சிதம்பரம் - 0601. அவகுண விரகனை

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அவகுண விரகனை  (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
அடியேனை அட்கொண்டு அருள்.


தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன ...... தந்ததான


அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
     அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
     அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத

கவடனை விகடனை நானாவி காரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
     கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ......வெம்பிவீழுங்

களியனை யறிவுரை பேணாத மாநுட
     கசனியை யசனியை மாபாத னாகிய
     கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ

மவுலியி லழகிய பாதாள லோகனு
     மரகத முழுகிய காகோத ராஜனு
     மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ......னும்பர்சேரும்

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
     மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி யானாய் நமோநம
     திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ......செஞ்சொல்சேருந்

திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
     ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


அவகுண விரகனை, வேதாள ரூபனை,
     அசடனை, மசடனை, ஆசார ஈனனை,
     அகதியை, மறவனை, ஆதாளி வாயனை, ...... அஞ்சுபூதம்

அடைசிய சவடனை, மோட அதி மோடனை,
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை,
     அழுகலை, அவிசலை, ஆறான ஊணனை. ...... அன்பிலாத

கவடனை, விகடனை, நானா விகாரனை,
     வெகுளியை, வெகுவித மூதேவி மூடிய
     கலியனை, அலியனை, ஆதேச வாழ்வனை, ......வெம்பிவீழும்

களியனை, அறிவுரை பேணாத மாநுட
     கசனியை, அசனியை, மாபாதன் ஆகிய
     கதிஇலி தனை, அடி நாயேனை ஆளுவது ...... எந்த நாளோ?

மவுலியில் அழகிய பாதாள லோகனும்,
     மரகத முழுகிய காகோத ராஜனும்,
     மநுநெறியுடன் வளர் சோழநாடர் கோன்உடன், ......உம்பர்சேரும்

மகபதி புகழ் புலிஊர் வாழு நாயகர்,
     மடமயில் மகிழ்வுற வான்நாடர் கோ என,
     மலைமகள்உமைதரு வாழ்வே! மனோகர! ...... மன்றுள்ஆடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநம!
     தெரிசன பரகதி ஆனாய் நமோநம!
     திசையினும் இசையினும் வாழ்வே நமோநம! ......செஞ்சொல்சேரும்

திருதரு கலவி மணாளா நமோநம!
     திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம!
     ஜெயஜெய! ஹரஹர! தேவா! சுரஅதிபர் ...... தம்பிரானே.


பதவுரை

      மவுலியில் அழகிய பாதாள லோகனும் --- இரத்தின மணிகள் விளங்குவதால் முடியில் அழகு உடைய பாதலத்தில் வாழ்கின்ற ஆதிசேடனும்,

      மரகதம் முழுகிய காகோத ராஜனும் --- பச்சை நிறம் உடைய பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும்,

      மநுநெறியுடன் வளர் --- மனு நெறியோடு வளர்கின்றவராகிய

     சோழ நாடர் கோன் உடன் --- சோழநாட்டரசர் தலைவராகிய இரணியவர்ம சோழரும்,

      உம்பர் சேரும் மகபதி --- வானுலகத்தில் வாழ்கின்ற  நூறு யாகங்களைச் செய்த தேவேந்திரனும்,

­
     புகழ் --- புகழ்ந்து சேவிக்கின்ற,

      புலி ஊர் வாழு நாயகர் --- வியாக்கிர பாதரால் வணங்கப் பெறுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சபாநாயகரும்

      மடமயில் மகிழ்வுற --- மடம் என்ற கொளுத்தக் கொண்டு, கொண்டது விடைமை ஆகிய பேதைமைக் குணம் உடையவரும், மயில் போன்றவரும் ஆகிய உமையம்மையாரும் மகிழ்ச்சி அடையவும்,

      வான் நாடர் கோ என --- வானில் உள்ள தேவர்கள் எல்லாம் அரசே என்று துதிக்கவும்,

     மன்று உள் ஆடும் --- ஞானவெளியாகிய பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற

      மலைமகள் உமை தரு வாழ்வே --- மலைமகள் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய திருமைந்தரே!

