குரைகடல்
வறுமையும், குறத்தி உண்மையும்,
நரை
அற மருந்தை உண்டு இளமை நண்ணலும்,
விரை
செறி குழலினாள் வேசை ஆசையும்,
அரையர்
அன்பு அமைவதும், ஐந்தும் இல்லையே.
இதன் பொருள் ---
குரைகடல் வறுமையும் --- ஒலிக்கின்ற கடலின் நீரானது வற்றிப் போதலும்,
குறத்தி உண்மையும் --- குறவர் குலப் பெண்ணிடத்தில் உண்மை பேசும் தன்மையும்,
நரை அற மருந்தை உண்டு இளமை நண்ணலும் --- மருந்துகளை உண்டு நரையும் திரையும் மாறி இளமையோடு
இருப்பதும்,
விரை செறி குழலினாள் வேசை ஆசையும் --- மணம் பொருந்திய கூந்தலை உடைய
பரத்தை ஒருத்தியிடத்தில் அன்பு வைத்தவர் மீது விருப்பம் உண்டாவதும்,
அரையர் அன்பு அமைவதும் --- அரசனுடைய அன்பானது ஒருவரிடத்தே பொருந்தி இருப்பதும்,
ஐந்தும் இல்லையே --- ஆகிய இந்த ஐந்து செயல்களும்
எப்போதும் உண்டாவன இல்லை.
விளக்கம் --- கடலானது ஒருபோதும் வற்றிப்
போவது இல்லை. குறத்தி சாலமாகப் பேசும் தன்மையை உடையவள். உண்மை பேசுவது இல்லை. (சாதிக்கு உரிய குறச் சாலம்
தனயனிடம் காட்டிடத் தகுமோ --- வள்ளிநாயகி பிள்ளைத்தமிழ்). எந்த
மருந்தை உண்டாலும் நரையும், திரையும் தீர்வது
இல்லை. இளமை நாளுக்கு நாள் மாறி, முதுமை வந்தே தீரும். பரத்தையர்கள் பொருளின் மேல் தான்
பிரியம் காட்டுவர். பொருள் இல்லையாயின் எந்த மனிதரையும் வெறுப்பர். அரசர்
எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவது செங்கோல் முறை. எனவே, அரசரின் அன்பு தனிப்பட்ட
ஒருவரிடத்தில் எப்போதும் பொருந்தி இருக்காது. ஆகவே, இந்த ஐந்தும் நடக்காத அரிய
செயல்கள் ஆகும்.
No comments:
Post a Comment