பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உறவின்முறை யோர்க்கும் (பொது)


முருகா! 

தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய்.


தனதனன தாத்த தனதனன தாத்த

     தனதனன தாத்த ...... தனதான


உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து

     உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே


உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்

     உயர்கனலை மூட்டி ...... விடஆவி


மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி

     வலிவினொடு தாக்கி ...... வளையாமுன்


மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்

     மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய்


பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு

     வரையில்மற வோர்க்கு ...... மகவாகப்


பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த

     பிடியினடி போற்று ...... மணவாளா


அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த

     அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய்


அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து

     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து

     உளம் உருகு தீர்த்து, ...... இவ் உடலூடே,


உடலை முடிவு ஆக்கு, நெடியது ஒரு காட்டில்

     உயர் கனலை மூட்டி ...... விட, ஆவி


மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி,

     வலிவினொடு தாக்கி, ...... வளையாமுன்,


மனமும் உனி, வேட்கை மிகவும், உன தாட்கள்

     மகிழ்வு இயல் கொடு ஏத்த ...... மதி தாராய்.


பிறைநுதலி, சேல்கண் அமை அரிவை, வேட்பு

     வரையில் மறவோர்க்கு ...... மகவு ஆக,


பிறிது உருவில் வாய்த்து, நிறை தினைகள் காத்த

     பிடியின் அடி போற்று ...... மணவாளா!


அறுகு, பிறை, அத்தி, அலை சலமும் ஆர்த்த,

     அடர் சடையினார்க்கும் ......அறிவு ஈவாய்!


அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து,

     அமரர் சிறை மீட்ட ...... பெருமாளே.


பதவுரை


பிறைநுதலி --- பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும், 


  சேல் கண் அமை அரிவை --- சேல்மீனைப் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பெண்ணும்,


வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக, பிறிது உருவில் வாய்த்து --- விருப்பத்துடன் வள்ளிமலையில் வாழ்ந்திருந்த வேடர்களுக்கு மானின் வயிற்றில் பிறந்த குழந்தையாக வந்து, 


நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா --- நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண்யானை ஆகிய வள்ளிநாயகியின் பாதங்களைப் போற்றும் கணவரே!


அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் --- அறுகம்புல்,  பிறைச்சந்திரன், ஆத்திமாலை, அலை வீசும் நீர் கொண்ட கங்கை ஆகிவைகளைச் சூடிய, அடர்த்தியான திருச்சடையை உடைய சிவபரம்பொருளுக்கு உபதேசப் பொருளை ஓதி அருளியவரே! 


அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே --- போரிட வந்த போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்து ஒழித்து தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!


உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இவ்வுடல் ஊடே --- உறவுமுறையினர் ஆன சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை விளைவித்த  அவரது உள்ளக் கவலையைத் தீர்த்து எடுத்து வந்த இந்த உடலோடு,


உடலை முடிவாக்கும் நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட --- பிறவியை முடிவாக்குகின்ற இந்த உடலில் பெரியதொரு சுடுகாட்டில் மிக்கெழுகின்ற நெருப்பை மூட்டிவிட, 


ஆவி --- எனது உயிரை,


மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி வலிவினொடு தாக்கி வளையா முன் --- இயமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், 


மனமும் உ(ன்)னி --- மனத்தால் தியானித்து, 


வேட்கை மிகவும் --- விருப்பும் மிகவும்,


உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் --- தேவரீரது திருவடிகளை மகிழ்ச்சியுடன் வழிபடுவதற்கு அறிவு தந்து அருளுவீராக. 


பொழிப்புரை


பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும்,  சேல்மீனைப் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பெண்ணும், விருப்பத்துடன் வள்ளிமலையில் வாழ்ந்திருந்த வேடர்களுக்கு மானின் வயிற்றில் பிறந்த குழந்தையாக வந்து,  நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண்யானையும் ஆகிய வள்ளிநாயகியின் பாதங்களைப் போற்றும் கணவரே!


அறுகம்புல்,  பிறைச்சந்திரன், ஆத்திமாலை, அலை வீசும் நீர் கொண்ட கங்கை ஆகிவைகளைச் சூடிய, அடர்த்தியான திருச்சடையை உடைய சிவபரம்பொருளுக்கு உபதேசப் பொருளை ஓதி அருளியவரே! 


போரிட வந்த போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்து ஒழித்து தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!


உறவுமுறையினர் ஆன சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை விளைவித்த  அவரது உள்ளக் கவலையைத் தீர்த்து எடுத்து வந்த இந்த உடலோடு, பிறவியை முடிவாக்குகின்ற இந்த உடலில் பெரியதொரு சுடுகாட்டில் மிக்கெழுகின்ற நெருப்பை மூட்டிவிட,  எனது உயிரை, இயமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், மனத்தால் தியானித்து,  விருப்பும் மிகவும், தேவரீரது திருவடிகளை மகிழ்ச்சியுடன் வழிபடுவதற்கு அறிவு தந்து அருளுவீராக. 


விரிவுரை


உடலை முடிவாக்கும் நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட --- 


உடல் - பிறவி.  உடலை முடிவாக்கும் உடல் - பிறவியை முடிவுக்குக் கொண்டு வருகின்ற உடல்.


மனமும் உ(ன்)னி --- 


'உன்னி' என்னும் சொல் 'உனி' என வந்தது.

உன்னுதல் - தியானித்தல்.


அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் --- 


திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.


இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.


முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.


சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.


முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.


தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.


அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து, அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.


காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.


"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ, மறையினால் இசைப்பது அல்லால்".


என்றலும், நகைத்து, "மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.   --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.


தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.    ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!


என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.


அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.


கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு, எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.


பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.  --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.


சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.   --- சிவஞான சித்தியார்.


கருத்துரை

முருகா! தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...