திரு இடையாறு


திரு இடையாறு
(T. எடையார்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

     திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில்  சித்தலிங்க மடத்தை அடுத்து இடையாறு உள்ளது. திருக்கோயில் சாலை ஓரத்தில் உள்ளது. மற்றொரு திருத்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மி. தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.

         விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக அடையலாம்.


இறைவர்            : மருதீசுவரர், இடையாற்றீசர்.

இறைவியார்       : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.

தல மரம்            : வன்னி

தேவாரப் பாடல்கள்         : சுந்தரர் - முந்தையூர் முதுகுன்றங்.


     மூன்று நிலைகளை உடைய கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகிதவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

         சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் "திருமணத்தடை நீக்கும் தலம்"' என்ற சிறப்பைப் பெற்றவையாகும். அவ்வகையில் நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

         இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் இலிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீசுவரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

         கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.

         காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தாவாக் கடை ஆற்றில் அன்பர் தமைக் கல்லாற்றின் நீக்கும் இடையாற்றின் வாழ் நல் இயல்பே" என்று போற்றி உள்ளார்.
  
சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், நாவலூரில், "கோவலன் நான்முகன்" என்னும் திருப்பதிகம் பாடிய தருணத்தில் பாடியருளியதாக இத் திருப்பதிகம் கொள்ளப்படும் . இதன் வரலாறு கிடைத்திலது.
         குறிப்பு: இத்திருப்பதிகம், 'திருஇடையாறு' என்னும் தலத்தில் இறைவரைக் கண்டு வணங்கிய ஞான்று, அதனுடன் இடைமருதையும் இணைத்து, ஏனைய தலங்களையும் தொகுத்து அருளிச் செய்தது. 'இடைமருது' என்பது இடையாற்றில் உள்ள கோயிலின் பெயர் என்பாரும் உளர். அவ்வாறாயின், 'இடையாற்றிடை மருது' என, றகரம் இரட்டித்தல் வேண்டும்.

7. 031    திருஇடையாறுத் தொகை        பண் - கொல்லி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முந்தை யூர்,முது குன்றம், குரங்கணின் முட்டம்
சிந்தை யூர்,நன்று சென்றுஅடை வான்திரு வாரூர்,
பந்தை ஊர்,பழை யாறு, பழனம்,பைஞ் ஞீலி
எந்தைஊர் எய்த அமான்இடையாறு, இடைமருதே.

         பொழிப்புரை : அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும் , எம் தந்தையும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பழைய ஊராகிய முதுகுன்றம் , குரங்கணின்முட்டம் , ஆரூர் , மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 2
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றி யூர்,திரு வூறல், ஒழியாப்
பெற்றம் ஏறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்றும் ஊர் எய்த அமான் இடை யாறு, இடைமருதே.

         பொழிப்புரை : இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் , பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` அடி யார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல் , சோபுரம் , அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

பாடல் எண் : 3
கடங்க ளூர்திருக் காரி கரை,கயி லாயம்,
விடங்க ளூர்திரு வெண்ணி,அண் ணாமலை, வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்புஅரை யான்பரஞ் சோதி
இடங்கொள் ஊர் எய்த அமான் இடை யாறு,இடை மருதே.

         பொழிப்புரை : கொடிய , படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் , ` செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை , கயிலாயம் , நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி , அண்ணா மலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 4
கச்சை யூர்கா, அம்கழுக் குன்றம்,கா ரோணம்,
பிச்சை ஊர்திரி வான்கட வூர்,வட பேறூர்,
கச்சி ஊர்,கச்சி, சிக்கல்,நெய்த் தானம், மிழலை
இச்சை யூர்எய்த அமான்இடை யாறு, இடைமருதே.

         பொழிப்புரை : பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகியஇறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள் , ` கச்சையூர் , பலகாக்கள் , அழகிய கழுக்குன்றம் , காரோணம் , கடவூர் , வடபேறூர் , கச்சணிந்தவளாகிய காமக்கோட்டியம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி , சிக்கல் , நெய்த்தானம் , வீழிமிழலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 5
நிறையன் ஊர்நின்றி யூர்,கொடுங் குன்றம், அமர்ந்த
பிறையன் ஊர்பெரும் ஊர்பெரும் பற்றப் புலியூர்,
மறையன் ஊர்மறைக் காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையன் ஊர் எய்த அமான்இடை யாறு, இடை மருதே.

         பொழிப்புரை : எங்கும் நிறைந்தவனும் , விரும்பிச் சூடிய பிறையை உடையவனும் , வேதத்தை ஓதுபவனும் , வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` நின்றியூர் , கொடுங்குன்றம் , பெருமூர் , பெரும் பற்றப்புலியூர் , மறைக்காடு , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 6
திங்க ளூர்,திரு வாதிரை யான்பட் டினம், ஊர்
நங்க ளூர்நறை யூர்,நனி நால்இசை நாலூர்,
தங்க ளூர்தமி ழான் என்று பாவிக்க வல்ல
எங்க ள்ஊர் எய்த அமான்இடை யாறு,இடை மருதே.

         பொழிப்புரை : இறைவனை , ` தமிழில் விளங்குபவன் ` என்று கருதவல்ல யாங்கள் , எம்முள் அளவளாவுங்கால் , எம்மை நீக்கி , ` எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் ` என்றும் , யாவரையும் உளப்படுத்து , ` நங்கள் ஊர் ` என்றும் , பிறரொடு சொல்லாடுங்கால் , முன்னிலையாரை நீக்கி , ` எங்கள் ஊர் ` என்றும் சொல்லுமாறு , யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் , ` திங்களூர் , திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர் , நறையூர் , மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 7
கருக்கு அந்நஞ்சுஅமுது உண்ட கல்ஆலன்,கொல் ஏற்றன்,
தருக்கு அருக்கனைச் செற்றுஉகந் தான்தன் முடிமேல்
எருக்க நாள்மலர் இண்டையும் மத்தமும் சூடி,
இருக்கும் ஊர்எய்த அமான்இடை யாறு,இடை மருதே.

         பொழிப்புரை : தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும் , கல்லால மர நிழலில் இருப்பவனும் , கொல்லும் இடபத்தை ஏறுபவனும் , செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும் , தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும் , ஊமத்தம் பூவினையும் சூடியவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள் , ` இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 8
தேச ன்ஊர்வினை தேயநின் றான்திரு ஆக்கூர்,
பாசன் ஊர்பர மேட்டி பவித்திர பாவ
நாசன் ஊர்,நனி பள்ளி,நள் ளாற்றை அமர்ந்த
ஈசன் ஊர், எய்த அமான்இடை யாறு,இடை மருதே.

         பொழிப்புரை : ஒளிவடிவினனும் , தீவினைகள் குறைய நிற்பவனும் , திருவருளாகிய தொடர்பினை உடையவனும் , மேலிடத்தில் இருப்பவனும் , தூயவனும் , பாவத்தைப் போக்குபவனும் , ` நள்ளாறு ` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` ஆக்கூர் , நனிபள்ளி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .


பாடல் எண் : 9
பேறன் ஊர்,பிறைச் சென்னியி னான்பெரு வேளூர்,
தேறன் ஊர்,திரு மாமகள் கோன்திரு மால்ஓர்
கூறன் ஊர், குரங் காடு துறை,திருக் கோவல்,
ஏறன் ஊர்எய்த அமான்இடை யாறு, இடை மருதே.

         பொழிப்புரை : எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும் , பிறையை யணிந்த சடையை உடையவனும் , தெளியப்படுபவனும் , திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும் , இடபத்தை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், ` பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது ` என்னும் இவைகளே.


பாடல் எண் : 10
ஊறு வாயினன் நாடிய வன்தொண்ட ன், ஊரன்,
தேறு வார்சிந்தை தேறும் இடம்,செங்கண் வெள்ளேறு
ஏறு வார்,எய்த அமான்இடை யாறு,இடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.

         பொழிப்புரை : சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பம் நீங்க , உடல் குளிர்வார்கள் .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...