சிதம்பரம் - 0606. இருளும் ஓர்கதிர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருளும் ஓர்கதிர் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
சிவானந்தத்தில் அடியேன் திளைத்திருக்க அருள்.


தனன தானன தனன தானன
     தனன தானன ...... தனதான


இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
     னிடம தேறியெ ...... னிருநோயும்

எரிய வேமல மொழிய வேசுட
     ரிலகு மூலக ...... வொளிமேவி

அருவி பாயஇ னமுத மூறவுன்
     அருளெ லாமென ...... தளவாக

அருளி யேசிவ மகிழ வேபெற
     அருளி யேயிணை ...... யடிதாராய்

பரம தேசிகர் குருவி லாதவர்
     பரவை வான்மதி ...... தவழ்வேணிப்

பவள மேனியர் எனது தாதையர்
     பரம ராசியர் ...... அருள்பாலா

மருவி நாயெனை யடிமை யாமென
     மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே

மறைகு லாவிய புலியுர் வாழ்குற
     மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத, பொன்
     இடம் அது ஏறி, என்..... இருநோயும்

எரியவே, மலம் ஒழியவே, சுடர்
     இலகும் மூலக ...... ஒளிமேவி,

அருவி பாய, இன் அமுதம் ஊற, உன்
     அருள் எலாம் எனது ...... அளவுஆக

அருளியே, சிவம் மகிழவே பெற
     அருளியே, இணை ...... அடிதாராய்.

பரம தேசிகர், குரு இலாதவர்,
     பரவை வான்மதி ...... தவழ்வேணிப்

பவள மேனியர், எனது தாதையர்,
     பரம ராசியர் ...... அருள்பாலா!

மருவி நாய்எனை அடிமை ஆம் என,
     மகிழ்மெய் ஞானமும் ...... அருள்வோனே!

மறை குலாவிய புலியுர் வாழ், குற-
     மகள் மெல் ஆசைகொள் ...... பெருமாளே.


பதவுரை

          பரம தேசிகர் --- மேலான குருநாதரும்,

        குரு இலாதவர் --- தமக்கு ஒரு குரு இல்லாதவரும்,

           பரவை --- கடல் போலப் பரந்து உள்ள கங்கையும்,

         வான்மதி --- வானத்திலே உள்ள சந்திரனும்,

        தவழ்வேணி --- தவழ்கின்ற சடையை உடையவரும்,

         பவள மேனியர் --- பவளம் போல் திருமேனி உடையவரும்,

        எனது தாதையர் --- எனது தந்தையானவரும்,

        பரம ராசியர் அருள் பாலா --- பரம இரகசியருமான சிவபெருமான் அருளிய குழந்தைக் கடவுளே!

           நாய் எனை அடிமையாம் என மருவி --- நாயினும் கடையனாகிய அடியேனை விரும்பி அடிமையாக ஏற்றுக் கொண்டு,

         மகிழ் மெய்ஞ்ஞானமும் அருள்வோனே --- திருவுளம் மகிழ்ந்து மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தவரே!

         மறை குலாவிய புலியுர் வாழ் --- வேதங்கள் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

         குறமகள் மெல் ஆசை கொள் பெருமாளே --- குறமகளாகிய வள்ளிநாயகி மீது ஆசை கொண்ட பெருமையில் சிறந்தவரே!

         இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத --- இருட்டும் சூரிய ஒளியின் ஒப்பற்ற கதிரும் புகமுடியாத

         பொன் இடம் அது ஏறி --- பொன்னுலகத்தை யான் அடைந்து,

         என் இருநோயும் எரியவே --- அடியேனுடைய நல்வினை, தீவினை என்ற இருவினை நோய்களும் எரிந்து போகவும்,

         மலம் ஒழியவே --- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும்,

         சுடர் இலகு மூலக ஒளி மேவி --- ஒளி பொருந்திய மூலாதார ஒளியில் பொருந்தி,

         அருவி பாய இன் அமுதம் ஊற --- அருவி பாய்வது போல இனிய சிவானந்தத் தேன் ஊற்று எடுக்க,

         உன் அருள் எலாம் எனது அளவாக அருளியே --- உமது திருவருள் யாவும் என் வசம் ஆகும்படியாக அருள் புரிந்து,

         சிவம் மகிழவே பெற --- சிவானந்தத்தில் திளைக்கின்ற இன்பத்தை அடியேன் பெறுமாறு

         அருளியே இணை அடி தாராய் --- அருள் புரிந்து தேவரீரது திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.


