சிதம்பரம் - 0632. சுரும்பு உற்ற





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சுரும்பு உற்ற (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
உம்மையே எண்ணி வாடும் இந்தப் பெண்ணின் துயர் தீ,  
உமது மார்பில் தவழும் மாலையைத் தந்து அருள்.


தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
     தனந்தத்த தனதான ...... தனதான


சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
     துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந்

துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
     தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்

அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
     மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்

அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்

கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
     கரந்துற்ற மடமானி ...... னுடனேசார்

கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
     களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே

இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
     இதம்பெற்ற மயிலேறி ...... வருகோவே

இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ,
     துரந்து உற்ற குளிர் வாடை ...... அதனாலும்,

துலங்கு உற்ற மருவாளி விரைந்து உற்ற படி ஆல
     தொடர்ந்து உற்று வருமாதர் ...... வசையாலும்,

அரும்பு உற்ற மலர்மேவு செழும் கொற்ற அணையாலும்,
     அடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்,

அழிந்து உற்ற மடமானை அறிந்து, ற்றம் அது பேணி,
     அசைந்து உற்ற மது மாலை ...... தரவேணும்.

கரும் கொற்ற மதவேழம் முனிந்து உற்ற கலைமேவி
     கரந்து உற்ற மடமானின் ...... உடனேசார்

கரும்பு உற்ற வயல்சூழ பெரும்பற்றப் புலியூரில்
     களம்பற்றி நடமாடும் ...... அரன்வாழ்வே!

இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர
     இதம் பெற்ற மயில்ஏறி ...... வரு கோவே!

இனம் துற்ற வருசூரன் உருண்டிட்டு விழ, வேல் கொடு
     எறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.


பதவுரை

     கரும் கொற்ற மதவேழம் --- விநாயகப் பெருமான் கரிய, வீரம் வாய்ந்த மதயானை வடிவோடு

     முனிந்து உற்ற கலை --- கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில்,  (காலை என்னும் சொல் சந்தத்தை நோக்கி, கலை என்று வந்தது)

      மேவி --- தன்னை நாடி,

     கரந்து உற்ற மடமானின் உடனே சார் --- தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இளமானாகிய வள்ளியுடன் சார்ந்தவரே!

      கரும்பு உற்ற வயல் சூழ --- கரும்புகள் வளர்ந்துள்ள வயல்களால் சூழப்பட்டுள்ள

     பெரும்பற்றப்புலியூரில் --- பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில்

     களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே ---  பொன்னம்பலத்தை ஆடு களமாகக் கொண்டு, திருநடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே!

      இருந்து உற்று --- மனம் பொருந்தி இருந்து,

     மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர --- ஞானமலர்களை விரும்பி இட்டு வழிபடும் அடியவர்களின் துயரம் தீர,

     இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே --- இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசரே!

      இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ --- தனது சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரபதுமன் உருண்டு விழ,

     வேல் கொடு எறிந்திட்டு --- வேலாயுதத்தை விடுத்து

     விளையாடு பெருமாளே --- திருவிளையாடல் புரிந்த பெருமையில் மிக்கவரே!

      சுரும்பு உற்ற பொழில் தோறும் --- மலர்களை நாடி வண்டுகள் மிகுந்து உள்ள சோலைகளில்

     விரும்பு உற்ற குயில் கூவ --- விரும்பிச் சேர்ந்துள்ள குயில்கள் கூவுதலாலும்,

       துரந்து உற்ற குளிர்வாடை அதனாலும் --- வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும்,

      துலங்கு உற்ற மருவாளி விரைந்து உற்ற படி ஆல --- காமவேளின் மணம் பொருந்திய அம்புகளாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும்,

      தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் ---  பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைச் சொற்களாலும்,

      அரும்பு உற்ற மலர் மேவு --- மலர் அரும்புகள் தூவப்பட்டுள்ள,

     செழும் கொற்ற அணையாலும் --- வலிமை வாய்ந்த காம விளையாட்டுக்கு இடமான படுக்கையாலும்,

      அடைந்திட்ட விடை மேவு மணியாலும் --- மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசையாலும்,

