திரு முண்டீச்சுரம்


திரு முண்டீச்சரம்
(கிராமம்)

நடு நாட்டுத் திருத்தலம்.

         திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழயாக அரசூர் செல்லும் பாதையில் சென்று, திருவெண்ணெய்நல்லூரைக் கடந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். விழுப்புரத்திலிருந்து நகரப்பேருந்து செல்கிறது.


இறைவர்         : சிவலோகநாதர், முடீசுவரர், முண்டீசர்.

இறைவியார்      : சௌந்தர்யநாயகி, கானார்குழலி,
                                               செல்வநாயகி, செல்வாம்பிகை.

தல மரம்          : வன்னி (இப்போது இல்லை)

தீர்த்தம்           : முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்.


தேவாரப் பாடல்கள்    : அப்பர் - ஆர்த்தான்காண் அழல்நாகம்.


          பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள தலம். மக்கள் இவ்வூரைக் "கிராமம்" என்று அழைக்கின்றனர்.

          துவாபர யுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்தபோது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான்; ஆள் அனுப்பி, அம்மலரை பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்த; குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. அது கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான்; அதை எடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமி மீது அம்புபட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு 'முடீஸ்வரர் ' என்றும் பெயர் வந்தது. இப்பெயரே கல்வெட்டில் "மௌலி கிராமம்" என்று குறிக்கப்படுகின்றது. நாளடைவில் மக்கள் 'மௌலி ' என்பதை விட்டுவிட்டு 'கிராமம்' என்றே அழைக்கலாயினர். 'முடீச்சுரம்' என்ற பெயர் 'முண்டீச்சுரம்' என்றாயிற்று என்பதும் எண்ணத்தக்கது.

          வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை, (பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் 'பொக்கணம் கொடுத்த நாயனார் ' என்றும்; மற்றும் ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பபெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றுத்தளி).

          இக்கோயில் கி. பி. 943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

          இக்கோயிலில் கொடிமரமில்லை. துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக் கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷண நீரைக் கீழே விடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது.)

          தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சித் தருகிறார்.

          சுவாமி அம்பாள் விமானங்கள் மிகப் பழமையானவை.

          பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது. முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக இருந்தது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சீர்ப் பொலியப் பண்டு ஈச்சுரன் இப் பதியே விழைந்தது எனும் முண்டீச்சுரத்தின் முழுமுதலே" என்று போற்றி உள்ளார்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 148
திருஅதிகைப் பதிமருங்கு திருவெண்ணெய் நல்லூரும்,
அருளுதிரு ஆமாத்தூர், திருக்கோவ லூர்முதலா,
மருவுதிருப் பதிபிறவும் வணங்கி, வளத் தமிழ்பாடி,
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம்  அணைந்தார்.

         பொழிப்புரை : திருவதிகையின் அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூரும், அருள் தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும் முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, செழுமையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடி, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருவிருப்புடன் அடைந்தார்.

         குறிப்புரை :திருவெண்ணெய் நல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

திருஆமாத்தூரில் அருளிய பதிகங்கள் இரண்டாம், அவை:

1.    திருக்குறுந்தொகை: `மாமாத்தாகிய ஈசனை` (தி.5 ப.44) எனத் தொடங்குவது. 2. திருத்தாண்டகம்: `வண்ணங்கள் தாம்பாடி` (தி.6 ப.9) எனத் தொடங்குவது.

2.    திருக்கோவலூரில் அருளிய பதிகம், `செத்தையேன்` (தி.4 ப.69) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும். `முதலாமருவு திருப்பதிகள்` எனக் குறிப்பன, திருவிடையாறு, திருநெல்வெண்ணெய் முதலாயினவாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

3.    திருமுண்டீச்சரம் என்ற பதியை இவ்விடத்துக் குறிப்பிட்டு, அப்பதியில் அருளியது, `ஆர்த்தான்` (தி.6 ப.85) எனத் தொடங்கும் பதிகமாகும் என வெள்ளைவாரணனார் கூறுவர்.


                                    6. 085     திருமுண்டீச்சரம்
                                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா,
         அடியவர்கட்கு அன்பன்காண், ஆனைத் தோலைப்
போர்த்தான்காண், புரிசடைமேல் புனல்ஏற் றான்காண்,
         புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்,
காத்தான்காண் உலகுஎழும் கலங்கா வண்ணம்,
         கனைகடல்வாய் நஞ்சுஅதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட   சிவலோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.


பாடல் எண் : 2
கருத்தன்காண், கமலத்தோன் தலையில் ஒன்றைக்
         காய்ந்தான்காண், பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண், உமையவள்ஒர் பாகத் தான்காண்,
         ஓர்உருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண், விண்ணவர்க்கும் மேலா னான்காண்,
         மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக்கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.


