திருச்செந்தூர் - 0072. நிதிக்குப் பிங்கலன்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிதிக்குப் பிங்கலன் (திருச்செந்தூர்)

முருகா!
     மனிதர்களைப் புகழ்ந்து அழியாமல்,
உன்னைப் புகழ்ந்து உய்ய அருள்


தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
     தனத்தத் தந்தனம் ...... தனதான


நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
     நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை

நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
     றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
     புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்

புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
     புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
     மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி

மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
     டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
     கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிதிக்குப் பிங்கலன், பதத்துக்கு இந்திரன்,
     நிறத்தில் கந்தன்என்று ...... இனைவோரை

நிலத்தில் தன்பெரும் பசிக்குத் தஞ்சம்என்று
     அரற்றி, துன்ப நெஞ் ...... சினில் நாளும்,

புதுச்சொல் சங்கம் ஒன்று இசைத்து, சங்கடம்
     புகட்டிக் கொண்டு,டம்பு ......அழிமாயும்

புலத்தில் சஞ்சலம் குலைத்திட்டு, ன்பதம்
     புணர்க்கைக்கு அன்பு தந்து ...... அருள்வாயே.

மதித்துத் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்
     மறத்தில் தந்தை,மன் ...... றினில்ஆடி,

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்று,வண்
     தமிழ்ச்சொல் சந்தம்ஒன்று ...... அருள்வோனே!

குதித்துக் குன்று இடந்து அலைத்து, செம்பொனும்
     கொழித்துக் கொண்ட செந் ...... திலின் வாழ்வே!

குறப்பொன் கொம்பை முன் புனத்தில் செங்கரம்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.பதவுரை

      மதித்து திண்புரம் --- மனத்தில் எண்ணி வலிமை நிறைந்த முப்புரங்களை,

     சிரித்துக் கொன்றிடும் --- புன்னகைப் புரிந்து எரித்துவிட்ட,

     மறத்தில் தந்தை --- வீரமுள்ள பிதாவும்,

     மன்றினில் ஆடி --- அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிபவரும்,

     மழுக் கை கொண்ட சங்கரற்குச் சென்று --- மழுவைத் தமது திருக்கரத்தில் கொண்டவரும் ஆகிய சிவபெருமானுக்குக் குருவாகச் சென்று,

     வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே --- வளமையான செந்தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை உபதேசித்தவரே! 

      குதித்து குன்று இடந்து அலைத்து --- அலைகள்  குதித்து குன்றுகளைத் தோண்டி அலைத்து,

     செம்பொனும் கொழித்துக் கொண்ட --- சிவந்த பொன்னையும், (மணியையும்) கொழித்துத் தள்ளுகின்ற,
    
     செந்திலின் வாழ்வே --- திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ளவரே!

      குறப் பொன் கொம்பை --- குறவர் குலத்தில் வளர்ந்த பொற்கொம்பு போன்ற வள்ளிநாயகியை,

     முன் புனத்தில் --- முற்காலத்தில் தினைக் கொல்லையிலே,

     செம் கரம் குவித்து கும்பிடும் --- செம்மையான திருக்கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

      நிதிக்கு பிங்கலன் --- செல்வத்துக்கு குபேரன் என்றும்,

     பதத்துக்கு இந்திரன் --- நல்ல பதவிக்கு தேவர் கோமான் என்றும்,

     நிறத்தில் கந்தன் என்று --- பொன் போன்ற நிறத்துக்கு, கந்தப்பெருமான் என்றும் புகழ்ந்து கூறி,

     இனைவோரை --- கொடுப்பதற்கு வருந்துகின்ற தனவந்தரிடம் போய்,

     நிலத்தில் --- இப்பூதலத்தில்,

     தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி --- எனது பெரிய பசியை மாற்றுதற்கு நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு,

     துன்ப நெஞ்சினில் --- துன்பங் குடிகொண்ட மனதினில்,

     நாளும் புதுசொல் சங்கம் ஒன்று இசைத்து --- நாள்தோறும் புதிய சொற்களின் கூட்டத்தால் கவி ஒன்றைப் பாடி,

     சங்கடம் புகட்டிக்கொண்டு --- சங்கடத்தில் மாட்டிக்கொண்டு,

     உடம்பு அழி மாயும் --- சிறந்த இந்த உடம்பு அழியும்படி மாய்கின்ற,

     புலத்தில் சஞ்சலம் குலைத்திட்டு --- புலன்களால் வருகின்ற துன்பங்களைத் தொலைத்து,

     உன்பதம் புணர்க்கைக்கு --- தேவரீருடையத் திருவடியைச் சேர்வதற்கு உரிய,

     அன்பு தந்து அருள்வாயே --- அன்பினை வழங்கி அருள்புரிவீர்.