பொழிப்புரை


         மேலான குருநாதரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், கடல் போலப் பரந்து உள்ள கங்கையும், வானத்திலே உள்ள சந்திரனும், தவழ்கின்ற சடையை உடையவரும், பவளம் போல் திருமேனி உடையவரும், எனது தந்தையானவரும், பரம இரகசியருமான சிவபெருமான் அருளிய குழந்தைக் கடவுளே!

         நாயினும் கடையனாகிய அடியேனை விரும்பி அடிமையாக ஏற்றுக் கொண்டு, திருவுளம் மகிழ்ந்து மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தவரே!

         வேதங்கள் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

         குறமகளாகிய வள்ளிநாயகி மீது ஆசை கொண்ட பெருமையில் சிறந்தவரே!

         இருட்டும் சூரிய ஒளியின் ஒப்பற்ற கதிரும் புகமுடியாத பொன்னுலகத்தை யான் அடைந்து, அடியேனுடைய நல்வினை, தீவினை என்ற இருவினை நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார ஒளியில் பொருந்தி, அருவி பாய்வது போல இனிய சிவானந்தத் தேன் ஊற்று எடுக்க, உமது திருவருள் யாவும் என் வசமாகும்படியாக அருள் புரிந்து, சிவானந்தத்தில் திளைக்கின்ற இன்பத்தை அடியேன் பெறுமாறு அருள் புரிந்து, தேவரீரது திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

விரிவுரை

இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத, பொன் இடம் அது ஏறி ---

மேலை வெளியானது இருள் இல்லாத ஒளி உலகம். அந்த உலகத்தை இருள் அணுகாது. சந்திர சூரிய ஒளியும் இல்லாத உலகம். அங்கே சிவ ஒளி ஆயிரம் கோடி சூரியன் போல் வீசும். உந்த ஒளியானது வெப்பம் இல்லாதது. எப்போதும் குளிர்ந்தே இருப்பது.  "வான் இந்து கதிர் இலாத நாடு" என்று சுவாமிகள் பழநித் திருப்புகழில் காட்டினார்.

என் இருநோயும் எரியவே, மலம் ஒழியவே ---

காரண காரித் தொடர்ச்சியால் பிறவிக்கு வித்தாகி வருகின்ற நல்வினை தீவினை என்னும் இரண்டும் எரிந்து சாம்பல் ஆகும். இருள் மலமானது ஒழிந்து விடும்.

விண்உற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில்அவை ஒன்றும் இல்லையாம்,
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சி வாயவே.          --- அப்பர்.

     வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும்.

     நமது செய் வினைக்கு ஏற்ப அமைந்த பலவுலகில் பலப்பல பிறவிகளில் பண்ணிப்பண்ணிப் பயின்ற பாவங்களை எல்லாம் பொருந்தி நின்று அவை அற்று ஒழிய ஒழிக்கவல்லது திருவைந்தெழுத்து

சந்திரன்  சடையில் வைத்த சங்கரன், சாம வேதி,
அந்தரத்து அமரர் பெம்மான், ஆன்நல்வெள் ஊர்தி யான்தன்
மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால்,
வெந்துஅறும் வினையுநோயும் வெவ்அழல் விறகுஇட்டு அன்றே.    --- அப்பர்.

மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித் தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும், புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு, ல்ஓர் எம்பாவாய்.       --- ஆண்டாள்.

