அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மான்போல் கண்
(திருச்செந்தூர்)
பொதுமகளிர் உறவு அற, முருகன் அருள் உற
தாந்தாத்தந்
தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போற்கண்
பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ......
முலைமாதர்
வாங்காத்திண்
டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே
ஏன்காற்பங்
காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ......
முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக ......
ளுறவாமோ
கான்பாற்சந்
தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ......
அசுரேசன்
காம்பேய்ப்பந்
தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ......
மருகோனே
தீம்பாற்கும்
பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ......
புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோது முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மான்போல்
கண் பார்வை பெற்றிடு
மூஞ்சால், பண் பாடு மக்களை
வாய்ந்தால், பொன் கோடு செப்பு எனும்......
முலைமாதர்
வாங்காத்
திண்டாடு சித்திர
நீங்காச் சங்கேதம் முக்கிய
வாஞ்சால், செஞ்சாறு மெய்த்திடு ...... மொழியாலே,
ஏன்
கால் பங்காக நற்புறு
பூங்கால் கொங்கு ஆரும் மெத்தையில்
ஏய்ந்தால், "பொன் சாரு பொன் பணம்
...... முதல் நீ தா,
ஈந்தாற்கு
அன்றோ ரமிப்பு" என,
ஆன்பால் தென் போல செப்பிடும்,
ஈண்டாச் சம்போக மட்டிகள் ...... உறவு
ஆமோ?
கான்பால்
சந்து ஆடு பொன்கிரி
தூம்பால் பைந்தோளி கண் கடை
காண்பால் துஞ்சாமல் நத்திடும் ......
அசுரஈசன்
காம்
பேய் பந்து ஆட, விக்ரம
வான் தோய்க் கெம்பீர வில்கணை
காண் தேர்க் கொண்டு ஏவும் அச்சுதன்
......மருகோனே!
தீம்பால்
கும் பாகு சர்க்கரை,
காம்பால் செந் தேறல் ஒத்து உரை
தீர்ந்தார், கங்காளி பெற்றுஅருள் ...... புதல்வோனே!
தீண்
பார்க்கு உன் போத முற்று உற,
மாண்டார்க் கொண்டு ஓது முக்கிய!
தேன்போல் செந்தூரில் மொய்த்து அருள்....பெருமாளே!
பதவுரை
கான் பால் சந்து ஆடு பொன் கிரி ---
கானகத்திலே சந்தனம் பூசிய பொன்மலை போன்ற தனங்களும்,
தூம்பால் பைந்தோளி --- மூங்கில் போன்ற திரண்ட
தோள்களும் உடைய சீதாதேவியின்,
கண் கடை காண்பான் --- கடைக்கண் பார்வையைப்
பெறும் பொருட்டு,
துஞ்சாமல் நத்திடும் --- தூக்கமேயின்றி ஆசை
கொண் டிருந்த,
அசுர ஈசன் --- அசுரர் தலைவனாகிய இராவணனுடைய,
காம் --- தலைகளை,
பேய் பந்து ஆட --- பேய்கள் பந்துபோல் எறிந்து
விளையாடுமாறு,
விக்ரம --- வீரமுள்ளதாய்,
வான்தோய் --- வானத்திலும் தோயவல்லதாய்,
கெம்பீர --- அழகுள்ளதாய் விளங்கும்,
வில் கணை --- வில்லிலிருந்து பாணத்தை,
காண் தேர் கொண்டு ஏவும் --- அழகிய தேர்மீது
இருந்து ஏவிய,
அச்சுதன் மருகோனே --- ஸ்ரீராமருடைய, - திருமருகரே!
தீம்பால் பாகு சர்க்கரை --- இனிய பால், காய்ச்சிய வெல்லம், சீனி,
காம்பால் செந்தேறல் --- மூங்கிலிலிருந்து
முற்றிய தேன்,
ஒத்து --- இவைகளை நிகர்த்த இனியரும்,
உரை தீர்ந்தார் --- சொற்களுக்கு
எட்டாதவருமாகிய சிவமூர்த்தியும்,
கங்காளி --- பார்வதியும்,
பெற்று அருள் புதல்வோனே --- ஈந்தருளிய குமாரரே!
