திரு வேட்டக்குடி
                                             திரு வேட்டக்குடி

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்காலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. தரங்கம்பாடியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து இடதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். அருகில் திருவிடைக்கழி உள்ளது.


இறைவர்                   : சுந்தரேசுவரர், திருமேனியழகர்.

இறைவியார்               : சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

தல மரம்                    : புன்னை (தற்போது இல்லை)

தீர்த்தம்                     : தேவதீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - வண்டிரைக்கும் மலர்


         பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாறு சொல்கிறது. இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.

         கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம். அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளது.

         கருவறை பிரகாரத்தில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்திகளாக தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது.

         அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை "சாந்தநாயகி" என அழைக்கின்றனர். உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

         மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வற்கடத்தும் வாட்டக்குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் வேட்டக்குடி மேவு மேலவனே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையும் திறந்திருக்கும்.திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 442
பரமர் தந்திருப் பறியலூர் வீரட்டம் பரவி,
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி,
அரவு அணிந்தவர் பதிபல அணைந்து,முன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொளச் செல்வார்.

         பொழிப்புரை : சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து, பொருந்திய அன்பால் அங்கு நின்றும் கடலின் கரையை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரின் பல திருப்பதிகளையும் சென்று வணங்கிச் சீகாழித் தலைவரான பிள்ளையார், அங்கங்கும் தொண்டர்கள் சூழ வந்து வரவேற்கச் செல்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 443
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
         குடிபணிந்து,அங்கு அலைவாய்ப் போகி,
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்டு
         அகன்பதிகள் கலந்து நீங்கி,
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்,
         குண்டர்சாக் கியர்தம் கொள்கை
படிஅறியப் பழுதுஎன்றே மொழிந்து உய்யும்
         நெறிகாட்டும் பவள வாயர்.

         பொழிப்புரை : அடியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையத் திருவேட்டக்குடியைச் சென்று வணங்கி, அவ்விடத்தினின்றும் கடற்கரை வழியே சென்று மணம் கமழும் மலர்களையுடைய வயல்கள் நிறைந்த சோழநாட்டின் பெரும்பதிகளை அடைந்து, உள்ளம் குளிர வணங்கி, அவற்றினின்றும் நீங்கிச் சமண சாக்கியர்களின் கொள்கைகள் குற்றம் உடையவை என்று உலகம் அறிய எடுத்துக் காட்டி, உய்யும் நெறியைக் காட்டும் பவள வாயை உடைய பிள்ளையார் கொடிகள் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த தருமபுரத்தை அடைந்தார்.

         திருவேட்டக்குடியில் அருளிய பதிகம்: `வண்டிரைக்கும்' (தி.3 ப.66), பண் - பஞ்சமம்.


3. 066    திருவேட்டக்குடி                      பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வண்டுஇரைக்கும் மலர்க்கொன்றை
         விரிசடைமேல் வரிஅரவம்
கண்டுஇரைக்கும் பிறைச்சென்னிக்
         காபாலி, கனைகழல்கள்
தொண்டுஇரைத்துத் தொழுதுஇறைஞ்ச,
         துளங்குஒளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்திரைக்கள் கொணர்ந்துஎறியும்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து , வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவ பெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க , விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 2
பாய்திமிலர் வலையோடு
         மீன்வாரிப் பயின்றுஎங்கும்
காசினியில் கொணர்ந்துஅட்டும்
         கைதல்சூழ் கழிக்கானல்
போய்இரவில் பேயோடும்
         புறங்காட்டில் புரிந்துஅழகார்
தீஎரிகை மகிழ்ந்தாரும்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில் , வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க , நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான் .


பாடல் எண் : 3
தோத்திரமா மணல்இலிங்கம்
         தொடங்கிய ஆநிரையின்பால்
பாத்திரமா ஆட்டுதலும்,
         பரஞ்சோதி பரிந்துஅருளி
ஆத்தம்என மறைநால்வர்க்கு
         அறம்புரிநூல் அன்றுஉரைத்த
தீர்த்தமல்கு சடையாரும்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து , தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான் , தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான் . அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 4
கலவம்சேர் கழிக்கானல்
         கதிர்முத்தம் கலந்துஎங்கும்
அலவம்சேர் அணைவாரிக்
         கொணர்ந்துஎறியும் அகன் துறைவாய்
நிலவம்சேர் நுண்இடைய
         நேரிழையாள் அவளோடும்
திலகம்சேர் நெற்றியினார்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய , கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில் , ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு , திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 5
பங்கம்ஆர் கடல்அலறப்
         பருவரையோடு அரவுஉழலச்
செங்ண்மால் கடையஎழு
         நஞ்சுஅருந்தும் சிவமூர்த்தி,
அங்கநால் மறைநால்வர்க்கு
         அறம்பொருளின் பயன்அளித்த
திங்கள்சேர் சடையாரும்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற , மேருமலையை மத்தாகவும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு , சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி . நால் வேதங்களையும் , அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 6
நாவாய பிறைச்சென்னி
         நலந்திகழும் இலங்குஇப்பி
கோவாத நித்திலங்கள்
         கொணர்ந்துஎறியும் குளிர்கானல்
ஏஆரும் வெம்சிலையால்
         எயின்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர் . அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும் , கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்க்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 7
பால்நிலவும் பங்கயத்துப்
         பைங்கானல் வெண்குருகு
கான்நிலவு மலர்ப்பொய்கைக்
         கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோடு
         ஒருபாகம் பிரிவுஅரியார்
தேன்நிலவு மலர்ச்சோலைத்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர , பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க , மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும் , தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும் , தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமா தேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான் .


பாடல் எண் : 8
துறைஉலவு கடல்ஓதம்
         சுரிசங்கம் இடறிப்போய்
நறைஉலவும் பொழில்புன்னை
         நல்நீழற் கீழ்அமரும்
இறைபயிலும் இராவணன்தன்
         தலைபத்தும் இருபதுதோள்
திறல்அழிய அடர்த்தாரும்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச , தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர் .


பாடல் எண் : 9
அருமறைநான் முகத்தானும்
         அகலிடம்நீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்புஅரிய
         எரிஉருவாய் நீண்டபிரான்,
வருபுனலின் மணிஉந்தி
         மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும் , மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின் , வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய் , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 10
இகழ்ந்துஉரைக்கும் சமணர்களும்
         இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துஉரையாப் பாவிகள்சொல்
         கொள்ளேன்மின் பொருள்என்ன,
நிகழ்ந்துஇலங்கு வெண்மணலின்
         நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்துஇலங்கு செஞ்சடையார்
         திருவேட்டக் குடியாரே.

         பொழிப்புரை : வேதவேள்வியை நிந்தனை செய்யும் சமணர்களும் , பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள் . ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள் .
   
பாடல் எண் : 11
தெண்திரைசேர் வயல்உடுத்த
         திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
         தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்தமிழ்நூல் இவைபத்தும்
         உணர்ந்துஏத்த வல்லார்போய்
உண்டுஉடுப்புஇல் வானவரோடு
         உயர்வானத்து இருப்பாரே.

         பொழிப்புரை : தெளிந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சோலைகள் சூழ்ந்த , திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும் , ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும் , உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர் .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...