     மனோகர --- ஆன்மாக்களின் மனத்துக்கு இனிமை தரும் பேரழகரே!

      சிவசிவ --- மங்கல சொரூபரே!

     ஹரஹர --- பாவங்களைப் போக்குபவரே!

     தேவா --- ஒளி மயமானவரே!

     நமோநம ---போற்றி, போற்றி,

      தெரிசன பரகதி ஆனாய் நமோநம --- அறிவு மயமாக விளங்கும் முத்தி வீடாக விளங்குகின்றவரே, போற்றி, போற்றி,

       திசையினும் இசையினும் வாழ்வே நமோநம --- எல்லாத் திசைகளிலும், புகழிலும் வாழ்வு ஆக நிற்பவரே! போற்றி, போற்றி,

      செஞ்சொல் சேரும் --- செம்மையான தமிழ் மொழியை இனிது பேசுபவரும்,

     திருதரு கலவி மணாளா நமோநம --- இலக்குமி தேவியினால் தரப்பட்டவரும், இன்ப சத்தியும் ஆகிய  வள்ளிநாயகியின் மணவாளரே, போற்றி, போற்றி,

       திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம --- திரிபுரத்தை எரித்த கோமானே, போற்றி, போற்றி,

      ஜெயஜெய --- வெற்றியை உடையவரே!

     ஹரஹர --- பாவத்தைப் போக்குபவரே!

     தேவா --- ஒளி மயமானவரே!

      சுர அதிபர் தம்பிரானே --- தேவர்களுக்குத் தனிப்பெரும் தலைவரே!

      அவகுண விரகனை --- துர்க்குணம் படைத்த காமதூர்த்தனும்,

      வேதாள ரூபனை --- வேதாளமே போன்ற உருவத்தினை உடையவனும்,

      அசடனை --- கீழ் மகனும்,

     மசடனை --- தாழ்ந்தவனும் குணம் கெட்டவனும்,

      ஆசார ஈனனை --- சிறிதும் ஒழுக்கம் இல்லாதவனும்,

      அகதியை --- கதியற்றவனும்,

     மறவனை --- பாவம் செய்பவனும்,

      ஆதாளி வாயனை --- வீம்பு பேசும் வாயை உடையவனும்,

      அஞ்சு பூதம் அடைசிய சவடனை --- ஐம்பூதங்களும் ஒதுக்கிய வண்டல் போன்றவனும்,

      மோட அதி மோடனை --- மிகவும் பெரிய மூடத்தனம் உடையவனும்,

      அழிகரு வழிவரு வீணாதி வீணனை --- அழிந்து போகும் கருவின் வழியில் வீணருள் வீணனை,

      அழுகலை --- அழுகும் தன்மை உடையவனும்,

     அவிசலை --- அவிந்து போனவனும்,

      ஆறான ஊணனை --- அறுசுவை உணவை விரும்பி உண்பவனும்,

      அன்பு இலாத கவடனை --- அன்பில்லாமல் வஞ்சகமே குடிகொண்டவனும்,

      விகடனை --- ஆசியக்காரனும்,

     நானாவி காரனை --- பலவிதமான விகாரங்கள் உடையவனும்,

      வெகுவித வெகுளியை --- கோபம் உடையவனும்,

     மூதேவி மூடிய கலியனை --- மிகுந்த தூக்க மயக்கம் உடைய தரித்திரனும்,

      அலியனை --- பேடி போன்றவனை,

     ஆதேச வாழ்வனை --- தனக்கென ஒரு குடியும் இல்லாது எப்பொழுதும் இரவல் குடியே இருந்து அலைபவனும்,

