திருச்செந்தூர் - 0065. தரிக்கும்கலை


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தரிக்குங்கலை (திருச்செந்தூர்)

முருகா!
மனிதர்களைப் பாடும் புலவர்கள்,
உன்னைப் பாட அறியாதது விந்தை.

தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்


தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற்

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே

கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தரிக்கும்கலை நெகிழ்க்கும்,பர
     தவிக்கும்,கொடி ...... மதன்ஏவில்

தகைக்கும்,தனி திகைக்கும்,சிறு
     தமிழ்த்தென்றலின் ...... உடனேநின்று,

எரிக்கும்பிறை எனப் புண்படும்
     எனப் புன் கவி ...... சிலபாடி,

இருக்கும் சிலர், திருச்செந்திலை
     உரைத்து உய்ந்திட ...... அறியாரே,

அரிக்கும்,சதுர் மறைக்கும்,பிர-
     மனுக்கும் தெரிவு ...... அரிதான

அடிச் செஞ்சடை முடிக் கொண்டிடும்
     அரற்கும்,புரி ...... தவபாரக்

கிரிக் கும்ப நன் முநிக்கும், க்ருபை
     வரிக்கும்,குரு ...... பரவாழ்வே,

கிளைக்கும் திறல் அரக்கன் கிளை
     கெட, கன்றிய ...... பெருமாளே.


பதவுரை

         அரிக்கும் --- நாராயணருக்கும்,

     சதுர் மறைக்கும் --- நான்கு வேதங்களுக்கும்,

      பிரமனுக்கும் தெரிய அரிது ஆன --- பிரம தேவனுக்கும், தெரிந்துகொள்வதற்கு அரியதான,

     அடி --- திருவடிகளையும்

     செஞ்சடை முடி கொண்டிடும் --- சிவந்த சடை முடியையும் கொண்டுள்ள,

     அரற்கும் --- சிவபெருமானுக்கும்,

     புரி தவ பார --- செய்துள்ள தவம் நிறைந்த,

     கிரி கும்ப நல் முநிக்கும் --- பொதிய மலையில் வாழும் அகத்திய முனிவருக்கும்,

     க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே --- கருணை புரிந்த,  மேலான குருமூர்த்தியே!

         கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெடக் கன்றிய பெருமாளே --- சுற்றப் பெருக்குடன் வந்த சூரபன்மன் உறவுடன் மாண்டு அழியுமாறு கோபித்த பெருமையிற் சிறந்தவரே!

         தரிக்கும் கலை நெகிழ்க்கும் --- அணிந்துள்ள ஆடை அவிழ்ந்துபோம்,

     பரதவிக்கும் --- விரக வேதனைப்படும்,

     கொடி --- கொடி போன்ற இப்பெண்,

     மதன் ஏவில் --- மன்தனுடைய பாணத்தினால்,
    
     தகைக்கும் --- தடையுண்ணும்,

     தனி திகைக்கும் --- தனியாக நின்று திகைப்புண்ணும்,

     சிறு தமிழ்த் தென்றலின் உடனே நின்று --- மெல்லிய இனியத் தென்றல் காற்றுடனே வந்து நின்று,

     எரிக்கும் பிறை என --- இந்த சந்திரன் கொளுத்துகின்றது என்று கூறி,

     புண் படும் என --- மனம் புண்ணாகின்றது என்றும் கூறி,

     புன் கவி சில பாடி --- மனிதர்கள் மீது கீழான பாடல்கள் சிலவற்றைப்பாடி,

     இருக்கும் சிலர் --- (அவல நிலையில்) இருக்கின்ற சில பேர்,

     திருச் செந்திலை --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள எம்பிரான் மீது,

     உரைத்து உய்ந்திட அறியாரே --- பாடிக் கடைத்தேற அறியமாட்டாரோ?

பொழிப்புரை

         திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமதேவருக்கும், காணமுடியாத திருவடியையும், சிவந்த சடைமுடியையும் உடைய சிவமூர்த்திக்கும், நிறைந்த தவம் புரிந்தவரும், பொதியமலையில் உள்ளவரும், கும்பத்தில் பிறந்தவரும் ஆகிய அகத்தியருக்கு கருணையுடன் உபதேசித்த மேலான குருமூர்த்தியே!

         சுற்றப் பெருக்குடன் வந்த சூரபன்மன் உறவுடன் மாண்டு அழியுமாறு கோபித்த பெருமிதம் உடையவரே!

