திருவண்ணாமலை - 0586. மொழிய நிறம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மொழிய நிறம் (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை நினைந்து வாடும் இந்தப் பெண்ணின் மயல் தீர,
மயிலில் வந்து முத்தி தர வேணும்.

தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான


மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி
     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும்

முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும்

மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே

மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும்

அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
     னமுதத னம்படைத்த ...... திருமார்பா

அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே

எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா

இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


மொழிய நிறம் கறுத்து, மகர இனம் கலக்கி,
     முடிய வளைந்து அரற்று ...... கடலாலும்,

முதிர விடம் பரப்பி, வடவை முகந்து, அழற்குள்
     முழுகி எழுந்திருக்கும் ...... நிலவாலும்,

மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற
     மயல் தணியும் படிக்கு ...... நினைவாயே.

மரகத துங்க வெற்றி விகட நடம் கொள், சித்ர
     மயிலினில் வந்து முத்தி ...... தரவேணும்.

அழகிய மென் குறத்தி, புளகித சந்தனத்தின்
     அமுத தனம் படைத்த ...... திருமார்பா!

அமரர் புரம் தனக்கும், அழகிய செந்திலுக்கும்,
     அருணை வளம் பதிக்கும் ...... இறையோனே!

எழு புவனம் பிழைக்க, அசுரர் சிரம் தெறிக்க,
     எழு சயிலம் தொளைத்த ...... சுடர்வேலா!

இரவிகள், ந்தரத்தர், அரி, அர, பங்கயத்தர்
     இவர்கள் பயம் தவிர்த்த ...... பெருமாளே.


பதவுரை

      அழகிய மென் குறத்தி --- அழகும் மென்மையும் உடைய குறவர் குலத்தவளாகிய வள்ளிநாயகியின்

     புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திருமார்பா --- பூரித்து உள்ளதும், சந்தனம் பூசப்பெற்றதுமான அமுதம் நிறைந்த கொங்கையைத் தழுவிய அழகிய மார்பினரே!

      அமரர் புரம் தனக்கும் --- தேவர்களின் நகரமாகிய அமராவதிக்கும்,

     அழகிய செந்திலுக்கும் --- அழகிய திருச்செந்தூருக்கும்,

     அருணை வளம்பதிக்கும் இறையோனே --- வளமை மிகுந்த திருவண்ணாமலைக்கும் தலைவரே!

       எழு புவனம் பிழைக்க --- ஏழு உலகங்களும் பிழைக்கவும்,

     அசுரர் சிரம் தெறிக்க --- அசுரர்களின் தலைகள் அற்று விழவும்,

     எழுசயிலம் தொளைத்த சுடர்வேலா --- ஏழு மலைகளைத் தொளைக்கவும் விடுத்த ஒளி மிகுந்த வேலாயுதரே!

       இரவிகள், அந்தரத்தர் --- சூரியர்கள், விண்ணுலக வாசிகள்,

     அரி, அர, பங்கயத்தர் இவர்கள் --- திருமால், உருத்திரன், பிரமன் ஆகிய இவர்களுடைய

     பயம் தவிர்த்த பெருமாளே --- அச்சத்தை அகற்றிய பெருமையில் சிறந்தவரே!

       மொழிய நிறம் கறுத்து --- எல்லோரும் புகழ்ந்து கூறும்படி கருநிறம் கொண்டு,

      மகர இனம் கலக்கி --- மகர மீன்களின் கூட்டத்தைக் கலக்கி,

     முடிய வளைந்து அரற்று கடலாலும் --- முழு இடத்தும் வளைந்து ஒலி செய்யும் கடலாலும்,

      முதிர இடம் பரப்பி --- கலைகள் வளர்ந்து இடம் விரிந்து முழுத்திங்களாய்

     வடவை முகந்து --- வடவாமுக அக்கினியை மொண்டு

     அழற்குள் முழுகி எழுந்திருக்கும் நிலவாலும் --- நெருப்பில் முழுகி எழுந்து வரும் நிலவாலும்,