      வெம்பி வீழும் களியனை --- வீணாகி விழும் பெருங்குடியனும்,

       அறிவுரை பேணாத மாநுட கசனியை --- ஆன்றோர்கள் கூறும் நல்ல நெறி உரைகளை விரும்பாத மதம்கொண்ட யானையைப் போன்றவனும்,

      அசனியை --- ஆடு போன்றவனும்,

     மாபாதன் ஆகிய கதி இலி தனை --- பெரும்பாதகங்களைப் புரியும், கதியற்றவனும்,

      அடி நாயேனை ஆளுவது எந்த நாளோ --- கீழ்மையான நாயினும் இழிவான அடியேனை ஆட்கொள்வது எந்த நாளோ?


பொழிப்புரை


         இரத்தின மணிகள் விளங்குவதால் முடியில் அழகு உடைய பாதலத்தில் வாழ்கின்ற ஆதிசேடனும், பச்சை நிறம் உடைய பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும், மனு நெறியோடு வளர்கின்றவராகிய சோழநாட்டரசர் தலைவராகிய இரணியவர்ம சோழரும், வானுலகத்தில் வாழ்கின்ற  நூறு யாகங்களைச் செய்த தேவேந்திரனும், புகழ்ந்து சேவிக்கின்ற, வியாக்கிர பாதரால் வணங்கப் பெறுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சபாநாயகரும், மடம் என்ற கொளுத்தக் கொண்டு, கொண்டது விடைமை ஆகிய பேதைமைக் குணம் உடையவரும், மயில் போன்றவரும் ஆகிய உமையம்மையாரும் மகிழ்ச்சி அடையவும், வானில் உள்ள தேவர்கள் எல்லாம் அரசே என்று துதிக்கவும், ஞானவெளியாகிய பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிகின்ற மலைமகள் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய திருமைந்தரே!

     ஆன்மாக்களின் மனத்துக்கு இனிமை தரும் பேரழகரே!

      மங்கல சொரூபரே!

     பாவங்களைப் போக்குபவரே!

     ஒளி மயமானவரே!   போற்றி, போற்றி,

      அறிவு மயமாக விளங்கும் முத்தி வீடாக விளங்குகின்றவரே, போற்றி, போற்றி,

      எல்லாத் திசைகளிலும், புகழிலும் வாழ்வு ஆக நிற்பவரே! போற்றி, போற்றி,

      செம்மையான தமிழ் மொழியை இனிது பேசுபவரும், இலக்குமிதேவியினால் தரப்பட்டவரும், இன்ப சத்தியும் ஆகிய  வள்ளிநாயகியின் மணவாளரே, போற்றி, போற்றி,

      திரிபுரத்தை எரித்த கோமானே, போற்றி, போற்றி,

      வெற்றியை உடையவரே!

     பாவத்தைப் போக்குபவரே!

     ஒளி மயமானவரே!

      தேவர்களுக்குத் தனிப்பெரும் தலைவரே!

      துர்க்குணம் படைத்த காமதூர்த்தனும், வேதாளமே போன்ற உருவத்தினை உடையவனும், கீழ் மகனும், தாழ்ந்தவனும், குணம் கெட்டவனும், சிறிதும் ஒழுக்கம் இல்லாதவனும், கதி அற்றவனும், பாவம் செய்பவனும், வீம்பு பேசும் வாயை உடையவனும், ஐம்பூதங்களும் ஒதுக்கிய வண்டல் போன்றவனும், மிகவும் பெரிய மூடத்தனம் உடையவனும், அழிந்து போகும் கருவின் வழியில் வீணருள் வீணனும், அழுகும் தன்மை உடையவனும், அவிந்து போனவனும், அறுசுவை உணவை விரும்பி உண்பவனும், அன்பில்லாமல் வஞ்சகமே குடிகொண்டவனும், ஆசியக்காரனும், பலவிதமான விகாரங்கள் உடையவனும், கோபம் உடையவனும், மிகுந்த தூக்க மயக்கம் உடைய தரித்திரனும், பேடி போன்றவனை, தனக்கென ஒரு குடியும் இல்லாது எப்பொழுதும் இரவல் குடியே இருந்து அலைபவனும், வீணாகி விழும் பெருங்குடியனும்,  ஆன்றோர்கள் கூறும் நல்ல நெறி உரைகளை விரும்பாத மதம்கொண்ட யானையைப் போன்றவனும், ஆடு போன்றவனும், பெரும்பாதகங்களைப் புரியும், கதியற்றவனும், கீழ்மையான நாயினும் இழிவான அடியேனை ஆட்கொள்வது எந்த நாளோ?


