இருந்தும் பயனில்லை, போனாலும் கேடு இல்லை.




26. இருந்தும் பயனில்லை

தருணத்தில் உதவிசெய் யாதநட் பாளர்பின்
     தந்து என, தராமல்என்ன;
தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னரைச்
     சார்ந்து என்ன, நீங்கில் என்ன?

பெருமையுடன் ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
     பெற்று என, பெறாமல் என்ன?
பிரியமாய் உள்ளன்பி லாதவர்கள் நேசம்
     பிடித்து என, விடுக்கில்என்ன?

தெருளாக மானம்இல் லாதவொரு சீவனம்
     செய்து என, செயாமல் என்ன?
தேகியென வருபவர்க் கீயாத செல்வம்
     சிறந்து என, முறிந்தும் என்ன?

மருவிளமை தன்னிலில் லாதகன் னிகைபின்பு
     வந்துஎன, வராமல் என்ன?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன --- தக்க காலத்திலே உதவி செய்யாத நண்பர்கள், காலம் கடந்த பிறகு உதவி புரிந்தால் என்ன பயன்?  உதவி செய்யாவிட்டால் என்ன கெடுதல்?

     தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரைச் சார்ந்து என்ன நீங்கில் என்ன --- உயர்வு தாழ்வு அறிந்து முறைகூறாத அரசர்களைச் சேர்ந்து இருப்பதால் என்ன பயன்? அவரை விட்டு நீங்கிவிட்டால் என்ன கெடுதல்?

     பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையைப் பெற்று என்ன பெறாமல் என்ன --- பெருமையுடன் வீரமும் இல்லாத ஒரு மகனைப் பெறுவதால் என்ன பயன்? பெறாவிட்டால் என்ன கேடு?

     பிரியமாய் உள்ளன்பு இல்லாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன --- விருப்பத்துடன் உள்ளத்திலே அன்பு இல்லாதவர்களின் நட்பைப் பெறுவதால் என்ன பயன்? பெறாவிட்டால் வரும் கேடு என்ன?

     தெருளாக மானம் இல்லாதது ஒரு சீவனம் செய்து என்ன, செய்யாமல் என்ன --- தெளிந்த அறிவுடன், பெருமை இல்லாத வாழ்க்கையை வாழ்வதால் என்ன பயன்? விட்டுவிட்டால் என்ன கெடுதல்?

     தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன --- பிச்சை என்று வருகின்றவர்களுக்குக் கொடுத்து உதவாத செல்வம் சிறப்புற்றால் என்ன பயன்? அழிந்து போனால் என்ன கெடுதல்?,

     மருவு இளமை தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன --- சேர்க்கையை விரும்பும் இளமைப் பருவத்திலே கிடைக்காத கன்னி ஒருத்தி, முதுமையிலே கிடைத்துப் பயன் என்ன? கிடைக்காமல் போனால் என்ன கெடுதி?

        விளக்கம் --- நண்பர்களாக இருந்தால் தக்க காலத்திலே உதவி புரிதல் வேண்டும். "உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே இடுக்கண் களைவது ஆம் நட்பு" என்றார் திருவள்ளுவ நாயனார். உதவாத நட்பு ஆகாது.

அரசர்கள் தரம் அறிந்து முறை வழங்கல் வேண்டும். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்றார் நாயனார்.

பெருமையும் ஆண்மையும் பிள்ளைகட்கு வேண்டும்.

உள்ளன்பு உடையோரிடத்தில் நட்புக் கொள்ள வேண்டும். அல்லாதது எல்லாம் ஏதாவது நன்மையை எதிர்பார்த்துக் கொள்வதாகவே அமையும். "உறுவது சீர் தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும் களவரும் நேர்" என்றார் திருக்குறள் ஆசான்.

     இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவுவதே செல்வத்தை ஒருவன் பெற்றதன் பயன். "ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல், தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண் அவர்" என்றது திருக்குறள்.

அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றமல்,
பொன்னும், மனையும், எழில் பூவையரும்,வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே.

முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம்
இற்றை நாள் பெற்றோம் என்று எண்ணாது, பாழ் மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல், அரன்பூசை செய்யாமல்,
கற்றவர்க்கும் ஈயாமல், கண்மறைந்து விட்டனையே.

நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயம் என்றே எண்ணி,
பாக்கு அளவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல்,
போர்க்குள் எம தூதன் பிடித்து இழுக்கும் அப்போது
ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே.

என வரும் பட்டினத்து அடிகள் பாடல்களின் கருத்தையும் எண்ணி உணர்க.

 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...