எமனுக்கு எச்சரிக்கை

 


எமனுக்கு எச்சரிக்கை

----


வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமைக்கும், மரணத்திற்கும் பொருந்தும். 


நாளைக்கு வேண்டும் என்று இன்றே உணவுப் பொருள்களைத் தேடிக் கொள்ளுகின்றவன் ஒருவன். பசி வந்த பிறகு உணவைத் தேடுகிறவன் ஒருவன். உண்ணும் நேரம் தாண்டிய பிறகு பசி மிகுதியாகித் துன்புற்று உணவைத் தேடிப் போகிறவன் ஒருவன். இந்த மூன்று பேர்களிலும், பசித் துன்பமானது நிச்சயமாக வரும் என்று முன் கூட்டியே உணர்ந்து அந்தத் துன்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளத் தக்க முயற்சி செய்கிறவனே அறிவாளி. 


நாளைக்கு உணவு வேண்டுமே என்று தேடி வைத்துக் கொள்ளும் அறிவு விலங்குகளுக்கு இல்லை. இன்பத்தை அளிப்பது எது, துன்பத்தை அளிப்பது எது என்று நமக்குத் தெரிகிறது. வரக் கூடிய இன்பம் எத்தகையது, துன்பம் எத்தகையது என்று எண்ணிப் பார்க்கின்ற அறிவு நமக்கு இருக்கிறது. பசித் துன்பம் வருமே என்று முன்னதாகவே உணவு ஆக்கிக் கொள்ளத் தெரிகிறது. அரிசி குத்தி வைத்துக் கொள்கிறோம். நெல்லைக் குதிரில் போட்டு வைத்துக் கொள்கிறோம். இத்தகைய அறிவுடைய நாம், நமக்கு வருகிற துன்பங்களுக்கு எல்லாம் தலையாய துன்பம் எது என்று ஆராய்ந்து அந்தத் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதுதான் அறிவுடைமை.


ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் அதற்காகச் சேமிக்கத் தொடங்குகிறான். காரணம், அந்தக் குழுந்தைக்கு, தக்க வயதில் திருமணம் பண்ண வேண்டும் என்பதை அவன் உணர்ந்துகொண்டு இருக்கிறான். இப்படிச் செய்கிறவர்கள் வருமுன் காப்பவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள், வாழத் தெரிந்தவர்கள். கோயிலுக்குப் போய் இறைவனைத் தரிசித்து வரலாம் என்று ஒருவன் சொன்னால், பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற ஒருவன் அவனை மூட நம்பிக்கைக்காரன் என்கிறான். பிறந்த பெண் குழந்தையின் திருமணத்திற்காக, முன் கூட்டியே சேமநிதியில் பணம் கட்டுவது அறிவானால், ஏதாவது விபத்து வந்து நேரும் என்று பாதுகாப்பாக, காப்பீடு செய்து வைத்துக் கொள்வது அறிவானால், உயிருக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதும் அறிவுதான். 


செத்துப் போன பிறகும், இந்த உலகில் அழியாது நிற்கும் உடம்பு ஒன்று உண்டு. பஞ்சபூதங்களினாலான உடம்பு அழிந்து விடலாம். ஆனால் அந்த உடம்பு அழியாது. அதனைப் "புகழ் உடம்பு" என்று சொல்வார்கள். 


"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது 

ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்! 

வீந்தவர் என்பவர்  வீந்தவ ரேனும் 

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே"


என்பது கவிச்சக்கரவர்த்தியின் இராமாயணப் பாடல். இந்த உடம்பு செத்துப் போகலாம். புகழ் உடம்பு இறவாது. புகழ் இன்றி வெறும் உடம்பைச் சுமந்துகொண்டு ஒருவன் வாழலாம். அவன் நடைப் பிணம். பெரியவர்கள் பூத உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பை நிலை நாட்டிக் கொள்வார்கள். அவர்கள் இந்த உலகில் புகழ் உடம்பை வைத்துவிட்டு, மறுமையில் இன்பத்தை அடைகிறார்கள். பாவி என்னும் பேர் படைத்து, இந்த உலகில் பலகாலம் வாழ்ந்தால் உலகம் அவனைப் பழிக்கும். மறுமையில் அவன் நரகத்தை அடைவான். இங்கே பழியைத் தேடிக் கொண்டவனுக்கு அங்கே இன்பம் இல்லை. 