தீண் பார்க்கு --- திண்ணிய பூமியில்,
உன்போதம் முற்று உற --- உமது திருவடி ஞானம்
முழுதும் பொருந்தப் பெற்ற,
மாண்டார் கொண்டு ஓது முக்கிய --- பெருமை உடையவர்களைக்
கொண்டு ஓதப்பெற்ற சிறந்தவரே!
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே
--- அடியார் கூட்டங்கள் வண்டுகள் போல் திருச்செந்தூரில் நெருங்க வைத்து அருள்கின்ற
பெருமையிற் சிறந்தவரே!
மான்போல் கண்பார்வை பெற்றிடு மூஞ்சால் ---
மான்போன்ற கண்பார்வையுடைய முக அழகால்,
பண்பாடு மக்களை வாய்ந்தால் --- பண்பாடுடைய
ஆண்கள் கிடைத்தால்,
பொன் கோடு --- தங்க மலையையும்,
செப்பு எனும் --- சிமிழையும் ஒத்த,
முலைமார் --- தனங்களையுடைய பொதுமகளிர்,
வாங்கா திண்டாடு --- தம்பால் வந்தவரைப்
பிடித்துத் திண்டாட வைப்பதும்,
சித்திரம் நீங்கா --- விசித்திரம் விலகாததும்,
சங்கேதம் --- ஒரு குறிப்புடன் கூடியதும்,
செம்சாறு --- செவ்விய இனிய ரசம் போன்றதும்,
மெய்த்திடு மொழியாலே --- மெய் போன்றதுமான சொற்களினால்,
ஏன் கால் பங்கு ஆக --- என்னுடைய பக்கத்தில்
வாரும் என்று அழைத்துச் சென்று,
நட்பு உறு --- நன்மை தரும்,
பூ கால் கொங்கு ஆரும் --- பூவின் காற்றினால்
நறுமணம் நிறைந்த,
மெத்தையில் ஏய்ந்தால் --- படுக்கையில் பொருந்தியவுடன்,
பொன்சாரு பொன் பணம் முதல் நீதா ---
பொன்னாலாகிய காசுகளை முதலில் நீ கொடு,
ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என --- அப்படி
பணங்கொடுத்தவற்குத் தானே கூட்டுறவு என்று,
ஆன்பால் தேன்போல் செப்பிடும் --- பசுவின்
பாலும் தேனும் போலக் கூறுகின்றவரும்,
ஈண்டா சம்போக மட்டிகள் --- அருகில் நெருங்காத
போக மகளிருமாகிய பரத்தையருடைய,
உறவு ஆமோ --- நட்பு ஆகுமோ? ஆகாது.
பொழிப்புரை
கானகத்திலே இருந்தவரும், சந்தனம் பூசிய தனங்களும், மூங்கில் போன்ற பசிய தோள்களும்
உடையவருமான சீதா பிராட்டியாருடைய கடைக்கண் பார்வையின் பொருட்டு காம வெறிப்
பிடித்து இரவு பகலாகத் தூங்காதிருந்த இராவணனுடைய தலைகளைப் பேய்கள் பந்துபோல்
எறிந்து ஆடுமாறு, வீரமும், விண்ணில் தோய்கின்ற கெம்பீரமும், உடைய வில்லினின்று கணையை அழகிய
தேரிலிருந்து ஏவிய ஸ்ரீராமபிரானுடைய திருமருகரே!
இனிய பால், பாகு, சர்க்கரை, மூங்கிலில் இருந்து வழிகின்ற தேன்
இவைகள் போன்றவரும், உரைகட்கு, எட்டாதவரும் ஆகிய சிவமூர்த்திக்கும்
உமாதேவிக்கும் புதல்வரே!
திண்ணிய நிலத்தில் உமது மெய்யுணர்வு
முழுவதும் பெற்று மேம்பட்டவர்களைக் கொண்டு ஓதப்பெறுகின்ற சிறந்தவரே! வண்டுகள் போல்
அடியார்கள் நிறைந்துள்ள திருச்செந்தூரில் உறைகின்ற பெருமிதம் உடையவரே!