      அழிந்து உற்ற மடமானை அறிந்து --- மனம் அழிந்துள்ள இள மானாகிய இந்தப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து,

     அற்றம் அது பேணி --- தக்க தருணம் பார்த்து விரும்பி,

      அசைந்து உற்ற மது மாலை தரவேணும் --- தேவரீரது திருமார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

        
பொழிப்புரை


     விநாயகப் பெருமான் கரிய, வீரம் வாய்ந்த மதயானை வடிவோடு  கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இளமானாகிய வள்ளியுடன் சார்ந்தவரே!

         கரும்புகள் வளர்ந்துள்ள வயல்களால் சூழப்பட்டுள்ள பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் விளங்கும் பொன்னம்பலத்தை ஆடு களமாகக் கொண்டு, திருநடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே!

         மனம் பொருந்தி இருந்து, ஞானமலர்களை விரும்பி இட்டு வழிபடும் அடியவர்களின் துயரம் தீர, இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசரே!

         தனது சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரபதுமன் உருண்டு விழ, வேலாயுதத்தை விடுத்து திருவிளையாடல் புரிந்த பெருமையில் மிக்கவரே!

         மலர்களை நாடிய வண்டுகள் மிகுந்து உள்ள சோலைகளில் விரும்பிச் சேர்ந்துள்ள குயில்கள் கூவுதலாலும், வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும், காமவேளின் மணம் பொருந்திய அம்புகளாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைச் சொற்களாலும், மலர் அரும்புகள் தூவப்பட்டுள்ள, வலிமை வாய்ந்த காம விளையாட்டுக்கு இடமான படுக்கையாலும், மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசையாலும், மனம் அழிந்துள்ள இள மானாகிய இந்தப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, தக்க தருணம் பார்த்து விரும்பி, தேவரீரது திருமார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழ் அகப் பொருள் துறையில் அமைந்தது

சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ ---

சோலைகளிலே மலர்ந்துள்ள மலர்களில் இருக்கும் தேனை உண்டு மகிழ வண்டுகள் வந்து மொய்க்கும்.  அந்த மலர்ச் சோலைகளில் குளிர்ந்த சூழலை மகிழ்ந்து குயில்கள் இனிமையாகக் கூவிக் கொண்டு இருக்கும்.  அந்த இனிமையான ஓசை தலைவனைப் பிரிந்து விரக தாபத்தால் தவித்துக் கொண்டு இருக்கும் தலைவிக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.

துரந்து உற்ற குளிர்வாடை அதனாலும் ---

வெளிப்பட்டு வீசும் மிகுந்த குளிர்ச்சி பொருந்திய வாடைக் காற்று தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியை வருத்தும்.

துலங்கு உற்ற மருவாளி விரைந்து உற்ற படி ஆல ---

காமவேளின் மணம் பொருந்திய அம்புகளாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும் தலைவிக்குத் துன்பம் உண்டாகும்.

மன்மதனுடைய மலர்க்கணைகள் ஐந்து. அவை பரிமள மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம். பஞ்சபாண பூபன் என்றும் மன்மதனுக்கு ஒரு பெயர் உண்டு.  

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழும் சூதமுடன், அசோகம் தளவம்,
     மலர்நீலம் இவை ஐந்துமே
  மாரவேள் கணைகளாம்; இவை செயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிக அசோகம் துயர் செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும் அவத்தை;

நினைவில் அதுவே நோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப்பொடு பிதற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்ணுஇல்லை என்னல் ஈரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

         இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,

         இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்
---   கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் --- 

காம வயப்பட்டு, தன் செயல் ஏதும் இன்றி வருந்தி நிற்கும் பெண்ணின் இயல்பினை உணராமல், ஊரில் உள்ள பெண்கள் இழித்துப் பேசுவர். அது அலர் தூற்றுதல் எனப்படும்.