இறந்த பிறகும், உலகம் பழி சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பணம் சேர்த்து வைத்து நலம் பண்ணுகிறவனை அறிவாளி என்கிறோம். இளைத்த பின்பும் உதவியாக ஓய்வூதியம் பெறும் அரசு வேலை இருந்தால் நல்லது என்று நாடுகிறோம். உடம்புக்கு இளைப்பு வருவது போல், உயிருக்கும் இளைப்பு வரும். உயிருக்குத் தளர்ச்சி ஏற்படுகிற காலத்தில் அதற்கு உதவி செய்யவேண்டிய பொருளை வாழும் காலத்திலேயே தேடிவைத்துக் கொள்ளவேண்டும். அதை எப்படித் தேடிக் கொள்வது என்பதைப் பெரியாழ்வார் காட்டுகின்றார்.


"துப்பு உடையாரை அடைவது எல்லாம் 

சோர்விடத்துத் துணையாவர் என்றே,

ஒப்பிலேன் ஆகிலும் நுன் அடைந்தேன், 

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,

எய்ப்புஎன்னை வந்து நலியும்போது 

அங்குஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் 

அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!"


பணியில் எய்ப்பு என்பது ஒரு கால வரையறைக்குள் வருவது. உண்மையான எய்ப்பு என்பது உடம்பை விடுவது. அது எப்போது வரும் என்பதே நமக்குத் தெரியாது. அந்த எய்ப்பு எப்போதும் வரலாம். அந்த எய்ப்பில், பெரிய இன்பத்தைத் தருவதற்குரிய வைப்பு அருளாகிய செல்வம்தான். எனவே, அருணகிரிநாதர், "மாகத்தை முட்டிவரும் நெடுங் கூற்றன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று வேண்டினார்.


அடியார்கள் வேண்டுவதை வேண்டியபடியே அருள் புரிகின்றவன் இறைவன். "யார்க்கும் இல்லை என்னாது அருள்வார்" என்பது தேவாரம். இறைவனைப் பிரார்த்தனை பண்ணினவுடன். நிச்சயமாகத் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்ற உறுதி அருணகிரிநாதர் உள்ளத்தில் எழுந்தது. இனி அவர் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு குழந்தை ஒரு பெரிய பையனிடம் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுகிறான். அப்பா துணைக்கு வரும்போது அந்தக் குழந்தை அந்தப் பெரியவனிடம், "இப்போது என்ன செய்வாய்" என்று தைரியமாகச் சொல்லும்.


அதுபோல்,  இறைவன் திருவருளைத் துணையாகப் பெற்ற அருணகிரிநாதர், எமனை விளித்து, "எனக்குத் துணையாக முருகப் பெருமானைக் கொண்டு உள்ளேன். இனி அச்சம் இல்லை.  வேண்டுமானால் என் பக்கத்தில் வந்து பார். உன் உயிரையே வாங்கி விடுகிறேன்" என்று கூறுகிறார்.  


உலகத்திலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருகிறவன் எமன். அவன் கரிய பெரிய எருமை மீது வருகின்றவன். இருள்நிற மேனி உடையவன். அவனை ஒளியுடைய திருமேனி படைத்த முருகன் அழித்து ஒழிப்பான் என்ற கருத்தில், எமன் நேரே வந்ததாகப் பாவித்துப் பாடி நம்மை நல்வழிப் படுத்துகிறார் அருணகிரிநாதர். நம்மை அச்சுறுத்துவற்குக் காரணமாக இருப்பவன் எமன். பாதுகாப்புத் தேடிக் கொண்டால், அவனிடம் அகப்படாமல் இருக்கலாம்.


உயிரும் உடம்பும் ஒட்டி இருப்பதனாலேயே ஒரு மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாவிட்டால் கைகளைப் படைத்த பயனில்லை. அது பிணத்தின் கை போன்றதே. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே, வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பனை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்கு" என்றார் மணிவாசகப் பெருமான். "உழுத சால் வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே" என்றார் அப்பர் பெருமான். இத்தகைய நெஞ்சம் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயன்படாது என்பதால், "வாழாத நெஞ்சமே" என்றும், தீமை செய்வதற்கு முற்படுவது குறித்து, "வாழ்கின்றாய்" என்றும் கூறினார் மணிவாசகர்.


