அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விதி அதாகவே
(திருவருணை)
திருவருணை முருகா!
தமிழால் உன்னைப் பாடி, திருவடியை அடைய அருள்
தனன
தானன தனன தானனா
தனன தானனம் ...... தனதான
விதிய
தாகவெ பருவ மாதரார்
விரகி லேமனந் ...... தடுமாறி
விவர
மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந் ...... திடுமூடன்
முதிய
மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு
முறைமை
யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் ...... தருள்வாயே
சதிய
தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் ...... சமராடிச்
சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் ...... குமரேசா
அதிக
வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந் ...... தனில்மேவி
அருணை
மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விதி
அது ஆகவெ, பருவ மாதரார்
விரகிலே மனம் ...... தடுமாறி,
விவரம்
ஆனது ஒர் அறிவு மாறியே,
வினையிலே அலைந் ...... திடு மூடன்,
முதிய
மா தமிழ் இசைய தாகவே
மொழி செய்தே நினைந் ...... திடுமாறு,
முறைமையாக
நின் அடிகள் மேவவே
முனிவு தீர வந்து, ...... அருள்வாயே.
சதி
அதுஆகிய அசுரர் மாமுடீ
தரணி மீது உகும் ...... சமர் ஆடிச்
சகல லோகமும் வலம் அது ஆகியே
தழையவே வரும் ...... குமரஈசா!
அதிக
வானவர் கவரி வீசவே,
அரிய கோபுரம் ...... தனில்மேவி,
அருணை
மீதிலெ, மயிலில் ஏறியே
அழகு அது ஆய் வரும் ...... பெருமாளே.
பதவுரை
சதி அது ஆகிய அசுரர்
மாமுடீ
--- வஞ்சனை கூடிய அசுரர்களின் பெரிய முடிகள்
தரணி மீது உகும் சமர் ஆடி ---
பூமியின் மீது சிந்தும்படி போர் செய்து,
சகல லோகமும் வலம்
அது ஆகியே
--- எல்லா உலகங்களையும் மயில் மீது வலமாக,
தழையவே வரும் குமர ஈசா --- அந்த
உலகங்கள் குளிருமாறு வந்து அருளிய குமாரக் கடவுளே!
அதிக வானவர் கவரி
வீசவே ---
மிகுந்த தேவர்கள் கவரி வீச,
அரிய கோபுரம் தனில் மேவி --- அருமையான
கோபுரத்தில் வீற்றிருந்து,
அருணை மீதிலெ மயிலில் ஏறியே --- திருவண்ணாமலையில் மயில் மீது ஆரோகணித்து
அழகு அது ஆய் வரும் பெருமாளே ---
அழகுடன் வரும் பெருமையில் சிறந்தவரே!
விதி அது ஆகவெ --- விதி
கூட்டுவிப்பதால்,
பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி
--- இளம் பெண்களின் தந்திரச் செயல்களிலே மனம் தடுமாற்றத்தை அடைந்து,
விவரமானது ஒர் அறிவு மாறியே --- தெளிவுள்ளதான
அறிவும் கெட்டுப் போய்,
வினையிலே அலைந்திடும் மூடன் ---
வினையில் அகப்பட்டு அலைகின்ற மூடனாகிய அடியேன்,
முதிய மா தமிழ் இசை
அது ஆகவே ---
பழமையான சிறந்த தமிழ்ப் பாடல்களை இசையுடன்
மொழி செய்தே நினைந்திடுமாறு --- பாடி
தேவரீரை நினைக்கும்படியும்
முறைமையாக நின்
அடிகள் மேவவே ---
முறைப்படி உமது திருவடிகளை அடையுமாறும்,
முனிவு தீர வந்து அருள்வாயே --- என் மீதுள்ள சீற்றம்
தீர்ந்து வந்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
வஞ்சனை கூடிய அசுரர்களின் பெரிய முடிகள்
பூமியின் மீது சிந்தும்படி போர் செய்து, எல்லா
உலகங்களையும் மயில் மீது வலமாக,
அந்த
உலகங்கள் குளிருமாறு வந்து அருளிய குமாரக் கடவுளே!
மிகுந்த தேவர்கள் கவரி வீச, அருமையான கோபுரத்தில் வீற்றிருந்து, திருவண்ணாமலையில் மயில் மீது ஆரோகணித்து அழகுடன் வரும்
பெருமையில் சிறந்தவரே!
விதி கூட்டுவிப்பதால், இளம் பெண்களின் தந்திரச் செயல்களிலே
மனம் தடுமாற்றத்தை அடைந்து, தெளிவுள்ளதான அறிவும்
கெட்டுப் போய், வினையில் அகப்பட்டு
அலைகின்ற மூடனாகிய அடியேன், பழமையான சிறந்த
தமிழ்ப் பாடல்களை இசையுடன் பாடி தேவரீரை நினைக்கும்படியும், முறைப்படி உமது திருவடிகளை அடையுமாறும், என் மீதுள்ள சீற்றம் தீர்ந்து வந்து
அருள் புரிவீராக.
விரிவுரை
விதியதாகவே ---
பண்டை
வினையால், விதியால் மதி கெட்டு
மக்கள் அவநெறி சென்று கெடுகின்றார்கள்.
பருவ
மாதரார் விரகிலே மனம் தடுமாறி ---
இளமை
உடைய இருமனப் பெண்டிருடைய தந்திரச் செயல்களால் புத்தி தடுமாறுகின்றார்கள்.
விவரமானதொர்
அறிவு மாறியே
---
இது
சரி. இது சரியன்று என்று உமர்கின்ற ஒரு அறிவும் நிலைகுலைந்து சீரழிகின்றார்கள்.
வினையிலே
அழிந்திடு மூடன் ---
வினைவசத்தினால்
அலைந்து உலைந்து கெடுகின்றவர்கள் மூடர்கள்.
முதிய
மாதமிழ் இசையதாகவே ---
பழமையும்
சிறப்பும் உடைய தமிழ்ப் பாடல்களை இசையுடன் பாடி உய்வு பெறவேண்டும்.
நினைந்திடுமாறு ---
முருகப்
பெருமானை ஒருமனதுடன் நினைந்து தியானம் புரிய வேண்டும்.
முறைமையாக
நின்அடிகள் மேவவே ---
இருவினை
ஒப்பு, மலபரிபாகம் எய்தி, சத்திநிபாதம் பெறுவது முறை. அம் முறைப்படி முருகன் திருவடியைச் சாரதல்
வேண்டும்.
முனிவு
தீர வந்து அருள்வாயே ---
சொற்படி
நடவாத மைந்தனிடம் தந்தை கருணையால் கோபிப்பான். பின்னர் அந்தக் கோபம் தணியும்.
அதுபோல், நன்னெறியில்லாத
அடியேன் மீதுள்ள சினம் தணிந்து வந்து அருள் புரிவீர் என்று அடிகளார்
முறையிடுகின்றார்.
கருத்துரை
திருவண்ணாமலையில்
உறையும் தேவதேவா, உமது திருவடி சேர
அருள் புரிவாய்.
No comments:
Post a Comment