எட்டி பழுத்து என்ன? ஈயாதார் வாழ்ந்து என்ன?




24. எட்டிமரம் பழுத்து என்ன,
ஈயாதார் வாழ்ந்து என்ன?

கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
     கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணம்தேடும் பொருளைஎல்லாம்
     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்
     வாழ்ந்தாலும் என்உண் டாமே?

          
     இதன் பொருள் ---

     மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே!

     தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே!

     வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும்,

     என்  உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?

     ஈயாதார்  வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும், 

     என்  உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?

     கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;

     அவ்வணம் --- அது போலவே

     சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

          விளக்கம் --- சிட்டர் --- அறிவு உடையோர், நல்லோர், சான்றோர்.

பயன் மரம் உள் ஊர்ப் பழுத்து அற்றால், செல்வம்
நயன் உடையான்கண் படின்

என்றார் திருவள்ளுவ நாயனார்.

     ‘எட்டி பழுத்து என்ன? ஈயாதார் வாழ்ந்து என்ன?' என்பன பழமொழிகள்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...