அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மாய வாடை
(திருச்செந்தூர்)
பொதுமாதர் உறவு அற, முருகன் அருள் பெற
தான
தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய
வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ......பழையோர்மேல்
வால
நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக
...... ளெவரேனும்
நேய
மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ......
ளவர்தாய்மார்
நீலி
நாடக மும்பயில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக ......
ளுறவாமோ
பாயு
மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்றபெ ருங்கதை
பார மேருவி லன்றுவ ரைந்தவ ......
னிளையோனே
பாவை
யாள்குற மங்கைசெ ழுந்தன
பார மீதில ணைந்துமு யங்கிய
பாக மாகிய சந்தன குங்கும ......
மணிமார்பா
சீய
மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்
சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ......
மருகோனே
தேனு
லாவுக டம்பம ணிந்தகி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
மாய
வாடை திமிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலை திறந்த மழுங்கிகள்,
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள், ...... பழையோர்மேல்
வால
நேசம் நினைந்து அழு வம்பிகள்,
ஆசை நோய் கொள் மருந்துஇடு சண்டிகள்,
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள்,...... எவரேனும்
நேயமே
கவி கொண்டு சொல் மிண்டிகள்,
காசு இலாதவர் தங்களை அன்புஅற,
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள், ...... அவர்தாய்மார்
நீலி
நாடகமும் பயில் மண்டைகள்,
பாளை ஊறு கள்உண்டிடு தொண்டிகள்,
நீசரோடும் இணங்கு கடம்பிகள் ...... உறவு
ஆமோ?
பாயு
மாமத தந்தி முகம்பெறும்
ஆதி, பாரதம் என்ற பெருங்கதை
பார மேருவில் அன்று வரைந்தவன் ......இளையோனே!
பாவையாள்
குற மங்கை செழுந் தன
பார மீதில் அணைந்து முயங்கிய,
பாகம் ஆகிய சந்தன குங்குமம் ...... அணிமார்பா!
சீயமாய்
உருவம் கொடு வந்து,
சுரேசன் மார்பை இடந்து, பசும் குடர்
சேர வாரி அணிந்த நெடும்புயன் ......
மருகோனே!
தேன்
உலாவு கடம்பம் அணிந்த,
கிரீட சேகர! சங்கரர் தந்து அருள்
தேவ நாயக! செந்தில் உகந்து அருள்
...... பெருமாளே.
பதவுரை
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி ---
பாய்கின்ற மிகுந்த மதங்கொண்ட யானையின் முகத்தையுடைய முதல்வரும்,
பாரதம் என்ற பெரும் கதை --- மகாபாரதம் என்ற
பெரிய இதிகாசத்தை,
பார மேருவில் --- பெரிய மேரு மலையில்,
அன்று வரைந்தவன் இளையோனே --- அந்நாள்
எழுதினவருமான விநாயக மூர்த்தியின் இளையவரே!
பாவையாள் குற மங்கை --- பதுமை போன்றவளான குறவர் மகள் வள்ளிபிராட்டியின்,
செழும் தனபார மீதில் --- செழித்து கனத்த
கொங்கைகளின் மீது,
அணைந்து முயங்கிய –-- தழுவிக் கலந்ததனால்,
பாகம் ஆகிய சந்தன குங்குமம் --- ஒருபாதி
யளவில் சேர்ந்த சந்தனம் குங்குமப் பூ இவைகள் மணக்கும்,
அணிமார்பா --- அழகிய திருமார்பை உடையவரே!
சீயமாய் உருவம் கொடு வந்து ---
சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து,
அசுர ஈசன் மார்பை இடந்து --- அசுரர்
தலைவனாகிய இரணியனுடைய மார்பைப் பிளந்து,
பசும் குடர் சேர வாரி அணிந்த --- பசியகுடலை ஒரு சேரவாரி மாலையாக அணிந்துகொண்ட,
நெடும் புயன் மருகோனே --- நீண்ட
புயங்களையுடைய நாராயணரது திருமருகரே!
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர --- தேன் ஒழுகும் கடப்ப மலர் மாலைத் தரித்த
மகுடத்தையுடையவரே!
சங்கரர் தந்து அருள் தேவ நாயக ---
சிவபெருமான் பெற்றருளிய தெய்வ சிகாமணியே!
