திருக்கடவூர் மயானம்
(திருமெய்ஞ்ஞானம்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில், "திருமயானம்", "திருமெய்ஞ்ஞானம்"
என்று வழங்கப்படுகின்றது.
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடவூர்
அமிர்தகடேசுவரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
இறைவர்
: பிரம்மபுரீசுவரர்
இறைவியார்
: மலர்க்குழல் மின்னம்மை
தலமரம் :
கொன்றை
தீர்த்தம் : காசி தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - வரிய மறையார்.
2. அப்பர் - குழைகொள்
காதினர்.
3. சுந்தரர் - மருவார்
கொன்றை.
சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம்
என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம்
ஆகும். மயானம் என்பது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீறாக்கிவிட்ட இடமாகும்.
ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து
நீறாக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம்.
தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும்
உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை
உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும்
வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம்
திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் திருப்பதிகம்
பாடப் பெற்ற தலங்களில் திருக்கடவூர் மயானம் என்னும் திருத்தலமும் ஒன்றாகும்.
மேற்குப் பார்த்த சிவத்தலங்களில்
இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய
வெளிப் பிரகாரம் காணலாம். நேர் எதிரே உள்ள 3 நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. கோபுர வாயில் வழியாக
உள்ளே சென்றால் மூலவர் பிரம்மபுரீசுவரர் தனி கருவறையில் சுற்றுப் பிரகாரத்துடன்
மேற்கு நோக்கி அருள் புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் முருகர் சிங்காரவேலர்
என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில்
வில்லும், அம்பும் கொண்டு பாதக்
குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.
ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில்
தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக
ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில்
கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு
நோக்கி அருள் புரிகிறாள்.ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது.
இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு
தான் திருக்கடையூர் அமிர்தகடேசுவரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர்
சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார்
என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம்
கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன
என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது
சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின்
திருமுடியில் காணப்படுகிறது. இத்தல பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி
மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும்
தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருக்கடவூர் சென்று அமிர்தகடேசுவரர்
ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள
பிரம்ம்புரீசுவரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற
கோயில்களுக்கும் சென்று வரலாம்.
அனந்தமங்கலம்: திருக்கடையூரில்
இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில்
உள்ளது அனந்தமங்கலம் இராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோயிலில் உள்ள த்ரிநேத்ர
பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
தில்லையாடி: திருக்கடையூரில்
இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் 4 கி.மி. தொலைவில் உள்ளது தில்லையாடி.
இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிரகாரம், பெரிய
கோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார்.
திருவிடைக்கழி: தில்லையாடியில்
இருந்து மேற்கே சுமார் 3 கி.மி. தொலைவில்
உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர்
திருகாமேஸ்வரர். ஆயினும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள
அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமண்யர் தான்.
தேவானூர்: தில்லையாடிக்கு
அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி
ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞான குரு பகவான் சந்நிதியும்
பார்த்து வழிபட வேண்டிய சிறப்புள்ளது. இங்குள்ள ஞான குரு பகவான் இந்திரனால்
வழிபடப் பெற்றவர்.
தரங்கம்பாடி: திருக்கடையூரில்
இருந்து தென்கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில்
உள்ள "அளப்பூர்" என்ற தேவார வைப்புத்தலம் தான் இன்றைய தரங்கம்பாடி. கடல்
அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ள இங்குள்ள சிவாலயத்தின் மூலவர்
மாசிலாநாதர். கந்தர்சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்காரம் செய்யும் தலம்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 533
இன்ன
வாறுசொல் மாலைக
ளால்துதித்து இறைஞ்சி,அங்கு அமர்நாளில்,
கன்னி
மாமதில் திருக்கட வூர்தொழக்
காதல்செய்து அருளிப்
போய்,
மன்னு
கோயில்கள் பிறபதி
வணங்கியே வாக்கின்மன்
னவரோடும்
அந்நெ
டும்பதி அணைவு உற,
கலயரோடு அடியவர்
எதிர்கொண்டார்.
பொழிப்புரை : இங்ஙனம்
சொல்மாலைகளினால் போற்றிப் பணிந்து,
அங்கு
எழுந்தருளியிருக்கும் நாள்களில்,
பகைவரால்
அழிக்கப்படாத பெருமதில் சூழ்ந்த திருக்கடவூரினைத் தொழுவதற்கு மிகவும் விருப்பம்
கொண்டு சென்று, வழியில் பிற பதிகளில்
உள்ள கோயில்களில் இறைவரை வணங்கிய வண்ணம், திருநாவுக்கரசருடனே
அப்பெரும்பதியான `திருக்கடவூரை' அடையும்போது, குங்குலியக் கலைய நாயனாருடன் அடியார்கள்
வந்து வரவேற்றனர்.
