சிதம்பரம் - 0621. கொந்தர் அம்குழல்



அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொந்தர் அம்குழல் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் மீது வைத்த சிந்தையை மாற்றி அருள்.


தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான


கொந்த ரங்குழ லிந்து வண்புரு
     வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
          கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்

கொந்த ளங்கதி ரின்கு லங்களி
     னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
          கொண்ட நண்பித ழின்சு கங்குயி ......லின்சொல்மேவுந்

தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
     கந்த ரங்கமு கென்ப பைங்கழை
          தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்

தந்தி யின்குவ டின்த னங்களி
     ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
          தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ

மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
     தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
          மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும்

வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
     டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
          வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ......கண்டமாயோன்

உந்தி யின்புவ னங்க ளெங்கும
     டங்க வுண்டகு டங்கை யன்புக
          ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ......பங்கின்மேவும்

உம்ப லின்கலை மங்கை சங்கரி
     மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
          வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கொந்தர் அம் குழல், இந்து வண் புரு-
     வங்கள், கண் கயலும் சரம் கணை
          கொண்ட ரம்பையர், ந்தமும் சசி ...... துண்டமாதர்,

கொந்தளம் கதிரின் குலங்களி-
     னும் சுழன்று, ரசம் பலங்கனி
          கொண்ட நண்பு இதழின், சுகம்குயில் ......இன்சொல்மேவும்

தந்த அம் தரளம் சிறந்து எழு
     கந்தரம் கமுகு என்ப, பைங்கழை
          தண்புயம், தளிரின் குடங்கையர்,...... அம்பொன்ஆரம்

தந்தியின் குவடின் தனங்கள்
     இரண்டையும் குலை கொண்டு விண்டவர்,
          தம் கடம் படியும் கவண் தீய ...... சிந்தைஆமோ?

மந்தரம் கடலும் சுழன்று, மிர்-
     தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி
          மந்திரம் செல்வமும் சுகம் பெற ...... எந்தவாழ்வும்
  
வந்த அரம்பை எணும் பகிர்ந்து,
     நடம் கொளும் திரு மங்கை பங்கினன்,
          வண்டர் லங்கை உளன் சிரம் பொடி ......கண்ட மாயோன்,

உந்தியின் புவனங்கள் எங்கும்
    அடங்க உண்ட குடங்கையன் புகழ்
          ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் ......பங்கின்மேவும்

உம்பலின் கலை மங்கை, சங்கரி
     மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
          ஒண் பரம் திரு அம்பலம் திகழ் ...... தம்பிரானே.


பதவுரை

      மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் --- மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவரும்,

     அஞ்சு மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற --- அச்சம் கொண்ட இந்திரனுடைய இருப்பிடமானது செல்வமும், சுகம் முதலிய சகல வாழ்வையும் பெறுமாறு,

     எந்த வாழ்வும் வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திருமங்கை பங்கினன் --- கடலில் தோன்றிய அரம்பை முதலான நடனமாதர்களையும், சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, காமேதனு, உச்சைச் சிரவம் முதலிய எண்ணத்தக்க பொருள்களைப் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த இலக்குமியின்  நாயகரும்,

      வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன் --- மங்கல பாடகருடன் கூடிய,  இலங்கை வேந்தனான இராவணனுடைய பத்துத் தலைகள் பொடியாகும்படி வென்ற மாயவரும்,

     உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ் --- தனது வயிற்றில் அண்டங்கள் யாவையும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ,

      ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் --- ஒளி மிகுந்த திரிபுரங்களை எரித்துப் பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானுடைய

     பங்கின் மேவும் --- பாகத்தில் இருக்கும்,

     உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று --- எழுச்சி கொண்ட சகல கலைகளுக்கும் தலைவியாகிய வாகிசுவரியாம் சங்கரியின் திருமைந்த என்று

     அயனும் புகழ்ந்திட --- பிரமதேவனும் புகழ,

     ஒண் பரம்  --- ஒளியும் மேன்மையும் உடைய

     திரு அம்பலம் திகழ் தம்பிரானே --- திரு அம்பலத்தில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

      கொந்தர் அம் குழல் --- அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல்,

     இந்து வண் புருவங்கள் --- பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள்,

     கண் கயலும் சரம் கணை கொண்டு --- கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்டு,

     அரம்பையர் அந்தமும் --- அரம்பையரது அழகையும்,

     சசி துண்டம் மாதர் --- சந்திரனைப் போன்ற முகத்தையும் உடையவராகிய மாதர்கள்,

      கொந்தளம் கதிரின் குலங்களினும் சுழன்று --- இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து,

     இரசம் பலம் கனி கொண்ட நண்பு இதழின் --- சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின்,

     சுகம் குயிலின் சொல் மேவும் --- கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல்,

     தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப --- விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து,

       பைங்கழை தண்புயம் --- மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள்,

     தளிரின் குடங்கையர் --- தளிர் போல மென்மையான உள்ளங்கை இவைகளை உடையவர்கள்,

     அம்பொன் ஆரம் --- பசிய அழகிய பொன் மாலையை அணிந்துள்ள,

     தந்தியின் --- யானை போலவும்

     குவடின் --- மலை போலவும்

     தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர் --- பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள்.

