அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பெருக்கச் சஞ்சலித்து
(திருச்செந்தூர்)
மாதர் மயக்கில் ஆழாது, முத்தமிழால் முருகனைப் பாடி
உய்ய
தனத்தத்தந்
தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
பெருக்கச்சஞ்
சலித்துக்கந்
தலுற்றுப்புந் தியற்றுப்பின்
பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
ப்ரியப்பட்டங்
கழைத்துத்தங்
கலைக்குட்டங் கிடப்பட்சம்
பிணித்துத்தந் தனத்தைத்தந் ......
தணையாதே
புரக்கைக்குன்
பதத்தைத்தந்
தெனக்குத்தொண் டுறப்பற்றும்
புலத்துக்கண் செழிக்கச்செந் ......
தமிழ்பாடும்
புலப்பட்டங் கொடுத்தற்கும்
கருத்திற்கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம்
...... புரிவாயே
தருக்கிக்கண்
களிக்கத்தெண்
டனிட்டுத்தண் புனத்திற்செங்
குறத்திக்கன் புறச்சித்தந் ......
தளர்வோனே
சலிப்புற்றங்
குரத்திற்சம்
ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
சமர்த்திற்சங் கரிக்கத்தண் ......
டியசூரன்
சிரத்தைச்சென்
றறுத்துப்பந்
தடித்துத்திண் குவட்டைக்கண்
டிடித்துச்செந் திலிற்புக்கங் ......
குறைவோனே
சிறக்கற்கஞ்
செழுத்தத்தந்
திருச்சிற்றம் பலத்தத்தன்
செவிக்குப்பண் புறச்செப்பும் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பெருக்கச்
சஞ்சலித்து, கந்-
தல் உற்று, புந்தி அற்று, பின்
பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும்
...... பொதுமாதர்
ப்ரியப்
பட்டு அங்கு அழைத்து, தம்
கலைக்குள் தடங்கிடப், பட்சம்
பிணித்து, தம் தனத்தைத் தந்து ...... அணையாதே,
புரக்கைக்கு
உன் பதத்தைத் தந்து,
எனக்குத் தொண்டு உறப்பற்றும்
புலத்துக் கண் செழிக்கச் செந் ......
தமிழ்பாடும்
புலப்
பட்டம் கொடுத்தற்கும்
கருத்தில் கண்படக் கிட்டும்
புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம்
...... புரிவாயே.
தருக்கிக்
கண் களிக்கத் தெண்-
டன் இட்டுத் தண் புனத்தில், செங்
குறத்திக்கு அன்பு உறச் சித்தம் ......
தளர்வோனே!
சலிப்பு
உற்று அங்குரத்தில் சம்-
ப்ரமித்துக் கொண்டு, அலைத்துத் தன்
சமர்த்தில் சங்கரிக்கத் தண் ...... டிய
சூரன்
சிரத்தைச்
சென்று அறுத்துப் பந்து
அடித்து, திண் குவட்டைக் கண்டு
இடித்து, செந்திலில் புக்கு அங்கு ...... உறைவோனே!
சிறக்கற்கு
அஞ்செழுத்து அத்தம்
திருச்சிற்றம்பலத்து அத்தன்
செவிக்குப் பண்பு உறச்செப்பும் ......
பெருமாளே.
பதவுரை
தருக்கி கண் களிக்க தெண்டன் இட்டு ---
மகிழ்சியடைந்து அம்மையின் கண்கள்
களிக்குமாறு வணங்கி,
தண் புனத்தில் --- குளிர்ந்த தினைப்புனத்தில்,
செம் குறத்திக்கு அன்பு உற --- செவ்வையான
வள்ளி பிராட்டியாரிடம் அன்பு வளர,
சித்தம் தளர்வோனே --- உள்ளம் தளர்ந்தவரே!
சலிப்பு உற்று --- தேவர்கள்
சோர்வடையுமாறு,
அங்கு உரத்தில் --- அவ்விடத்தில் தனது
வலிமையால்,
சம்ப்ரமித்து --- பெருமையுடன் சென்று,
கொண்டு அலைத்து --- அந்த அமரர்களைப் பிடித்து
வருத்தி,
தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன் ---
தனது ஆற்றலால் அவர்களின் வாழ்வை அழித்துத் தண்டித்த சூரபன்மனுடைய,
சிரத்தை சென்று அறுத்து பந்து அடித்து ---
தலையைப் போர்க்களம் போய் அறுத்து அத்தலையைப் பந்துபோல் அடித்து,
திண் குவட்டை கண்டு இடித்து --- வலிமையுடைய
கிரவுஞ்ச மலையைப் பார்த்து அம் மலையைப் பொடிபடுத்தி,
செந்திலில் புக்கு அங்கு உறைவோனே ---
திருச்செந்தூரில் சென்று அத் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!