செந்தில் உகந்து அருள் பெருமாளே ---
திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கிற பெருமையில்
சிறந்தவரே!
மாய வாடை திமிர்ந்திடு --- மயக்கத்தைச்
செய்யும் வாசனைகள் பூசப்பட்ட,
கொங்கையின் மூடு சீலை திறந்த மழுங்கிகள் ---
தனங்களில் மூடுகின்ற புடவையைத் திறக்கும் நாணம் அற்றவர்கள்,
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள் --- பலருடைய
வீட்டு வாசல்கள் தோறும் சென்று சிணுங்குபவர்கள்,
பழையோர் மேல் --- முன்னாள் தங்களுடைய பழகிய நேசர்
மீது,
வால நேசம் நினைந்து அழு வம்பிகள் ---
இளமையில் வைத்த நேசத்தை நினைத்து அழுகின்ற வம்புக்காரிகள்,
ஆசை நோய் கொள் மருந்து இடு சண்டிகள் --- ஆசை
நோயைத் தருகின்ற மருந்தைக் கொடுக்கின்ற கொடியோர்கள்,
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் ---
வருகின்றவர்களின் பொருளைப் பார்த்து ஆசைப்படுகின்றவர்கள்,
எவரேனும் நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் ---
யாராக இருப்பினும் தங்களின் அன்பைப் பாடல்களின் மூலமாகப் பாடிச் சொல்லுகின்ற
கெட்டியான மனத்தினர்கள்,
காசு இலாதவர் தங்களை --- பணம் இல்லாத ஏழைகளை,
அன்பு அற --- இரக்கம் இன்றி,
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் --- நீதியுடன்
பேசுவதுபோல் பேசி நழுவ விட்ட மோசக்காரிகள்,
அவர் தாய்மார் --- அவர்களுடைய தாயார்கள்,
நீலி நாடகமும் பயில் மண்டைகள் --- நீலியின்
நாடகம் நடிக்கின்ற வேசியர்,
பாளை ஊறுகள் உண்டிடு தொண்டிகள் --- தென்னம்
பனம்பாளையில் ஊறுகின்ற கள்ளைக் குடிக்கின்ற வேலைக்காரிகள்,
நீசரோடும் இணங்கு கடம்பிகள் --- இழிந்தவர்களுடனும்
கூடுகின்ற தீயவர்களாகிய விலைமகளிரின்,
உறவு ஆமோ --- நட்பு ஆகுமோ? (ஆகாது)
பொழிப்புரை
மிகுந்த மதம் பொழிகின்ற யானை முகமுடைய
முதல்வரும், பாரதம் என்ற
இதிகாசத்தைப் பெரிய மேருமலையில் அந்நாள் எழுதியருளியவரும் ஆகிய விநாயகப்
பெருமானுக்கு இளையவரே!
பதுமை போன்ற வள்ளி யம்மையின் செழுமையான
தனங்கள்மீது அணைந்து தழுவி அதனால் குங்கும சந்தனங்கள் பொருந்திய அழகிய
திருமார்பினரே!
சிங்க வடிவங்கொண்டு இரணியன் என்ற அசுரர்
தலைவனுடைய மார்பைப் பிளந்து, பசிய குடரை ஒருசேர
வாரியெடுத்து மாலையாகத் தரித்த நீண்ட புயத்தையுடைய திருமாலின் திருமருகரே!
தேன் பொழிகின்ற கடப்ப மலர் மாலைத்
தரித்த திருமுடியை உடையவரே!
சிவபெருமான் பெற்றருளிய தெய்வநாயகரே!
திருச்செந்தூரில் மகிழ்ந்து உறைகின்ற
பெருமிதம் உடையவரே!
