அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காதைக் காதி
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
தீமையை விளைக்கும் பொதுமாதர் மயலில் இருந்து விடுபட்டு ஈடேற,
நன்னெறி காட்டி அருள் புரிவாய்.
தானத்
தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த ...... தனதான
காதைக்
காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு ...... மதியாதே
காரொத்
தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னீழற் கேத ருக்கி ...... விளையாடிச்
சேதித்
தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார்
தேமற்
பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய்
மாதைக்
காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே
வாரிக்
கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா
வீதித்
தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காதைக்
காதி மெத்த மோதி, கேள்வி அற்ற
காமப் பூசல் இட்டு ...... மதியாதே,
கார்
ஒத்து ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின்
நீழற்கே தருக்கி ...... விளையாடி,
சேதித்தே
கருத்தை, நேர் உற்றே, பெருத்த
சேல் ஒத்தே வருத்தும் ...... விழிமானார்,
தேமல்
பார வெற்பில் மூழ்கி, தாப மிக்க
தீமைக்கு ஆவி தப்ப ...... நெறிதாராய்.
மாதைக்
காதலித்து வேடக் கானகத்து
வாசத் தாள் சிவப்ப ...... வருவோனே!
வாரிக்கே
ஒளித்த மாயச் சூரை வெட்டி,
மாளப் போர் தொலைத்த ...... வடிவேலா!
வீதித்
தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன்
வீரத் தேர் மறைத்த ...... புலியூர்வாழ்
மேலைக் கோபுரத்து மேவி, கேள்வி மிக்க
வேதத்தோர் துதித்த ...... பெருமாளே.
பதவுரை
மாதைக் காதலித்து --- வள்ளி
பிராட்டியார் மீது காதல் கொண்டு,
வேடக் கானகத்து --- வேடர்கள்
வாழுகின்ற கானகத்தில்,
வாசத் தாள் சிவப்ப வருவோனே --- நறுமணம்
வீசும் திருவடிகள் சிவக்க நடந்து வந்தவரே!
வாரிக்கே ஒளித்த
மாயச் சூரை வெட்டி மாள --- கடலிலே சென்று ஒளிந்த, மாயையில்
வல்லவனான சூரபன்மன் உடலைப் பிளந்து மாளும்படி
போர் தொலைத்த வடிவேலா --- போர் புரிந்த
கூரிய வேலாயுதத்தை
உடையவரே!
வீதித் தேர் நடத்து
தூள் அத்தால்
--- வீதியில் தேர்கள் செல்லுவதால் எழும் தூசிப் படலத்திலே
அருக்கன் வீரத் தேர் மறைத்த புலியூர் வாழ்
--- சூரியனுடைய வீரத் தேரும் மறைந்து போகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும்
சிதம்பரத்தில் விளங்குகின்ற திருக்கோயிலின்
மேலைக் கோபுரத்து
மேவி
--- மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து,
கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே
--- கேள்வி ஞானம் மிக்க வேதியர்கள் துதிக்கின்ற பெருமையில் சிறந்தவரே!
காதைக் காதி மெத்த மோதி --- காதை வெட்டுவது
போல வேகமாக மோதி,
கேள்வி அற்ற காமப் பூசல் இட்டு --- கேட்டறியாத
காமப் போரை விளைவித்து,
மதியாதே --- அந்தக் காம மயக்கத்தால் யாரையும்
மதிக்காமல்,
கார் ஒத்த ஏய் நிறத்த
ஓதிக் காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி --- மேகத்தை ஒத்த கருநிறத்தை
உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி,
கருத்தை சேதித்தே --- கருத்து அழிந்து,
நேர்உற்றே பெருத்த --- அகன்று,
சேல் ஒத்தே --- சேல் மீனை ஒத்து,
வருத்தும் விழி மானார் --- காண்போரை
வருத்துகின்ற, மான் போன்ற
விலைமாதர்களின்,
தேமல் பார வெற்பில்
மூழ்கி
--- தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற தனபாரங்களிலே மூழ்கி,
தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி
தாராய் --- தீமையை விளைவிக்கும் காம வேட்கைக்குத் தப்பி, அடியேனுடைய உயிர் ஈடேறும்படியான நல்வழியைத்
தந்தருளுக.
பொழிப்புரை
வள்ளி பிராட்டியார் மீது காதல் கொண்டு, வேடர்கள் வாழுகின்ற கானகத்தில், நறுமணம் வீசும் திருவடிகள் சிவக்க நடந்து
வந்தவரே!
கடலிலே சென்று ஒளிந்த, மாயையில்
வல்லவனான சூரபன்மன் உடலைப் பிளந்து மாளும்படி போர் புரிந்த கூரிய வேலாயுதத்தை உடையவரே!
வீதியில் தேர்கள் செல்லுவதால் எழும் தூசிப்
படலத்திலே சூரியனுடைய வீரத்தேரும் மறைந்து போகின்ற பெரும்பற்றப்புலியூர் என்னும்
சிதம்பரத்தில் விளங்குகின்ற திருக்கோயிலின் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க வேதியர்கள்
துதிக்கின்ற பெருமையில் சிறந்தவரே!
காதை வெட்டுவது போல வேகமாக மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, அந்தக் காம மயக்கத்தால்
யாரையும் மதிக்காமல், மேகத்தை ஒத்த கருத்த நிறத்தை
உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, கருத்து அழிந்து, அகன்று, சேல் மீனை ஒத்து, காண்போரை வருத்துகின்ற, மான் போன்ற விலைமாதர்களின், தேமல் படர்ந்துள்ள
கனத்த மலை போன்ற தனபாரங்களிலே மூழ்கி,
தீமையை
விளைவிக்கும் காம வேட்கைக்குத் தப்பி,
அடியேனுடைய உயிர் ஈடேறும்படியான நல்வழியைத் தந்து அருளுக.
No comments:
Post a Comment