சிதம்பரம் - 0603. இணங்கித் தட்பொடு

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இணங்கித் தட்பொடு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் பற்றினை ஒழித்து,
உனது திருவடியைப் பற்ற அருள்.


தனந்தத் தத்தன தானன தானன
     தனந்தத் தத்தன தானன தானன
          தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான


இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
     மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
          இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் .....கடிதாகும்

இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
     பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
          இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும்

பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
     மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
          பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே

பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
     கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
          பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
     சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
          மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே

மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
     குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
          வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா

பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
     பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
          பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே

பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
     சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
          பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்,
     மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள்,
          இளஞ்சொல் செப்பிகள், சாதனை வீணிகள், .......கடிதுஆகும்

இடும்பைப் பற்றிய தாம்என மேயினர்,
     பெருஞ்சொல் பித்தளை தானும் வையாதவர்,
          இரும்பில் பற்றிய கூர்விழி மாதர்கள், ...... எவரேனும்

பணம் சுற்றிக் கொள் உபாய உதாரிகள்,
     மணங்கட்டுக் குழல் வாசனை வீசிகள்,
          பலம் செப்பித் தர மீள அழையாதவர், ...... அவரோடே

பதம் துய்த்து, கொடு தீமைய மாநரகு
     அடைந்திட்டு, சவம் ஆகி விடாது,
          பதம் பற்றிப் புகழானது கூறிட ...... அருள்வாயே.

வணங்கச் சித்தம் இலாத இராவணன்
     சிரம் பத்துக் கெட வாளி கடாவியெ
          மலங்கப் பொக்கரை ஈடுஅழி மாதவன் ......மருகோனே!

மதம் பட்டுப் பொரு சூரபன்ம ஆதியர்
     குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை
          வளைந்திட்டு, கள மீதினிலே கொல ...... விடும்வேலா!

பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள்
     பிடுங்கிக் கொத்திடவே, மர் ஆடியெ
          பிளந்திட்டு, பல மாமயில் ஏறிய ...... முருகோனே!

பிரிந்திட்டுப் பரிவு ஆகிய ஞானிகள்
     சிலம்பு அத்தக் கழல் சேரவெ நாடிடு
          பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      வணங்கச் சித்தம் இலாத இராவணன் --- வணங்கி வாழ்வதற்கு மனம் இல்லாத இராவணனுடைய

     சிரம் பத்துக் கெட வாளி கடாவியெ --- பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி,

      மலங்கப் பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே --- மனம் கலங்க, பொய்ம்மையை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின் திருமருகரே!

       மதம் பட்டுப் பொரு சூரபன்மன் ஆதியர் குலம் --- ஆணவம் கொண்டு போருக்கு வந்த சூரபன்மன் ஆகியோரது குலத்தை

     கொட்டத்து இகல் கூறிய மோடரை வளைந்திட்டு --- இறுமாப்போடு பகைமை பாராட்டி வந்த மூடர்களை வளைத்து

     களம் மீதினிலே கொல விடும் வேலா --- போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவரே!

      பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள் பிடுங்கிக் கொத்திடவே அமர் ஆடியெ --- கழுகுகளுடன் பல பேய்கள் பிணத்தைப் பற்றிப் பிடுங்கிக் கொத்தித் தின்னும்படி போர் புரிந்து,

       பிளந்திட்டுப் பல மாமயில் ஏறிய முருகோனே --- அவர்களின் உடலைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய முருகக் கடவுளே!

       பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள் --- உலகவிடயங்களில் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்த ஞானிகள்,

     சிலம்பு அத்தக் கழல் சேரவெ நாடிடு --- சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த தேவரீரது திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற,

      பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே --- பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

       இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் --- மனம் இசைந்து குளிர்ந்து, பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள்.

      மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள் --- கூடிய பின் சுகமாய் விளையாடுபவர்கள்.

