சிதம்பரம் - 0662. வந்து வந்து வித்து

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வந்து வந்து வித்து (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பிறந்து இறந்து அழியும் என் முன் தோன்றி,
உன்னையே நினைக்கும் உள்ளத்தை அருள்.


தந்த தந்தனத் தான தந்ததன
     தந்த தந்தனத் தான தந்ததன
          தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான


வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
     வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
          வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே

மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
     சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
          வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
     சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
          னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும்

எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
     சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
          என்றன் முந்துறத் தோணி யுன்றனது ......சிந்தைதாராய்

அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
     சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
          ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...யுண்டமாயோன்

அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
     வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
          அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ......செங்கைவேலா

சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
     மங்கை யின்புறத் தோள ணைந்துருக
          சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே

சிந்தி முன்புரக் காடு மங்கநகை
     கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
          செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


வந்து வந்து வித்து ஊறி, என் தன் உடல்
     வெந்து வெந்து விட்டு ஓட, நொந்து உயிரும்
          வஞ்சினங்களில் காடு கொண்ட வடி ...... வங்களாலே

மங்கி மங்கி விட்டேனை, உன் தனது
     சிந்தை சந்தொஷித்து ஆளு கொண்டு அருள
          வந்து, சிந்துரத்து ஏறி, அண்டரொடு ...... தொண்டர்சூழ

எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ,
     சந்தர், ண்டு இசைத் தேவ அரம்பையர்
          கனிந்து பந்து அடித்து ஆடல் கொண்டு வர, ......மந்தி மேவும்

எண் கடம்பு அணித் தோளும் அம்பொன் முடி,
     சுந்தரம் திருப் பாத பங்கயமும்,
          என்தன் முந்துஉறத் தோணி, உன்தனது ......சிந்தை தாராய்.

அந்தரம் திகைத்து ஓட, விஞ்சையர்கள்
     சிந்தை மந்திரத்து ஓட, கெந்தருவர்
          அம்புயன் சலித்து ஓட, எண் திசையை .....உண்ட மாயோன்

அஞ்சி, உன்பதச் சேவை தந்திடு என,
     வந்த வெம் சினர் காடு எரிந்து விழ,
          அங்கியின் குணக் கோலை உந்திவிடு .....செங்கைவேலா!

சிந்துரம் பணைக் கோடு, கொங்கை குற
     மங்கை இன்புற, தோள் அணைந்து உருக
          சிந்துரந்தனைச் சீர் மணம் புணர் நல் ...... கந்தவேளே!

சிந்தி முன் புரக் காடு மங்க, நகை
     கொண்ட செந்தழல் கோலர், அண்டர்புகழ்
          செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் ...... தம்பிரானே.


பதவுரை

         அந்தரம் திகைத்து ஓட --- விண்ணில் உள்ளார் திகைத்து ஓடவும், 

         விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட --- வித்யாதரர்கள் மனக் கவலையுடன் ஓடவும்,

         கெந்தருவர் அம்புயன் சலித்து ஓட --- காந்தருவர்களும், பிரமதேவனும் மனம் சலிப்புற்று ஓடவும்,

         எண் திசையை உண்ட மாயோன் --- எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட திருமால்

         அஞ்சி --- உள்ளம் பயந்து,

        உன் பதச் சேவை தந்திடு என --- தேவரீரது  திருவடித் தொண்டைத் தந்து அருள்வீர் என வேண்டவும்,

         வந்த வெம் சினர்க் காடு எரிந்து விழ --- எதிர்த்து வந்த வெம்மையான கோபிகளாகிய அசுரர்களின் பெருங் கூட்டம் எரிந்து விழவும்,

         அங்கியின் குணக் கோலை --- நெருப்பின் குணம் போல் சுடுவதாகிய  வேலாயுதத்தை

       உந்திவிடு செங்கைவேலா --- விடுத்தருளிய வெற்றியை உடையவரே!

