நம்பத் தகாதவர்கள்

கல்லாத மாந்தரையும், கடுங்கோபத் துரைகளையும், காலம் தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும், துயர்க்கு உதவாத் தேவரையும், சுருதி நூலில்
வல்லா அந்தணர் தமையும், கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி
நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும், ஒருநாளும் நம்ப ஒணாதே.

இதன் பொருள் ---                                

     கல்லாத மாந்தரையும் --- அறிவு நூல்களைக் கற்று அறிவு பெற்றிராத மனிதர்களையும்,

     கடுங்கோபத் துரைகளையும் --- கொடிய கோபத்தை உடைய அரசர்களையும், (தலைவர்களையும்)
                 
     காலம் தேர்ந்து சொல்லாத அமைச்சரையும் --- எதிர் காலத்தின் நிகழ்ச்சிகளைத் தமது அறிவு நுட்பத்தால் உய்த்து உணர்ந்து, நன்மை தீமைகளை அவை வரும் முன்பே சொல்லாத அமைச்சர்களையும்,

     துயர்க்கு உதவாத் தேவரையும் --- துன்பம் நேர்ந்த காலத்தில் உதவி செய்து, அத் துன்பங்களை நீக்குதற்கு உதவாத தேவதைகளையும்,

     சுருதி நூலில் வல்லா அந்தணர் தமையும் --- வேத சாத்திரங்களைக் கற்றலிலும், கேட்டலிலும் வல்லமை இல்லாத அந்தணர்களையும்,
     கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி --- தன்னை மனைவியாகக் கொண்டவனுடன் எல்லா நாள்களிலும் சிறப்பாகப் பேசி நடித்து,

     நல்லார் போல் அருகு இருக்கும் மனைவியையும் --- நல்லவள் போல் நடந்து கொண்டு அவனோடு இருந்துகொண்டே ஏமாற்றும் கெடுமதி படைத்த மனைவியையும்,

     ஒருநாளும் நம்ப ஒணாதே --- எக்காலத்தும் நம்புதல் கூடாது.       

                           

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...