மான்போன்ற மிரண்ட விழிகளையுடைய
முகத்தின் அழகால், தமக்கு உரிய ஆண்கள்
கிடைத்தால், பொன்மலை சிமிழ்போன்ற
தனமுடைய பொது மகளிர், அவர்களை வசஞ்செய்து
திண்டாட வைப்பதும், விசித்திரமானதும், ஒரு குறிப்பையுடையதும், முக்கியம் போன்றதும், ஆசையை வளர்ப்பதும், இனிய ரசம் போன்றதும், உண்மை போன்றதுமாகிய மொழிகளால், என் அருகில் வாரும் என்று அழைத்து, நல்ல மலர்க் காற்றினால், மணம்நிறைந்த சயனத்தில் பொருந்தியவுடன், “முதலில் நீ பொற்காசைக்கொடு, பணம் தந்தவருக்குத்தானே கூட்டுறவு”
என்று பசுவின் பால் தேன்போன்ற சொற்களைச் சொல்லி, நெருங்காமலேயே, மருட்டிடும் போக மாதர்களின் உறவு ஆகுமோ? ஆகாது.
விரிவுரை
இப்பாடலில் சுவாமிகள் முதற்பகுதி நான்கு
அடிகளிலும் விலைமகளிருடைய சாகசங்களைக்கூறி, மக்கள் அந்த ஆசை நெறியில் செல்வது பிழை
என்று அறிவுறுத்துகின்றனர்.
மூஞ்சால் ---
முகம்-என்பது
மூஞ்சு என வழங்குகின்றது.
ஏன்
காற் பங்காக
---
என்-என்பது
ஏன் என சந்தத்துக்காக நீண்டது. ஆடவரை என் அருகில் வாரும் என அழைத்து
இன்புறுத்துவர்.
பூங்காற்
கொங்காரு மெத்தை ---
கால்-காற்று.
மலர்க் காற்று. அன்றியும் கால் என்பதைத் தாள் எனக் கொண்டு, பூவின் தாள் என்று கூறினும் அமையும்.
ஆண்பாற்
றென் போல
---
ஆண்பால்
தென்-இத்தொடரில் 'தேன்' என்பது 'தென்' எனக் குறுகியது. கான்பால்:-அசோகவனம்.
கட்கடை
காண்பான் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன் ---
சீதாபிராட்டியின்
கடைக்கண் பார்வை தன்மீது விழுமோ என்று ஆசைப் பட்டு,மோக வெறியால் தூக்கத்தைத் துறந்து
ஏக்கமுற்றுக் கிடந்தான் இராவணன்.
காம்
பேய் பந்தாட
---
கம்-தலை.
கம் என்பது காம் என நீண்டது.
காண்தேர் ---
காண்-அழகு.
அழகிய இந்திரனுடைய தேரின்மீது ஸ்ரீராமர் ஆரோகணித்து இராவண வதம் புரிந்தார்.
இராமாயணத்தில் தேரேறு படலம் என்றே ஒரு பகுதி வருகின்றது.
தீம்பால் ---
இனிய
பால்
காம்பால்
செந்தேறல்
---
தேறல்-தேன்.
காம்பு-மூங்கி, மூங்கிலில் தேன் கூடு
கட்டி அதிலிருந்து வழிகின்ற தேன். இறைவன் பாலினும் இனியன் ; கற்கண்டினும் இனியன்; தேனினும் இனியன். இன்னும் நாம் எதனை
எதனை இனிமை என்று கருதுகின்றோமோ அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட இனியன் இறைவன்.
“கனியினும் கட்டி பட்ட
கரும்பினும்
பனிமலர்க்
குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி
கவித்து ஆளும் அரசினும்
இனியன்
தன்அடைந்தார்க்கு இடைமருதனே --- அப்பரடிகள்
உரை
தீர்ந்தார்
---
உரைப்பார்
உரைகட்கு எட்டாதவன் இறைவன். “மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே” என்கிறார்
மணிவாசகர்.
“நால்வேதத் தப்பால்
நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்துநின்ற
சொலற்கரிய சூழலாய்” --- அப்பர்
தீண்பார் ---
திண்
என்பது தீண் என நீண்டது. திண்ணிய பூமி.
உன்போத
முற்றுற மாண்டார் ---
இறைவனுடைய
திருவடி ஞானம் முற்றும் எய்திய பெருமையுடையார். மாண்டார்-மாட்சிமையுடையோர்.
கருத்துரை
திருமால் மருகரே! சிவகுமாரரே! செந்திற்
கந்தவேளே! பொதுமகளிரது உறவு அகல அருள் புரிவீர்.
No comments:
Post a Comment