நம் உள்ளத்திற்குள் ஒரு நோய் உண்டு. ஒரு செயலைச் செய் என்று உள்ளே இருந்து ஒன்று சொல்கிறது. அதைச் செய்யாதே என்று மற்றொன்றும் உள்ளே இருந்தே தடுக்கிறது. செய்ய வேண்டிய செயலைச் செய்யவிடாமல் செய்கிற இந்த நோய்தான் மனிதனை வாழவிடாமல் செய்கிறது. நமது மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. 


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி". --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும், இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக, இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவே,  தான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.


ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும், சிறுமையும், அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே, பெரியவர். அவரே பெருமை உடையவர்.


"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்".    --- நாலடியார்.



இதன் பொருள் ---


எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.


உலகியல் நிலை மட்டும் அல்லாது, அருளியல் நிலையும் அவ்வாறே என்பதை,


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே".


என்று நிறுவுகிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.


தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.


நமக்குப் பகையாக உள்ள மனதை அடக்கினால் இறைவன் திருவருளைப் பெறலாம். மனதை அடக்கவேண்டுமானால் இறைவனுடைய திருவுருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். 


முருகப் பெருமான் குழந்தையாக உலகத்தில் அவதாரம் செய்தார். சரவணப்பூம் பொய்கையில் தாராகணங்கள் ஆகிய கிருத்திகைப் பெண்கள் அறுவர் தந்த முலைப்பாலை உண்டார். அது போதாமல், உமாதேவியார் கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவர் அவர். தாராகணம் - நட்சத்திரங்களின் கூட்டம். ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டத்தைக் கிருத்திகை நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஆறு நட்சத்திரங்களும் ஆறுமாதர்கள்.  இவர்கள் குழந்தைவேலனுக்குப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று தவம் புரிந்தவர்கள் அவர்கள். அந்த ஆறு பேரும் சரவணப் பூம்பொய்கையில் ஆறு குழந்தைகளின் உருவத்தில் இருந்த முருகப் பெருமானுக்குப் பால் ஊட்டினார்கள். கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தமையால் எம்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் திருநாமம் வழங்கப்படுவதாயிற்று.


"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி

நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,

அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து

மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்

அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!"


என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர அடிகளார் பாடி உள்ளார்.


இதன் பொருள் ---


சரவணப் பொய்கையில் சிவபரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற, முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலைப் பருகி, அழுது விளையாடிக் கொண்டு இருந்தார் முருகப் பெருமான், மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒரு சேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி,  "கந்தன்" என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க,  அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்த பெருமானே!


வெறும் அறிவினால் உலகத்திற்குப் பயன் இல்லை. அறிவு மாத்திரம் தனித்திருந்தால் இன்பம் உண்டாகாது. அருளும், அறிவும் கலந்தால் உண்மையான இன்பம் உண்டாகும். அறிவினால் மாத்திரம் பார்த்தால் உலகத்தில் பேதம் தெரியும். அறிவை மறந்து அருளினால் பார்த்தால் அபேதம் தோன்றும். 


"அருளால் எவையும் பார் என்றான், - அத்தை 

அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்; 

இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட 

என்னையும் கண்டினலன்; என்னடி தோழி'!"


என்று தாயுமானவர் பாடுவார். 


ஞானமயமாக நிலவிய முருகன் உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணையினால் அறப்பெருஞ் செல்வியாகிய உமையம்மை, தனது அருளைக் கலந்து குழைத்த பாலை முருகப் பெருமானுக்கு ஊட்டினாள். சிவமும் சத்தியும் கூடினால்தான் உலகம் இயங்கும். முருகப் பெருமான் இறைவனுடைய அம்சமாகத் தோன்றியவர். அந்தப் பெருமானுக்குப் பராசத்தியினுடைய அம்சம் கலந்தால்தான் அருள் வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் பொருட்டே உமாதேவியாருக்குச் சிவபரம்பொருள் சரவணப் பொய்கையில் தவழ்ந்து கொண்டு இருந்த குழந்தையைக் காட்டினார். உமாதேவியார் உள்ளம் மகிழ்ந்து அருட்பாலை ஊட்டினார். இதை வைத்தே,  "தாராகணம் என்னும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது, உமைமுலைப்பால் உண்ட பாலன்" என்று அருணகிரிநாதர் பாடுகிறார். 