சிவ ஒளி அணுகவே, இருவினை நோயும், மும்மலமும் இல்லூமல் போகும் என்பதை, "இருநோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி" என்னும் திருப்புகழ் வாயிலாகவும் அறியலாம்.

பரம தேசிகர் ---

மேலான குருநாதர். தேசு - ஒளி. இருள் மலத்தில் இடர்உறும் உயிர்களை, ஞான ஒளி அடையச் செய்பவர் குரு என்பதால் தேசிகர் எனப்பட்டார்.

முப்பாழ் கடந்த முழுப்பாழுக்கு அப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண், --- தப்பாது

தீரா இடும்பைத் திரிபு என்பது யாதுஒன்றும்
சேரா நெறி அருள் நம் தேசிகன்காண், --- ஆராது

நித்தம் தெரியா நிலை மேவிய நமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண், --- வித்தர்என

யாதுஒன்றும் தேராது இருந்த நமக்கு, இவ்வுலகம்
தீது என்று அறிவித்த தேசிகன்காண்... --- திருவருட்பா.  

         
ரமுடன் அபரம் பகர்நிலை இவை எனத்
திரம்உற அருளிய திருவருட் குருவே!

மதிநிலை, இரவியின் வளர்நிலை, அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே!

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணம் உறத் தெரித்து உள் குலவு சற்குருவே!

பதிநிலை பசுநிலை பாச நிலை எலாம்
மதிஉறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே!

பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரம்உற விளங்கும் சாந்த சற்குருவே!

பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரம்உற வளர்த்து வயங்கு சற்குருவே!

சிவ ரகசியம் எலாமு தெரிவித்து, னக்கே
நவநிலை காட்டிய ஞான சற்குருவே!

சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருட் சிவகுருவே!

அறிபவை எல்லாம் அறிவித்து, என் உள்ளே
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே!

கேட்பவை எல்லாம் கேட்பித்து, என் உள்ளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே!

காண்பவை எல்லாம் காட்டுவித்து, னக்கே
மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே!

செய்பவை எல்லாம் செய்வித்து, ஏனக்கே
உய்பவை அளித்து, ன் உள் ஓங்கு சற்குருவே!

உண்பவை எல்லாம் உண்ணுவித்து, ன் உள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே!

சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து,
ஏக அக்கரப் பொருள் ஈந்த சற்குருவே!

சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்து, ன்உள் விளங்கு சற்குருவே!

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே! --- திருவருட்பா.

குரு இலாதவர் ---

தனக்கு என குருவாக யாரும் இல்லாத மேலான பரம குருநாதர் சிவபெருமான். அவருக்கே குருவாக இருந்தவர் முருகப் பெருமான்.

இனித்த அலர் முடித்த சுரர் எவர்க்கும் அருள்
குரு என உற்று இருந்தாய், அன்றி,
உனக்கு ஒருவர் இருக்க இருந்திலை, ஆத-
லால் உன் அடி உளமே கொண்ட
கனத்த அடியவருடைய கழல் கமலம்
உள்ளுகினும் கறைபோம், ஈண்டு
செனிப்பதுவும் மறிப்பதுவும் ஒழிந்திடுமே,
குறக் கொடியைச் சேர்ந்திட்டோனே.

பவள மேனியர் ---

இறைவனது திருமேனி பவளம் போன்றது. "பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" என்பார் அப்பர் பெருமான். ஐம்முகச் சிவமும், ஆறுமுகச் சிவமும் ஒன்றே ஆதலின், "அடர் பவள ஒளி பாய அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி" என்றார் சுவாமிகள் வேறொரு திருப்புகழில்.

எனது தாதையர் ---

உயிர்களுக்குத் தந்தையாக விளங்குபவர் சிவபெருமான். அதனால் "அம்மையே அப்பா" என்றும் "அப்பன் நீ அம்மை நீ" என்றும் "தாயும் நீயே தந்தை நீயே" என்றும் பலவாறாக அருள்மொழிகள் தோன்றின. உடம்புக்கு வாய்த்த தந்தையைப் பற்றி இங்கு பேசவில்லை என்பதை அறிக.

உயிர்களுக்குத் தந்தையாகிய இறைவனின் அருட்செயல்கள் குறித்து வள்ளல் பெருமான் பின்வருமாறு பாடுகின்றார்.

ஓசை பெறுகடல் சூழ்உற்ற உலகில் நம்மை
ஆசையுடன் ஈன்ற அப்பன்காண்; --- மாசு உறவே

வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போல் அல்லாமல்,
அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண்; --- இன்பாக

இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை
அப்பா எனும் நங்கள் அப்பன்காண்; --- செப்பாமல்

எள்ளித் திரிந்தாலும், இந்தா என்று இன்னமுதம்
அள்ளிக் கொடுக்கு நமது அப்பன்காண்; --- உள்ளிக்கொண்டு

இன்றே அருள்வாய் எனத் துதிக்கில், ஆங்கு நமக்கு
அன்றே அருளும் நமது அப்பன்காண்; --- நன்றேமுன்

காதரவு செய்து, நலம் கற்பித்து, பின்பெரிய
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன்காண்; --- கோதுஉறுமா

வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம் தமையே
அஞ்சல் அஞ்சல் என்று அருளும் அப்பன்காண்; --- துஞ்சல்எனும்

நச்சு என்ற வாதனையை நாளும்எண்ணி நாம்அஞ்சும்
அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன்காண்; --- நிச்சலும் இங்கே

இரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண்; --- சேய்இரங்கா

முன்னம் எடுத்து அணைத்து, முத்தம் இட்டுப் பால்அருத்தும்
அன்னையினும் அன்புடைய அப்பன்காண்;......              --- திருவருட்பா.


துன்பு எலாம் தவிர்த்து, ளே அன்பு எலாம் நிரம்ப
இன்பு எலாம் அளித்த என் தனித் தந்தையே!

எல்லா நன்மையும் என் தனக்கு அளித்த
எல்லாம் வல்லசித்து என் தனித் தந்தையே!

நாயில் கடையேன் நலம் பெறக் காட்டிய
தாயில் பெரிதும் தயவு உடைத் தந்தையே!

அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே
பிறிவு இலாது அமர்ந்த பேரருள் தந்தையே!

புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த
தன் நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே!

அகத்தினும் புறத்தினும் அமர்ந்து, ருட் ஜோதி
சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே!

இணை இலாக் களிப்பு உற்று இருந்திட, எனக்கே
துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே!

ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே!

எட்டு இரண்டு அறிவித்து, னைத் தனி ஏற்றிப்
பட்டி மண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே!

தம் கோல் அளவு அது தந்து, அருட் ஜோதிச்
செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே!

தன்பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்
என்பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே!

தன்வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்
என்வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே!

தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில்
என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே!

தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே!

தன்கையில் பிடித்த தனி அருட் ஜோதியை
என்கையில் கொடுத்த என் தனித் தந்தையே!

தன்னையும் தன் அருட் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே!

தன் இயல் என் இயல், தன் செயல் என்செயல்
என்ன இயற்றிய என் தனித் தந்தையே!

தன் உரு என் உரு, தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனித் தந்தையே!

சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன் என்று
எதிர் அற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே!

மன வாக்கு அறியா வரைப்பினில், எனக்கே
இனவாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே!

உணர்ந்து உணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே!

துரிய வாழ்வு உடனே சுகபூரணம் எனும்
பெரியவாழ்வு அளித்த பெருந்தனித் தந்தையே!

ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த
பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே!

எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிது ஆம்
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே!

இனிப் பிறவாநெறி எனக்கு அளித்து அருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே! தந்தையே!        --- திருவருட்பா.

கருத்துரை

முருகா! திருவடியைத் தந்து அருள்.
                 


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...