     தம் கடம் படியும் கவண் தீய சிந்தை ஆமோ --- இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? (ஆகாது).


பொழிப்புரை


         மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவரும், அச்சம் கொண்ட இந்திரனுடைய இருப்பிடமானது செல்வமும், சுகம் முதலிய சகல வாழ்வையும் பெறுமாறு, கடலில் தோன்றிய அரம்பை முதலான நடனமாதர்களையும், சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, காமேதனு, உச்சைச் சிரவம் முதலிய எண்ணத்தக்க பொருள்களைப் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த இலக்குமியின்  நாயகரும், மங்கல பாடகருடன் கூடிய,  இலங்கை வேந்தனான இராவணனுடைய பத்துத் தலைகள் பொடியாகும்படி வென்ற மாயவரும், தனது வயிற்றில் அண்டங்கள் யாவையும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒளி மிகுந்த திரிபுரங்களை எரித்துப் பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானுடைய பாகத்தில் இருக்கும், எழுச்சி கொண்ட சகல கலைகளுக்கும் தலைவியாகிய வாகிசுவரியாம் சங்கரியின் திருமைந்த என்று பிரமதேவனும் புகழ, ஒளியும் மேன்மையும் உடைய திரு அம்பலத்தில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

         அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட, அரம்பையரது அழகையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் உடையவராகிய மாதர்கள், இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கை இவைகளை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? (ஆகாது).

விரிவுரை

கொந்தரம் குழல் ---

அம் குழல் கொந்தர் என்று பதப்பிரிவு செய்க.

கொந்து - பூங்கொத்து.

அழகிய கூந்தலில் பூங்கொத்துக்களைச் சொருகி பொதுமாதர்கள் ஆடவர் உள்ளத்தை வசப்படுத்துவார்கள்.

கண் கயலும் சரம் கணை ---

பெண்களின் கண்கள், கயல்மீன் போலவும், அம்பு போலவும், அம்பின் அலகு போலவும் விளங்கும்.

கணை - அம்பின் அலகு.

ரம்பையர் அந்தமும் ---

அரம்பையர் என்ற தெய்வ லோகத்து நடனமாதர்களின் அழகைக் கொண்டவர்கள்.

சசி துண்ட மாதர் ---

சசி - சந்திரன்.  துண்டம் - முகம்.  சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள்.

தந்தவந்தரளம் ---

அம் தரளம் தந்த – என்று சொற்களை மாற்றி அமைக்க.

அழகிய முத்துப் போன்ற பற்கள்.

கடம் படியும் ---

கடம் - உடம்பு.

பொதுமாதரின் உடலைத் தழுவி அதில் முழுகுவர்.

கவண்டிய சிந்தையாமோ ---

கவண் திய – தீய என்ற சொல் திய எனக் குறுகி வந்தது.  கவண்கல் போல் வேகமாகச் சுழலும் தீய சிந்தை ஆகாது என்கின்றார்.

மந்தரங்கடலும் சுழன்று அமுர்தம் கடைந்தவன் ---

இந்திரனுக்கு வளமையும் வாழ்வும் பெருகும் பொருட்டு திருமால் பாற்கடலில் மந்தர கிரியை மத்தாகவும், வாசுகியைத் தாம்பாகவும் அமைத்துக் கடைந்தார்.

மங்குலி ---

இந்திரன்.  மங்குல் - மேகம்.  மேகத்தை வாகனமாகக் கொண்டதனால் இந்திரன் மங்குலி என்று பேர் பெற்றான்.

வந்த ரம்பை எணும் பகிர்ந்து ---

பாற்கடலில் தன்வந்தரி, அமுதம், அமுதத்துடன் அறுபது கோடி அரம்பையர், இவர்களுக்குத் தோழியர், உச்சைசிரவம் என்ற வெள்ளைக் குதிரை, கௌத்துவமணி, சிந்தாமணி, சூடாமணி, காமதேனு, சந்திரன், ஐராவதம், இலக்குமி, பஞ்சதருக்கள், வாருணி முதலியவை தோன்றின.

இவைகளில் திருமகளையும், கௌத்துவமணியையும் திருமால் தாம் ஏற்றுக் கொண்டார்.  சூடாமணியை நிமியென்ற வேந்தனுக்குத் தந்தார்.  இதுதான் சீதை தந்த அடையாளம்.   ஐராவதம், உச்சைசிரவம், காமதேனு, பஞ்சதருக்கள் முதலிய செல்வங்களை இந்திரனுக்குத் தந்தார்.

வண்டர் ---

வண்டர் - மங்கலப் பாடல் பாடுபவர்.  அல்லது அரசனிடம் நாழிகை அறிவிப்பவர்.

உம்பலின் கலை மங்கை ---

உம்பல் - எழுச்சிய  சகல கலைகளுக்கும் தலைவி உமாதேவி.  "சகலகலா வியாபினிம்" என்கின்றது அதர்வண வேதம்.

கருத்துரை

அம்பலநாதா, அரிவையர் மீது செல்லும் சிந்தையை மாற்றி அருள்க.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...