பாடல் எண் : 3
நம்பன்காண், நரைவிடை ஒன்று ஏறி னான்காண்,
         நாதன்காண், கீதத்தை நவிற்றி னான்காண்,
இன்பன்காண், இமையாமுக் கண்ணி னான்காண்,
         ஏசற்று மனம்உருகும் அடியார் தங்கட்கு
அன்பன்காண் ஆரழல் அதுஆடி னான்காண்,
         அவன்இவன்என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண்,அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தை யிடத்தவன் ஆயினான்.


பாடல் எண் : 4
மூவன்காண், மூவர்க்கும் முதல் ஆனான்காண்,
         முன்னும்ஆய்ப் பின்னும்ஆய் முடிவு ஆனான்காண்,
காவன்காண், உலகுக்கோர் கண் ஆனான்காண்,
         கங்காளன் காண்,கயிலை மலையி னான்காண்,
ஆவன்காண், ஆவகத்துஅஞ்சு ஆடி னான்காண்,
         ஆர்அழலாய் அயற்குஅரிக்கும் அறிய ஒண்ணாத்
தேவன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரம விட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம்பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.


பாடல் எண் : 5
கானவன்காண், கானவனாய்ப் பொருதான் தான்காண்,
         கனல்ஆட வல்லான்காண், கையில் ஏந்தும்
மானவன்காண், மறைநான்கும் ஆயி னான்காண்,
         வல்ஏறுஒன்று அதுஏற வல்லான் தான்காண்,
ஊனவன்காண், உலகத்துக்கு உயிர்ஆ னான்காண்,
         உரைஅவன்காண், உணர்வுஅவன்காண், உணர்ந்தார்க்கு என்றும்
தேன்அவன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில் ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.


பாடல் எண் : 6
உற்றவன்காண், உறவுஎல்லாம் ஆவான் தான்காண்,
         ஒழிவுஅறநின்று எங்கும் உலப்பி லான்காண்
புற்றுஅரவே ஆடையுமாய்ப் பூணும் ஆகிப்
         புறங்காட்டில் எரிஆடல் புரிந்தான் தான்காண்,
நற்றவன்காண், அடிஅடைந்த மாணிக்கு ஆக
         நணுகியதுஓர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண்,அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவ வேடங்கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.


பாடல் எண் : 7
உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
         உருண்டுஓட, தொடர்ந்துஅருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன்காண், தக்கன்றன் தலையைச் செற்ற
         தலைவன்காண், மலைமகளாம் உமையைச் சால
மதிப்புஒழிந்த வல்அமரர் மாண்டார் வேள்வி
         வந்துஅவியுண் டவரோடு மதனை எல்லாம்
சிதைத்தவன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமை யம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண் வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.


பாடல் எண் : 8
உரிந்தஉடை யார், துவரால் உடம்பை மூடி
         உழிதரும் அவ் ஊமர்அவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண், பனிவரைமீப் பண்டம் எல்லாம்
         பறித்துஉடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையும் தடவா ஓடி
         நின்மலனை வலங்கொண்டு, நீள நோக்கித்
திரிந்துஉலவு திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன்காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், உடை இல்லாதவரும், துவர் தோய்ந்த ஆடையால் உடம்பை மூடுபவராய்த் திரியும் சமண புத்தர்கள் உணராவண்ணம் தன் அடியார்க்கு அருள் புரிந்தவன் ஆவான். குளிர்ந்த மலைமேல் உள்ள பண்டங்களையெல்லாம வாரிக்கொண்டு அவற்றோடு கூட முறைப்பட்டு வரும் பெண்ணையாற்றில் பாய்ந்துவரும் நீர், இணை ஒத்துவரும் இருகரைகளையும் தடவிக்கொண்டு ஓடிக்குற்றமற்ற இறைவனை வலங்கொண்டு இடமும் காலமும் நெடியவாக நோக்கி, மெல்ல அசைந்துலவும் அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.


பாடல் எண் : 9
* * * * * * * * *

பாடல் எண் : 10
அறுத்தவன்காண் அடியவர்கள் அல்லல் எல்லாம்,
         அரும்பொருளாய் நின்றவன்காண், அனங்கன் ஆகம்
மறுத்தவன்காண், மலைதன்னை மதியாது ஓடி
         மலைமகள்தன் மனம்நடுங்க வானோர் அஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாயம் எடுத்தோன் கையும்
         கதிர்முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்
செறுத்தவன்காண், திருமுண்டீச் சரத்து மேய
         சிவலோகன் காண், அவன்என் சிந்தை யானே.

         பொழிப்புரை :அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...