மயக்கத்தைப் புரிகின்ற வாசனை அணிந்த
தனங்கள் மீது மூடிய புடவையை விலக்குகின்ற நாணமற்றவர்களும், பலருடைய வீடுகளுக்கும் போய் மூக்கால்
அழுது சிணுங்குபவர்களும், பழமையாகப் பழகியவர் மீது
இளமையில் வைத்த அன்பை நினைத்து அழுகின்ற வம்பிகளும், ஆசையாகிய நோயை உண்டாக்க மருந்தைத்
தருகின்ற கொடியவர்களும், வருகின்றவர்களது
பொருளைக் கண்டு ஆசைப்படுபவர்களும்,
யாராக
இருந்தாலும் நேசத்தைப் பாடல் மூலம் பாடிச் சொல்லுகின்ற கெட்டி மனத்தினரும், பொருள் இல்லாத வறியவரை அன்பின்றி, நீதி போல பேசி அகற்றுகின்ற
மோசக்காரிகளும் அவர்களுடைய தாய்மார் போடுகின்ற நீலி நாடகத்தை நடிக்கின்ற வேசையரும், பாளையில் ஊறுகின்ற கள்ளைக் குடிக்கின்ற
வேலைக்காரிகளும், இழிந்தவர்களுடனும்
கூடுகின்றவர்களும் ஆகிய பரத்தையருடைய உறவு ஆகுமோ? ஆகாது.
விரிவுரை
மாய
வாடை திமிர்ந்திடு கொங்கை ---
மாயம்-மயக்கம்.
ஆண்களுக்கு மயக்கத்தைத் தரும் பொருட்டு விலைமகளிர் சிறந்த வாசனைப் பொருள்களைத்
தமது மார்பில் அணிந்து கொள்வர் எனக்கூறு கின்றனர்.
மூடு
சீலை திறந்த மழுங்கிகள் ---
இளைஞர்களது
உள்ளத்தைக் கவரும் பொருட்டு அம்மகளிர் தமது உடம்பின் மேலுள்ள ஆடை விலகுமாறு செய்து
நிற்பர் எனவும் கூறி, அவர்களது சாகசத்தை
அறிவுறுத்துகின்றனர்.
வாசல்
தோறும் நடந்து சிணுங்கிகள் ---
சிணுங்குதல்
- மூக்கினால் அழுகின்றாப் போல் பேசி அசைதல். அவர்கள் பலருடைய வாசல்தோறும் சென்று
தமது கண் வலை வீசி மயக்குவர்.
ஆசைநோய்
கொள் மருந்திடு சண்டிகள் ---
மருத்துவர்கள்
நோயைத் தணிக்க மருந்து தருவார்கள். இதுதான் உலக இயல்பு.
இந்த
இயல்புக்கு நேர்மாறாக இவ்விலை மகளிர் ஆசையாகிய நோய் உண்டாக்கும் பொருட்டு
மருந்தைத் தருவார்கள். அம்மருந்தை உணவிலே கலந்தும், வெற்றிலையில் ஒளித்தும் தந்து தம்மை
யடைந்தார்கள் மீளாவண்ணம் புரிவார்கள்.
“கருப்பஞ்சாறொடு அரைத்துஉள
உண்டைகள்
நிழற்கண் காண உலர்த்த, மணம்பல தடவா,மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்துஅன் பாக அளித்து” --- (நிறுக்குஞ்) திருப்புகழ்.
வாற
பேர் பொருள் கண்டு விரும்பிகள் ---
வருகின்ற-என்பது
வாற என்று மருவியது.
வருகின்ற
தனவந்தர்களின் செல்வத்தைக் கண்டு,
’அச்செல்வம்
முழுவதும் கவர்தல் வேண்டும்’ என்று கருதி, அதற்குரிய வழிவகைகளைச் செய்வர்.
எவரெனும்
நேயமே கவிகொண்டு சொல் மிண்டிகள் ---
யாராக
இருப்பினும், (மிகக்
கேவலமானவரேனும்) தம்பால் வந்தவர்களை இருத்தி, "நீர் மன்மதன், இந்திரன், சந்திரன்" என்று பதங்களை
இன்னிசையுடன் பாடி மயக்குவர்.
காசு
இலாதவர் தங்களை அன்பு அற நீதிபோல நெகிழ்ந்த பறம்பிகள் ---
பணம்
இல்லாதவர்களைப் பார்த்து, “நீர் இங்கு வருவது
முறையன்று; உமது மனைவிக்குத்
துரோகம் புரியக் கூடாது. என்ன இருந்தாலும் மனைவிதான் இம்மைக்கும் மறுமைக்கும்
துணை. ஆகவே நீர் உமது மனைவியுடன் இருந்து குடித்தனம் புரிவதே நலம்” என்று
நீதிநெறிகள் கூறுவதுபோல் கூறி அனுப்புவர். இந்த நீதியை முன்பே சொல்லியிருந்தால், உத்தமர்கள் ஆவர்.
