திருவண்ணாமலை - 0593. விரகொடு வளை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விரகொடு வளை (திருவருணை)

திருவருணை முருகா!
மரணம் வருமுன், உன் சரணம் தொழ அருள்

தனதன தனனம் தனதன தனனம்
     தனதன தனனம் ...... தனதான

விரகொடு வளைசங் கடமது தருவெம்
     பிணிகொடு விழிவெங் ...... கனல்போல

வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
     றெனவிதி வழிவந் ...... திடுபோதிற்

கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
     கையருற வினர்கண் ...... புனல்பாயுங்

கலகமும் வருமுன் குலவினை களையுங்
     கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே

பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
     படவர வணைகண் ...... டுயில்மாலம்

பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
     பயமற விடமுண் ...... டெருதேறி

அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
     கையுமுற அனலங் ...... கையில்மேவ

அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
     கருணையில் மருவும் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


விரகொடு வளை சங்கடம் அது தரு வெம்
     பிணிகொடு, விழி வெங் ...... கனல்போல,

வெறிகொடு, சமன் நின்று உயிர்கொளும் நெறி, இன்று
     என, விதி வழி வந்து ...... இடுபோதில்,

கரவடம் அது பொங்கிடு மனமொடு, மங்-
     கையர், றவினர் கண் ...... புனல்பாயும்

கலகமும் வருமுன், குலவினை களையும்
     கழல் தொழும் இயல் தந்து ...... அருள்வாயே.

பரவிடும் அவர் சிந்தையர், விடம் உமிழும்
     பட அரவு அணை கண் ...... துயில்மால், ம்

பழமறை மொழி பங்கயன் இமையவர் தம்
     பயம் அற, விடம் உண்டு, ...... எருது ஏறி,

அரவொடு மதியம் பொதி சடைமிசை கங்-
     கையும் உற, அனல் அம் ...... கையில்மேவ,

அரிவையும் ஒருபங்கு இடம் உடையவர் தங்கு
     அருணையில் மருவும் ...... பெருமாளே.


பதவுரை


       பரவிடும் அவர் சிந்தையர் --- தம்மைப் போற்றித் துதிக்கின்ற அடியார்களின் உள்ளத்தில் உறைபவரும்,

     விடம் உமிழும் பட அரவு அணைகண் துயில் மால் --- நஞ்சைக் கக்குகின்ற படத்தை உடைய பாம்புப் படுக்கையில் யோக நித்திரை கொள்பவருமாகிய திருமால், 

     அம் பழமறை மொழி பங்கயன் --- அழகிய பழைய வேதத்தைச் சொல்லும், தாமரையில் இருக்கும் பிரமனும்,

     இமையவர் தம் பயம் அற விடம் உண்டு --- தேவர்களும் தமது அச்சம் நீங்கி உய்யுமாறு ஆலகால விடத்தை உண்டு,

     எருது ஏறி --- விடையின் மீது ஏறி, 

     அரவொடு மதியம் பொதி சடைமிசை கங்கையும் உற --– பாம்புடனே சந்திரனும் சேர்ந்துள்ள சடையின் மீது கங்கா நதியும் பொருந்த,

     அனல் அம் கையில் மேவ --– நெருப்பானது அழகிய திருக்கையில் விளங்க, 

     அரிவையும் ஒரு பங்கு இடம் உடையவர் தங்கு அருணையில் மருவும் பெருமாளே ---- பார்வதி தேவியை இடப்புறத்தில் கொண்டவராகிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு --- சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தரக்கூடிய கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு,

     விழி வெங்கனல் போல --– கண்கள் கொடிய நெருப்புப் போல, 

     வெறி கொடு --- கோபத்துடனே, 

     சமன் நின்று --- இயமன் என் முன் நின்று,

     உயிர் கொளும் நெறி இன்று என –-- உயிரைக் கொள்ள வேண்டிய முறைநாள் இன்று எனத் தேர்ந்து,

     விதி வழி வந்திடு போதில் --- விதியின் ஏற்பாட்டின்படி வந்து சேரும் அந்தச் சமயத்தில்,

     கரவடம் அது பொங்கிடு மனமொடு --- வஞ்சகம் மிகுந்த மனத்துடனே, 

     மங்கையர் உறவினர் கண் புனல் பாயும் --- மாதர்கள், சுற்றத்தார்கள் கண்களில் அழுகை நீர் பாய்கின்ற,

     கலகமும் வருமுன் --- குழப்பம் வருவதற்கு முன்னரே, 

     குலவினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே --- கூட்டமான வினைகளைக் களைகின்ற உமது திருவடியைத் தொழுகின்ற ஒழுக்கத்தைத் தந்து அருள் புரிவீராக.