விரிவுரை


அவகுண விரகனை ---

அவம் --- பயனின்மை.
அவகுணன் --- வீணான தீக்குணங்களை உடையவன். 

"குணம் அது கைவிடேல்" என்றபடி, நல்ல குணங்களைக் கைக்கொண்டு, எல்லோருக்கும் எப்போதும் நன்மையே செய்தல் வேண்டும்.

விரகன் --- காமநோய் உடையவன்.
விரகு - வஞ்சனை உடையவன் எனினும் பொருந்தும்.

ஆசார ஈனனை ---

மனிதனுக்கு நல்ல ஆசாரம் வேண்டும். ஆசாரத்துக்குக் காரணம் எட்டு. அவையாவன ---  தனக்குப் பிறர் செய்த நன்றியறிதல், பொறை, இன்சொல், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவை மிக அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல்.

நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு,
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.                 --- ஆசாரக் கோவை.

இனி, ஆசாரம் பலவாக விரிந்து இருப்பினும், இன்றியமையாதன மட்டும் எவை என்று அறிந்துகொள்வோம். தூங்கி விழித்தவுடனும், புணர்ச்சிக்குப் பிறகும், மயிர் களைந்த பிறகும், தீக்கனா கண்ட இடத்தும், வாந்தி எடுத்த பின்னும், உடனே நீராடுதல் வேண்டும். ஆடை உடுக்காமல் நீராடக் கூடாது. ஒன்று உடுத்து உண்ணக் கூடாது. உடுத்த ஆடையைத் தண்ணீரில் பிழியக் கூடாது. தலையில் தேய்த்த எண்ணெயினால் எந்த உறுப்பையும் தீண்டக் கூடாது.பிறர் உடுத்த அழுக்கு ஆடையைத் தீண்டக் கூடாது. தலையை ஒழித்துக் கழுத்து வரை குளிப்பது தவறு. உணவு உண்ணத் தொடங்கு முன்னும், உண்டதன் பின்னும் கைகால்களைக் கழுவ வேண்டும். இரு கையினால் தண்ணீர் பருகக் கூடாது. காலை இன்னொரு கால் தேய்த்துக் கழுவக் கூடாது. தோய்த்து உலர்ந்த ஆடையை உடுத்தல் வேண்டும்.  இவை அனைத்தும் ஆசாரக் கோவை என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளவை.

கால் கழுவும்போது ஒரு சிறிது நீர் படாத இடத்தில் வந்து சனி நளனைப் பற்றினான் என்ற வரலாறு நினைவில் பதிய வேண்டும். புறத் தூய்மையே ஒழுங்கு பெறவில்லையானால், அகத்தூய்மையும் ஒழுங்கு பெறாது. புறம் அகம் இரண்டும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.

உன்புகழே பாடி நான்இனி அன்புடன் ஆசார பூசைசெய்து
   உய்ந்திட வீணாள் படாதுஅருள்        புரிவாயே...
                                                              --- (கொம்பனையார்) திருப்புகழ்.

ஆதாளி வாயனை ---

இறைவனை வாழ்த்துதற்காகவே அமைந்த அருமையான வாக்கினால், அவன் இப்படி, இவன் இப்படி என்று வம்பர்களுடன் கூடி வீண் உரையாடி விழலர் ஆகக் கூடாது. "எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறு வாய்" என்றார் வள்ளல் பெருமான். இறைவனை வாழ்த்தாத வாய்க்கு கூழ் கூடக் கிடைக்காது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  கூழும் கிடைக்காமல் இப்போது அலைவோர் எல்லாம், முற்பிறவியில் இறைவனை நாவார வாழ்த்தாத பேர்கள் என்று அறியலாம்.

ஆறான ஊணனை ---

பசிக்கு அருந்த வேண்டுமே அன்றி, ருசிக்கு அருந்தக் கூடாது. நாவை வெல்ல வேண்டும். நாவினுக்கு அடிமை ஆனால் துன்பமே மிகும். அறுசுவை உணவையே விரும்பி, அதற்காக ஏக்கமுற்று இருப்பார்க்கு அருள் தாகம் ஏற்படாது. "சோற்றிலே விருகப்பம் சூழ்ந்திடில், ஒருவன் துன்னும் நல் தவம் எல்லாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளி எனப் போம்" என்பார் வள்ளல் பெருமான்.

கவடனை ---

கபடமான செய்கைகளைச் செய்து பிறரை வஞ்சித்து வாழுதல் பெரும் தவறு.

விகடனை ---

விகட வார்த்தைகளைப் பேசி, கேலிக் கூத்து ஆடி, அரிய பொழுதை அவமே கழித்தல் கூடாது.

கசனியை ---

யானை போல் மதம் கொண்டு திரிதல்.

அசனியை ---

ஒரு புறமும் ஒழுங்காக மேயாமல் ஆடு தாண்டித் தாண்டித் திரிவது போல், ஒரு வழியிலும் நிலைபேறு இன்றி மாறி மாறி அலையக் கூடாது.

நாயேனை ஆளுவது எந்த நாளோ ---

இறைவன் நம்மை ஆட்கொள்ளும் காலம் எதுவோ என்ற ஏக்கம் இருத்தல் வேண்டும். அந்த ஏக்கம் இருந்தால் ஒழிய ஆவி ஈடேறாது. அதைத் தான் அருள் தாகம் என்று சொல்வர். மோக தாகம் கூடாது.


மரகத முழுகிய காகோத ராஜனும் ---

காகோதம் - பாம்பு. காகோத ராஜன் - பாம்பு அரசன்.

சிதம்பரத்தில் நடராஜமூர்த்தி திருநடனம் புரியும் போது, ஆதிசேடனும், அவருடைய அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும் சேவித்து அருள் பெற்றனர்.

பதஞ்சலி முனிவர் வரலாறு

ஆதிசேடன் மீது அறிதுயில் அமர்கின்ற திருமால் ஒரு சமயம் உடல் புளகிதம் உற்று, உரோமம் சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அதனைக் கண்ட ஆதிசேடர் விஷ்ணுமூர்த்தியைப் பணிந்து அதன் காரணத்தைக் கூறுமாறு கேட்டனர்.  திருமால் உள்ளம் உவந்து, "அனந்தனே! ஒரு சமயம் தேவதாரு வனத்தில் மீமாஞ்சைக் கொள்கையினால் சிவபெருமானை மதியாத முனிவர்கள் உய்யும்பொருட்டு, அவர்கள் அபிசார ஓமத்தினால் உண்டாக்கி அனுப்பிய முயலகனை மிதித்து, அகிலாண்ட நாயகராகிய எம்பெருமான் நிருநடனம் புரிந்து அருளினார்.  அதனால் நாறுபத்து எண்ணாயிரவரும் தருக்கு அடங்கி நல்வழிப்பட்டனர். அநேக மங்கல வாத்தியங்கள் ஒலிக்க அம்பிகை கண்டு மகிழ அரனார் ஆடிய நடன தரிசனத்தை யான் கண்டு களிகூர்ந்தேன். உடனே இறைவர் மறைந்து அருளினார்.  அந்த திருநடனக் காட்சியை உன்னி உருகினேன்" என்று அருளினார். அது கேட்ட ஆதிசேடன், அத் திருநடனத்தைக் காணும் விழைவு கொண்டு உருகி நின்றனர். அக் குறிப்பினை அறிந்த நாராயணமூர்த்தி, ஆதிசேடனை நோக்கி, "சேடனே! நீ சிவ பத்தியால் சிறந்தனை. உன்னை நான் அணையாக இனி கொள்ளேன். உனது மைந்தன் நமக்கு அணையாக இருக்கட்டும். நீ போய் திருக்கயிலாய மலைச் சாரலில் தவம் புரிந்து சிவமூர்த்தியின் திருவருளால் நிருத்த தரிசனம் பெறக் கடவாயாக" என்று அருள் புரிந்தனர்.

