சிதம்பரம் - 0602. ஆரத் தோடுஅணி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆரத் தோடுஅணி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்.


தானத் தானன தானன தானன
     தானத் தானன தானன தானன
          தானத் தானன தானன தானன ...... தனதான


ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
     போருக் காமென மாமுலை யேகொடு
          ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர்

ஆலைக் கோதினி லீரமி லாமன
     நேசத் தோடுற வானவர் போலுவர்
          ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே

காருக் கேநிக ராகிய வோதிய
     மாழைத் தோடணி காதொடு மோதிய
          காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே

காதற் சாகர மூழ்கிய காமுகர்
     மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
          காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே

சூரர்க் கேயொரு கோளரி யாமென
     நீலத் தோகைம யூரம தேறிய
          தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே

சோரிக் கேவெகு ரூபம தாவடு
     தானத் தானன தானன தானன
          சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா

வீரத் தால்வல ராவண னார்முடி
     போகத் தானொரு வாளியை யேவிய
          மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே

வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
     பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
          மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஆரத் தோடு அணி மார்பு, இணை யானைகள்
     போருக்கு ஆம் என மாமுலையே கொடு,
          ஆயத் தூசினை மேவிய நூல்இடை ...... மடமாதர்,

ஆலைக் கோதினில் ஈரம் இலா மன
     நேசத்தோடு உறவு ஆனவர் போலுவர்,
          ஆருக்கே பொருள் ஆம் எனவே நினைவு ...... அதனாலே

காருக்கே நிகர் ஆகிய ஓதிய,
     மாழைத் தோடுஅணி காதொடு மோதிய,
          காலத் தூதர் கை வேல்எனும் நீள்விழி ...... வலையாலே,

காதல் சாகரம் மூழ்கிய காமுகர்
     மேல் இட்டே எறி கீலிகள், நீலிகள்,
          காமத்தோடு உறவு ஆகை இலாஅருள் ...... புரிவாயே.

சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என
     நீலத் தோகை மயூரம் அது ஏறிய
          தூளிக்கே கடல் தூர நிசாசரர் ...... களம் மீதே

சோரிக்கே வெகு ரூபம் அதா அடு
     தானத் தானன தானன தானன
          சூழிட்டே பல சோகுகள் ஆடவெ ...... பொரும்வேலா!

வீரத்தால் வல ராவணனார் முடி
     போகத் தான் ஒரு வாளியை ஏவிய,
          மேகத்தே நிகர் ஆகிய மேனியன் ...... மருகோனே!

வேதத்தோன் முதல் ஆகிய தேவர்கள்
     பூசித்தே தொழ வாழ் புலியூரினில்,
          மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      சூரர்க்கே ஒரு கோள் அரி ஆம் என --- சூரர் குலத்தை அழிக்க என்றே தோன்றிய ஒரு சிங்கம் போல்,

     நீலத் தோகை மயூரம் அது ஏறிய --- நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவரே!

      தூளிக்கே கடல் தூர --- புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போகும்படி,

     நிசாசரர் கள மீதே --- சூராதி அவுணர்கள் எதிர்த்து வந்த போர்க்களமானது,

     சோரிக்கே வெகு ரூபமதா அடு --- இரத்தக் களரியாய் விளங்கும்படி அழித்து,

      தானத் தானன தானன தானன சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா --- பல பேய்க் கூட்டங்கள் சூழ்ந்து தானத் தானன தானன தானன என்று கூத்தாடும்படி போர் புரிந்த வேலாயுதரே!

      வீரத்தால் வல இராவணனார் முடி போகத் தான் --- வீரத்தில் வல்லவனாகிய இராவணனுடைய பத்துதலை முடிகள் அற்றுப் போக,

     ஒரு வாளியை ஏவிய --- ஒப்பற்ற கணையைச் செலுத்தி,

     மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே --- மேகம் ஒத்த நிறமுடைய திருமேனியைக் கொண்ட திருமாலின் திருமருகரே!