பொழிப்புரை


         தம்மைப் போற்றித் துதிக்கின்ற அடியார்களின் உள்ளத்தில் உறைபவரும்,  நஞ்சைக் கக்குகின்ற படத்தை உடைய பாம்புப் படுக்கையில் யோக நித்திரை கொள்பவருமாகிய திருமாலும், அழகிய பழைய வேதத்தைச் சொல்லும், தாமரையில் இருக்கும் பிரமனும்,  தேவர்களும் தமது அச்சம் நீங்கி உய்யுமாறு ஆலகால விடத்தை உண்டு, விடையின் மீது ஏறி, பாம்புடனே சந்திரனும் சேர்ந்துள்ள சடையின் மீது கங்கா நதியும் பொருந்த, நெருப்பானது அழகிய திருக்கையில் விளங்க,  பார்வதி தேவியை இடப்புறத்தில் கொண்டவராகிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

          சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தரக்கூடிய கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு, கண்கள் கொடிய நெருப்புப் போல,  கோபத்துடனே, இயமன் என் முன் நின்று, உயிரைக் கொள்ள வேண்டிய முறைநாள் இன்று எனத் தேர்ந்து, விதியின் ஏற்பாட்டின்படி வந்து சேரும் அந்தச் சமயத்தில், வஞ்சகம் மிகுந்த மனத்துடனே,   மாதர்கள், சுற்றத்தார்கள் கண்களில் அழுகை நீர் பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்னரே, கூட்டமான வினைகளைக் களைகின்ற உமது திருவடியைத் தொழுகின்ற ஒழுக்கத்தைத் தந்து அருள் புரிவீராக.


விரிவுரை


விரகொடு வளை ---

இயமன் அல்லது அவனுடைய தூதர்கள் மிகுந்த சாமர்த்தியமாக வந்து வளைத்துக் கொள்வார்கள். தப்பித்துக் கொள்ளாதபடி சூழ்ந்து கொள்வார்கள்.



சங்கடம் அது தரு வெம்பிணி கொடு ---

பிணி - பாசக் கயிறு.  யமன் கையில் உயிர்களைப் பற்றுகின்ற கயிறு இருக்கும்.  அது மிகுந்த துன்பத்தைத் தருவது.


விழி வெங்கனல் போல ---

ஆன்மாக்கள் பாம் செய்ததனால், கோபத்துடன் வரும் இயமனுடைய கண்கள் நெருப்பைப் போல் இருக்கும்.

சமன் நின்று ---

சமன் - யமன்.  பெரியோர், சிறியோர், கற்றவர், கல்லாதவர், அரசர், ஆண்டி, மணமகன், முதியோர் என்ற வேற்றுமை பாராமல் எல்லோரையும் ஆயுள் முடிந்தவுடன் ஒன்றுபோல் பார்ப்பதனால் சமன் என்று பேர் பெற்றான்.  சமமாகக் கருதுகின்றவன்.

உயிர்கொளு நெறி இன்று என விதிவழி வந்திடு போதில் ---

ஒவ்வொரு உயிருக்கும் பிறக்கும்போதே இறக்கும் நாள் இது என்று விதிக்கப்படுகின்றது.  அதை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது.  புகை வண்டியில் ஏறுமுன்னரேயே இறங்கும் நிலையம் இது என்று உறுதிச்சீட்டுப் பெறுவதைக் காண்க.  முன்னரே உறுதி செய்த விதிப்படி மரணம் வரும்.

அந்தக் காலத்தில் எல்லோரும் சுற்றி நின்று அழுவார்கள்.  இயமனுடன் வாதிட்டு உயிரை மீட்பார் ஒருவரும் இல்லை.  மரண காலத்தில் துணை செய்வோர் யார்?