ஆதிசேடர், அரிமுகுந்தர் அடிமலரைப் பலகாலும் பணிந்து, பிரியா விடை பெற்று, கயிலை மலைச் சாரலில் நின்று அரிய பெரிய தவத்தைப் பலகாலம் புரிந்தனர். அவருடைய தவத்திற்கு இரங்கி அன்ன வாகனத்தின் மீது பிரமதேவர் தோன்றி, "அன்பனே! சித்தி, முத்தி, பத்தி ஆகிய என்ன வரம் வேண்டும்? கேள், தருவேன்" என்றனர்.  ஆதிசேடர், "நான்முகதேவ! நான் உன்னைக் குறித்துத் தவம்புரிந்தேனில்லை. நான் சிவபெருமானைக் குறித்துத் தவம் புரிகின்றேன். அவருடைய திருநடனம் காணும் பித்து மேலிட்டுள்ளேன்" என்றார்.

பிரமதேவர் சிரித்து, "அறிவிலியே! அந்நடன தரிசனத்தை உன்னால் காணுதற்கு இயலுமோ? இயலாது. வீண் முயற்சியைச் செய்யாதே. இத் தவத்தை விடுவாயாக" என்றார். ஆதிசேடர், "அயனே! எம்பெருமான் வேண்டிய வரத்தை வேண்டியவாறு தரும் கருணைக் கொண்டல். அவர் என்பால் கருணை செய்யாது ஒழியின் தவம் புரிந்து இறப்பேன். தவத்தை விடேன். இது உறுதி" என்று அசையாத அன்புடன் கூறினார். உடனே அன்னம் விடையாகவும், அயனார் அரனாகவும் காட்சி அளித்தனர்.  விண்ணவர் பூமயை பொழிந்தனர். உமையம்மையாருடன் காட்சி தந்த எந்தையார் திருவடி மேல் ஆதிசேடர் வீழ்ந்து, "என் ஐயனே! தேவரீரை அறியாது பேசிய குற்றத்தை மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டினர். துதித்தார். அவருடைய கருணையை மதித்தார். ஆடினார். பாடினார்.

சிவபெருமான் ஆதிசேடர் முடிமேல் திருக்கரத்தை வைத்து, நமது நடனம் பஞ்ச கிருத்தியத்தை உயிர்களின் பொருட்டு செய்வதே ஆகும்.

தோற்றம் துடி அதனில், தோயும் திதி அமைப்பில்,
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்,முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.          --- உண்மை விளக்கம்.

