"வான்அமுதத்தின் சுவை அறியாதவர், வண்கனியின்
தான்அமுதத்தின் சுவைஎண்ணல் போல, தனித்தனியே
தேன்அமுதத்தின் தெளிவுஆய ஞானம் சிறிதும் இல்லார்க்கு
ஈனஅமுதச் சுவை நன்றுஅல்லவோ, கச்சி ஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, தேவலோகத்தில் உள்ள அமுதத்தின் சுவையை அறியாதவர், வளப்பம் பொருந்திய பழங்களின் சாற்றின் சுவையை விரும்புதல் போல, தனித்தனியாகவே தேனும் அமுதமும் ஆகிய இவற்றின் தெளிவை ஒத்த, ஞானத்தைச் சிறிதும் இல்லாதவர்க்கு, குற்றமாகிய விடய அமுதத்தின் சுவையானது நன்மையல்லவோ.
விளக்கம்: கண்ணுக்கு இனிமையும் உண்ணும்தோறும் புதிது புதிதாக உள்ல சுவையினையும் உடைய தேவாமிர்தத்தின் சுவையை அறியாதவர்கள், அழியும் தன்மை உடைய கனிகளை விரும்புதல், அவரது இயற்கை என்பார், "வான் அமுதத்தின் சுவை அறியாதவர், வண்கனியின் தான் அமுதத்தின் சுவை எண்ணல் போல" என்றார். ஞானயோகங்களின் முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு, உலக விடய ஞானங்களின் சுவையே நன்று என்பார், "தேன்அமுதத்தின் தெளிவு ஆய ஞானம் சிறிதும் இல்லார்க்கு, ஈனஅமுதச் சுவை நன்று அல்லவோ" என்றார்.
தேவலோகத்தில் உள்ள அமுதத்தின் சுவையை அறியாதவர்கள், பழத்தின் சுவையைப் பெரிதும் மதித்தல் போல, ஞானமாகிய அமுதத்தின் சுவை சிறிதும் அறியாதவர், விஷயமாகிய அமுதத்தின் சுவையை நன்மை தருவதாகக் கருதுவர் என்பது கருத்து.
பண்டங்களோடு பழகி வருவது பாசஞானம். அது தீர்ந்தால் வருவது பசுஞானம். அதுவும் திருவருளால் தீர்ந்து வருவது பதிஞானம். பசுஞானம் இல்லாதவர் பாசஞானத்தைப் பெரிதும் மதிப்பர். பதிஞானம் வாய்க்கப் பெறாதவர், பசுஞானத்தைப் பெரிதும் மதிப்பர்.
வான் அமுதம் - தேவாமிர்தம். வண்கனி - மா, பலா, வாழை முதலியன. தெளிவு - வடித்தல்.
No comments:
Post a Comment