சிறக்கற்கு --- மேன்மை அடையும் பொருட்டு,
அஞ்சு எழுத்து அத்தம் --- திருஐந்தெழுத்தின்
பொருளை,
திருச்சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு ---
திருச்சிற்றம்பலத்தில் திருநடம் புரியும் தந்தையாகிய சிவபெருமானுடைய
திருச்செவியில்,
பண்பு உற செப்பும் பெருமாளே --- முறையுடன்
உபதேசித்த பெருமையின் மிக்கவரே!
பெருக்க சஞ்சலித்து --- மிகுந்த
துன்பத்தை அடைந்து,
கந்தல் உற்று --- ஒழுக்கக் கேட்டை உற்று,
புந்தி அற்று --- அறிவையும் இழந்து,
பின் பிழைப்பு அற்றும் --- பின்னர் உய்யும்
நெறியும் நீங்கியும்,
குறைப்பு உற்றும் --- குறைவை அடைந்தும்,
பொதுமாதர் ப்ரியப்பட்டு ---- பொது மகளிர்
என்னைக் கண்டு ஆசைக் கொண்டு,
அங்கு அழைத்து --- அவர்கள் தங்குமிடத்திற்கு
அழைத்துக் கொண்டுபோய்,
தம் கலைக்குள் தந்திட பட்சம் பிணித்து ---
தமது காம சாத்திரத்திற்குள் என்னைத் தங்கும்படிச் செய்து ஆசை காட்டிக் கட்டிப் பிடித்து,
தம் தனத்தை தந்து அணையாதே --- தங்கள்
தணபாரங்களைத் தந்து என்னைத் தழுவா வண்ணம்,
புரக்கைக்கு --- அடியேனைக் காத்தல் பொருட்டு,
உன் பதத்தைத் தந்து --- தேவரீருடைய
திருவடியைத் தந்தருளி,
எனக்கு தொண்டு உற --- அடியேன் திருத்தொண்டு
நெறியில் நின்று,
பற்றும் புலத்துக்கண் செழிக்க --- ஆன்றோர்கள்
பற்றும் அறிவு நிலையில் அடிமையேன் தழைக்கவும்,
செந்தமிழ் பாடும் புல பட்டம் கொடுத்தற்கும் ---
செம்மைப் பண்புடைய தமிழ்ப்பாடும் புலவன் என்னும் பட்டத்தைத் தக்கவர்கள்
கொடுப்பதற்கும்,
கருத்தில் கண்பட கிட்டும் புகழ்ச்சிக்கும் ---
கருத்திலே அறிவுக் கண் விளங்கும்படியான புகழைப் பெறுவதற்கும்,
க்ருபை சித்தம் புரிவாயே --- கருணைத்
திருவுளஞ் செய்து அருள்புரிவீர்.
பொழிப்புரை
வள்ளிநாயகி மகிழ்ந்து கண் களிக்குமாறு
வணக்கம் செய்து குளிர்ந்த தினைப் புனத்தில் செவ்விய அக்குற மகளின்பால் அன்புகொண்டு, உள்ளம் தளர்ச்சியுற்றவரே!
தேவர்கள் துன்புறுமாறு வலிமையுடன் வீறு பெற்று, அவர்களைச் சிறைப் பிடித்து அலைத்து, அவர்கள் வலிமையை அழித்துத் தண்டித்த
சூரபன்மன் தலையை யுத்தகளம் போய் அறுத்துப் பந்தாடி, கிரவுஞ்ச மலையைப் பார்த்து இடித்து, திருச்செந்தூரின் கண் எழுந்தருளி
இருப்பவரே!
சிறப்புறுமாறு திருச்சிற்றம்பலத்திலே
திருநடம் புரியும் தந்தையாருக்கு திருவைந்தெழுத்தின் பொருளை முறைப்படி உபதேசித்த
பெருமிதம் உடையவரே!
மிகவும் துன்புற்று, ஒழுக்கக் கேட்டை அடைந்து, நல்லறிவை இழந்து, பின்னர் உய்யும் தன்மையும் இன்றிக்
குறைவுபட்டு அழியுமாறு பொதுமகளிர் என்பால் ஆசை வைத்து அவர் உறைவிடத்திற்கு
அழைத்துச் சென்று, அவர்கள் கற்ற
காமநூலில் தங்கும்படி அன்புசெய்து என்னைக் கட்டுப்படுத்தி கொங்கைகளைத் தந்து தழுவி
மயக்காவண்ணம், சிறியேனை இரட்சித்து
உமது திருவடியைத் தந்தருளி என்னைத் தொண்டு நெறியில் செலுத்தி, ஆன்றோர்கள் பற்றும் அறிவு நிலையில்
தழைக்குமாறு செந்தமிழ்ப் பாடும் புலவன் என்று தக்கவர்கள் பட்டம் தரவும்; கருத்தில் ஞானக்கண் விளங்கும் புகழுக்கு
உரியவனாகுமாறும், உமது கருணை நிறைந்த
திருவுள்ளம் இரங்கி அருள்புரிவீர்.