      வேதத்தோன் முதலாகிய தேவர்கள் --- பிரமதேவர் முதலாகிய தேவர்கள்

     பூசித்தே தொழ வாழ் புலியூரினில் --- பூசித்து, தொழுது வாழும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில்,

      மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே --- மேற்குக் கோபுர வாசலில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      ஆரத் தோடு அணி மார்பு --- முத்து மாலையை அணிந்துள்ள மார்பில்

     இணை யானைகள் --- இரண்டு யானைகள் போல் எழுந்துள்ள 

     போருக்கு ஆம் என ---  போர் புரிய வருவது போன்று,

     மா முலையே கொடு --- பருத்து உள்ள பெரிய முலைகளைக் கொண்டு,

      ஆயத் தூசினை மேவிய நூல் இடை மட மாதர் --- அவற்றின்மீது தேர்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள்,

      ஆலைக் கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர் --- கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை  போல் கருணை இல்லாத மனத்தோடு பொய்யான அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள்,

      காருக்கே நிகராகிய ஓதிய --- கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள்,

     ஆருக்கே பொருள் ஆம் எனவே நினைவு அதனாலே --- யாரோடு உறவு கொண்டால் பொருள் கிட்டும் என்ற நினைவையே கொண்டு,

     மாழைத் தோடு அணி காதொடு --- பொன்னாலாகிய தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதுடன்,

     மோதிய காலத் தூதர் கைவேல் எனு நீள் விழி வலையாலே --- மோதுகின்ற காலனுடைய தூதுவரின் கையில் உள்ள வேல் போல் நீண்டு உள்ள கண்கள் என்கின்ற வலையாலே,

      காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே --- காதல் என்னும் கடலில் முழுகியுள்ள ஆடவர்கள் மேல்

     எறி கீலிகள் நீலிகள் --- விழுகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது

      காமத்தோடு உறவு ஆகை இலா அருள் புரிவாயே --- காமவசப்பட்டு அவர்களோடு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக.


பொழிப்புரை


         சூரர் குலத்தை அழிக்க என்றே தோன்றிய ஒரு சிங்கம் போல், நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவரே!

     புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போகும்படி, சூராதி அவுணர்கள் எதிர்த்து வந்த போர்க்களமானது, இரத்தக் களரியாய் விளங்கும்படி அழித்து, பல பேய்க் கூட்டங்கள் சூழ்ந்து தானத் தானன தானன தானன என்று கூத்தாடும்படி போர் புரிந்த வேலாயுதரே!

         வீரத்தில் வல்லவனாகிய இராவணனுடைய பத்துதலை முடிகள் அற்றுப் போக, ஒப்பற்ற கணையைச் செலுத்தி, மேகம் ஒத்த நிறமுடைய திருமேனியைக் கொண்ட திருமாலின் திருமருகரே!

         பிரமதேவர் முதலாகிய தேவர்கள் பூசித்து, தொழுது வாழும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில்,மேற்குக் கோபுர வாசலில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         முத்து மாலையை அணிந்துள்ள மார்பில் இரண்டு யானைகள்  எழுந்து போர் புரிய வருவது போன்று பருத்து உள்ள பெரிய முலைகளைக் கொண்டு, அவற்றின்மீது தேர்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள், கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை போல் கருணை இல்லாத மனத்தோடு பொய்யான அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள், கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள், யாரோடு உறவு கொண்டால் பொருள் கிட்டும் என்ற நினைவையே கொண்டு, பொன்னாலாகிய தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதுடன், மோதுகின்ற காலனுடைய தூதுவரின் கையில் உள்ள வேல் போல் நீண்டுள்ள கண்கள் என்கின்ற வலையாலே, காதல் என்னும் கடலில் முழுகியுள்ள ஆடவர்கள் மேல் விழுகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது காமவசப்பட்டு அவர்களோடு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக.




No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...