திரு மயேந்திரப்பள்ளி


திரு மயேந்திரப்பள்ளி
(மகேந்திரப்பள்ளி)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர், முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி அடையலாம். அருகில் உள்ள மற்றொரு திருத்தலம் திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
  
இறைவர்               : திருமேனியழகர், சோமசுந்தரர்.

இறைவியார்           : வடிவாம்பாள், வடிவாம்பிகைவடிவம்மை.

தல மரம்                : கண்டமரம், தாழை.

தீர்த்தம்                : மயேந்திர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - திரைதரு பவளமும்


     கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர். திருமேனியழகர் ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராச சபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர்.

         இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதைத் திருஞானசம்பந்தரின் திருப்பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம், இந்திர தீர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

          ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.

          இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சொல்லும் தயேந்திரர் உள்ளத் தடம் போல் இலங்கு மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே" என்று போற்றி உள்ளார்.

         காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
       
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 129
வைகும்அந் நாளில் கீழ்பால்
         மயேந்திரப் பள்ளி, வாசம்
செய்பொழில் குருகா வூரும்,
         திருமுல்லை வாயில், உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம்
         இன்புஉற இறைஞ்சி ஏத்தி,
தையலாள் பாகர் தம்மைப்
         பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

         பொழிப்புரை : இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த்திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லைவாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றையும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

         குறிப்புரை : திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு' - பண் : கொல்லி (தி.3 ப.31).

         திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124).

         திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத்திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத்தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

         திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்\' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105).

         திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்:
1. `உண்டாய் நஞ்சை' - பண்: காந்தாரம் (தி.2 ப.61).
2. `மந்திர மறையவை' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15).

         கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).



3. 031    திருமயேந்திரப்பள்ளி             பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
திரைதரு பவளமும், சீர்திகழ் வயிரமும்,
கரைதரும் அகிலொடு, கனவளை புகுதரும்,
வரைவிலால் எயில்எய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவுஅரை அழகனை அடிஇணை பணிமினே.

         பொழிப்புரை :கடலலைகள் அடித்துவரும் பவளங்களும் , சிறப்புடைய வைரமும் , கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும் , கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , மேருமலையாகிய வில்லால் , அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த , இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

பாடல் எண் : 2
கொண்டல்சேர் கோபுரம், கோலம்ஆர் மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம்ஆர் வாவியும்,
வண்டுஉலாம் பொழில்அணி மயேந்திரப் பள்ளியில்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.

         பொழிப்புரை :மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும் , அழகிய மாளிகைகளும் , நீர்முள்ளியும் , தாழையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் , வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் , உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக .


பாடல் எண் : 3
கோங்குஇள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்குஇருந் தவன்கழல் அடிஇணை பணிமினே.

         பொழிப்புரை :கோங்கு , வேங்கை , செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும் , மாமரங்களும் , கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக .


பாடல் எண் : 4
வங்கம்ஆர் சேண்உயர் வருகுறி யால்மிகு
சங்கம்ஆர் ஒலி, அகில் தருபுகை கமழ்தரு
மங்கைஓர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள் நாயகன்தனது இணையடி பணிமினே.

         பொழிப்புரை :வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும் , அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள் , உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .


பாடல் எண் : 5
நித்திலத் தொகைபல நிரைதரு மலர்எனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந்து இருந்தவன்
மைத்திகழ் கண்டன்நல் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டுஅடி பணிமினே.

         பொழிப்புரை :இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல , பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும் , மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும் , கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக .


பாடல் எண் : 6
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் இறையவன்,
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தம்இல் அழகனை அடிபணிந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக .


பாடல் எண் : 7
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் நறவுஅணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை உடையவன் அடிபணிந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத் திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும் , திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக!


பாடல் எண் : 8
சிரம்ஒரு பதும்உடைச் செருவலி அரக்கனைக்
கரம்இரு பதும்இறக் கனவரை அடர்த்தவன்
மரவுஅமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவுஅமர் சடையனை அடிபணிந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :பத்துத் தலைகளையுடைய , போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு , கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள் .


பாடல் எண் : 9
நாகஅணைத் துயில்பவன், நலமிகு மலரவன்,
ஆகஅணைந்து அவர்கழல் அணையவும் பெறுகிலர்,
மாகுஅணைந்கு அலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகுஅணைந் தவன்கழல் உணர்ந்துஇருந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும் , அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு , பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார் . ( அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு .) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக !


பாடல் எண் : 10
உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
படுபழி உடையவர், பகர்வன விடுமின்நீர்,
மடைவளர் வயல்அணி மயேந்திரப் பள்ளியுள்
இடம்உடை ஈசனை இணையடி பணிமினே.

         பொழிப்புரை :ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும் , மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக . மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .


பாடல் எண் : 11
வம்புஉலாம் பொழில்அணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழல்அடி ஞானசம் பந்தன்சொல்
நம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.

         பொழிப்புரை :நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ` இது நம்முடைய கடமை ` என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் .
                                             திருச்சிற்றம்பலம்






No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...