விரிவுரை
பெருக்கச்
சஞ்சலித்து
---
துன்பம்
ஆசையினால் விளைகின்றது; ஆசை மண்ணிலும்
பொன்னிலும் பெண்ணிலும் விரைந்து செல்கின்றது. மண்ணாசையும், பொன்னாசையும் மனிதப் பிறப்பில்
மட்டுந்தான் விளையும். பெண்ணாசை பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்தது. புழுவுக்கும்
பெண்ணாசையுண்டு.
ஆகவே
பெண்ணாசை மேலிட்டு அதனால் பெருந்துன்புறுவர் பலர். பெண்ணாசையால் தனது அளவற்ற
செல்வத்துடனும் குலத்துடனும் அழிந்தான் இராவணன். உண்டால் மட்டும் கொல்லும் நஞ்சு; கண்டாலும் கொல்லும் வலிமையுள்ளது காமம்.
இராவணன் மாண்டபின் விபீடணன் இரங்கியதாக வரும் கம்பர் கவியும் ஈண்டு நினைவு
கூறர்பாலது.
“உண்ணாதே உயிர்உண்ணாது
ஒருநஞ்சு
சனகியெனும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர் நீயும் களப்பட்டாயே”
எனவே, பெண்ணாசையை விட்டவன்
பெருந்துன்பமடையான். அதனால் தான் இராமலிங்க அடிகளாரும், “மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்”
என்றார்.
கந்தல்
உற்று
---
கந்தல்
- ஒழுக்கக்கேடு. உள்ளத்தில் பல ஓட்டையுற்று தீமைகளை நினைந்து, கொடும் செயல்கள் புரிந்து கெடுவது.
புந்தி
அற்று
---
புத்தியற்று
மடமை உறுதல். காமம் கதுவப் பெற்றார்க்கு அறிவு தொழிற்படாது. அறிவின் மயக்கத்தால்
நன்மை தீமைகளை உணராது கெடுவர். நூறு அசுவமேத யாகம் புரிந்து இந்திர பதம் பெற்ற
நகுஷன் காலத்தால் அறிவிழந்து, எழு முனிபுங்கவர்கள்
பல்லக்குச் சுமக்கச் சென்று அகத்திய முனிவர் சாபத்தால் மலைப்பாம்பாக விழுந்தான்.
பின்
பிழைப்பு அற்று ---
அறிவு
மயங்கியபடியால் உய்யு நெறி அறியாது உழலும் தன்மையுடையவர்.
குறைப்பு
உற்றும்
---
குறையுற்று
என்பது சந்தத்தை நோக்கி வல்லின மெய்ப் பெற்று வந்தது. ஆசையால் அறிவு பொருள் பெருமை
முதலிய பல நலங்கள் குறைந்துபோகும்.
பொதுமாதர்
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து ---
பொதுமகளிர்
நடுவீதியில் நின்று, வீதியிற் செல்லும்
இளைஞரை வலிதில் அழைத்து நகைத்து, இங்கிதமாகப் பேசி “ஏன் இங்கு நின்று பேசவேணும், இதோ இருக்கின்ற என் வீட்டிற்கு
வாருங்கள்” என்று கூறி மாயம் புரிவர்.
தம்
கலைக்குள் தங்கிட ---
தமது
கலையாகிய இன்ப நூலின் திறத்தால் மயங்கப் புரிவர். கலை என்ற சொல்லுக்கு ஆடை எனப்
பொருள் கொண்டு, தமது ஆடைக்குள்
அணைத்து மயக்குவர் எனவும் கொள்ளலாம்.
பட்சம்
பிணித்துத் தம் தனத்தைத் தந்து ---
பட்சம்-அன்பு.
அன்புகாட்டி ஆடவரை வசஞ்செய்து தம் தனமளித்துத் தனம் பெறுவர். “இவ்வாறு மயக்கும்
பொது மகளிர் வசப்படாவண்ணம் தடுத்து ஆட்கொள்ளவேண்டும்” என்று பின்னுள்ள
இரண்டடிகளில் தெரிவிக்கின்றார்.
புரக்கைக்குள்
பதத்தைத் தந்து ---
’முருகா! அடியேனை
ரட்சிக்கும் பொருட்டு உமது கிரியா ஞான வடிவாகிய திருவடிகளைத் தந்து
உபசரிக்கவேணும்.,
தொண்டு
உற
---
உலகில்
தொண்டு புரிவதே சாலவும் சிறந்ததாகும். தொண்டு புரிவதனால் தொண்டர் எனப் பெறுவர்.