பொழிப்புரை

         திருவுளத்தில் சிந்தித்து வலிய முப்புரத்தைப் புன்னகையால் எரித்து அழித்த வீர மூர்த்தியாகிய தந்தையும், பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் புரிபவரும், மழுவைத் திருக்கரத்தில் ஏந்தியவரும், சுகத்தைச் செய்பவரும் ஆகிய சிவபெருமானுக்குக் குருவாகச் சென்று, வளமையான தமிழ்மொழியால் வேதத்தின் உட்பொருளை உபதேசித்தவரே!

         அலைகள் குதித்துக் குன்றுகளைத் தோண்டி அலைத்து, முத்து மணியையும், செம்பொன்னையும் கொழிக்கின்ற திருச்செந்தூரில் வாழ்கின்றவரே!

         குறவர் குலத்தில் வளர்ந்த பொன்கொம்பு போன்ற வள்ளி பிராட்டியாரை முற்காலத்தில் சிவந்த திருக்கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட தனிப்பெரும் தலைவரே!

         பொருள் கொடுக்க வருந்துவோரிடம் போய், பொன்னுக்குக் குபேரன் என்றும், பதவியின் சிறப்புக்கு தேவேந்திரன் என்றும், அழகுக்கு முருகப்பெருமான் என்றும் புகழ்ந்து கூறி, இந்தப் பூதலத்தில் என் பெரும் பசியை மாற்றப் புகலிடம் நீயே என்றும் முறையிட்டு, துன்பம் கொண்ட மனதில் ஆய்ந்து, புதிய புதிய சொற்களின் கூட்டத்தால், ஒரு பாடலை அமைத்துச் சொல்லும் சங்கடத்தில் கிடந்து, உடல் அழிகின்றவனாகி, புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்துத் தேவரீருடைய திருவடியைச் சேர்வதற்கு வேண்டிய அன்பினை, அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.

விரிவுரை

நிதிக்குப் பிங்கலன் ---

பிங்கலன் --- குபேரன்.

     இந்தப் பாடலிலும், தனவந்தர்களைப் புகழ்ந்து பாடும் செயலையே அடிகளார் மீட்டும் கூறுகின்றார். அக்காலத்தில் புலவர்கள் மாட்டு இந்த செயல் மிகுதியாக இருந்தது. கொடாதவனைக் காமதேனு என்றும் கற்பகத் தரு என்றும் கூறித் திரிந்தனர். தனவந்தனிடம் போய், “நீ செல்வத்தில் குபேரனுக்குச் சமானம்” என்று கூறுவர்.

பதத்துக்கு இந்திரன் ---

     பதத்தில் சிறந்தது இந்திர பதம். பொன்னுலகம்; கற்பக நிழல்; காமதேனு; சிந்தாமணி; உச்சைஸ்ரவம்; ஐராவதம்; இந்திராணி, அரம்பை முதலிய அரமகளிர்; தேவாமிர்தம் முதலிய உயர்ந்த பொருள்களை நுகர்ந்து இன்புறுகின்ற பதவி. ஆனால், இதனை ஆன்றோர்கள் விரும்புவதில்லை.

மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன்!”  --- கந்தபுராணம்                                                                                      
இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்.’  --- பிரபந்தம்.

                                                                                      
     எனவே, செல்வம் படைத்தவரை, ’நீ இந்திரன்’ என்று புகழ்ந்து உரைப்பர். “இந்திரராகிப் பார்மேல் இன்பம் உற்று இனிது மேவி” என்பது கந்தபுராணம்.

நிறத்தில் கந்தன் ---
    
     ஒளி, அழகு முதலிய சிறப்பில் நீ முருகப் பெருமான்” என்று கூறுவர். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருந்தலைவனை உவமித்து, உலோபரைப் புகழ்வர். என்னே மதி?

