திருவக்கரை


திரு வக்கரை

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்

         திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று 'பெரும்பாக்கம்' என்ற ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து திருவக்கரை செல்ல நகரப்பேருந்து வசதி உள்ளது.

     வராகநநி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்.

இறைவர்           : சந்திரசேகரேசுவரர், சந்திரமௌலீசுவரர்.

இறைவியார்      : அமிர்தேசுவரி, வடிவாம்பிகை.

தல மரம்           : வில்வம்.

தீர்த்தம்           : சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்து போயிற்று. மற்றொன்று                                 சிதிலமாகியுள்ளது)

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - கறையணி மாமிடற்றான்.

         கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களும் கொண்டு அமைந்துள்ள திருக்கோயில். கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷடபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

         அஷ்டபுஜ காளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரித கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.

         இரண்டாவது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும், முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளதயும் காணலாம். இதற்குக் கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. வலமாக வந்து படிகளேறி மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். துவார பாலகர்கள் இருபுறமும் உளர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகர், துர்க்கையஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகிறது

         சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட இலிங்கம் மும்முகலிங்கம் எனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.

         வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாறு வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.

         வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர் கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

     இங்குப் பவுர்ணமி சிறப்பு. வெள்ளிக் கவசம் சாத்தப்பெறுகிறது.

         காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "எம் மதமும் சார்ந்தார் வினை நீக்கித் தாங்கு திருவக்கரையுள் நேர்ந்தார் உபநிடத நிச்சயமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 962
செல்வம் மல்கிய தில்லைமூ
         தூரினில் திருநடம் பணிந்துஏத்தி,
பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப்
         பரமர்தம் திருத்தினை நகர்பாடி,
அல்கு தொண்டர்கள் தம்முடன்
         திருமாணி குழியினை அணைந்துஏத்தி,
மல்கு வார்சடை யார்திருப்
         பாதிரிப் புலியூரை வந்துஉற்றார்.

         பொழிப்புரை : செல்வம் நிறைந்த `தில்லை' என்ற பழம் பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் `திருத்தினை\' நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் `திருமாணி குழியினை\' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் `திருப்பாதிரிப்புலியூரை\' வந்து அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 963
கன்னி மாவனம் காப்புஎன
         இருந்தவர் கழல்இணை பணிந்து,அங்கு
முன்ன மாமுடக் கால்முயற்கு
         அருள்செய்த வண்ணமும் மொழிந்துஏத்தி,
மன்னு வார்பொழில் திருவடு
         கூரினை வந்துஎய்தி வணங்கிப்போய்,
பின்னு வார்சடை யார்திரு
         வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.

         பொழிப்புரை:: திருஞானசம்பந்தர், உமையம்மையார் தவம் செய்து அருள்பெற்ற இடம் ஆதலின் கன்னியாவனம் என்றும் அழைக்கப்பெறும் திருப்பாதிரிப்புலியூரைத் தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய காலுடன் முயலாய் ஒறுக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள் செய்த தன்மையையும் பதிகத்தில் மொழிந்து போற்றிச் சென்று, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை அடைந்து, நீண்ட சடை யுடைய இறைவரின் `திருவக்கரை' என்ற பதியை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 964
வக்க ரைப்பெரு மான்தனை
         வணங்கிஅங்கு அமரும்நாள், அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா
         காளமும் சென்றுதாழ்ந்து, உடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ
         ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந்து
         எதிர்கொளத் தொழுதுஎழுந்து அணைவுற்றார்.

         பொழிப்புரை : அத் திருவக்கரையில் ஞானசம்பந்தர் இறைவ னைத் தொழுது வணங்கித் தங்கியிருந்த நாள்களில், திருவருட் குறிப்பினால் சிவந்த வானம் போன்ற சடையையுடைய இறைவரின் `திரு இரும்பைமாகாளத்தை 'யும் சென்று வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகள் வளர்கின்ற `திருவதிகை வீரட்டானத்தைச்\' சென்று சேர்பவரான அவர், தமக்கு, முன்கூடிய உண்மைத் தொண்டர்கள் வந்து எதிர் கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார்.

         குறிப்புரை : இரும்பைமாகாளமும் என்ற உம்மையால் திருஅரசிலியையும் கொள்ளத்தக்கதாம் என்பர் சிவக்கவிமணியார். இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1. திருவக்கரை: `கறையணி\' (தி.3 ப.60) - பஞ்சமம்.

2. திருவிரும்பைமாகாளம்: `மண்டுகங்கை\' (தி.2 ப.117) -செவ்வழி.

3. திருஅரசிலி: `வண்டறை\' (தி. 2 ப.95) - பியந்தைக் காந்தாரம்.

