குளிர் காய நேரம் இல்லை




28. குளிர் காய நேரம் இல்லை!

உருஎடுத்த நாள்முதலா ஒருசாணும்
   வளர்க்கஉடல் உழல்வது அல்லால்,
மருஇருக்கும் நின்பாத மலர்தேடித்
   தினம்பணிய மாட்டேன்! அந்தோ!
திருஇருக்கும் மணிமாடத் தண்டலைநீள்
   நெறியே! என் செய்தி எல்லாம்
சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய
   நேரம்இல்லாத் தன்மை தானே!

     இதன் பொருள் ---

     திரு இருக்கும் மணிமாடத் தண்டலை நீள் நெறியே --- செல்வம்  நிலைத்த  அழகிய மாளிகைகள் நிறைந்து விளங்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய நீள்நெறிநாதரே!,

     உரு எடுத்த நாள் முதலா --- இந்த உடம்பைத் தாங்கி வந்த நாள் கொண்டு,  

     ஒரு சாணும் வளர்க்க --- ஒரு சாண் வயிற்றை வளர்ப்பதற்காகவே,

     உடல் உழல்வது அல்லால் --- இந்த உடம்பைக் கொண்டு இங்கும் அங்குமாகப் பொருள் தேடி உழன்றது அல்லாமல்,

     மரு இருக்கும் நின் பாத மலர் தேடி --- நறுமணம் கமழும் உமது திருவடித் தாமரைகளைத் தேடி,

     அந்தோ தினம் பணிய மாட்டேன் --- ஐயோ! நாளும் பணிந்து வணங்காமல் இருந்தேன்,

     என் செய்தி எல்லாம் --- எனது செயல்கள் யாவும் எப்படி அமைந்தன என்றால்,

     சருகு அரிக்க நேரம் அன்றி --- தினமும் சருகு கொணர்ந்து தேக்குவதை அல்லாமல்,

     குளிர் காய நேரம் இல்லாத் தன்மை தானே --- அப்படிக் கொண்டு சேர்த்த சருகைக் கொண்டு குளிர் காய்வதற்கு நேரம் இல்லாத தன்மை போல் ஆகி விட்டது.

     விளக்கம் --- "அவல வயிற்றை வளர்ப்பதற்கே, அல்லும் பகலும் அதில் நினைவாய்க் கவலைப் படுவது அன்றி, சிவக் கனியைச் சேரக் கருதுகிலேன், திவலை ஒழிக்கும் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்கு, குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே" என வள்ளல் பெருமான் பாடி இருப்பதை இதனுடன் வைத்து எண்ணுக.  

     பாடுபட்டுப் பணத்தைத் தேடிப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடரின் தன்மை இது ஆகும். தேடிய பொருளைக் கொண்டு தானும் உண்டு, பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்து, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்பது கூடாது என்றார் ஆசிரியர்.

     "சருகு அரிக்க நேரம் உண்டு, குளிர் காய நேரம் இல்லை" என்பது பழமொழி.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...