முன்னர் நாம் மாலயனாதி வானவர் காண தாருவனத்தில் நடித்தபோது, அவ் வனம் பூமிக்கு நடுவன்மையால் பொறுக்கமாட்டாது அசைந்தது. அதனால் நடனத்தை விடுத்தனம். நீயும் உலகமும் உய்ய நாம் நடனம் செய்யும் இடம் ஒன்று உளது. அண்டமும் பிண்டமும் தம்முள் ஒப்பானவையே.  உடம்புள் இடைநாடி இடத்திலும், பிங்கலை நாடி வலத்திலும், சுழுமுனை நாடி நடுவிலும் போதல் போலே,  இவ் உலகிலும் இடை நாடி இலங்கைக்கு நேராகவும், பிங்கலை நாடி இமயத்திற்கு நேராகவும், சுழுமுனை நாடி அவ் இரண்டிற்கும் நடுவே தில்லைவனத்திலும் போகும். தில்லை வனத்தில் திருமூலக்குறிக்குத் தென்புறத்தில் மறைகளும் காணாத மன்று ஒன்று உண்டு. அதுதான் ஞான அம்பலம். சுழுமுனை நாடி அதற்கு நேராகச் செல்லுகின்றது. ஆதலின், அங்கு நாம் எக்காலத்திலும் ஆனந்தத் தாண்டவம் புரிவோம். ஞானக்கண் உடையாரே அத் திருநடனத்தைக் காண்பர். காணப் பெறாதவர் பிறப்பு அறாதவரே ஆம். ஆதலால், நீ ஆயிரம் தலையுடன் அங்கு செல்லற்க. முன் அத்திரி முனிவரும் அநசூயையும் உன்னைப் பிள்ளையாகப் பெற வேண்டித் தவம் புரிந்த போது, திருமால், கட்டளை இட்டவாறு, நீ யோனி வாய்ப் பட்டுப் பிறக்க அஞ்சி, அநசூயை நீராடி அஞ்சலி செய்யும்போது அவள் கையினின்று ஐந்தலை அரவாகத் தோன்றினாய். அவள் அஞ்சி கைவிட, பதஞ்சலி என்று பேர் பெற்றனை. அந்தப் பதஞ்சலி என்னும் நாமத்துடன் குகை வழியே நாகலோகம் போய், தில்லைவனத்து எழுந்து, திருமூல லிங்கத்தை வணங்கித் தவம் புரிந்துகொண்டு இருப்பாயாக. அங்கு நமது நிருத்த கோலம் காண்பான் விழைந்து, புலிக்கால் முனிவனும் தவம் புரிகின்றனன். அவனுடன் நீ தவம் புரிக. தைப்பூசம் குருவாரத்தில், சித்தயோகத்தில், மத்தியானத்தில் அங்கு ஆனந்தத் தாண்டவம் புரிவோம்" என்று அருளிச் செய்தனர்.

ஆதிசேடர் அவ்வண்ணமே பதஞ்சலியாகி தில்லைவனம் சேர்ந்து, புலிக்காலரைக் கண்டு நிகழ்ந்தவை கூறிப் பணிந்தனர்.  வியாக்கிரபாதர் அவரைத் தழுவி மகிழ்ந்து போற்றினார்.  பதஞ்சலி, திருமூல நாதரையும், திருப்புலீச்சுரத் தாண்டவரையும் வணங்கி, வடதிசையில், ஒரு பர்ண சாலையில் இருந்து, அங்கு ஒரு சிவலிங்கத்தையும் நிறுவி வழிபட்டனர். அனந்தீச்சுரம் என்பது அதற்கு நாமம். இங்ஙனம் புலியும் பாம்பும் அங்கிருந்து பலகாலம் பெருந்தவம் புரிந்தன. இறைவன் திருநடனம் காண மூவாயிர முனிவரும் அங்கு எய்தினர். தைப்பூசமும், குருவாரமும், சித்தயோகமும் கூடிய உச்சிப் பொழுதில், தேவரும் மூவரும் போற்ற, நாரதாதியர் பாட, பானுகம்பன் இரண்டாயிரம் கரங்களில் சங்கங்களை ஒலிக்க, குடமுழா முழங்க, ஐந்து துந்துபிகளும் மறைகளும் ஆர்ப்ப சிதம்பரத்தில் எம்பெருமான் திருநடனம் புரிந்து அருளினார்.