       மழை அளகம் தரித்த கொடி இடை --- மழைபோல் நீண்ட கூந்தலை உடைய, கொடியனைய மெல்லிய இடையை உடைய

     வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே --- இப் பெண் கொடி அடைந்துள்ள காதல் மயக்கம் தணியும் பொருட்டு தேவரீர் திருவுள்ளம் பற்றி

         மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும் --- பச்சை நிறமும், பரிசுத்தமும், வெற்றியும், அழகிய நடனத்தையும் கொண்ட அழகிய மயிலின் மீது எழுந்தருளி வந்து, முத்தியைத் தந்து அருளவேண்டும்.


பொழிப்புரை


         அழகும் மென்மையும் உடைய குறவர் குலத்தவளாகிய வள்ளிநாயகியின் பூரித்து உள்ளதும், சந்தனம் பூசப்பெற்றதுமான அமுதம் நிறைந்த கொங்கையைத் தழுவிய அழகிய மார்பினரே!

         தேவர்களின் நகரமாகிய அமராவதிக்கும், அழகிய திருச்செந்தூருக்கும், வளமை மிகுந்த திருவண்ணாமலைக்கும் தலைவரே!

         ஏழு உலகங்களும் பிழைக்கவும், அசுரர்களின் தலைகள் அற்று விழவும், ஏழு மலைகளைத் தொளைக்கவும் விடுத்த ஒளி மிகுந்த வேலாயுதரே!

         சூரியர்கள், விண்ணுலக வாசிகள், திருமால், உருத்திரன், பிரமன் ஆகிய இவர்களுடைய அச்சத்தை அகற்றிய பெருமையில் சிறந்தவரே!

         எல்லோரும் புகழ்ந்து கூறும்படி கருநிறம் கொண்டு, மகர மீன்களின் கூட்டத்தைக் கலக்கி, முழு இடத்தும் வளைந்து ஒலி செய்யும் கடலாலும், கலைகள் வளர்ந்து இடம் விரிந்து முழுத்திங்களாய் வடவாமுக அக்கினியை மொண்டு நெருப்பில் முழுகி எழுந்து வரும் நிலவாலும், மழைபோல் நீண்ட கூந்தலை உடைய, கொடியனைய மெல்லிய இடையை உடைய இப் பெண் கொடி அடைந்துள்ள காதல் மயக்கம் தணியும் பொருட்டு தேவரீர் திருவுள்ளம் பற்றி, பச்சை நிறமும், பரிசுத்தமும், வெற்றியும், அழகிய நடனத்தையும் கொண்ட அழகிய மயிலின் மீது எழுந்தருளி வந்து, முத்தியைத் தந்து அருளவேண்டும்.


விரிவுரை

இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

கடலாலும் …......  நிலவாலும் ---

தலைவனை விரும்பும் தலைவிக்குக் கடலும் நிலவும் துன்பத்தைச் செய்யும்.

மழை அளகம் ---

மழைத் தாரை நீண்டிருப்பது போல் கூந்தல் நீண்டிருக்கும்.

முத்தி ---

பந்தத்தினின்றும் விடுபடுவது முத்தியாகும்.

எழு சயிலம் தொளைத்த ---

சூரபன்மனுக்கு எப்போதும் உதவியாயிருந்து எழு மலைகள் துணை செய்து கொண்டிருந்தன.  முருகவேள் சூரனை வேலால் அழித்தபோது, இந்த எழு மலைகளையும் அழித்தருளினார்.

இரவிகள் ---

சூரியர்கள் பன்னிருவர்.  தாத்துரு, சக்கரன், அரியமன்,  மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா.

அரியர பங்கயத்தர் இவர்பயம் தவிர்த்த ---

அயன் அரி உருத்திரன் என்ற மும்மூர்த்திகளின் பயத்தை முருகவேள் தீர்த்து அருளினார்.

கருத்துரை

அருணை அண்ணலே, உன்னைக் காதலிக்கும் இச் சிறுமிக்கு மயிலில் வந்து முத்தி தந்தருள்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...