திருச்செந்தூர் - 0038. ஓராது ஒன்றை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஓராது ஒன்றை (திருச்செந்தூர்)

மாதர் வயப்படாது, முருகனைப் பாட

தானா தந்தத் தானா தந்தத்
     தானா தந்தத் ...... தனதானா


ஓரா தொன்றைப் பாரா தந்தத்
     தோடே வந்திட் ...... டுயிர்சோர

ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
     டாமால் தந்திட் ...... டுழல்மாதர்

கூரா வன்பிற் ஞோரா நின்றக்
     மோயா நின்றுட் ...... குலையாதே

கோடார் செம்பொற் றோளா நின்சொற்
     கோடா தென்கைக் ...... கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
     றோளா குன்றைத் ...... தொளையாடீ

சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
     சேவே றெந்தைக் ...... கினியோனே

தேனே யன்பர்க் கேயா மின்சோற்
     சேயே செந்திற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஓராது ஒன்றை, பாராது, ந்தத்
     தோடே வந்திட்டு ...... உயிர்சோர

ஊடா நன்று அற்றார் போல் நின்று, ட்-
     டா மால் தந்திட்டு ...... உழல்மாதர்,

கூரா அன்பில் சோரா நின்று, க்கு
     ஓயா நின்று உள் ...... குலையாதே,

கோடுஆர் செம்பொன் தோளா! நின்சொல்
     கோடாது என்கைக்கு ...... அருள்தாராய்.

தோரா வென்றிப் போரா! மன்றல்
     தோளா! குன்றைத் ...... தொளையாடீ!

சூதாழ் எண்திக்கு ஏயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா!

சீரார் கொன்றைத் தார் மார்பு ஒன்றச்
     சே ஏறு எந்தைக்க் ...... இனியோனே!

தேனே! அன்பர்க்கே ஆம் இன்சொல்
     சேயே! செந்தில் ...... பெருமாளே.
    
பதவுரை

         தோரா வென்றி போரா --- தோல்வியே இன்றி வெற்றிப் போர் புரிபவரே!

      மன்றல் தோளா --- வாசனை வீசும் தோள்களை உடையவரே!

      குன்றைத் தொளையாடீ --- கிரவுஞ்சமலையைத் தொளைத்தவரே!

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர்மா அஞ்சப் பொரும் வேலா --- சூதாக எட்டுத் திக்கிலும் பொருந்திச் சென்று வஞ்சனையைச் செய்த சூரனாகிய மாமரமானது அஞ்சும்படி போர் செய்த வேலாயுதரே!

சீர் ஆர் --- சிறந்த ஆத்தி மலரையும்,

கொன்றை --- கொன்றை மலரையும்,

தார் மார்பு ஒன்ற --- மாலையாகத் திருமார்பில் திகழ

சே ஏறு எந்தைக்கு இனியோனே --- இடபத்தின் மீது ஆரோகணித்து வரும் எமது பிதாவாகிய சிவபெருமானுக்கு இனியவரே!

தேனே --- தேன் போன்றவரே!

அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே --- அன்பர்கட்கு என்றே இனிய சொற்களைப் பேசும் செம்மைப் பண்புடையவரே!

செந்தில் பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!

         ஒன்றை ஓராது --- ஒரு பொருளை ஆராயாமலும்,

     பாராது --- அதனை உன்னிப் பார்க்காமலும்,

     அந்தத்தோடே வந்திட்டு --- அழகுடனே வந்து,

     உயிர் சோர --- ஆடவர்களின் உயிர் சோர்ந்து போகுமாறு,

     ஊடா --- பிணங்கியும்,

     நன்று அற்றாற்போல் நின்று --- நல்லதே கிடைக்காதவர்களைப் போல் நின்றும்,

     எட்டா மால் தந்திட்டு --- அளவில்லாத மயக்கத்தைத் தந்தும்,

     உழல் மாதர் --- இங்குமங்குமாகத் திரிகின்ற விலைமாதர்களது,

     கூரா அன்பில் சோரா நின்று --- விருப்பமில்லா (பொய்மையான) அன்பில் சோர்வுற்று நின்று,

     அக்கு ஓயா நின்று --- எலும்புடன் கூடிய இச் சரீரம் ஓய்ந்து நின்று,

     உட்குலையாதே --- உள்ளம் நிலைகுலையாதவாறு,

     கோடு ஆர் செம்பொன் தோளா --- மலைபோன்ற சிவந்த பொன் மயமான திருத்தோள்களை உடையவரே!

     நின்சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய் --- தேவரீருடைய புகழ் ஒருபொழுதும் தாழாது நின்று அருளும் என்று கூறும்படி திருவருளைத் தருவீராக.


பொழிப்புரை

         தோல்வியே இன்றி வெற்றிப்போர் புரிகின்றவரே!

         நறுமணம் வீசும் திருப்புயத்தை யுடையவரே!

         கிரவுஞ்ச மலையைத் தொளைத்தவரே!

         சூதாக எட்டுத் திசைகளிலும் சென்று வஞ்சனையைச்செய்து மாமரமாக முளைத்த சூரபன்மன் அஞ்சுமாறு போர்செய்த  வேலாயுதரே!

         சிறந்த ஆத்திமலரையும், கொன்றை மலரையும் மாலையாகத் திருமார்பில் அணிந்து விடையின் மீது ஏறிவருகின்ற எம்பிதாவாகிய சிவமூர்த்திக்கு இனிய புதல்வரே!

         தேனினும் இனியவரே!

         அன்பர்கட்கு இனிய சொற்களைச் சொல்பவரே!

         செம்பொருளே!
        
         செந்திலாண்டவரே!

         பெருமிதம் உடையவரே!

         ஒரு பொருளை ஆராயாமலும், அதனை உற்றுப் பாராமலும் அழகுடன் வந்து ஆடவர்களின் உயிர் சோரும்படிப் பிணங்கியும், நல்லதே கிடைக்காதவர்போல் நின்று, அளவில்லாத மயக்கத்தைக் கொடுத்து, இங்கும் அங்குமாகத் திரிகின்ற விலைமகளிரின் ஆழமில்லாத வெளியன்பில் சோர்வு அடைந்து, எலும்புடன் கூடிய இவ்வுடம்பு ஓய்ந்து நின்று உள்ளம் குலையாதவாறு,

     மலைபோன்ற சிவந்த பொன்மயமான தோள்களை உடையவரே! தேவரீரது புகழ் எளியேனுக்கு நேர் நின்று உதவும் என்று உலகவர் உரைக்குமாறு அருள் புரிவீ்ர்.


விரிவுரை

ஓராது ஒன்றை ---

ஒன்று என்பது ஒரு மொழியாகியப் பிரணவத்தைக் குறிக்கும். ஒரு மொழியை குரு மொழியாகக் கொண்டு ஓர்தல் வேண்டும். அதனை உன்னுதல் வேண்டும்.

ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார்” --- கந்தரலங்காரம்.

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே...    --- மணிவாசகம்.

அந்தத்தொடே வந்திட்டு உயிர்சோர ---

பொது மகளிர் ஆடவர் உயிர் நெகிழுமாறு அலங்கரித்துக் கொண்டு அழகாக வீதியில் வந்து நிற்பர்.

ஊடா ---

ஊடுதல்-பிணங்குதல். கூடுதல் பொருட்டு ஊடுவர். ஊடுவது கூடுவதற்கு இன்பம் பயக்கும்.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.                  ---  திருக்குறள்.

நன்று அற்றார் போல் நின்று ---

சிலசமயம் அம்மகளிர் தம்பால் வரும் ஆடவரிடம் பொருள் பறிக்கும் பொருட்டு, ஆடையணிகள் இல்லாதவர்போல் நின்று, அவற்றை யவர்பால் பெற்று மகிழ்வார்கள்.

எட்டா மால் தந்து ---

மால்-மயக்கம். தம்பால் வருபவர்க்கு அளவில்லாத மயக்கத்தைத் தந்து வருத்துவர்.

கூரா அன்பில் சோரா நின்று ---

அடிப்படையில் அன்பின்றி, வெளித் தோற்றத்தில் அன்புடையார் போல் நடிப்பர். அங்ஙனம் நடிக்கும் பொதுமகளிர்பால் சோர்ந்து சோர்ந்து உணர்வு உடைமை உள்ளம் யாவையும் பறிகொடுப்பர். கூர்தல்-மிகுதல்.

அக்கு ஓயா நின்று ---

அக்கு-எலும்பு. எலும்பினால் ஆய இந்த உடம்பு ஓய்ந்து வாடுவர். உடம்பு ஏழு உறுப்புக்களால் ஆயது. அவற்றுள் எலும்பு சிறந்தது. சப்த தாதுக்கள் என்பது வடநூன் மரபு. எலும்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரதம் என்பவை.

உட்குலையாதே ---

உடம்பு குலைந்ததோடு உள்ளமும் குலைவர். விலைமகளிர் உறவால் உடம்பும் உள்ளமும் உணர்வும் நிலைகுலையும் என அடிகளார் உணர்த்துகின்றனர்.
  
நின்சொல் ---

சொல்-புகழ். முருகனுடைய திருப்புகழ். இதனையே திருவள்ளுவரும் “பொருள் சேர் புகழ்” என்றனர்.

கோடாது என்கைக்கு அருள் தாராய் ---

கோடாது-சாய்தல்; தளர்தல் என்ற பொருளில் வந்தது. முருகனுடைய புகழ் ஒருபோதும் தளராது. நேர்நின்று உதவும் என்று உலகோர் உரைக்கும்படி அருள்புரிவீர்.

தேனே ---

முருகன் தேன்போல் அடியார்களின் சித்தத்தில் தித்திக்குந் தெய்வம்.

அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே ---

அடியார்களிடம் இனிய சொற்களைக்கூறி அருள்புரிகின்ற அருள் கடல் முருகன். “இன்சொல் விசாகா” என்று வேறு ஒரு பாடலிலும் கூறுகின்றனர்.

கருத்துரை

         சூரனை அடர்த்த வேலவரே! சிவகுமாரரே! செந்திலதிபதியே! மாதர் வயப்படாது உமது புகழைப் பாட அருள்புரியும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...