அந்தக் குழந்தையின் துணை தனக்கு இருக்கிறது' என்கிறார் அருணகிரிநாதர். எமனைப் பார்த்து,  "வாராது அகல் அந்தகா!" என்று மிடுக்காகப் பேசுகிறார். அந்தகன் என்றால் எமன் என்றும், குருடன் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. 'நான் முருகப் பெருமானுடைய அருளைப் பெற்றிருக்கிறேன் என்பதை நீ கண்டு கொள்ளாமல் குருடனாக இருக்கிறாயே' என்பது குறிப்பு.


எமன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உயிரைப் போக்குகின்ற ஒரு சக்திக்கு எமன் என்று உருக் கொடுத்துப் பருப்பொருளாக இப்படிச் சொல்லி இருக்கிறார்கள். குதிரையின் மேல் வரும் மனிதனைப் போலக் கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி எருமைக் கடாவின் மேல் அவன் வருவது இல்லை. எமன் என்பது கற்பனை.  அவன் நம்மைப் பாசம் போட்டு இழுத்துச் செல்வான் என்பது பாவனை. அந்தப் பாவனைக்கு மாற்று மற்றொரு பாவனைதான். எமன் வருவதாகப் பாவனை செய்வதை மாற்ற, முருகன் வருவதாகப் பாவனை செய்யவேண்டும்.


பாசம், கதை முதலியனவற்றை எடுத்துக் கொண்டு வருவதாக எமனைப் பற்றிய நினைப்பு வரும்போது, அதனை மாற்றுவதற்குரிய சிறந்த வீரராக உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் நினைக்கிறார். இறைவன் திருக்கரங்களிலுள்ள படைக்கலங்களை நினைக்கிறார். 


நான் எப்போதும் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் அவனுடைய ஒவ்வோர் அங்கமும் என் உள்ளத்தில் நிற்கிறது அவன் கையில் உள்ள ஆயுதங்களும் என் அகக் கண்ணில் நிற்கின்றன. அவன் தன் இடையில் உடைவாளைச் செருகி இருக்கிறான். அது எனக்குப் பலமாக இருக்கிறது. அவன் கையில் சிறிய வாளை வைத்திருக்கிறான். அதுவும் எனக்குத் துணையாக வரும். இந்த இரண்டுமே போதும். இந்த இரண்டிலும் தீராத பெரும் பகை இருந்தாலும், ஆதனையும் அழித்து ஒழிக்கின்ற பெரும்படையாகிய வேலாயுதம் பெருமானிடம் இருக்கிறது. பெரிய பெரிய அசுரர்களை அடியோடு அழித்து வென்ற வீரவேல் அது. சீராவும், சிறுவாளும், வேலும் எனக்குத் துணையாக என் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்போது, நீ எந்தப் படையோடு என்னிடத்தில் வந்தாலும் உய்யமாட்டாய். நீ பிழைத்திருக்க வேண்டுமானால் என் பக்கத்தில் வராமல் அகன்று செல்வாயாக  என்கிறார் அருணகிரிநாதர். 


காலனுக்குக் காலனாகிய இறைவன் தன்னுடைய திருவடியினால் காலனை உதைத்து அழித்துக் கொன்றான் என்று புராணம் கூறுகிறது. மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தார். அப்போது அந்தப் பெருமான் காலனுக்குக் காலனாக நின்று, தன் காலால் உதைத்து, தனது அடியவருக்குத் திருவருள் புரிந்தார். ஆனால்,  மார்க்கண்டேயர் பட்ட பாட்டை அருணகிரிநாதர் படவில்லை. அவருக்கு மிக எளிதில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. 


முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள படைக்கலங்கள் உலகத்தில் உள்ள அழிப்புக் கருவிகளாகிய படைக்கலங்களைப் போன்றவை அல்ல. அவை ஞானத்தின் சொரூபம். ஞானசக்தியே வடிவேலாக இருக்கிறது. அதன் அம்சங்களாகவே மற்ற ஆயுதங்களும் இருக்கின்றன. அஞ்ஞானம், மறதி, மரணம், இருள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் கொடுத்து எமன் என்று சொல்கிறோம். இவற்றையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு முருகப் பெருமானுடைய படைக்கலங்கள் இருக்கின்றன. அவை அஞ்ஞான இருளை, துன்பத்தை ஒட்டும் வல்லமை வாய்ந்தவை. 


மிகவும் வலிமை உள்ள எமனை ஒட்டுவதற்கு நம்மிடத்தில் படைக்கலம் இல்லாவிட்டாலும், இறைவனைத் தியானம் செய்து, அவன் திருக்கரத்தில் உள்ள படைகளைச் சிந்தனையில் கொண்டால் அந்த அச்சம் ஓடி விடும். காலனால் துன்பம் வருமே என்ற அச்சமே நமது துன்பத்துக்கு அடிப்படை. எங்கே அச்சம் இல்லையோ அங்கே காலனுக்கு வேலை இல்லை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு, அச்சம் தோன்றும் இடமாகிய உள்ளத்தில் தைரியம் தோன்றச் செய்கின்ற தியானத்தை உறுதிப் படுத்தவேண்டும்.


முருகப் பெருமான் ஞானாம்பிகை ஆகிய உமாதேவியாரின் திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதை உண்டு "ஞானபண்டிதன்" என்று நின்று, தன்னை நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச்செய்து, அஞ்ஞான இருளாகிய துன்பத்தை இல்லாமல் பண்ணுகின்றார். அதனால், "ஞானாகரன்" என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்டார். அறுமுகச் சிவனார் அம்மை திருமுலைப்பாலை விரும்பிச் செய்த அருட்செயலை அடியில் கண்ட அரும்பாடலில் கண்டு மகிழ்க.


"எள் அத்தனை வருந்து உறுபசிக்கும்

இரங்கி, பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து, மணித் துவர்வாய்

          இதழைக் குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

          தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

     சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

          தோளின் மகரக் குழை தவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

           விளைத்து, மடியின் மீதுஇருந்து,

விம்மிப் பொருமி முகம்பார்த்து,

           வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

           மழலைச் சிறுவா! வருகவே!

     வளரும் களபக் குரும்பைமுலை

           வள்ளி கணவா! வருகவே!"                   --- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.


உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே. ஒருவர் இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அவருக்கு அமைந்தது. மற்றொருவர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர். உமையம்மை அருளிய ஞானப்பாலை உண்டதனால் அவர் சிவஞானசம்பந்தர் ஆயினார்.


அருணகிரிநாதர், முருகப் பெருமான் திருவருளைப் பெற்ற இறுமாப்பில், எமனைப் பார்த்துக் கூறும் பாடல் இது.


"தாரா கணம்எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் 

ஆராது, உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில்கட்டும் 

சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே; 

வாராது அகல் அந்தகா! வந்த போது உயிர் வாங்குவனே".


இதன் பொருள் ---


இயமனே! நட்சத்திரக் கூட்டம் என்கின்ற அன்னையர்கள் ஆறு பேர்களும் தந்த முலைப்பாலை உண்டு, அத்துடன் அமையாமல், உமையம்மையாரின் திருமுலைப்பாலையும் உண்டு அருளிய திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் தனது திருவரையில் (இடுப்பில்) கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தி உள்ள சிறுவாளும், வேலாயுதமும் அடியேனுடைய சிந்தையில் குடிகொண்டு இருக்கின்றன. ஆதலினால், என்னிடம் வராது நீங்கிப் போவாயாக. மீறி வந்தால் உனது உயிரை வாங்கிவிடுவேன்.


No comments:

Post a Comment

எமனுக்கு எச்சரிக்கை

  எமனுக்கு எச்சரிக்கை ---- வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமை...