திருச்செந்தூர் - 0088. மனைகனக மைந்தர்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மனைகனக மைந்தர் (திருச்செந்தூர்)

பொருள் அல்லவற்றைப் பொருள் என உணராது
 பிறவித் துயரைப் போக்கிக் கொள்ள

தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதானா


மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
     வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர்

வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
     வரிசைதம ரென்று ...... வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று
     கருதிவிழி யின்ப ...... மடவார்தம்

கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
     கருவில்விழு கின்ற ...... தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
     நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா

நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில்
     நிலைபெறஇ ருந்த ...... முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
     புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா

பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
     பொடிபடந டந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மனை கனக மைந்தர், தமது அழகு பெண்டிர்,
     வலிமை, குலம், நின்ற ...... நிலை, ஊர், பேர்,

வளர் இளமை, தஞ்சம் முனை, புனை வளங்கள்,
     வரிசை, தமர் என்று ...... வரும், மாயக்

கனவுநிலை இன்பம் அதனை, எனது என்று
     கருதி, விழி இன்ப ...... மடவார்தம்

கலவிமயல் கொண்டு, பல உடல் புணர்ந்து,
     கருவில் விழுகின்றது ...... இயல்போதான்?

நினையும் நினது அன்பர் பழவினை களைந்து
     நெடுவரை பிளந்த ...... கதிர்வேலா!

நிலமுதல் விளங்கு நலம் மருவு செந்தில்
     நிலைபெற இருந்த ...... முருகோனே!

புனை மலர் புனைந்த புன மற மடந்தை
     புளக இரு கொங்கை ...... புணர்மார்பா!

பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள்
     பொடிபட நடந்த ...... பெருமாளே.

பதவுரை

         நினையும் நினது அன்பர் --- உமது திருவடியையே இடையறாது சிந்திக்கின்ற அடியார்களின்,

     பழ வினை களைந்து --- பழமையான சஞ்சித வினைகளை அகற்றி,

     நெடுவரை பிளந்த --- நீண்ட மலையாகிய கிரவுஞ்சத்தைப் பிளந்த,

     கதிர்வேலா --- ஒளி நிறைந்த வேலாயுதரே!

         நில முதல் விளங்கும் --- பூதலத்தில் முதன்மைப்பெற்று விளங்குகின்றதும்,

     நல மருவு செந்தில் --- நன்மை உடையதுமாகிய திருச்செந்தூரில்,

     நிலை பெற இருந்த முருகோனே --- என்றும் நிலைமையாக வீற்றிருக்கின்ற முருகக் கடவுளே!

         புனைமலர் புனைந்த --- அழகு செய்வதற்குரிய மலர்களை அணிந்திருக்கின்ற,

     புன மற மடந்தை --- தினைப்புனத்தில் இருந்த வேடர் குலமகளின்,

     புளக இரு கொங்கை புணர் மார்பா --- புளகிதமுடைய இரண்டு தனங்களையும் தழுவுகின்ற திருமார்பினரே!

         பொருது உடன் எதிர்ந்த --- போர்செய்து எதிர்த்து வந்த,

     நிருதர் மகுடங்கள் --- அசுரர்களுடைய முடிகள்,

     பொடி பட நடந்த பெருமாளே! - தூளாகுமாறு போருக்கு நடந்தருளிய பெருமையின் மிகுந்தவரே!

         மனை கனக மைந்தர் --- வீடு, பொன், மக்கள்;

     தமது அழகு பெண்டிர் --- தம்முடைய அழகான மனைவி முதலியோர்,

     வலிமை குலம் --- ஆற்றல் குலம்,

     நின்ற நிலை ஊர் பேர் --- தாம் நிற்கும் நிலைமை தாம் வசிக்கும் ஊர் பேர்,

     வளர் இளமை --- வளர்ச்சியுறும் இளமை,

     தஞ்சம் முனை --- தமக்குள்ள சார்பு, துணிவு,

     புனை வளங்கள் --- அணி கலன்கள் முதலிய செல்வங்கள்,

     வரிசை --- மேம்பாடு,

     தமர் என்று வரும் --- சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற,

     மாய கனவு நிலை இன்பம் அதனை --- கனவில் கண்டவைபோல் நிலையில்லாத இன்பத்தை,

     எனது என்று கருதி --- என்னுடையது என்று நினைத்து,

     விழி இன்ப மடவார்தம் --- கண்களால் இன்பத்தைத்தரும் மாதர்களுடைய,

     கலவி மயல் கொண்டு --- புணர்ச்சியினால் வரும் மயக்கத்தைக் கொண்டு,

     பல உடல் புணர்ந்து --- பல சரீரங்களைத் தழுவி,

     கருவில் விழுகின்றது இயல்போ தான் --- மற்றொரு கருவில் விழுகின்றது தக்கது ஆமோ?

பொழிப்புரை

         உமது திருவடிகளை மறவாது கருதுகின்ற உத்தம அன்பர்களது, பழ வினையாகிய சஞ்சிதக் குவியலை யகற்றி, கிரவுஞ்சமாகிய நீண்ட மலையைப் பிளந்த ஒளி மிகுந்த வேற்படையை உடையவரே!

         பூமியின்கண் முதன்மை பெற்று அருள் நலத்தோடு விளங்கும் திருச்செந்தூரில் நிலைப்பெற்று எழுந்தருளியுள்ள முருகக்கடவுளே! அழகு செய்யத்தக்க மலர்களை முடித்து தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளியம்மையாரது, பூரித்த இரு தனங்களைத் தழுவும் திருமார்பை உடையவரே!

         போர் புரிந்து எதிர்த்து வந்த அசுரர்களின் மணிமகுடங்கள் தூளாகுமாறு போருக்கு நடந்தருளிய பெருமிதம் உடையவரே!

         வீடு, பொன், மைந்தர், அழகிய பெண்கள், வலிமை, குலம், தாம் நிற்கும் நிலை, ஊர், பேர், வளர்கின்ற இளமை, சார்புடைமை, துணிவு, அணிகலன், வளமைகள், மேம்பாடு, சுற்றம் என்பனவாதி இவைகளால் வருகின்ற நிலைபேறில்லாத கனவில் கண்ட பொருள் போன்ற இன்பத்தை, எனது என்று எண்ணி, கண்களால் இன்பத்தைத் தருகின்ற பெண்களின் புணர்ச்சி யின்பத்தைக் கொண்டு, பல மாதர்களைச் சேர்ந்து, அதனால் வினைமூண்டு, கருவில் விழுவது தக்கதாமோ?

விரிவுரை

இத்திருப்புகழில் அநித்தமான பொருள்களை, நித்தம் என நினைத்து, மாந்தர் மயங்கித் தியங்குவதைப் பற்றி அடிகளார் கூறுகின்றார்.

மனை கனக.................தமர் ---

வீடு, பொன், புதல்வர், அழகிய மகளிர், வலிமை, குலம், நிலைமை, ஊர், பேர்,இளமை, சார்பு, துணிவு, அணிகலன், வளமை, வரிசை, சுற்றம் இவைகள் யாவும் நிலைபேறில்லாதவை; உள்ளவைபோல் இருந்து அழிகின்றவை.

மாய கனவுநிலை இன்பம் அதனை எனது என்று கருதி ---

மாயம்-ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது. அதாவது துன்பத்தை இன்பம்போல் காட்டி மயக்கஞ்செய்வது. எனவே மாயையால் மயங்கி, நிலையில்லா இன்பத்தை தனக்குச் சொந்தமாக நினைப்பது பிழை. அது புறப்பற்று. பற்று அற்றவர்க்கே வீடுபேறு உண்டாகும். இதுபற்றி பரிமேலழகர் திருக்குறள் உரையில் கூறுமாறு காண்க.

ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழியுந் தன்மையுடைய இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை யுண்டாம்; அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகளெல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோக முயற்சியுண்டாம். அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்றாகிய எனதென்பதும், அகப்பற்றாகிய யான் என்பதும் விடும்.

எனவே, கனவு காண்பது போன்று நிலையில்லாதவற்றை நிலைத்தவையாக மாந்தர் கருதி மயங்கி மடிகின்றனர். அப்படி நினைப்பது அறிவின்மையின் சிகரம்  என்கின்றார் திருவள்ளுவர்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. 

இறைவனை அன்றி ஏனைய யாவும் அநித்தியமானவையே. ஆதலின், அவைகளை நமது சொந்தம் என்று கருதி உழலக் கூடாது.

விழி இன்ப மடவார் ---

பெண்கள் கண்களால் இனிது பார்த்து ஆடவர்க்கு இன்பம் ஊட்டுவர். மாதர் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். அழகிய பெண்களுக்கு அது உரியதாயிற்று.

பலவுடல் புணர்ந்து ---

ஆசைக்கு அடிமையான ஆடவர், வாழ்க்கையில் ஒரு மனைவியுடன் வாழும் ஒழுக்கமின்றிப், பல மாதர்களைத் தழுவி மயங்கித் தியங்கி மடிவர்.


கருவில் விழுகின்றது இயல்போ தான் ---

ஆசையே பிறவியைத் தரும். ஆசையே அல்லலையுந் தரும். ஆசையே அறிவையும் மயக்கும். சகல துக்கத்திற்கும் மூலம் ஆசைதான்.

அவாவென்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.          ---  திருக்குறள்.

அவாஇல்லார்க்கு இல்ஆகும் துன்பம், அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.             ---  திருக்குறள்.

இதனால் ஆகாமிய வினை வளர்ந்து, அதனால் மற்றும் ஒரு தாயாருடைய கருவில் விழுவர். “அங்ஙனம் கருவுற்று அடியேன் அல்லல்படக்கூடாது. முருகா! கருவுறாத் திருவை யருள்வாய்” என்று சுவாமிகள் வேண்டுகின்றனர்.

நினையும் நினது அன்பர் ---

இறைவனையே இடையறாது அடியார்கள் நினைப்பார்கள். அந்த நினைவால் வேறு நினைவுகள் வரமாட்டா. விளக்குள்ள இடத்திற்கு இருள் வராதொழியும். எனவே முருகனை நினைந்து உலக நினைவை மறக்கவேண்டும். நினைப்பவருடைய துன்பங்களை ஆண்டவன் களைகின்றான். “நினைவார் கின்னங் களையுங் க்ருபைசூழ் சுடரே!” என்பது அநுபூதி. அன்றியும் இறைவன் இடையறாது நினைப்பவர் மனத்தைத் தனக்கு உறைவிடமாகக் கொள்ளுகின்றான். “நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன்” என்று கூறினார் திருநாவுக்கரசு நாயனார்.

இவ்வாறு இறைவனை இடையறாது, பயன் கருதாது, பக்தியுடன் நினைந்து உருகுகின்ற அடியார்களுடைய சஞ்சிதமாகிய பழவினைகளை முருகப்பெருமான் அகற்றுகின்றான். இப்போது புரிகின்ற வினை ஆகாமியம்; நாம் துய்க்கின்ற வினை பிராப்தம்; முற்பிறவிகளில் செய்து காலமும் கருவியும் கைகூடப்பெறாது குவிந்து கிடக்கும் வினைக் குவியல் சஞ்சிதம். இது பழவினை எனப்படும். “திருநெறிய தமிழ் வல்லவா தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று திருஞானசம்பந்தர் கூறியருளியதையும் இங்கு நோக்குக. ஆகவே, முருகனை உருகிய உள்ளத்துடன் நினைத்து பழவினைகள் யகற்றுவோம்.

பக்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்”      ---  திருவாசகம்.

நெடுவரை பிளந்த கதிர்வேலா ---

நெடுமை-நீளம்; வரை-மலை; கிரவுஞ்ச கிரி; தாரகனுக்கு மாயையால் துணைபுரிந்து கிரவுஞ்ச மலை வடிவாக நின்ற ஓர் அரக்கன். தாரகனையும், அம்மலையையும், வேலால் குமரவேள் பிளந்தனர்.

நலமருவு செந்தில் ---

செந்தில் என்ற திருத்தலம். ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்கரையில் விளங்குவது. அத்தலம் இப்பூதலத்திற்கு முதன்மையானது. கயிலை மலை அனையது; பரமபதமாயது. அருள் நலம் மருவியது.

கருத்துரை

         செந்திலமர்ந்த திருமுருகரே! வள்ளிமணவாளரே! அநித்தியப் பொருள்களை நித்தியமென்று கருதாது பிறவித்துயரை யகற்ற அருள்புரிவீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...