இனைவோரை ---

இனைதல்-வருந்துதல்.

     இனைவோர் --- வருந்துவோர்.

     யாசகர் வந்துவிட்டால் “ஐயோ, இவன் வந்து விட்டானே! என்ன செய்வது? எப்படித் தப்பித்துக் கொள்வது? என்று மனவருத்தம் கொள்வர். உலோபத்தனத்தால், செல்வம் இருந்தும், மனம் வராமல் யாசகரைக் கடிந்து பேசுவர்; ஒளித்துக் கொள்வர். இப்படிப் பல்வேறு நிலையடைவர் உலோபர்.

உலோப குணம் மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றையும் மறைத்துவிடும். தீய குணங்களை எல்லாம் ஒருங்கே மறைக்கும் தரும குணம். தாடகை தன் வனத்தின் வளமைகளையெல்லாம் ஒரே நாளில் மரம் செடி கொடி முதலிய அனைத்தையும் பொடி செய்து அடியுடன் அழித்துவிட்டாள். கம்ப நாடர் கூறுகின்றார்.


உளப்பரும் பிணிப்புறா உலோபம் ஒன்றுமே
அளப்பரும் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்பரும் கொடுமைய வரக்கி கேடிலா
வளப்பரும் மருதவைப் பழித்து மாற்றினாள்”

நிலத்தில் தன்பெரும் பசிக்குத் தஞ்சமென்......நெஞ்சினில் ---

     மேலும் அப் பொருளாரைப் புலவர், “ஏ! தரும குண சீலரே! எனக்குப் பெரும் பசி. இப்பசியை மாற்ற நீயே தஞ்சம்” (புகலிடம்) என்று வாய்விட்டு முறையிடுவர். அப்படி முறையிட்டும் அவர் உதவி செய்யாமையால் நெஞ்சில் துன்பமுற்றுத் தவிப்பர்.

புதுச்சொற் சங்கமென் றிசைத்து ---

     புதிய புதிய அழகிய சொற்களை ஒன்று கூட்டி சதுரப் பாடாகக் கவி பாடுவது.

சங்கடம் புகட்டிக் கொண்டுடம் பழிமாயும் ---

     இதனால் துன்பமெய்தி, திரிந்து திரிந்து, உடல் தேய்ந்து மாய்ந்து ஒழிவர்.

     ஒரு சமயம், இரட்டைப் புலவர்கள் மலையும் காடுமாக நடந்து வெய்யில், மலை, காற்று, பனி முதலிய இடர்களைத் தாங்கி அலைந்தபோது, ஒருவர் கூறினார். “இவ்வாறு நாம் குன்றும் வனமும் குறுகி நடந்து திரிகின்ற இவ் விடர்ப்பாடு விலகாதோ?” மற்றொருவர் கூறுகின்றார். “இந்த இடர் என்றும் நம்மைவிட்டு அகலாது. ஏன் எனில்? ஓர் அணுவளவுந் தராதவனைக் காமதேனு என்றும், சங்க நிதி என்றும் புகழ்ந்து பொய்யுரை புகல்கின்றோம்; அப்பொய்யே நம்மை வாட்டுகின்றது” என்றார்.

குன்றும் வனமும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ - ஒன்றும்
கொடாதவனைச் சங்குஎன்றும் கோஎன்றும் சொன்னால்
இடாதோ அதுவே இது.

புலத்தில் சஞ்சலம் ---

     சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களால் துன்பம் விளைகின்றது.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை”     ---  சிவஞானபோதம்

ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே”
                                                                    ---  (ஐங்கரனை) திருப்புகழ்.

ஐம்புலன்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர்இட்டு உனதாள்
சேர ஒட்டார் ஐவர், செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய
சோர நிட்டூரனைச் சூரனைக் கார் உடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
                                                                      ---  கந்தரலங்காரம்.

சுவைஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.              ---   திருக்குறள்.

ஆதலால், ஞானமென்ற அங்குசத்தால், ஐம்புலன்களாகிய மதயானைகளை அடக்குவார் துன்புறாது, இன்புறுவர்.


உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே ---

     இறைவனுடைய பாதம் இன்பமயமானது. அதனை அடைந்தால் அல்லது ஆன்மாவுக்கு ஆறுதல் இல்லை.


தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால், மனக்கவலை மாற்றல் அரிது.        ---  திருக்குறள்.

     அத்திருவடியைச் சேரும் நெறி அன்பு நெறியேயாகும். அன்புடை யவர்களாக ஆகவேண்டும்.

மதித்து ---     

     மதித்தல் --- நினைத்தல்.

     முப்புராதிகள் அமரரை அல்லல் படுத்தினர். மாலயனாதி வானவர்கள் சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள். திரிபுராதிகள் சிவ பக்தியுடை யவர்கள். ஆதலின், சிவபெருமான் அவர்களை அழிக்க இணங்கவில்லை.

     அப்போது நாரதரைச் சீடராக்கிக் கொண்டு, திருமால் புத்தா வதாரங்கொண்டு, திரிபுராதிகளின் நகரில், வீதிவீதியாகச் சென்று ’கடவுள் பற்று வேண்டா’ என்று பிரசாரம் புரிந்தனர். அதனால் தலைவர்களாகிய கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்ற மூவரைத் தவிர ஏனையோர் யாவரும் சிவபக்தி குலைந்து உறுதி யிழந்தனர்.

     பின்னர் தேவர்கள் சிவபெருமானிடஞ்சென்று முறையிட்டனர். அன்றியும் சிவபிரானுடைய ஆற்றலை யறியாது அவர் போருக்குப் புறப்படும் பொருட்டு தேர் வில் அம்பு முதலியவற்றை ஆயத்தஞ்செய்து தந்தார்கள். திருமால் அம்பு; பிரமன் தேர்ப்பாகன்; வாயு அம்பின் குதை; அக்கினி அம்பின் வாய்; தேவர்கள் தேர்ப்பதுமைகள்; சந்திர சூரியர் தேர்ச் சக்கரங்கள். ஒவ்வொரு தேவரும் நாம் துணை செய்வதனால்தான் திரிபுரவதம் நடைபெறப் போகின்றது என்று கருதிச் செருக்குற்றனர்.

     இதனைச் சிவபெருமான் மதித்தனர். இந்த இடத்தைக் குறிக்கின்றது மேலேயுள்ள “மதித்து” என்ற சொல். சிவமூர்த்தி “நமக்குத் தேரும் வில்லும் அம்பும் வேண்டுமோ? எனக்கருதிச் சிறிது சிரித்தனர். சிவபக்தி மாறாத அந்த மூன்று தலைவர்கள் நீங்க ஏனையவருடன் திரிபுரம் சாம்பாராயிற்று.

மழுக்கை கொண்ட சங்கரன் ---

     இறைவன் ஒரு திருக்கரத்தில் மானும். ஒரு திருக்கரத்தில் மழுவும் ஏந்திக் கொண்டிருக்கின்றனன். சம்-சுகம்; கரன்-செய்கின்றனன். சுகத்தை ஆன்மாக் களுக்குச் செய்கின்றனன் சங்கரன்.

வண்டமிழ்ச் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே ---

     வண் --- வளமை. சந்தம் --- வேதம். வளமையான தமிழ்ச் சொற்களால் வேதத்தின் முதலெழுத்தாகியப் பிரணவத்தின் உட்பொருளை முருகன் சிவபிரானுக்கு உபதேசித்தனர்.

கொன்றைச் சடையர்க் கொன்றைத் தெரியக்
 கொஞ்சித் தமிழைப் பகர்வோனே”     ---  (அம்பொத்தவிழி) திருப்புகழ்.


குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனும் கொழித்துக் கொண்ட செந்திலின் வாழ்வே ---

     திருச்செந்தூர், கடற்கரையில் உள்ள திருத்தலம். கடல் அலைகள் ஒழியாது அருகில் உள்ள குன்றுகளின் அடியில்வந்து மோதி அதனைத் தொளைக்கின்றன. சங்கும் முத்தும் பொன்னும் கொழிக்கின்றன. கடலில், பொன், மணி முதலிய அடங்கியிருக்கின்றன. அதனால் சமுத்திரம் ரத்னாகரம் எனப்படும்.

கருத்துரை

         சிவகுருவே! செந்தில்நாயகரே! வள்ளிமணவாளனே! மனிதரைப் பாடாது உமது பாதத்தில் அன்பினை வைக்கும்படி அருளுவீர்.

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...