         சிந்துரம் பணைக் கோடு --- சிவந்ததும் பெருமை உடையதும் ஆகிய மலையின் உச்சியில் வாழ்ந்த

         கொங்கை குற மங்கை இன்பு உற --- தனபாரங்களுடன் கூடிய வள்ளியம்மையார் இன்புற்று மகிழுமாறு,

         தோள் அணைந்து --- அவருடைய திருத்தோள்களைத் தழுவி

         உருக சிந்துரந்தனை --- உள்ளம் உருகுமாறு தேவயானை அம்மையாரை

        சீர் மணம் புணர் --- சிறந்த திருமணம் செய்து கொண்டு அருளிய

        நல் கந்தவேளே --- நலத்தை அருள்கின்ற கந்தப் பெருமானே!

         முன் புரக் காடு சிந்தி மங்க --- முன் காலத்தில் திரிபுரங்கள் என்ற காடு அழிந்து ஒழிய,

         நகை கொண்ட --- புன்முறுவல் கொண்டவரும்,

      செம் தழல் கோலர் --- சிவந்த தழலின் நிறத்தை உடையவரும்,

         அண்டர் புகழ் --- தேவர்கள் புகழ்கின்ற

        செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் --- செம்பொற் சபையிலே ஆனந்தத் திருநடனம் புரிந்தருளும் அம்பலவாணருக்கு

         தம்பிரானே --- தலைவரே!

         வந்து வந்து --- இந்த உலகத்திலே மீண்டும் மீண்டும் வந்த வந்து,

        வித்து ஊறி --- விந்துவிலே ஊறி எடுத்த

         என் தன் உடல் --- எனது உடலானது,

        வெந்து வெந்து விட்டு ஓட --- நெருப்புக்கு இரையாகி வெந்து வெந்து நீறு பட்டு ஒழி,

        உயிரும் நொந்து --- எனது உயிரும் துன்பு,

         வஞ்சினங்களில் --- கோபம் முதலிய தீக்குணங்களை அடைந்து,

        காடு கொண்ட வடிவங்களாலே --- மிகுதி கொண்ட வடிவங்களை எடுத்து,

         மங்கி மங்கி விட்டேனை --- மிகவும் கேட்டை அடைந்த அடியேனை,

         உன் தனது சிந்தை சந்தொஷித்து ஆளு கொண்டு அருள --- தேவரீரது  திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டு அருளும் பொருட்டு,

      சிந்துரத்து ஏறி வந்து --- யானை வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு வந்து,

     அண்டரொடு தொண்டர் சூழ --- தேவர்களும் அடியார்களும் புடை சூழ்ந்து வரவும்,

      எந்தன் வஞ்சனைக் காடு சிந்தி விழ --- எனது வஞ்சனை ஆகிய பிறவிக்காடு பட்டழியவும்,

      சந்தர் --- சந்தம் பாடுபவரும்,

     அண்டு இசைத் தேவரம்பையர் --- நெருங்கிய இசை பாடுபவராகிய தேவ அரம்பையர்களும், 

     கனிந்து பந்து அடித்து ஆடல் கொண்டு வர --- உள்ளம் கனிவுற்று பந்தாடல் புரிந்து அருகில் வரவும்,   

     மந்தி மேவும் எண் கடம்பு அணித் தோளும் --- வண்டுகள் விரும்பும் மதிப்பதற்கு உரிய கடப்ப மலர் மாலையை அணிந்த திருத்தோள்களும்,

     அம் பொன் முடி --- அழகிய பொன்மயமான திருமுடிகளை அணிந்த திருமுகங்களும்,

      சுந்தரம் திருப்பாத பங்கயமும் --- எழிலான திருவடித் தாமரைகளும்,

      என் தன் முந்து உறத் தோணி --- அடியேனுக்கு கண் களிக்க முன்னே தோன்றி,

     உன் தனது சிந்தை தாராய் ---  தேவரீரையே நினைக்கும்படியான நல்ல உள்ளத்தைத் தந்து அருள்வீர்.


பொழிப்புரை

         விண்ணில் உள்ளார் திகைத்து ஓடவும்,  வித்தியாதரர்கள் மனக் கவலையுடன் ஓடவும், காந்தருவர்களும், பிரமதேவனும் மனம் சலிப்புற்று ஓடவும், எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட திருமால் உள்ளம் பயந்து, தேவரீரது  திருவடித் தொண்டைத் தந்து அருள்வீர் என வேண்டவும், எதிர்த்து வந்த வெம்மையான கோபிகளாகிய அசுரர்களின் பெருங் கூட்டம் எரிந்து விழவும், நெருப்பின் குணம் போல் சுடுவதாகிய  வேலாயுதத்தை விடுத்தருளிய வெற்றியை உடையவரே!