         3. 060    திருவக்கரை                  பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கறைஅணி மாமிடற்றான்,
         கரி காடுஅரங்கா உடையான்,
பிறைஅணி கொன்றையினான்,
         ஒரு பாகமும் பெண்அமர்ந்தான்,
மறையவன் தன்தலையில்
         பலி கொள்பவன், வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான்
         ஒலி ஆர்கழல் உள்குதுமே.

         பொழிப்புரை : இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன் . சுடுகாட்டில் திருநடனம் செய்பவன் . பிறைச் சந்திரனையும் , கொன்றைமாலையையும் அணிந்தவன் . உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக .


பாடல் எண் : 2
பாய்ந்தவன் காலனைமுன்
         பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவன் எண்இறந்த
         இமை யோர்கள் தொழுதுஇறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள்
         எரி செய்தவன், வக்கரையில்
தேய்ந்தஇள வெண்பிறைசேர்
         சடை யான்அடி செப்புதுமே.

         பொழிப்புரை :மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !


பாடல் எண் : 3
சந்திர சேகரனே, அரு ளாய்என்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமை யோர்கள் தொழுதுஇறைஞ்ச
அந்தர மூஎயிலும் அனல் ஆய்விழ ஓர்அம்பினால்
மந்தரம் மேருவில்லா வளைத் தான்இடம் வக்கரையே.

         பொழிப்புரை : ` சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே ! அருள்புரிவீராக ` என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற , அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 4
நெய்அணி சூலமொடு நிறை வெண்மழு வும்அரவும்
கைஅணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
மெய்அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின்மேல்
மைஅணி மாமிடற்றான் உறை யும்மிடம் வக்கரையே.

         பொழிப்புரை : நெய் தடவப்பட்ட சூலத்தையும் , வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி , பாம்பைக்கையில் ஆபரணமாகப் பூண்டு , நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான் . அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன் . மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
ஏனவெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டுஉகந்து
கூன்இள வெண்பிறையும் குளிர் மத்தமும் சூடிநல்ல
மான்அன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரி செய்த தலைமகனே.

         பொழிப்புரை : பன்றியின் கொம்பும் , ஆமையின் ஒடும் அணிகலனாகக் கொண்டு , வளைந்த பிறைச்சந்திரனையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி , நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான் .


பாடல் எண் : 6
கார்மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள்அரவும்
நீர்மலி யுஞ்சடைமேல் நிரம் பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்தலையிற் பலி கொண்டுஉழல் பான்மையனே.

         பொழிப்புரை : கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும் , ஊமத்த மலரும் , ஒளி பொருந்திய பாம்பும் , கங்கையும் சடைமுடியில் திகழ , கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி , நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன் .


பாடல் எண் : 7
கான்அண வும்மறிமான் ஒரு கையதுஓர் கைமழுவாள்
தேன்அண வும்குழலாள் உமை சேர்திரு மேனியனான்
வான்அண வும்பொழில்சூழ் திரு வக்கரை மேவியவன்
ஊன்அண வும்தலையில் பலி கொண்டுஉழல் உத்தமனே.

         பொழிப்புரை :காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி , மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான் . வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான் .


பாடல் எண் : 8
இலங்கையர் மன்னன்ஆகி எழில் பெற்ற இராவணனைக்
கலங்கவொர் கால்விரலால் கதிர் பொன்முடி பத்துஅலற
நலங்கெழு சிந்தையனாய் அருள் பெற்றலும் நன்குஅளித்த
வலங்கெழு மூவிலைவேல் உடை யான்இடம் வக்கரையே.

         பொழிப்புரை : இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி , ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான் . பின் இராவணன் செருக்கு நீங்கி , நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க , திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும் , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான் . அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
காமனை ஈடுஅழித்திட்டு அவன் காதலி சென்றுஇரப்பச்
சேமமே உன்தனக்குஎன்று அருள் செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் தாமரைமேல் அய னும்,தரணி அளந்த
வாமன னும்அறியா வகை யான்இடம் வக்கரையே.

         பொழிப்புரை : மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான் . வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும் , உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்றுஇவர்கள்
தேடிய தேவர்தம்மால் இறைஞ் சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கு என்றுபல் வீதிதொறும்
வாடிய வெண்தலைகொண்டு உழல் வான்இடம் வக்கரையே.

         பொழிப்புரை :காவியாடை போர்த்திய புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் , தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து , பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
தண்புன லும்அரவும் சடை மேல்உடை யான்,பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்துஅழகார் இறை வன்உறை வக்கரையைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே.

         பொழிப்புரை :குளிர்ந்த கங்கையும் , பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான் , உறையும் சந்திரனைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி , சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் , அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர் .

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...