ஊரவர் கவ்வை எரு இட்டு, ன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.   --- நம்மாழ்வார்.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.                       --- திருக்குறள்.

பட்டுப்படாத மதனாலும்
     பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
    துக்கத்தில்ஆழ்வது இயல்போதான்  --- திருப்புகழ்.

அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் ---

மலர் அரும்புகள் தூவப்பட்டுள்ள, வலிமை வாய்ந்த காம விளையாட்டுக்கு இடமான படுக்கை தனிமையில் வாடும் தலைவிக்குத் தன்பத்தைத் தரும்.

அடைந்திட்ட விடை மேவு மணியாலும் ---

காலையில் மேய்ச்சலுக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசை, மாலைக் காலமும், இரவுக் காலமும் வந்து விட்டதை உணர்த்தும்.  அந்த ஓசை தலைவிக்குத் துன்பத்தைத் தரும்.

நம்பியாரூரர் மீது காதல் வயப்பட்ட பரவையார் நிலையை, தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

என்றஉரை கேட்டலுமே எம்பிரான்
         தமரேயோ என்னா முன்னம்
வன்தொண்டர் பால்வைத்த மனக்காதல்
         அளவுஇன்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாம் குணங்கள்உடன்
         நீங்கஉயிர் ஒன்றும் தாங்கி
மின்தயங்கு நுண்இடையாள் வெவ்உயிர்த்து
         மெல்அணைமேல் வீழ்ந்த போது.

ஆரநறும் சேறுஆட்டி அரும்பனிநீர்
         நறுந்திவலை அருகு வீசி
ஈரஇளந் தளிர்க்குளிரி படுத்துமட
         வார்செய்த இவையும் எல்லாம்
பேர்அழலில் நெய்சொரிந்தால் ஒத்தனமற்று
         அதன்மீது சமிதை என்ன
மாரனும்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
         மலர்வாளி சொரிந்தான் வந்து.

மலர்அமளித் துயில்ஆற்றாள், வருந்தென்றல்
         மருங்குஆற்றாள், மங்குல் வானில்
நிலவுஉமிழும் தழல்ஆற்றாள், நிறைஆற்றும்
         பொறைஆற்றாள், நீர்மை யோடும்
கலவமயில் எனஎழுந்து, கருங்குழலின்
         பரம்ஆற்றாக் கையள் ஆகி,
இலவஇதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்துஆற்றா
         மையின்வறிதே யஇன்ன சொன்னாள்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இதுஎன்?
         கலைவாள் மதியம் கனல்வான் எனைஇச்
சந்தின் தழலைப் பனி நீர் அளவித்
         தடவும் கொடியீர், தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும், விரையார்
         மலய அனிலமும் எரியாய் வருமால்,
அந்தண் புனலும் அரவும் விரவும்
         சடையான் அருள்பெற்று உடையார் அருளார்.

புலரும் படிஅன்று இரவு என் அளவும்,
         பொறையும் நிறையும் இறையும் தரியா,
உலரும் தனமும் மனமும் வினையேன்
         ஒருவேன் அளவோ? பெருவாழ்வு உரையீர்,
பலரும் புரியும் துயர்தான் இதுவோ?
         படைமன் மதனார் புடைநின்று அகலார்,
அலரும் நிலவு மலரும் அடியார்
         அருள்பெற்று உடையார் அவரோ அறியார்.

தேரும் கொடியும் மிடையும் மறுகில்
         திருவாரூரீர்! நீரே அல்லால்
ஆர்என் துயரம் அறிவார்? அடிகேள்!
         அடியேன் அயரும் படியோ இதுதான்?
நீரும் பிறையும் பொறிவாள் அரவின்
         நிரையும் நிரைவெண் தலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்!
         உமதுஅன்பு இலர்போல் யானோ உறுவேன்.        --- பெரியபுராணம்.