         சிவந்ததும் பெருமை உடையதும் ஆகிய மலையின் உச்சியில் வாழ்ந்த தனபாரங்களுடன் கூடிய வள்ளியம்மையார் இன்புற்று மகிழுமாறு, அவருடைய திருத்தோள்களைத் தழுவி, உள்ளம் உருகுமாறு தேவயானை அம்மையாரை சிறந்த திருமணம் செய்து கொண்டு அருளிய நலத்தை அருள்கின்ற கந்தப் பெருமானே!

         முன் காலத்தில் திரிபுரங்கள் என்ற காடு அழிந்து ஒழிய, புன்முறுவல் கொண்டவரும், சிவந்த தழலின் நிறத்தை உடையவரும், தேவர்கள் புகழ்கின்ற செம்பொற் சபையிலே ஆனந்தத் திருநடனம் புரிந்தருளும் அம்பலவாணருக்கு தலைவரே!

        
     இந்த உலகத்திலே மீண்டும் மீண்டும் வந்த வந்து, விந்துவிலே ஊறி எடுத்த எனது உடலானது, நெருப்புக்கு இரையாகி வெந்து வெந்து நீறு பட்டு ஒழி, எனது உயிரும் துன்பு, கோபம் முதலிய தீக்குணங்களை அடைந்து, மிகுதி கொண்ட வடிவங்களை எடுத்து, மிகவும் கேட்டை அடைந்த அடியேனை, தேவரீரது  திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டருளும் பொருட்டு,  யானை வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு வந்து, தேவர்களும் அடியார்களும் புடை சூழ்ந்து வரவும், எனது வஞ்சனையாகிய பிறவிக்காடு பட்டழியவும், சந்தம் பாடுபவரும், நெருங்கிய இசை பாடுபவராகிய தேவ அரம்பையர்களும், உள்ளம் கனிவுற்று பந்தாடல் புரிந்து அருகில் வரவும், வண்டுகள் விரும்பும் மதிப்பதற்கு உரிய கடப்ப மலர் மாலையை அணிந்த திருத்தோள்களும், அழகிய பொன்மயமான திருமுடிகளை அணிந்த திருமுகங்களும், எழிலான திருவடித் தாமரைகளும் அடியேனுக்கு கண் களிக்க முன்னே தோன்றி, தேவரீரையே நினைக்கும்படியான நல்ல உள்ளத்தைத் தந்து அருள்வீர்.

விரிவுரை
  
வந்து வந்துவித்து ஊறி, என்தன் உடல் ---

ஆன்மாக்கள் உடம்பை விட்டவுடன், தூமாதி மார்க்கம், அர்ச்சிராதி மார்க்கம் என்ற இரு வழியாக முறையே நரகத்தையும், சுவர்க்கத்தையும், பாவ புண்ணியங்கட்குத் தக்கவாறு அடைகின்றன.

பாவமே செய்த உயிர்கள் தூமாதி மார்க்கமாகிய இருள் வழியே நரகம் எய்துகின்றன. புண்ணியமே செய்த உயிர்கள் அர்ச்சிராதி மார்க்கமாகிய ஒளி வழியே சுவர்க்காதி புண்ணிய உலகங்களை எய்துகின்றன. அவ்வாறு பாவ புண்ணியங்கள் அநுபவித்து முடிந்தவுடன், மிச்சிர கன்மங்களை அநுபவிக்க இந்த பூ மண்டலத்திற்கு எய்துகின்றன. நரக உரகில் இவ் உயிருக்குப் பொருந்தும்  உடல் பூத தநு. சுவர்க்கத்தில் பொருந்தும் உடல் பூதசார தநு. மண்ணுலகில் பொருந்தும் உடல் பூத பரிணாம தநு.

புண்ணிய பாவ நுகர்வு தீர்ந்தவுடன் உயிர்கள் மழை வழியே இப் பூமிக்கு வந்து சேர்கின்றன. பலகாலும் இப்படி மாறி மாறி வருவதால், "வந்து வந்து" என்று அடுக்குத் தொடரால் கூறி அருளினர்.