      இளம் சொல் செப்பிகள் --- சிறு சொற்களைப் பேசுபவர்கள்,

     சாதனை வீணிகள் --- தாம் நினைத்ததையே சாதிக்கும் பயனிலிகள்,

       கடிது ஆகும் இடும்பைப் பற்றிய தாம் என மேயினர் --- கடுமையான, தான் என்னும் அகந்தை பிடித்து தம்மையே பெரிதாக மதிப்பவர்கள்,

      பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் --- நிறையப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட விட்டுவைக்காமல் கவர்பவர்கள்,

       இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் --- இரும்பாலான வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்கள்,

     எவரேனும் பணம் சுற்றிக் கொள் உபாய உதாரிகள் --- யாராக இருந்தாலும் அவரிடம் பணத்தைப் பறித்துக் கொள்ளும் தந்திரத்தில் வல்லவர்கள்,

      மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள் --- நறுமணம் வீசும் கூந்தலை உடையவர்கள்,

       பலம் செப்பித் தர மீள அழையாதவர் --- பொன்னைக் கொடுக்கிறேன் என்று உறுதி சொன்னாலும், அது தருமளவும் மறுபடியும் அழைக்காதவர்கள்,

      அவரோடே பதம் துய்த்துக் கொடு --- இத்தகைய  விலைமகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு,

     தீமைய மா நரகு அடைந்திட்டுச் சவமாகி விடாது --- கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல்,

      உன பதம் பற்றிப் புகழானது கூறிட அருள்வாயே --- தேவரீருடைய திருவடிகளை மனதால் பற்றி, உமது திருப்புகழைப் பாடிப் பரவ அருள்வாயாக.


பொழிப்புரை


         வணங்கி வாழ்வதற்கு மனம் இல்லாத இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி, மனம் கலங்க, பொய்ம்மையை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின் திருமருகரே!

     ஆணவம் கொண்டு போருக்கு வந்த சூரபன்மன் ஆகியோரது குலத்தை,  இறுமாப்போடு பகைமை பாராட்டி வந்த மூடர்களை வளைத்து போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவரே!

     கழுகுகளுடன் பல பேய்கள் பிணத்தைப் பற்றிப் பிடுங்கிக் கொத்தித் தின்னும்படி போர் புரிந்து, அவர்களின் உடலைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய முருகக் கடவுளே!

         உலகவிடயங்களில் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்த ஞானிகள், சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த தேவரீரது திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற, பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     மனம் இசைந்து குளிர்ந்து, பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள். கூடிய பின் சுகமாய் விளையாடுபவர்கள். சிறு சொற்களைப் பேசுபவர்கள், தாம் நினைத்ததையே சாதிக்கும் பயனிலிகள், கடுமையான, தான் என்னும் அகந்தை பிடித்து தம்மையே பெரிதாக மதிப்பவர்கள், நிறையப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட விட்டுவைக்காமல் கவர்பவர்கள், இரும்பாலான வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்கள், யாராக இருந்தாலும் அவரிடம் பணத்தைப் பறித்துக் கொள்ளும் தந்திரத்தில் வல்லவர்கள், நறுமணம் வீசும் பின்னிய கூந்தலை உடையவர்கள், பொன்னைக் கொடுக்கிறேன் என்று உறுதி சொன்னாலும், அது தருமளவும் மறுபடியும் அழைக்காதவர்கள், இத்தகைய  விலைமகளிரோடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், தேவரீருடைய திருவடிகளை மனதால் பற்றி, உமது திருப்புகழைப் பாடிப் பரவ அருள்வாயாக.

விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் பொதுமாதரின் குணங்களை எடுத்து உரைத்து, அவரால் வரும் துன்பத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்று உலகவரை அறிவுறுத்துகின்றார் நம் அருணை வள்ளல்.

வணங்கச் சித்தம் இலாத இராவணன் ---

இராவணன் பெரும் தவம் செய்து இறைவனிடத்தில், வாளையும் நாளையும் பெற்றவன். பெற்ற வரத்தின் பெருமையால் தருக்கி, ஆணவமே அவனிடம் மிகுந்து இருந்தது. இராமபிரானை வணங்கி, சீதையைச் சிறை விட்டு இருந்தால் அவன் பெருவாழ்வைப் பெற்று இருப்பான். ஆனால், அவனுடைய சித்தமானது ஆணவத்தால் கடினமாக இருந்தது.

கொட்டத்து இகல் கூறிய மோடரை ---

தாம் கொண்டிருந்த இறுமாப்பு காரணமா, இறைவனிடம் பகைமை உணர்வு பாராட்டி வந்த மூடர்களாகிய அரக்கர்கள்.

பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள் ---

உலக விடயங்களில் பற்று வைத்து, வீணே அழியாமல், உய்யும் வகையை நினைந்து, அழியாத இன்பத்தை அருளுகின்ற இறைவன் பால் அன்பு வைத்து அவன் அருளையே நாடி இருக்கின்ற மெய்யுணர்வு பெற்றவர்கள்.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவால் அழிந்து வீணாகாமல், உனது திருவடியைப் பற்றி, உனது திருப்புகழ் பாடி உய்ந்திட அருள்.No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...