         (அகப்பொருள் துறையில் பாடுகின்ற புலவன் தன்னைப் பெண்ணாகப் பாவித்து பொருள் தருகின்றவனைத் தலைவனாக அமைத்து) உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது; விரக வேதனையால் தவிக்கின்றேன்; கொடிபோன்ற யான் மன்மதனுடைய பாணங்களினால் தடைபடுகின்றேன்; தனியே நின்று திகைக்கின்றேன்; மெல்லிய இனியத் தென்றல் காற்றினுடன் வந்து நின்று சந்திரன் கொளுத்துகின்றான் என்று, மனம் புண்படுகின்றேன் என்றும் கூறி, புன்மையான கவிகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி, சில புலவர்கள் வீணே இருக்கின்றார்கள்.

     திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகா! இவர்கள் உன்னைப்பாடி உய்யுந்தன்மையை அறிந்திலரே! (இது என்ன பாவம் அந்தோ!)

விரிவுரை

இப்பாடலில், அருணகிரிநாத சுவாமிகள், கற்றறிந்த புலவர்கள் இறைவனைப் பாடாது, தனவந்தர்களிடம் போய் அவர்களைப் பாடி அலையும் அவல நிலையைக் குறித்து வருந்தி இரங்குகின்றனர்.



தரிக்குங்கலை நெகிழ்க்கும் ---

அகப் பொருள் துறையில், புலவன் தன்னைப் பெண்ணாக அமைத்து, தனவந்தனைத் தலைவனாக அமைத்து, “ஏ அழகனே! உன் மீதுள்ள மோகத்தால் எனக்கு ஆடை நெகிழ்கின்றது. நான் விரக வேதனையால் பரதவிக்கின்றேன்” என்று பாடுவான்.

மதன் ஏவில் தகைக்கும் ---

மன்மதனுடைய மலர்க் கணைகளால் புண்ணாகி நான் தடைப்படுகின்றேன்” ஏ --- கணை (அம்பு)

தனி திகைக்கும் --

உன்னைப் பிரிந்து தன்னந்தனிமையில் இருந்து நான் திகைக்கின்றேன்; என்னை வந்து அணைவாய்” என்றெல்லாம் புலவர்கள் பாடுவார்கள்.

தமிழ்த் தென்றலின் உடனே நின்று எரிக்கும் பிறை ---

தமிழ்த் தென்றல், தமிழ் வழங்கும் திசை தென் திசை. அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல், இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் என்பது நிகண்டு. இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று சேக்கிழாரும் கூறுகின்றனர்.

தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்குக் குளிர்ந்த தென்றல் காற்று நெருப்பை அள்ளி வீசுவதைப் போல் துன்பத்தைத் தரும். பரவையாரைப் பிரிந்து வருந்தும் சுந்தரரைத் தென்றல் மாருதம் வருத்தியது. அப்போது அப்பெருமான் கூறுகின்றார்: “ஏ தென்றல் காற்றே! உயர்ந்த இடத்தில் பிறந்தவர்க்கு நற்குணம் தானேயமையும். நல்லவரைச் சார்ந்தவர்க்கும் அவ்வாறே நல்ல பண்புகள் உண்டாகும். தமிழ் மாருதமே! நீ எம்பிரானுடைய பொதிய மலையில் பிறந்தனை; பரமன் இருந்து அரசாண்டதும், தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் புரிந்ததுமாகிய சிறந்த பாண்டி நாட்டின் வழியே, அருள் நிறைந்த சோழவள நாட்டைச் சார்ந்தும் தவழ்கின்றனை. இவ்வாறிருக்க, நீ பிறரை வருத்தும் இத்தீமைக் குணத்தை எங்கே கற்றுக்கொண்டாய்?”

பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்,
புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!     --- பெரியபுராணம்.

எல்லோருக்கும் குளிர்ந்திருக்கின்ற சந்திரன் காதலனைப் பிரிந்திருக்கின்ற காதலிக்கும், காதலியைப் பிரிந்திருக்கின்ற காதலனுக்கும் மிகுந்த வெப்பத்தை வீசுகின்ற நெருப்பைப் போல் துன்பத்தைச் செய்யும்.

இராமர் மீது வேட்கை கொண்ட சீதாதேவியைத் திங்கள் சுடுகின்றது. அப்போது அம்மைக் கூறுகின்றாள், “ஏ சந்திரனே! நீ திருப்பாற் கடலிலே பிறந்தனை. நீ கொடியவனுமல்லன். இதுவரை யாரையும் நீ கொன்றதில்லை, குற்றமில்லாத அமிர்தத்தோடு பிறந்தனை. அன்றியும் இலக்குமியாகிய பெண்ணுடன் தோன்றினையே? பெண்ணாகிய என் மீது ஏன் உனக்கு இத்தனை சினம்? என்னை ஏன் சுடுகின்றாய்?”

கொடியை அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்,
வடுஇல் இன்னமு தத்தொடும் வந்தனை,
பிடியின் மென்னடைப் பெண்ணொடுஎன் றால்எனைச்
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.       --- கம்பர்.


புன்கவி சிலபாடி ---

புலவர்கள் இவ்வாறு தனமுடையவர் பால் சென்று அருமையினும் அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள். இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழில் வருந்துகின்றார். அந்தோ! இவர்கட்கு என்ன மதி? கேட்டதெல்லாம் தரும் பரம கருணாநிதியாகிய முருகனைப்பாடினால் இகம்பரம் இரண்டு நலன்களையும் வழங்குவானே? அப்பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பானே?

மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள்.

செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
    ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
    ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்
    இயற்றினும் இரக்கஞ் செயார்,
இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்
    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!
    பெருவயிற்றான் தம்பி,அப்
பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்
    பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
    சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
    சிறுபறை முழக்கி அருளே!              ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்

                                              
சுந்தர் மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.

நலம்இலாதானை நல்லனே என்றும்,
         நரைத்த மாந்தரை இளையனே,
குலமிலாதானைக் குலவனே என்று
         கூறினும் கொடுப்பார்இலை,
புலம்எலாம்வெறி கமழும் பூம்புக
         லூரைப் பாடுமின் புலவீர்காள்,
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
         யாதும் ஐயுறவு இல்லையே.


இருக்குஞ் சிலர் திருச்செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே ---

முன்னே தெரிவித்தப்படி மனிதர்களைப் பாடி அல்லல் படுகின்ற புலவர்கள், பூலோக கைலாயமாகிய திருச்செந்தூரைப் பாடி உய்யுமாறு உணர்ந்திலரே! இது என்ன பாவம்? இந்த நாவும் அவன் தந்தது. அவன் தந்த நாவால் அவனைப் பாடாது அழிகின்றார்களே!

நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய், யார்அறிவார்
சா நாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூ நாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நா நாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.     ---  திருஞானசம்பந்தர்.
                                                                      

முருகப்பெருமானுடைய திருத்தலங்களுள் தலையாயது திருச்செந்தூர்? “கயிலை மலையனைய செந்தில்” “பரமபதமாய செந்தில்” என்ற திருப்புகழ் வாக்கியங்களால் அறிக.

அரிக்குஞ் சதுர் மறைக்கும் பிரமனுக்குந் தெரிவரிதான ---

இறைவனுடைய சொரூபத்தைத் திருமாலும் அயனும் வேதங்களும் காணவில்லை. அத்துணை அரியவன் இறைவன். இறைவனை மாலும் அயனும் மலர்க்கொண்டு வணங்குகின்றார்கள்; வெறும் மலர் அல்ல; தொடுத்த மலர்; மேலும் தூபமும், சந்தனமும் கொண்டு வணங்குகின்றார்கள். காலை மாலை மட்டும் அல்ல. எப்பொழுதும் வணங்குகின்றார்கள். தொலைவில் இருந்து வணங்குகின்றார்கள் இல்லை. அடுத்து வணங்குகின்றார்கள். அப்படி வணங்கியும், அந்த திருமாலுக்கும் அயனுக்கும் ’அவன் காண்பரியனாக இருக்கின்றான்.

தொடுத்த மலரொடு தூபமும் சாந்துங்கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பரியான்,
பொடிக் கொண்டணிந்து பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. --- அப்பர்

                                                                                       
புரிதவ பாரக் கிரிக் கும்ப நன்முநி ---

அகத்திய முனிவர் அளவற்ற தவமுடையவர். குடத்தில் தோன்றிய காரணத்தினால் கும்ப முனிவர் எனப்படுவார். குறுகிய உருவத்தினால் குறுமுனி எனவும் பெறுவர். முருகனிடம் நேரே பிரணவ உபதேசம் பெற்றவர். தவவலிமையால் விந்த கிரியை பாதாலத்தில் அழுத்தியவர், கடலை ஆசமனஞ் செய்து உண்டவர். தென்கோடு உயர்ந்தபோது பொதியையில் எழுந்தருளி உலகை சமமாகச் செய்தார்.

கருத்துரை

         சிவபெருமானுக்கும் அகத்தியருக்கும் குருநாதரே! செந்தில் முருகவேள்! புலவர்கள் திருச்செந்தூரைப் பாடி உய்ய அருள்புரிவீர்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...