இனி அவ்வாறு வந்த ஆன்மா, காய் கனி தானியாதிகளில் கலந்து ஆடவனிடம் சேர்ந்து, உதிரம் முதலிய சத்த தாதுக்களில் கலந்து, இறுதியில் விந்துவில் ஊறி வருகின்றது. அவ்வாறு பக்குவப்படுதற்கு இரு மாதங்கள் செல்லுகின்றன.  பிறகு தாய் உதரத்தை அடைகின்றது.

விந்து அதின் ஊறி வந்தது காயம்
வெந்தது கோடி        இனிமேலோ...         --- திருப்புகழ்.

வெந்து வெந்து விட்டு ஓட ---

இவ்வாறு வந்த உடம்பு சிலகாலம் இருந்த பின் தீக்கு இரையாகின்றது.  முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பர் ஆகின்றனர்.  மின்னல் தோன்றி உடனே மறைவது போல் இவ்வுடம்பு விரைவில் மாண்டு எரிந்து விடுகின்றது.

ஒருவரையும் ஒருவர்அறி யாம லுந்திரிந்து
     இருவினையின் இடர்கலியொடு ஆடி நொந்துநொந்து
     உலையில்இடு மெழுகு அதுஎன வாடி முன்செய்வஞ் ...... சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடும்
     கயிறுவிதம் எனமருவி ஆடி விண்பறிந்து
     ஒளிருமினல் உருஅதுஎன ஓடி அங்கம்வெந் ......  திடுவேனை....
                                                                               --- திருப்புகழ்.

வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே ---

வஞ்சினம் - மிகுந்த கோபம். அதிக கோபத்தால் வருவது மயக்கம் குரோதம் முதல்ய தீக்குணங்கள். அவைகளால் பலப்பல பிறப்புக்கள் வருகின்றன. காடு - மிகுதி. அன்றியும், அக்கினியால் காடு அழிவது போல், கோபாக்கினியால் அழிகின்ற வடிவம் எனினும் அமையும்.

இவ்வாறு வருகின்ற எண்ணத் தொலையாத பிறவித் துயரை ஒழித்து அருள்வாய் என்று பிறப்பு இறப்பு இல்லாத பெருந்தகையாகிய பெம்மான் முருகனை வேண்டுகின்றனர்.  ஞானபண்டிதனுடைய தரிசனை உண்டாகில், வினைகளும் மலங்களும் வெந்து நீறாகும்.

ஒருவரையும் ஒருவர்அறி யாம லுந்திரிந்து
     இருவினையின் இடர்கலியொடு ஆடி நொந்துநொந்து
     உலையில்இடு மெழுகு அதுஎன வாடி முன்செய்வஞ் ...... சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடும்
     கயிறுவிதம் எனமருவி ஆடி விண்பறிந்து
     ஒளிருமினல் உருஅதுஎன ஓடி அங்கம்வெந் ...... திடுவேனைக்

கருதி, ஒரு பரமபொருள் ஈது என்று, என்
     செவியிணையின் அருளி, உருவாகி வந்த என்
          கருவினையொடு அருமலமும் நீறு கண்டு,தண் ...... தருமாமென்

கருணைபொழி கமலமுகம் ஆறும், இந்துளந்
     தொடைமகுட முடியும்,ளிர் நூபுரமு சரண்
          கலகல என மயிலின்மிசை ஏறி வந்துஉகந்து ....எனை ஆள்வாய்.
                                                                                   --- திருப்புகழ்.
   
உன் தனது சிந்தை தாராய் ---

பொன்னைப் பற்றிய சிந்தை, பொருளைப் பற்றிய சிந்தை, மனை மக்கள் சுற்றம் எனும் மாயா மயக்கங்களைப் பற்றிய சிந்தை, இப்படி பல்வேறு சிந்தை கொண்டு திரிகின்ற ஆன்மாக்கள் அச் சிந்தைகளை ஒழித்து, சிவ சிந்தை செய்யவேண்டும்.

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற,
         கந்தனை அறிந்து அறிந்து, அறிவினல்
         சென்று செருகும் தடம் தெளிதர,     தணியாத
சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து, உரைஒழித்து,
         என்செயல் அழிந்து அழிந்து அழிய,மெய்ச்
         சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ..     ---  (அந்தகன்) திருப்புகழ்.

சிந்தை சிவமாக ஆனால் ஏனைய கருவிகள் கரணங்கள் யாவும் சிவமயமாக ஆகிவிடும்.

