஐந்து முகத்தோடு அதோமுகமும் கொண்ட பரம்பொருளின் ஆறு திருமுகங்களிங் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளே அறுமுகப் பரம்பொருளாக உருப் பெற்றன.

இனி, பொன் அம்பலம் என்பது புறத்திலே நாம் காணுகின்ற ஒன்று. அகத்திலேயும் பொன்னம்பலம் உண்டு.

பொன் என்பது அழகு என்னும் பொருள்படும். அழகை விரும்பாதார் யாரும் இல்லை என்பது போல, பொன்னை விரும்பாதார் யாரும் இல்லை. பொன்னைப் பழுக்கக் காய்ச்சி, பலவிதமான அணிகலன்களாகச் செய்வர். செய்த அணிகலனைத் திரும்பவும் வேறு விதமாகச் செய்வர். எப்படிச் செய்தாலும் பொன்னின் குணம் மாறாமல் இருக்கும். பொன் வேறு எந்த உலோகத்தோடு சேர்ந்தாலும், தன் நிலையில் மாசு படாது.

பொன் என்பது இங்கே அன்பைக் குறிக்கும். உன்பு உள்ளவர்கள் தன்னலம் கருத மாட்டார்கள். தனக்கு ஒரு துன்பம் நேர்ந்தாலும் பிறர் துன்பத்தைப் போக்கவே எண்ணுவார்கள். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு உடையவர்கள், பிறரால் மாசு படமாட்டார்கள்.

"பொன்னார் மேனியன்" என்றும், "பொன்போல மிளிர்வதொர் மேனியன்: என்றும், "பொன்னார் மேனிப் புரிசடைப் புண்ணியன்" என்றும் இறைவனைக் குறித்து அருளாளர்கள் சொன்னது, இறைவன் அன்பு வடிவானவன் என்பதைக் குறித்தே ஆகும்.
"கற்பனை கடந்த சோதி, கருணையே உருவம் ஆகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "அன்பு உருவாம் பரசிவமே" என்றார் வள்ளல் பெருமான்.

ஆக, பொன் என்பது அன்பைக் குறிக்கும். பொன் அம்பலம் என்பது அன்பு வெளியைக் குறிக்கும். அன்புடையார் உள்ளமே பொன்னம்பலம்.

வெள்ளி என்பது அறிவைக் குறிக்கும். அறிவு பழுது பட வாய்ப்பு உண்டு. வெள்ளியானது பிற உலோகங்களோடு சேர்ந்தால் தன் நிலையில் பழுது அடையும். வெள்ளி கருத்துப் போவதைக் காண்கின்றோம்.

பொற்சபை அல்லது பொன்னம்பலம் என்பது அன்பு வெளியையும், சிற்சபை அல்லது வெள்ளியம்பலம் என்பது அறிவு வெளியையும் குறிக்கும்.

எனவே, அன்பு உடையார் உள்ளமாகிய பொன்னம்பலத்திலே இறைவன் எழுந்தருளி இருப்பான். "உள்ளம் பெருங்கோயில்" என்றதும் இது கருதியே.

எனவே தான், "பொன் ஆனாய், மணி ஆனாய், போகம் ஆனாய்" என்று அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன் அமர்ந்த அன்பினராய்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் மொழிந்தருளினார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் சோதி.    ---  திருவருட்பா.

அன்பு உருக அருள்வாயே ---

விலைமாதர் மீது வைத்த காமத்தால் உள்ளம் உருகி, ஆன்ம நலம் சிதைந்து போவதை விடுத்து, இறைவன் மீது அன்பு வைத்து, அருள் நலம் பெருகவேண்டும் என்று வேண்டுகின்றார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மேல் அன்பு வைத்து அழியாமல், தேவரீர் திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள்.












No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...