புலியூர் ---

சிதம்பரத்தில் வியாக்கிரபாதர் தவம் செய்ததனால், அதற்குப் புலியூப் என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.

வியாக்கிர பாதர் வரலாறு

தவமே தனமாகக் கொண்ட மத்தியந்தன முனிவர் என்பார் ஒருவர் இருந்தனர். அவருக்கு அருமையான புத்திரர் ஒருவர் தோன்றினார். அப்புதல்வர் கலைகள் முழுவதும் கற்று உணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்ததோர் இடம் சென்று சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார். புதல்வரது கருமத்தை உணர்ந்த பிதா, ஈசனை வழிபடுவதற்குச் சிறந்த இடம் தில்லைவனமே என்று அறிவுறுத்த, அப்புதல்வர் தந்தை பால் விடைபெற்று, தில்லைவனம் எய்தி, ஒர் அழகிய பொய்கையும் அதன் தென்புறத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக்கண்டு அகமிக மகிழ்ந்து, ஆண்டு ஓர் பர்ணசாலை அமைத்து அரனாரை வழிபட்டு வந்தனர். நாள் தோறும் ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறு மலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன் உதித்த பின் மலர் எடுக்கில் வண்டுகள் வந்து அம்மலர்களை எச்சில் புரிந்து விடுகின்றன; பொழுது புலராமுன் சென்று மலர் பறிப்போமாயின் மரம் அடர்ந்த இக்கானகத்தில் வழியறிதல் முடியாது. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனம் கவன்று இறைவனைத் துதிக்க, உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவர் எதிரே தோன்ற, முனிமகனார் அரனாரை வணங்கி, “அரவாபரணா! தேவரீரை வழிபடுதற் பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று மலர் பறிக்க மரங்களில் வழுக்காமல் ஏறுவதற்கு என் கை கால்களில் வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப் பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாகவேண்டும்” என்று வரங்கேட்டனர். வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளும் விடையூர்தி, அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர். அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு வியாக்ரபாதர் என்று வடமொழியிலும், புலிக்கால் முனிவர் என்று தமிழிலும் பெயர்கள் உண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புரமெரித்த புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.

         வியாக்ரபாதர் இங்ஙனம் இருக்க இவர் தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர் பால் வந்து இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும் தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம்பேசி புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர். அன்னார் செய்த அருந்தவப் பலனாய் உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக் குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக் கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய் தந்தையர் மகனைத் தமது இருப்பிடம் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள். அம்மகவு அதனை உண்ணாது கதறி அழ, தாய் தந்தையர் வருந்தி சிவ சந்நிதியில் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப் பெருமான்பால் பால் வேண்டி அழ, அடியவர்க்கு அருளும் அண்ணல் அருள் சுரந்து இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்தழும் போதெல்லாம் நல்கினர்.

பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினில் கீழ்இருந்து ஆரணம் ஓதி, அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்த பிரான், கடவூர் உறை உத்தமனே.       --- அப்பர்.
  
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
         பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றுஅருள் செய்தவன்
         மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
         பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
         பல்லாண்டு கூறுதுமே.                  --- சேந்தனார்.

அத்தர் தந்த அருள்பாற் கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தர் ஆய முனிவர்பல் ஆயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துஉழி.         ---சேக்கிழார்.
  
மன்றுள் ஆடும் ............ பெருமாளே ---

கனக சபையில் ஆடுகின்ற பரம்பொருளே குமார மூர்த்தி என்பதும், அந்த அருட்பெருஞ் சோதியே முப்புரத்தை எரித்தது என்பதும், அவரே பரகதியாக விளங்குகின்றார் என்பதும் ஆகிய பல குறிப்புக்கள் இந்த ஆறு வரிகளில் வெளிப்படுமாறு கண்டு தெளிக.

கருத்துரை

முருகா! அடியேனை ஆட்கொண்டு அருள் புரிவாய்.                 


 No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...