ஊதிமலை - 0406. கோதிமுடித்து
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோதி முடித்து (ஊதிமலை)

முருகா!
ஞானநெறியைத் தந்து, உன்னையே ஓத அருள்.


தான தனத்தத் தனத்த தந்தன
     தான தனத்தத் தனத்த தந்தன
          தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான


கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
     சூது விதத்துக் கிதத்து மங்கையர்
          கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே

கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
     ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
          கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே

நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
     போதக மற்றெச் சகத்தை யுந்தரு
          நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே

நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
     தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
          நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே

சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
     ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
          சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே

ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
     காரண பத்தர்க் கிரக்க முந்தகு
          ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ......ரொளியோனே

ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
     காபர ணத்திற் பொருட் பயன்றரு
          ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கோதி முடித்துக் கனத்த கொண்டையர்,
     சூது விதத்துக்கு இதத்து மங்கையர்,
          கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே,

கோழை மனத்தைக் கெடுத்து, வன்புல
     ஞான குணத்தைக் கொடுத்து, நின்செயல்
          கூறும் இடத்துக்கு இதத்து நின்று,அருள் ...... புரிவாயே!

நாத நிலைக்குள் கருத்து உகந்து, ருள்
     போதக! மற்ற எச் சகத்தையும் தரு
          நான்முகனுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே!

நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது
     தீரிடுதற்குப் பதத்தையும் தரு
          நாயகர் புத்ரக் குருக்கள் என்றுஅருள் ...... வடிவேலா!

தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்தஎன் ...... இசையோடே

சூழ நடித்துச் சடத்தில் நின்று,யிர்
     ஆன துறத்தற்கு இரக்கமும், சுப
          சோபனம் உய்க்கக் கருத்தும் வந்துஅருள் ...... புரிவோனே!

ஓத எழுத்துக்கு அடக்கமும், சிவ
     காரண பத்தர்க்கு இரக்கமும், தகு
          ஓம் என் எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ......ஒளியோனே

ஓதி இணர்த்திக் குகைக்க் இடும் கனக
     ஆபரணத்தில் பொருள் பயன்தரு
          ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் ...... பெருமாளே.


 பதவுரை

      நாத நிலைக்கு உள் --- சிவ தத்துவத்தில்,

     கருத்து உகந்து அருள் --- கருத்து வரும்படி மகிழ்ந்து அருள் புரியும்,

     போதக --- ஞானகுருவே!

       மற்று எ சகத்தையும் தரும் --- சிவலோகந் தவிர மற்ற எல்லா உலகங்களையும் படைக்கும்,

     நான்முகனுக்கு --- பிரமதேவருக்கு,
    
     கிளத்து --- நல்லறங்களைக் கூறும்,

     தந்தையின்  --- நாராயணருடைய,

     மருகோனே --- திருமருகரே!

      நாடும் அகத்து எற்கு --- தேவரீரையே நாடுகின்ற உள்ளமுடைய அடியேனுக்கு,

     இடுக்கண் வந்தது --- துன்பம் நேர்ந்தது,

     தீரிடுதற்கு - அத்துன்பம் தீரும் பொருட்டு,

     பதத்தையும் தரும் --- திருவடியைத் தந்தவரே!

      நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் --- சிவபிரான் பிள்ளைக் குருவே என்று அன்புடன் அழைத்துருளிய,

     வடிவேலா --- கூரிய வேலவரே!

      தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டீகுக்கு டிண்டிடி தோதிமி தித்தித் தனத்த தந்த என் இசையோடே --- தோதிமி தித்தித்................தனத்த தந்த என்று ஒலிக்கும் இசையுடன்,

     சூழ நடித்து --- அடியவர்கள் சூழ நடனம் புரிந்து,

     சடத்தில் நின்று உயிர் ஆன துறத்தற்கு --- அடியேன் உடலினின்றும் உயிரைவிட முயன்றபோது,

     இரக்கமும் --- அடியேன் மீது இரக்கமும்,

     சுபசோபனம் உய்க்க கருத்தும் --- அடியேனை சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பிக்கத் திருவுள்ளமும் கூடி,

     வந்து அருள் புரிவோனே --- என்முன் தோன்றி அருள்புரிந்தவரே!