யாவரே இருந்தும் யாவரே வாழ்ந்தும்
     யாவரே எமக்கு உறவாகியும்
தேவரீர் அல்லால் திருவுளம் அறியத்
     திசைமுகம் எனக்கு வேறுளதோ?
பாஒலான் ஒருவன் சொல்தமிழ்க்கு இரங்கி,
     பரவையார் ஊடலை மாற்ற,
ஏவல் ஆ ள் ஆகி, இரவு எலாம் உழன்ற,
     இறைவனே! ஏக நாயகனே!           ---  பட்டினத்தார்.


     .....           .....           சொல் ஆவி

ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே - ஈன்றோர்கள்

நொந்தால் உடன் நின்று நோவார், வினைப் பகைதான்
வந்தால், அதுநீக்க வல்லாரோ? - வந்து ஆடல்

உற்ற சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார், தென்திசைவாழ்
மற்றவன் வந்தால் தடுக்க வல்லாரோ? - சிற்றுஉணவை

ஈங்கு என்றால் வாங்கி இடுவார், அருள் அமுதம்
வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ? - தீங்கு அகற்றத்

தூண்டா மனை ஆதிச் சுற்றம் எலாம் சுற்றியிட
நீண்டாய், அவர் நல்நெறித் துணையோ? - மாண்டார்பின்

கூடி அழத் துணையாய்க் கூடுவார், வல் நரகில்
வாடி அழும் போது வருவாரோ? - நீடிய நீ

இச் சீவர் தன்துணையோ? ஈங்கு இவர்கள் நின்துணையோ?
சீச்சீ இது என்ன திறம் கண்டாய், - இச் சீவர்

நின்னை வைத்து முன் சென்றால் நீசெய்வது என்?அவர் முன்
இந்நிலத்தில் நீ சென்றால் என் செய்வர்? - நின் இயல்பின்

எத்தனைதாய்? எத்தனைபேர்? எத்தனை ஊர்? எத்தனைவாழ்வு?
எத்தனையோ தேகம் எடுத்தனையே, - அத்தனைக்கும்

அவ்வவ் இடங்கள்தொறும் அவ் அவரை ஆண்டு ஆண்டு,இங்கு
எவ் எவ்விதத்தால் இழந்தனையோ? - அவ்விதத்தில்

ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல், வரை
இன்றே துறத்தற்கு இசையாயோ? - நின்று ஓரில்

தாய் யார்? மனை யார்? தனயர் ஆர்? தம்மவர் ஆர்?
நீ யார்? இதனை நினைந்திலையே, - சேய் ஏகில்                

ஏங்குவரே என்றாய், இயமன்வரின் நின் உயிரை
வாங்கி முடி இட்டு அகத்தில் வைப்பாரோ? - நீங்கி இவண்

உன்தந்தை தன்தனக்கு இங்கு ஒர் தந்தை நாடுவன், நீ
என்தந்தை என்று உரைப்பது எவ்வாறே? - சென்றுபின்னின்

தன் மனையாள் மற்று ஒருவன் தன்மனையாள் ஆவள் எனில்,
என் மனையாள் என்பது நீ எவ்வணமே? - நன்மைபெறும்

நட்பு அமைந்த நன்னெறி நீ நாடா வகை தடுக்கும்
உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே, - நட்பு உடையாய்

எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்தது நீ என் நினைந்தோ? - வம்மாறில்

எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால், மற்றையவர்
தம் பந்தம் எவ்வாறு தங்கியதே......           --- திருவருட்பா.

கரவடம் அது பொங்கிடும் மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாய ---

ஒருவன் மரணப் படுக்கையில் தவிக்கும்போது அவனுடைய மனைவிமார்கள் எதனை எதனைத் தமக்குச் சொத்தாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வஞ்சனை மிகுந்த மனத்துடன் அழுவார்கள். உயர்ந்த அணிகலன்களையும் நாணயங்களையும் அப்புறப்படுத்துவார்கள். சுற்றத்தாரும் சுற்றி நின்று அழுவார்கள்.

கலகம் வருமுன் ---

இத்தகைய குழப்பம் வருமுன் இறைவனுடைய திருவடியைத் தொழுது மரண பயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குலவினை களையும் கழல் ---

குலம் - கூட்டம்.  வினையால் இந்த உடம்பு வருகின்றது.  எடுத்த உடம்பால் இன்னும் பல பிறவி எடுக்கக்கூடிய வினைகளைத் தேடிக் கொள்ளுகின்றோம்.