சிந்தனை நின்தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
     கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்
     மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்தனை, ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
     மால் அமுதப் பெரும் கடலே! மலையே! உன்னைத்
தந்தனை, செந் தாமரைக்காடு அனைய மேனித்
     தனிச்சுடரே! இரண்டும்இலி இத்தனிய னேற்கே.     ---  திருவாசகம்.

உலக சம்பந்தமான வீண் சிந்தை முழுதும் அற்ற பின் வாய்க்கும் சின்மயம் உற்றவர்க்கே இன்ப நிலை பொருந்தும்.

சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து சின்மயமா நின்அடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே.     --- தாயுமானார்.

சிந்தனை கழன்ற இடத்தில் நான் என்ற தன்மையும் அற்று விடுகின்றது.  நான் போன இடத்தில் இறைவன் கருணை பொழிகின்றனன்.

சிந்தனை போய், நான்எனல் போய், தேக்க இன்ப மாமழையை
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே.

சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்
எந்த வகையாலே எய்தும் பராபரமே.     --- தாயுமானார்.

சிந்தை அற்ற போது சீவன் செயல் அற்று விடுகின்றது. அங்கே நிகழ்வது எல்லாம் சிவன் செயலாக ஆகின்றது.  அந்த நிலையில் நின்றவர் கண்ணப்பர். அவருடைய செயல்கள் அனைத்தும் தன் செயல் என்றார் சிவபெருமான்.

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனிய ஆம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார்.    --- பெரியபுராணம்.

சிந்தையும் என்போலச் செயல் அற்று அடங்கிவிட்டால்
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே. 

சிந்தை மறந்து திருவருளாய் வாழ்பவர் பால்
வந்த பொருள் எம்மையும் தான் வாழ்விப்பது எந்நாளோ.    ---  தாயுமானார்.

அங்கியின் குணக் கோல் ---

அங்கியின் குணக்கோல் என்பது வேற்படை ஆகும்.  இமையவரும், இருடியரும், இயக்கரும் மாலும் அயனும் அஞ்சி நடுங்கி ஓடவும், அசுரர்கள் அடியடு எரிந்து ஒழியவும், வேலாயுதத்தை எந்தை கந்தவேள் ஏவி அருளினார்.

வேலாயுதம் அடியவருக்கு அருள் உருவாயும், கொடியவருக்கு அனல் உருவாயும் விளங்கும்.  சூரபன்மன் மேல் ஏவிய வேல் அக்கினி அண்டங்களில் உள்ள எல்லா அனல்களும், மண் மண்டலமாகிய ஆயிரகோடி அண்டங்களில் உள்ள அனல்களும் ஒருங்கு கூடி நின்றது என உலகெலாம் வெதும்ப அனல் வடிவாகச் சென்றது.  அங்கியின் வடிவாகச் சென்ற வேல், மடம் பிடித்த வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. மீட்டும் அவன் தொல் உருக் கொண்டு எதிர்க்க, அவனுடைய வச்சிர யாக்கையைப் பிளந்து திரும்பியது. அவ்வாறு திரும்பிய வேல், அங்கியின் வடிவத்தை நீக்கி, அருள் உருத் தாங்கி, வானவர் பொழியும் மலர் மழைக்கு இடையே சென்று,வான நதியில் ஆடி, எங்கள் பெருமானாகிய மந்தவேள் கரமலரில் அமர்ந்தது.

செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே ---

சிவபெருமானே செவ்வேள் பரமன் ஆக எழுந்தருளினார். தனக்குத் தானே மகன் ஆகி, தனக்குத் தானே குரு ஆகி, தனக்குத் தானே தலைவனும் ஆயினார். ஆதலினால், அம்பலவாணருக்குத் தம்பிரான் அறுமுகனார் என்று, சிவனிலும் சிறந்தவர் முருகர் என்று பேதம் கூறி இடர்ப்படாது ஒழிக. சிவனும் முருகனும் மணியும்ஒளியும் போல என்று அறிக.

கருத்துரை

வேலாயுதக் கடவுளே! வள்ளிதெய்வானை மகிணரே! அம்பலவாணரே! தோன்றி மறையும் அடியேன் முன் எழுந்தருளி வந்து, மெய்ச் சிந்தையைத் தந்து அருளுவீர்.

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...