பறம்பிகள்-சிறிய
மலைப்போன்ற தனங்களையுடையவர்.
அவர்
தாய்மார் நீலி நாடகமும் பயில் மண்டைகள் ---
விலைமகளிரின்
தாய்மார்கள் மிகுந்த தந்திரமாக ஒரு நாடகம் போல் நடித்து, வந்தவர்களின் பொருளைப் பறிப்பார்கள்.
பழையனூரில் நீலி என்ற ஒரு பேய்,
வணிகனுடைய
மனைவி போல் வந்து அவன் உயிரை வாங்கியது. அதைக் குறித்து நீலி நாடகம் என்றனர்.
பாளை
ஊறு கள் உண்டிகள் ---
தென்னை, பனை முதலிய மரங்களின் பாளைகளில் ஊறி
வழிகின்ற கள்ளைக் குடித்து மதி மயங்குவர். கள்ளுண்டார் எத்துணைக் கொடிய செயல்களையும்
செய்யத் துணிவார். பாவங்கட்கு அஞ்சாத நிலையைக் கள் உண்டாக்கும். நஞ்சு கொல்லுமே அன்றி
நரகத்தை நல்காது. கள் அறிவைக் கெடுத்து நரகத்தையும் நல்கும். ஆகவே நஞ்சினும்
கொடியது கள். கள் குடித்தவர்க்கு “இவள் தாய்”, “இவள் மனைவி,” என்ற தெளிவு இருக்காதாம். தாய்க்கும்
மனைவிக்கும் வேற்றுமை தெரியாது மதியை மயக்கும் கள், வேறு என்னதான் செய்யாது?
“தாய் இவள் மனைவி என்னும்
தெளிவு இன்றேல் தருமம் என்னாம்”
என்பது
கம்பர் வாக்கு.
கள்ளிலே
புழுக்களும் வண்டுகளும் கொசுக்களும் வீழ்ந்து மடிந்து கிடக்கும். அவற்றை வடிகட்டி
உண்பர். என்னே மதி?
வஞ்சமும்
களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சம்
என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்சமெல்
அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும்
கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே. --- கம்பர்.
நீசரோடும்
இணங்கிகள்
---
குணத்தாலும்
குலத்தாலும் ஒழுக்கத்தாலும் எத்துணை இழிந்தவர்களாய் இருப்பினும் அவர்களுடன் கலந்து
மகிழ்வர் பொதுமகளிர்.
உறவு
ஆமோ ---
இத்தகைய
தீயவர்களுடைய உறவு புனிதமான மனித வாழ்க்கையைக் கெடுக்கும். நரகத்தையும்
கொடுக்கும். ஆதலின் அவர்களது உறவு ஆகாது.
பாயு
மாமத தந்தி முகம் பெறும் ஆதி ---
யானையின்
முகத்தில் கபாலத்திலும் காதுகளிலும் மதம் பொழியும்; கபோல மதம் கன்ன மதம் என்பர். தந்தத்தை
யுடையது தந்தி. விநாயகர் யானை முகம் உடையவர் என்பது பிரணவ சொரூபர் என்பதைக்
குறிக்கும்.
யானை-அஃறிணை. விநாயகருடைய திருமேனியில் கழுத்துக்குக்
கீழ் இடைக்கு மேலுள்ள பகுதி தேவசரீரம், இடைக்குக்
கீழே உள்ளது பூதசரீரம். இவை உயர்திணை. பூதகணம், தேவகணம், விலங்குகணம், உயர்திணை, அஃறிணை ஆகிய எல்லாமான திருவுருவம்
விநாயக வடிவம். முதன்மையானவர்; முதற்கடவுள்; எந்தக் கருமம் புரிவோரும் வழிபடத்
தக்கவர்.
பாரதம்
என்ற பெருங்கதை பார மேருவில் அன்று வரைந்தவன் ---
பாரதம்
ஒரு பெரிய இதிகாசம். அதற்கு அறம் என்றும், ஜயம் என்றும் வேறு பேர்களும் உண்டு. அநேக
தருமங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு அறநூல் பாரதம். அரச தருமம், மோட்ச தருமம், ஆபத்தருமம், ஆச்சிரம தருமம் முதலிய பலப் பல
தருமங்களை மிக விரிவாகக் கூறுகின்றது. இதனை ஊன்றிப் படிப்போர் திருத்தம் உறுவர்.