நாயன்மார்கள் அனைவரும் தொண்டர்களே. அதனால் அவர்களுடைய புரணம் திருத்தொண்டர்
புராணம் எனப்பட்டது. “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்றனர் ஒளவையார்.
ஆதலால்
அன்பர்கள் அனைவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப மனவாக்கு காயங்களாலே ஏதாவது
திருத்தொண்டு புரியவேண்டும்.
பற்றும்
புலத்துக்கண் செழிக்க ---
புலம்-ஞானம்.
ஞானமுள்ளவர் புலவர். அறிவு நிலையில் செழிக்க வேண்டும்.
செந்தமிழ்
பாடும் புலப்பட்டம் கொடுத்தற்கும் ---
முருகப்
பெருமானையே இனிய செந்தமிழ் மொழியால் கவிமாலைபாடி அதனால் புலவர்மணி என்று
தக்கவர்கள் பட்டங்கொடுக்கப் பெறவேணும் என்கின்றார் அடிகளார்.
கருத்திற்கண்படக்
கிட்டும் புகழ்ச்சி ---
உள்ளத்தில்
ஞானக்கண் திறக்கப்பெற்று அதனால் எல்லாவற்றையும் அறிந்து புகழ் பெறுதல். அது உணர்வு
விழி என்று பேர் பெறும்.
“உடலும்உடல் உயிரும்நிலை
பெறுதல் பொருள்எனவுலகம்
ஒருவிவரு மநுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும்அவர் பிறிதுபரவசம் அழிய விழிசெருகி
உணர்வுவிழி கொடு நியதி தமதுஊடு நாடுவதும்” --- சீர்பாத வகுப்பு
யுக இறுதிகளிலும்
இறுதியில் ஒரு பொருள்
உள்ளக்கண் நோக்கும் அறிவூறி
ஒளிதிகழ் அருவுரு எனுமறை இறுதியில்
உள்ளத்தை நோக்க அருள்வாயே. --- (ககனமு) திருப்புகழ்.
க்ருபைச்
சித்தம் புரிவாயே ---
“கருணை நிறைந்த
கடவுளே! அடியேன் உய்யும் பொருட்டு கிருபைச் சித்தம் என்பால் திரும்பி
அருள்புரிவீர்” என்று சுவாமிகள் உளங்கனிந்து வேண்டி நிற்கின்றனர்.
“அரியபெண்கள் நட்பைப்
புணர்ந்து
பிணியுழன்று சுற்றித்திரிந்த
தமையுமுன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ”
--- (கருவடைந்து)
திருப்புகழ்.
தருக்கிக்
கண்களிக்கத் தெண்டனிட்டு ---
வள்ளியம்மையார்
மகிழ முருகவேள் வேடவடிவில் சென்று வணங்கினார் என்ற குறிப்பு, ஆன்மாக்களை இறைவன் எளிமையாகச் சென்று
ஆட்கொள்கின்றான் என்பதனை உணர்த்துகின்றது.
குறத்திக்கு
அன்புறச் சித்தம் தளர்வோனே ---
வள்ளிப்பிராட்டி
உய்வு பெறவேண்டும் என்று பெருமான்,
அவர்
விஷயத்தில் எல்லையற்ற கருணையால் உள்ளம் இரங்குகின்றான். காரணம் வள்ளியம்மை புரிந்த
தவமேயாகும்.
சிறக்கற்கு ---
உலகமெல்லாம்
குரு நெறியையுணர்ந்து மேன்மை யடையும் பொருட்டு முருகன் உபதேசம் புரிந்தருளினார்.
அஞ்செழுத்து
அத்தம்
---
அத்தம்
- அர்த்தம் - பொருள். திருஐந்தெழுத்தின் பொருள் பிரணவத்தின் உட்பொருளேயாகும்.
திருச்சிற்றம்பலத்து
அத்தன் ---
திரு-சிறு
அம்பலத்து, அத்தன்-சிவபெருமான்.
சிறு
அம்பலம் - சிற்றம்பலம். அது ஆன்மாக்களின் இதய புண்டரீகத்துக்குள் விளங்கும் சிறிய வெளி.
அது ஞானமயமானது. அந்த வெளிக்கு தகராகாசம் எனவும் பேருண்டு. தகரம்-நுட்பம். இதனையே
’மலர்மிசை ஏகினான்’ என்பர் திருவள்ளுவ தேவர்.
கருத்துரை
வள்ளி கணவரே! சூரனாகிய ஆணவத்தை யழித்த
செந்திற்குமார மூர்த்தியே! சிவகுருவே! மாதர் மயக்கிற்படாது தேவரீரை தமிழ்ப்பாடி உய்ய
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment