சிதம்பரம் - 0610. கங்குலின் குழல்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கங்குலின் குழல் (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
வேசையருக்கு ஊழியம் செய்யும் இழிவு தீர அருள்.


தந்த தந்தனத் தான தந்தன
     தந்த தந்தனத் தான தந்தன
          தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான


கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
     மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
          கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ......செம்பொனாரம்

கந்த ரந்தரித் தாடு கொங்கைக
     ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
          கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல

அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
     குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
          அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும்

அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
     அங்கை பொன்பறிக் கார பெண்களொ
          டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ.....தென்றுபோமோ

சங்கு பொன்தவிற் காள முந்துரி
     யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
          சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம்

சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
     இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
          தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச்

செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
     அந்த கன்புரத் தேற வஞ்சகர்
          செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே

திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
     கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
          செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கங்குலின் குழல் கார், முகம் சசி,
     மஞ்சளின் புயத்தார், சரம்பெறு
          கண்கள், கொந்தளக் காது, கொஞ்சுக ......செம்பொன்ஆரம்

கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள்,
     உம்பலின் குவட்டு ஆம் எனுங்கிரி,
          கந்தமும், சிறுத் தேமலும் பட, ...... சம்பை போல

அங்கு அமைந்த இடை, பாளிதம் கொடு
     குந்தியின் குறைக் கால் மறைந்திட,
          அண் சிலம்பு ஒலி, பாடகம் சரி ...... கொஞ்ச மேவும்,

அஞ்சுகம் குயில் பூவையின் குரல்
     அங்கை பொன் பறிக்கார பெண்களொடு
          அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது.....என்று போமோ?

சங்கு பொன் தவில் காளமும் துரி-
     யங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட,
          சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட, ...... அண்டகோசம்

சந்திரன் பதத்தோர் வணங்கிட,
     இந்திரன் குலத்தார் பொழிந்திட,
          தந்திரம் புயத்தார் புகழ்ந்திட, ...... வந்தசூரைச்

செங்கையும் சிரத்தோடு பங்குஎழ,
     அந்தகன் புரத்து ஏற, வஞ்சகர்
          செஞ்சரம் தொடுத்தே நடம் புரி ...... கந்தவேளே!

திங்கள் ஒண்முகக் காமர் கொண்ட வன்
     கொங்கை மென்குறப் பாவைழும் கொடு
          செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் ......தம்பிரானே.


பதவுரை

         சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமிக் காடு அதிர்ந்திட --- சங்கு, அழகிய தவில், ஊது கொம்பு, முரசப் பறைகள், பேரிகை என்ற வாத்தியங்கள் கூட்டமாகப் பேரொலி செய்யவும்,

     சந்த செம் தமிழ்ப் பாணர் கொஞ்சிட --- அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அன்புடன் பாடவும்,

      அண்ட கோசம் --- அண்ட கடாகத்தில் வாழ்பவரும்,

     சந்திரன் பதத்தோர் வணங்கிட ---  சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும்,

     இந்திரன் குலத்தார் பொழிந்திட --- இந்திராதி தேவர்கள் பூமாரி பொழியவும்,

     தந்திரம் புயத்தார் புகழ்ந்திட --- யாழ் ஏந்தும் தோள்களை உடைய கந்தருவர்கள் போற்றவும், 

      வந்த சூரை --- எதிர்த்து வந்த சூராதி அவுணர்களின்

     செம் கையும் சிரத்தோடு பங்கு எழ --- செவ்விய கைகள் தலையுடன் துண்டாகும்படி

     வஞ்சகர் அந்தகன் புரத்து ஏற செம் சரம் தொடுத்தே --- வஞ்சகராகிய அசுரரர்கள் யமனுலகுக்குப் போய்ச் சேரும்படி சிறந்த சரத்தைச் செலுத்தி

     நடம் புரி கந்தவேளே --- நடனமாடிய கந்தக் கடவுளே! 

      திங்கள் ஒண் முகக் காமர் கொண்ட வன் கொங்கை மென் குறப் பாவையும் கொடு --- சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஒளியை உடைய திருமுகமும்,  அழகும் உடையவளும்,  மார்பகங்களையும் மென்மை வாய்ந்தவளுமாகிய குறமகளாகிய வள்ளிப்பிராட்டியுடன்

     செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே --- அழகிய பொன்னம்பலத்தில் விளங்கி அருள் புரியும் தனிப்பெரும் தலைவரே!