அதனால்தான் விசாய முனிவர் சொல்ல,
விநாயகர்
மேருமலையில் எழுதியருளினார்.
நீடுஆழி
உலகத்து மறைநாலோடு ஐந்தென்று நிலை நிற்கவே
வாடாத
தவவாய்மை முனிராஜன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக
மாமேரு வெற்பாக வங்கூர் எழுத்தாணி தன்
கோடாக
எழுதும் பிரானைப் பணிந்துஅன்பு கூர்வாம்அரோ.
கிருஷ்ணத்வைபாயனர்
என்னும் வேதவியாசர் இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்றிருந்தனர். அந்த
யோகக் காட்சியில் கண்ட பாரத வரலாற்றைச் சுலோக வடிவாகப் பாட வேண்டுமென்று
துணிந்தனர். பாடுகின்ற கவிவாணன் பக்கலில் எழுதுகின்றவன் வேறு இருத்தல் அவசியம்.
பாடுகின்றவனே எழுதினால் பாடுகின்ற கவன சக்தி தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதி
நலம் வாய்ந்தவராக இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது
இடம் பெயர்த்து நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால்
பேராபத்தாக முடிந்துவிடும். உதாரணமாக;
"மாதேவா
சம்போ கந்தா" என்ற பதங்களை எழுதுகின்றவன் "மாதே
வா சம்போகந் தா" என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று
பாருங்கள்.
ஆதலினால், விநாயகராகிய ஐந்துகர பண்டிதரே
எழுதவல்லார் என்று வியாசர் நினைத்தனர். விநாயகமூர்த்தியை வேண்டிய தவம் இழைத்தனர்.
ஆனைமுகத்து அண்ணல் ஆகு வாகன மீது தோன்றி அருளினார். விநாயகர் விரைமலரடி மேல் வியாசர்
வீழ்ந்து பன்முறை பணிந்து, “எந்தையே! அடியேன்
பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேரு கிரியில் எழுதி உதவி செய்தல்
வேண்டும்” என்று வேண்டி நின்றனர். விநாயகர் புன்னகை புரிந்து, “அன்பனே! நன்று நன்று. நின் எண்ணம்
நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின்
காரியங்களில் இடர் கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப் பாடிக் கொண்டிருந்தால்
பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்”
என்றனர்.
வியாசர், “ஆண்டவரே! அருட்கடலே! தேவரீரைத் தவிர
இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணை வள்ளலாகிய நீர் இதனை
மன்பதைகட்கு எல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதல் வேண்டும்” என்று வேண்டி
வணங்கினார். விநாயகர், “அன்பனே! அங்ஙனமே நின்
கருத்தின்படி நாம் எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கை இருத்தல்
வேண்டும். அதாவது நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல
வேண்டும். சிறிது தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்தி விடுவோம்” என்றனர். வியாசர், “எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன்
கூறுவேன்; ஆனால் அடியேன் கூறும்
சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும்
அதற்கு உடன்பட்டனர்., வியாசர் விநாயகரைத்
தியானித்துப் பாடத் தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார்.
இடையில் மிக்கக் கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று
அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து
கொண்டனர். அவைகளை மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்கள் அமைந்த
சுலோகத்தைக் கூறினார். ஐங்கரனார் அதன்
பொருளைச்
சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டனர். இப்படியாக
விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து
எண்ணூறு. வியாசர், “இதற்குப் பொருள்
எனக்கு தெரியும்; என் மைந்தன்
சுகனுக்குத் தெரியும்., சஞ்சயனுக்குத்
தெரியுமோ தெரியாதோ” என்று அநுக்கிரமணிகா பர்வதத்தில் கூறியிருக்கின்றனர், வியாசர் மொத்தம் பாடிய சுலோகங்கள் 60 லட்சம்.
“பகைகொள் துரியோதனன்
பிறந்து
படைபொருத பாரதந்தெரிந்து
பரியது
ஒரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதுஅற வியாசன்அன்று இயம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே”
--- (குகையில்
நவ) திருப்புகழ்.
கருத்துரை
விநாயகரது இளவலே! வள்ளி மணவாளா!
திருமால் மருகா! செந்திற் கந்தா! விலைமகளிரது உறவு கலவாது ஆட்கொள்வாய்.
No comments:
Post a Comment