செழுந் தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
    திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்து இன்று என் மேல் பகை ஆட, வாடும்
    எனை நீ நலிவது என் என்னே என்னும்,
அழுந்தா மகேந்திரத்து அதரப்புட்கு
    அரசுக்கு அரசே! அமரர் தனிக்
கொழுந்தே! என்னும், குணக் குன்றே! என்னும்,
    குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.  --- திருவிசைப்பா.


அழிந்து உற்ற மடமானை அறிந்து ---

இவ்வாறெல்லாம் மனம் அழிந்துள்ள இந்தப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து.

இறைவன் ஒருவனையே எண்ணி எண்ணி, வழிபட்டு, வேறு பற்றுக்கள் அனைத்தும் அற்ற நிலையில் பக்குவப்பட்டுள்ள ஆன்மாவின் தன்மையை அறிந்து,

அற்றம் அது பேணி ---

தக்க தருணம் பார்த்து விரும்பி,

பக்குவப்பட்ட ஆன்மாவை ஆட்கொள்ளுதற்கு உரிய  காலத்தை அறிந்து,

அசைந்து உற்ற மது மாலை தரவேணும் ---

தேவரீரது திருமார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.

மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும்
மார் தங்கு தாரைத் தந்து அருள்வாயே...       --- (நீலம்கொள்) திருப்புகழ்.

கரும் கொற்ற மதவேழம் முனிந்து உற்ற கலை மேவி கரந்து உற்ற மடமானின் உடனே சார் ---

     விநாயகப் பெருமான் கரிய, வீரம் வாய்ந்த மதயானை வடிவோடு கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில்,  (காலை என்னும் சொல் சந்தத்தை நோக்கி, கலை என்று வந்தது) தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இளமானாகிய வள்ளியுடன் சார்ந்தவர் முருகப்பெருமான்.

முருகப் பெருமான் வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு

"தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில்", திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார் கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அம்மான் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன்கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.
    
வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என்னம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவரு திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா.  வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதம் ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய் முதல்வா" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப் பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழ முனிவரைத் தழுவி நின்றார்.  பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய சுற்றத்தாரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார்.  முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடி மலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்?  தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை மணந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளநாகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளியாகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.


இருந்து உற்று, மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர, இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே ---

மனம் பொருந்தி இருந்து, ஞானமலர்களை விரும்பி இட்டு வழிபடும் அடியவர்களின் துயரம் தீர, இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசரே என்கின்றார் அடிகாளர்.

முருகப் பெருமானை உள்ளத்திலே ஞான மலர்களைக் கொண்டு
வழிபடுபவர்க்கு அவர் படும் துன்பங்கள் தீர,பெருமான் மயிர் ஏளி வந்து அருள் புரிவான்.

புறப்பூசையை விடவும் அகப்பூசையே சிறந்தது.  புறப்பூசை அகப்பூசையில் முடியவேண்டும். அரும்பு மலர் ஆகவேண்டும். மலர் காயாக வேண்டும், காய் கனி ஆகவேண்டும்.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே 
மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே.       --- தாயுமானார்.

பின் வரும் அருட்பாடல்கள் இதனைத் தெளிவு பட விளக்கும்.

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு,
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே. --- அப்பர்.

பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர்ஐந்துஇட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோல்உடை ஆடைவீ ரட்டரே.   --- அப்பர்.

தேனப் போதுகள் மூன்றொடு ஓர்ஐந்துடன்
தான்அப் போதுஇடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேனல் ஆனை உரித்தவீ ரட்டரே.            --- அப்பர்.

அகப்பூசைக்கு உரிய அட்ட புட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்.

புகைஎட்டும் போக்குஎட்டும் புலன்கள் எட்டும்
         பூதலங்கள் அவைஎட்டும் பொழில்கள் எட்டும்
கலைஎட்டுங் காப்புஎட்டும் காட்சி எட்டும்
         கழற்சே வடிஅடைந்தார் களைகண் எட்டும்
நகைஎட்டும் நாள்எட்டும் நன்மை எட்டும்
         நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகைஎட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
         திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.  --- அப்பர்.