      ஓத எழுத்துக்கு அடக்கமும் --- ஓதப்படும் மந்திரங்கட்கு உட்பொருள் என்றும்,

     சிவகாரண பத்தர்க்கு இரக்கமும் --- சிவ சம்பந்தமான பத்தர்களிடத்தில் இரக்கம் உள்ளவன் என்றும்,

     தகு ஓம் என்னும் எழுத்துக்கு உயிர்ப்பும் என் --- தகுந்த ஓங்கார எழுத்துக்கு உயிர்நாடி என்றும் சொல்ல நின்ற,

     சுடர் ஒளியோனே --- பேரொளிப் பொருளே!

       ஓதி இணர்த்தி --- ஒதிய மரம் பூத்து,

     குகைக்கு இடும் --- குகையில் உதிர்க்கின்ற,

     கனக ஆபரணத்தின் --- பொன்னாபரணம் போன்ற,

     பொருள் பயன் தரு --- அரிய முத்திப் பயனைத் தருகின்ற,

     ஊதி கிரிக்கு உள் --- ஊதிகிரி என்ற மலை மீது,

     கருத்து உகந்து அருள் --- உள்ளம் மகிழ்ந்து வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      கோதி முடித்து கனத்த கொண்டையர் --- சிக்கு எடுத்து முடித்த பெரிய கூந்தலை உடையவர்கள்,

     சூது விதத்துக்கு இதத்து மங்கையர் --- வஞ்சனை வழிகளுக்கு நன்கு வழி செய்யும் பொது மகளிரை,

     கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே --- கூடுவதால் வரும் அற்ப இன்பத்தை மனத்தில் நினையாமல்,

     கோழை மனத்தை கெடுத்து --- திடமில்லாத மனத்தை ஒழித்து,

     வன்புல ஞான குணத்தை கொடுத்து --- கூரிய மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தைத் தரப் பெற்று,

     நின் செயல் கூறும் இடத்துக்கு --- உமது திருவிளையாடல்களைப் பேசும் இடங்களில்,

     இதத்து நின்று --- இன்பம் ஊற அடியேன் நிற்கும்படி,

     அருள் புரிவாயே --- திருவருள் புரிவீராக.

பொழிப்புரை

     சிவதத்துவத்தில் கருத்து வரும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞானகுருவே!

     சிவலோகம் தவிர மற்ற எல்லா உலகங்களையும் படைக்கும் பிரமனுக்கு அறிவுரைகள் கூறும் தந்தையாகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

     தேவரீரை நாடுகின்ற உள்ளமுடைய அடியேனுக்கு வந்த துன்பந் தீரும்படி திருவடியைத் தந்தவரே!

     சிவபெருமான் “புத்திர குருவே! என்று அழைத்தருளிய கூரிய வேலாயுதரே!

     தேதிமிதித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதிமி தித்தித் தனத்த தந்த என்ற ஒலிகள் அமைந்த இசையுடன், அடியார்கள் சூழ நடனஞ்செய்து, உடம்பினின்றும் உயிரைவிட அடியேன் துணிந்தபோது என்மீது, இரக்கமும், எனக்கு மங்கள நலன்கள் வாய்க்குமாறு திருவுள்ளமும் பற்றி, என்முன் வந்து அருள்புரிந்தவேர!

     ஒதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ சமபந்தமான பத்தர்களிடத்தில் கருணையுள்ளவர் என்றும், சிறந்த பிரணவ மந்திரத்துக்கு உயிர்நாடி யென்றும் சொல்லத்தக்க ஒளிமயமானவரே!

     ஒதியமரம் பூத்துக் குலுங்குகையில் மலர்களை உதிர்க்கின்றதும், பொன்னாபரணம் போன்ற அரிய முத்தி நலனைத் தர வல்லதுமான ஊதிமலையில் உள்ளம் உவந்து உறைகின்ற பெருமிதமுடையவரே!