விதையால் மரம் முளைக்கின்றது. மரம் பல விதைகளை உண்டுபண்ணும். அது போல.

இப்படிப் பலகாலமாக வினைகளை ஈட்டிப் பிறப்பதும் இறப்பதும் ஆக உயிர்களாகிய நாம் உழல்கின்றோம்.  பிறவிப் பெரும் சுழல் தொலைய வேம்டமானால், வினைத் தொகுதி தொலையவேண்டும்.  வினைகளைத் தொலைப்பது ஞானம்.  ஞானமாகிய நெருப்பில் வினைகளாகிய பஞ்சுகள் எரிந்து கரிந்து போம்.  இறைவனுடைய திருவடியே ஞானமாகும்.

ஞானக் கழலோனே             ---  (துள்ளுமத) திருப்புகழ்.

வீரக் கழல் அணிந்திருப்பதனால் திருவடி ஆகுபெயராகக் கழல் எனப்பட்டது.

பரவிடும் அவர் சிந்தையர் ---

திருமால் தம்மை மறவாது துதிசெய்து வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவர்.

"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்ற அப்பர் பெருமான் திருவாக்கை இது நினைவுறுத்துகின்றது.

இமையவர் பயமற விடமுண்டு ---

அமுதத்தை வேண்டி தேவர்கள் பாற்கடல் கடைந்தார்கள்.  அக் கருமம் தொடங்கும்போது பிரணவப் பொருளாகிய விநாயகரை வழிபட்டார்கள் இல்லை. ஆதலால், வாசுகி கக்கிய ஆலகால விடம் மிகப் பயங்கரமாகத் தோன்றியது. அதனைக் கண்டு திருமால், பிரமன், தேவர்கள் அனைவர்களும் அஞ்சி ஓடினார்கள்.  கயிலைக்குச் சென்று சிவபெருமானை நாடினார்கள். அப் பரமபதியின் புகழைப் பாடினார்கள்.  அவர்களது  அச்சத்தை அகற்றி உய்விக்குமாறு சிவபெருமான் ஆலகாலவிடத்தைக் கண்டத்தில் தரித்தருளினார். இல்லையேல், அத்தனை பேரும் அன்றே மாண்டிருப்பார்கள்.

மாலெங்கே? வேதன்உயர் வாழ்வெங்கே? இந்திரன்செங்
கோலெங்கே? வானோர் குடியெங்கே? – கோலம்செய்
அண்டங்கள் எங்கே? அவனியெங்கே? எந்தைபிரான்
கண்டம் அங்கே நீலம்உறாக் கால்.            ---  திருவருட்பா.

எருது ஏறி ---

உலகமெல்லாம் அழிந்தபோது அறம் ஒன்று மட்டும் அழியாது எருது வடிவாகி சிவபெருமானை அடைந்தது.  அத் தரும விடையின் மீது சிவபெருமான் ஏறி அருளினார்.

உலகங்களை எல்லாம் தாங்குபவர் சிவபெருமான்.  அப் பெருமானையே தாங்குவது அற வடிவாகிய விடை.

அரவொடு மதியம் பொதி சடை ---

பெரியவர்கள், சிறியவர்களின் பகையை மார்றி ஒற்றுமைப் படுத்துவார்கள்.  பாம்புக்கும் சந்திரனுக்கும் தீராப் பகை.  அதனால், சந்திரனையும் பாம்பினையும் ஒற்றுமைப் படுத்தித் தமது திருத்தலையில் வைத்தருளினார்.  கங்கையைச் சூடியது தூய்மையையும் ஆற்றலையும் குறிக்கின்றது.

அனல் அங்கையில் மேவ ---

தாருகாவனத்து முழர்கள் அபிசார வேள்வி செய்து ஏவிய அக்கினியைச் சிவபெருமான் திருக்கையில் ஏந்தினார்.  இது அவருடைய தூய்மையைக் குறிக்கின்றது.

உலகத்தையெல்லாம் சுடுகின்ற தீ இறைவன் கையில் சந்தனம் போல் குளிர்ந்திருக்கின்றது.

கருத்துரை
 

அருணை மேவும் அண்ணலே, மரணம் வருமுன் உன் சரணம் பரவ அருள் செய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...