      கங்குலின் கார் குழல் --- இருண்ட மேகம் போன்று கறுத்த கூந்தல்,

     முகம் சசி --- சந்திரனைப் போன் முகம்,

     மஞ்சளின் புயத்தார் --- மஞ்சள் விளங்கும் கைகள்,

     சரம் பெறு கண்கள் --- அமுபைப் போலும் கூரிய கண்கள்,

     கொந்தளக் காது கொஞ்சுக --- தலை மயிற் சுருள் தவழும் காதுகள்,

      செம் பொன் ஆரம் கந்தரம் தரித்து --- செம்பொன்னால் ஆன மாலைகளை அணிந்த கழுத்து,

     உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி கந்தமும் சிறு தேமலும் பட ஆடு கொங்கைகள் --- யானைக் கொம்பு போல் திரட்சி கொண்டதாகவும், மலையைப் போன்று உயர்ந்தும், அகில் நறு மணமும் சிறிய தேமலும் கொண்டு அசைந்தாடும் மார்பகங்கள்,

     சம்பை போல அங்கு அமைந்த இடை --- மின்னல் போல  அமையப் பெற்றுள்ள இடை,

         பாளிதம் கொடு குந்தியின் குறைக் கால் மறைந்திட --- பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து,

     அண் சிலம்பு ஒலிப் பாடகம் சரி கொஞ்ச மேவும் --- அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் ஒத்துக ஒலிக்க உள்ளவர்களாய்,

      அஞ்சுகம் குயில் பூவையின் குரல் --- கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலைக் கொண்டவர்களாய்,

     அம் கை பொன் பறிக்கார பெண்கள் ஓடு அண்டி --- அழகிய கையில் பொன்னைப் பறிக்கின்ற கொள்ளைக்காரர் போன்ற விலைமாதருடன் நெருங்கி,

      மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ --- அந்த வேசிகளுக்கு ஊழியம் செய்வது என்றைக்குத் தொலையுமோ?

பொழிப்புரை

         சங்கு, அழகிய தவில், ஊது கொம்பு, முரசப் பறைகள், பேரிகை என்ற வாத்தியங்கள் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்கவும், அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அன்புடன் பாடவும், அண்ட கடாகத்தில் வாழ்பவரும்,  சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், இந்திராதி தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் தோள்களை உடைய கந்தருவர்கள் போற்றவும்,  எதிர்த்து வந்த சூரனின் செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தக் கடவுளே! 

         சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஒளியை உடைய திருமுகமும்,  அழகும் உடையவளும்,  மார்பகங்களையும் மென்மை வாய்ந்தவளுமாகிய குறமகளாகிய வள்ளிப்பிராட்டியுடன் செம்பொன்னால் ஆகிய சபையில் மேம்பட்டு விளங்கி அருள் புரியும் தனிப்பெரும் தலைவரே!

         இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள், யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் ஒத்துக ஒலிக்க உள்ளவர்களாய்,  கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலைக் கொண்டவர்களாய்,  அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற கொள்ளைக்காரர் போன்ற விலைமாதருடன் நெருங்கி, அந்த வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ?


விரிவுரை

இத் திருப்புகழின் முதற்பகுதி விலைமகளிரின் தன்மையை விரித்துரைக்கின்றது.

மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ ---

மண்டையர் - வேசையர். இறைவனுக்கும் இறைவனுடைய அடியார்க்கும் ஏவல் செய்யாது, பொதுமகளிர் வசமாகி, அவர்கள் இட்ட ஏவலைச் செய்து மாந்தர் கெடுகின்றார்கள்.  இந்த அவலம் போகவேண்டும் என்று முருகனிடம் முறையிடுகின்றார்.

மாதர் இட்ட தொழில்
தனில்உழலும் அசடனை உன்அடியே வழுத்த அருள்வாயே...
                                                               --- (குமரகுருபரமுருக) திருப்புகழ்.

துரியங்கள் ---

தூரியம் என்ற சொல் குறுகி துரியம் என வந்தது.  தூரியம் - முரசப் பறை. 

முருகப் பெருமான் சூரபன்மனுடன் போர் புரிந்தபோது சங்கு, தவில், காளம், தூரியம், பேரிகை முதலிய வாத்தியங்கள் எண் திசைகளும் அதிர்ச்சி அடையுமாறு முழக்கம் செய்தன.

சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ---

பாணர் - இசைபாடும் மரபினர்கள்.  இவர்கள் அழகிய தமிழ்ப்பாடல்களால் முருகனைப் புகழ்ந்து பாடினார்கள்.

தந்திரம் புயத்தார் ---

தந்திரம் - யாழ் நரம்பு. இது ஆகுபெயராக யாழை உணர்த்தியது.  யாழ் ஏந்திய கரத்தினராகிய கந்தருவர்கள் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடினார்கள்.

செஞ்சரம் தொடுத்தே நடம்புரி கந்தவேளே ---

சூரபன்மனை வதைத்தவுடன் முருகவேள் ஆடிய கூத்து துடிக்கூத்து.  அசுரர் படைகள் அனைத்தையும் வென்ற பின் முருகவேள் குடையைத் தாழ்த்து ஆடிய கூத்து குடைக்கூத்து.  இத வீரத்தைக் குறிக்கும் வீரநடனம் ஆகும்.

கருத்துரை

அம்பலத்தமர்ந்த அண்ணலே, இருமனப் பெண்டிருக்கு ஏவல் செய்யும் இழிவுடைமை தீர இன்னருள் செய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...