      கோதி முடித்த பெரிய கூந்தலையுடையவர்கள்; வஞ்சனை வழிகளுக்கு வழிவகுக்கின்ற பொது மகளிரைக் கூடுவதால் வரும் அற்ப இன்பத்தை மனதில் நினையாமல், திடமில்லாத மனத்தை ஒழித்து, உறுதியான அறிவையும் ஞான குணத்தையும் கொடுத்து, உமது திருவிளையாடல்களைப் பேசும் இடங்களில் இன்பம் ஊற அடியேன் நிற்கும்படி திருவருள் புரிவீராக.


விரிவுரை

அற்பச் சுகத்தை நெஞ்சினில் நினையாதே ---

உலக இன்பம் அனைத்தும் அற்பமே ஆகும்.

தினைத்துணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே”

என்கிறார் மாணிக்கவாசகர்.

உயா்ந்த அல்வா ஆனாலும் நுனி நாக்கிலிருந்து அடி நாக்குப் போம் அளவுதான் சுவை.

சில விநாடிகளில் மறையும் இன்பத்தைப் பெரிதாக எண்ணி மாந்தர்கள் மடிகின்றார்கள்.

கோழை மனத்தைக் கெடுத்து ---

கோழை - திடமின்மை. கோழையுள்ளம் - உறுதியில்லாத மனம்.

இந்தவுலகத்தில் கோழை மனம் படைத்தவர்கள்தான் மிகுதியாக எங்கும் இருக்கின்றார்கள். அதனால் இராமலிங்க அடிகள் “கோழையுலகு” என்று குறிக்கின்றார்கள்.

வன்புல ஞானகுணத்தைக் கொடுத்து ---

புலம் - அறிவு. வன்புலம் - திடஞானம். ஞானமயமான குணம்.


நின்செயல் கூறும் இடத்துக்கு இதத்து நின்றருள் புரிவாயே ---

முருகப்பெருமானுடையப் புகழையெடுத்துக் கூறுகின்ற இடத்தில் அன்புடன் இருந்து கேட்டு மகிழவேண்டும். இத்தகைய நலனைத் தருமாறு சுவாமிகள் முருகனிடம் முறையிடுகின்றார்.

நாத நிலைக்குள் கருத்து உகநது அருள் போத ---

நாதம் - சிவதத்துவம். அந்த சிவ தத்துவத்துக்குள் கருத்து செல்லும் வண்ணம் உபதேசிக்கும் ஞானதேசிகன் முருகன். நாதம் 36-ஆவது தத்துவம்.

நாடு மகத்தெற்கு இடுக்கன் வந்தது தீரிடுதற்குப் பதத்தை யுந்தரும் ---

முருகனையே நாடுகின்ற உள்ளத்தையுடைய அருணகிரி நாருக்கு வந்த துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு முருகன் தன் பாதாம்புயத்தைத் தந்தருளினார். இது அவருடைய சரித்திரக் குறிப்பு.

சடத்தினின்றுயிரா னதுறத்தற் கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் புரிவோனே ---

அருணகிரியார், தமக்குற்ற பிணியின் மிகுதியால் உயிர் துறக்க முயன்றபோது, கந்தவேள் கருணையுடன் காட்சிதந்து ஆட்கொண்ட வரலாற்றை இந்த அடி குறிக்கின்றது.


ஓத எழுத்துக்கு அடக்கமும் ---

ஓதப்படுகின்ற எழுத்துக்களாகிய மந்திரங்கள் உட்பொருள் முருகவேள்.

ஓம் என் எழுத்துக்கு உயிர்ப்பும் என் ---

ஓங்கார எழுத்தின் உயிர் நாடியாக விளங்குபவர் குமாரக் கடவுள்.

ஓதி இணர்த்திக் குகைக்கிடும் ---

"ஒதி" என்பது "ஓதி"யென வந்தது. ஒதிய மரங்கள் நல்ல மலர்களைக் குகையில் இட்டு நிரப்பும் வளப்பமுள்ள மலை ஊதி மலை.

இம்மலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 கல் தொலைவில் உள்ளது.

கருத்துரை

ஊதிமலை முருகா, ஞானகுணத்தைத் தந்து உனை வணங்க அருள்செய்வீர்.


No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...