சிதம்பரம் - 0600. அத்தன் அன்னை
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அத்தன் அன்னை (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பிறவித் துன்பம் நீங்க அருள்.


தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான


அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி

அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல ...... படிபாடி

முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள ...... முணராதே

முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும்

பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வர் ...... உடன்ஆகி,

அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்
     அற்று, நின்னை வல்ல ...... படிபாடி,

முத்தன் என்ன, வல்லை அத்தன் என்ன, வள்ளி
     முத்தன்என்ன உள்ளம் ...... உணராதே,

முட்ட வெண்மை உள்ள பட்டன், எண்மை கொள்ளு
     முட்டன் இங்ஙன் நைவது ...... ஒழியாதோ?

தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணின் உள்,
     உதித்து மன்னு பிள்ளை ...... முருகோனே?

சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய!
     சித்ர வண்ண வல்லி ...... அலர்சூடும்

பத்தர் உண்மை சொல்உள் உற்ற செம்மல்! வெள்
     இபத்தர் கன்னி புல்லும் ...... மணிமார்பா!

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

பதவுரை

      தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் --- தித்தி என்னும் தாள ஒலிக்கு ஏற்ப தில்லையில் திருநடனம் புரிகின்ற சிவபெருமானுடைய

     கண்ணின் உள் உதித்து மன்னு --- திருக்கண்களினின்றும் தோன்றி நிலைபெற்றுள்ள

     பிள்ளை முருகோனே --- இளைய பிள்ளையாராகிய முருகப் பெருமானே!

      சித்தி மன்னு --- பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும்

     செய்ய சத்தி துன்னும் கைய --- வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தினை உடையவரே!

       சித்ர வண்ண அல்லி அலர் சூடும் --- அழகிய அல்லி மலர்களைத் திருவடியில் சூட்டிப் பணியும்,

     பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் --- பக்தர்களுடைய மெய்மை பொருந்திய வாக்கில் விளங்கும் செம்மலே!

         வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா --- வெள்ளை யானையை உடைய இந்திரனின் பெண்ணாகிய தேவயானை அம்மையார் தழுவும் திருமார்பினரே!

         பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே --- பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்து,  பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமையில் மிக்கவரே!

      அத்தன் அன்னை இல்லம் ---  தந்தை, தாய், வீடு,

     வைத்த சொன்னம் வெள்ளி  --- வைத்துள்ள பொன், வெள்ளி,

     அத்தை நண்ணு செல்வர் உடனாகி --- தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய்,

      அத்து பண்ணு கல்வி --- பொருட் செல்வம், கல்விச் செல்வம்

     சுற்றம் என்னும் அல்லல் அற்று --- உறவினர் என்று சொல்லப்படும் அல்லல் தருகின்றவற்றில் இருந்து நீங்கி,

     நின்னை வல்லபடி பாடி -- தேவரீருடைய திருவருட் புகழை ஏற்ற வகையினால் பாடி வழிபட,

      முத்தன் என்ன --- முத்திச்செல்வத்தை அருள்பவர்,

     வல்லை அத்தன் என்ன --- திருவல்லம் என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு விளங்குபவர்,

     வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே --- வள்ளிநாயகிக்கு என்றும் அன்பு உடையவர் என்று தேவரீரை அடியேனது உள்ளத்தில் உணராமல்,

      முட்ட வெண்மை உள்ள பட்டன் --- முழுதும் அறியாமை உள்ள புலவன்,

     எண்மை கொள்ளும் முட்டன் --- தாழ்மை நிறைந்தவன்,

     இங்ஙன் நைவது ஒழியாதோ --- ஆகிய அடியேன் இந்த உலகில் நைவது நீங்காதோ?

பொழிப்புரை


         தித்தி என்னும் தாள ஒலிக்கு ஏற்ப தில்லையில் திருநடனம் புரிகின்ற சிவபெருமானுடைய திருக்கண்களினின்றும் தோன்றி நிலைபெற்றுள்ள இளைய பிள்ளையாராகிய முருகப் பெருமானே!

     பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தினை உடையவரே!

     அழகிய அல்லி மலர்களைத் திருவடியில் சூட்டிப் பணியும், பக்தர்களுடைய மெய்மை பொருந்திய வாக்கில் விளங்கும் செம்மலே!

         வெள்ளை யானையை உடைய இந்திரனின் பெண்ணாகிய தேவயானை அம்மையார் தழுவும் திருமார்பினரே!

     பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்து,  பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமையில் மிக்கவரே!

         தந்தை, தாய், வீடு, சேர்த்து வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், பொருட் செல்வம், கல்விச் செல்வம் உறவினர் என்று சொல்லப்படும் அல்லல் தருகின்றவற்றில் இருந்து நீங்கி,  தேவரீருடைய திருவருட் புகழை ஏற்ற வகையினால் பாடி வழிபட, முத்திச் செல்வத்தை அருள்பவர், திருவல்லம் என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு விளங்குபவர், வள்ளிநாயகிக்கு என்றும் அன்பு உடையவர் என்று தேவரீரை அடியேனது உள்ளத்தில் உணராமல், முழுதும் அறியாமை உள்ள புலவன், தாழ்மை நிறைந்தவன் ஆகிய அடியேன் இந்த உலகில் நைவது நீங்காதோ?


விரிவுரை

அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடன் ஆகி, அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் ---

தந்தை, தாய், மனைவி, மக்கள் மற்றும் உள்ள சுற்றம் ஆகிய எல்லாமும் உயிர்களின் வல்வினை தீவினைக்கு ஏற்ப வருபவையே.  அவை என்றும் நிலைத்து இருப்பவையும் அல்ல.  நிலையான இன்பத்தைத் தருபவையும் அல்ல. அல்லலுக்கு இடமானவையே ஆகும்.

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுஉள சுற்றம் என்னும்
வினைஉளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சி னீரே.    --- அப்பர்.

உலகபசு பாச தொந்தம் ...... அதுவான
     உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லம்அதால்என்
     மதிநிலைகெ டாமல் உன்தன் ...... அருள்தாராய்.      --- திருப்புகழ்.

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய்ஏய் பூம்பொழில் சூழ் விரைஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
                                                                   ---திருமங்கை ஆழ்வார்.

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை?
தினையா மளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

மாடு உண்டு; கன்று உண்டு; மக்கள்உண்டு என்று மகிழ்வது எல்லாம்,
கேடு உண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடு உண்டு; கந்தை உண்டு, உள்ளே எழுத்து ஐந்தும் ஓத உண்டு,
தோடு உண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே!     --- பட்டினத்தார்.

செல்வமும் அல்லலையே தரும் என்பதால், மணிவாசகப் பெருமான், "செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்" என்றார்.

கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால்,
ஏதிலான் துய்க்கப்படும்.
         
ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்; காத்த
குறைபடின், துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு
உறைபதி, மற்றைப் பொருள்.                       --- நாலடியார்.

"கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றார் மணிவாசகப் பெருமான். கல்வியும் அல்லலைத் தரும் என்பதால்.

நின்னை வல்லபடி பாடி ---

இறைவனுடைய திருப்புகழை இயன்ற வகையில் உளமாரப் பாடி வழிபடுதல் வேண்டும்.

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியை
சிந்தை செய்ம்மின் அடியர் ஆயினீர்,
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.        ---  திருஞானசம்பந்தர்.

நல்ல புனல் புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே.     ---  திருஞானசம்பந்தர்.

வல்லை அத்தன் என்ன ---

வல்லை - திருவல்லம். திருவல்லம் என்னும் திருத்தலத்தில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள தலைவன்.  

திருவல்லம், தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நல் நாட்டில் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.  அருணகிரி நாதர் திருப்புகழ் பெற்றது.

கருத்துரை

முருகா! பிறவித் துன்பம் நீங்க அருள்.No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...