நலம் என்றது, ஞானத்தை. அது மிக்கார் உடைய உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியன ஆகும் மலர்கள் எட்டாவன, `கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன.

அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
         ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலையாமே.       --- திருஞானசம்பந்தர்.

         உள்ளத்தில் பொருந்திய அன்பு உடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்து இருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
         விருப்புஎனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
         பொறைஎனும்  நீரைப் பாய்ச்சித்
தம்மையும்  நோக்கிக் கண்டு
         தகவுஎனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில்
         சிவகதி விளையும் அன்றே.              --- அப்பர்.

காயமே கோயில் ஆகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்று அவிக் காட்டி னோமே.  ---  அப்பர்.

உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி
         உள்ளக் கிழியின் உருவு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால்,
         உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி,
அயிரா வணம் ஏறாது ஆன்ஏறு ஏறி,
         அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிரா வணமே என் அம்மா னே,நின்
         அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.      --- அப்பர்.

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன், கர்ம
                 துட்ட தேவதைகள் இல்லை,
      துரியம் நிறை சாந்த தேவதையாம் உனக்கே
                 தொழும்பன், அன்பு அபிடேக நீர்,
உள்உறையில் என் ஆவி நைவேத்தியம், ப்ராணன்
                 ஓங்கும் மதி தூபதீபம்,
      ஒருகாலம் அன்று, து சதாகால பூசையா
                 ஒப்புவித்தேன் கருணைகூர்,
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே!
                 தெளிந்த தேனே! சீனியே!
      திவ்யரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே!
                 தெவிட்டாத ஆனந்தமே!
கள்ளன்அறிவு ஊடுமே மெள்ளமௌ வெளியாய்க்
                 கலக்க வரு நல்ல உறவே!
      கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு
                 கருணா கரக்கடவுளே.            --- தாயுமானார்.
         
மறவாமையான் அமைத்த மனக்கோயில் உள் இருத்தி,
உற ஆதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி,
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
                                                                --- பெரிய புராணம்.

இறைவன் தன்னை வழிபட்ட அடியவர்களுக்கு அருள் புரியும் திறத்தை வள்ளல் பெருமான் பின்வருமாறு பாடி அருளினார்.

பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டுஅடிமை
வேண்டி விறகு எடுத்து விற்றனையே - ஆண்டுஒருநாள்

வாய்முடியாத் துன்பு கொண்ட வந்திக்குஓர் ஆளாகித்
தூய்முடிமேல் மண்ணும் சுமந்தனையே........ஆய்துயர

மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக்காய் குதிரைச்
சேவகன்போல் வீதிதனில் சென்றனையே-மாவிசையன்

வில்அடிக்கு நெஞ்சம் விரும்பியதுஅல்லால்ஒருவன்
கல்அடிக்கும் உள்ளம் களித்தனையே-மல்லலுறும்

வில்வக்கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே-சொல்அகலின்

நீளுகின்ற நெய்அருந்த நேர்எலியை மூவுலகம்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே-கோள்அகல

வாய்ச்சங்கு நூல்இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட் சோழன்எனக் கொண்டனையே-ஏச்சுறுநல்

ஆறுஅடுத்த வாகீசர்க்கு ஆம்பசியைக் கண்டு,கட்டுச்
சோறுஎடுத்துப் பின்னே தொடர்ந்தனையே-கூறுகின்ற

தொன்மைபெறுஞ் சுந்தரர்க்குத் தோழன்என்று பெண்பரவை
நன்மனைக்குந் தூது நடந்தனையே....                  --- திருவருட்பா.

கருத்துரை

முருகா! உம்மையே எண்ணி வாடும் இந்தப் பெண்ணின் துயர் தீ, உமது மார்பில் தவழும் மாலையைத் தந்து அருள்.






    
    
    


















No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...