நோய்க்கு இடம் தருபவை
30. நோய்க்கு வழிகள்

கல்லினால், மயிரினால், மீதூண் விரும்பலால்,
     கருதிய விசாரத்தினால்,
கடுவழி நடக்கையால், மலசலம் அடக்கையால்,
     கனிபழங் கறிஉண்ணலால்,

நெல்லினால், உமியினால், உண்டபின் மூழ்கலால்,
     நித்திரைகள் இல்லாமையால்,
நீர்பகையி னால்,பனிக் காற்றின்உடல் நோதலால்,
     நீடுசரு கிலையூறலால்,

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்,
     வீழ்மலம் சிக்குகையினால்,
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்,
     மெய்வாட வேலைசெயலால்,

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்,
     வன்பிணிக் கிடமென்பர்காண்.
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     கல்லினால் மயிரினால் --- உணவிலே கல்லும் மயிரும் கலந்திருப்பதாலும்,

     மீதூண் விரும்பலால் -- உணவை விரும்பி மிகுதியாக உண்பதாலும்,

     கருதிய விசாரத்தினால் --- உள்ளத்தை வருத்தும் கவலையினாலும்,

     கடு வழி நடக்கையால் --- வெகு தூரம் நடப்பதனாலும்.

     மல சலம் அடக்கையால் --- மலத்தையும், சிறுநீரையும் அடக்குவதாலும்,

      கனி, பழம் கறி உண்ணலால் - மிகவும் கனிந்த பழங்களையும், முன்பு செய்து வைத்த கறிகளையும் உண்பதாலும்,

     நெல்லினால் உமியினால் --- உணவில் நெல்லும் உமியும் சேர்ந்து இருப்பதாலும்,

     உண்ட பின் மூழ்கலால் --- உணவு உண்ட பின்னர் குளிப்பதாலும்,

     நித்திரைகள் இல்லாமையால் --- உறக்கம் கெடுவதாலும்,

     நீர் பகையினால் --- தன் உடம்புக்கு ஒவ்வாத நீரிலே குளிப்பதாலும், சுத்தம் இல்லாத நீரைக் குடிப்பதாலும்,

     பனிக் காற்றின் உடல் நோதலால் --- பனிக் காலத்திலே வீசும் காற்று உடம்பை வருத்துவதாலும்,

     நீடு சருகு இலை ஊறலால் --- சருகும் இலையும் நீண்டநாள் ஊறிக் கிடக்கும் நீரைக் குடிப்பதாலும்,

     மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் --- மென்மைத்தன்மை உடைய பெண்களின் புணர்ச்சியை மிகவும் விரும்பி அனுபவிப்பதாலும்,

     வீழ் மலம் சிக்குகையினால் --- மலமானது கழியாமல் சிக்குவதாலும்,

     மிகு சுமை எடுத்தலால் --- பெரும் சுமையை எடுப்பதாலும்,

     இள வெயில் காய்தலால் --- காலை வெயிலில் உடம்பு காய்வதாலும்,

     மெய் வாட வேலை செயலால் --- உடல் வாட்டம் உறும்படி வேலைகளைச் செய்வதாலும்,

     வல் இரவிலே தயிர், கள், சருகு ஆதி உண்ணலால் ---இரவிலே தயிரையும் கள்ளையும் கீரைக் கறிகளையும் உண்பதாலும்,

     வன் பிணிக்கு இடம் என்பர் --- கொடிய நோய்க்கு இடம் உண்டாகும் என்பார்கள்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...