பிறபதி மன்னும்
கோயில்கள் என்பன வழுவூர், வீரட்டம், திருவிடைக்கழி முதலாயினவாகலாம் என்பர்
சிவக்கவி மணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.
பெ.
பு. பாடல் எண் : 534
மற்றுஅவ்
வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை
யார்கோயில்
சுற்று
மாளிகை வலங்கொண்டு,
காலனை உதைத்து
உருட்டிய செய்ய
பொன்சி
லம்புஅணி தாமரை வணங்கி, முன்
போற்றி உய்ந்து, எதிர்நின்று
பற்று
அறுப்பவர் "சடைஉடை
யான்"எனும்
பதிகஇன் இசைபாடி.
பொழிப்புரை : முற்கூறிய அந்த வளம்
பொருந்திய பதியைச் சேர்ந்து, இளமை பொருந்திய
ஆனேற்றையுடைய இறைவரின் வீரட்டத் திருக்கோயிலின் சுற்று மாளிகையை வலமாக வந்து, இயமனை உதைத்து உருட்டிய செம்பொன் சிலம்பணிந்த
திருவடித் தாமரைகளைத் தொழுது, துதித்து, உய்ந்து, இனிய இசையுடன் `சடையுடையானெனும்' (தி.3 ப.8) எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி,
பெ.
பு. பாடல் எண் : 535
பரவி
ஏத்திஅங்கு அரிதினில்
போந்து, பார் பரவுசீர் அரசோடு
விரவு
நண்புஉடைக் குங்குலி
யப்பெரும் கலயர் தம்
மனைமேவி,
கரைஇல்
காதல்மற் றுஅவர்அமைத்து
அருளிய விருந்து
இனிது அமர்ந்து,அங்குச்
சிரபு
ரத்தவர் திருமயா
னமும்பணிந்து
இருந்தனர் சிறப்புஎய்தி.
பொழிப்புரை : வணங்கிப் போற்றி, அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய
திருநாவுக்கரசருடனே, பொருந்திய நட்புடைய
குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி, எல்லையில்லாத அன்பினால் அவர்
அமைத்தளித்த விருந்தை இனிதாய் உண்ட பிள்ளையார், அருகிலுள்ள திருக்கடவூர்த்
திருமயானத்தையும் பணிந்து சிறப்பெய்தித் தங்கியிருந்தார்.
திருக்கடவூர்
மயானத்தில் அருளிய பதிகம் `வரிய மறையார்' (தி.2 ப.80) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும்.
2.080 திருக்கடவூர் மயானம் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
அகத்தியர் தேவாரத் திருட்டில்
இத்திருப்பதிகம் சிவன் உருவம் என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
சிவன்உருவம் --- பரையின்
வியாபகமும், பஞ்சாக்கர செபமும்
பெற்று, திருக்கோயில்
வழிபாட்டில் தலைப்பட்டு நிற்கின்ற ஆன்மா, அகக் கண்ணினாலே சிவத்தின் வடிவைத்
தரிசித்து ஆனந்தம் உற்று நிற்கும் அநுபூதி நிலை.
பாடல்
எண் : 1
வரியமறையார், பிறையார்,
மலைஓர்சிலையா வணக்கி
எரியமதில்கள்
எய்தார்,
எறியும்முசலம்
உடையார்,
கரியமிடறும்
உடையார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
பெரியவிடைமேல்
வருவார்
அவர்எம்பெருமான் அடிகளே.
பொழிப்புரை :இசைப்பாடல்களாக
அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள்
எரியுமாறு கணை தொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை
உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய
விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.
பாடல் எண் : 2
மங்கைமணந்த
மார்பர்,
மழுவாள்வலன்ஒன்று
ஏந்திக்
கங்கைசடையில்
கரந்தார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
செங்கண்வெள்ளேறு
ஏறிச்
செல்வஞ்செய்யா
வருவார்,
அங்கைஏறிய
மறியார்,
அவர் எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர்.
கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர்.
சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய
கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 3
ஈடல்இடபம்
இசைய
ஏறிமழு ஒன்று ஏந்திக்
காடுஅதுஇடமா
உடையார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
பாடல்இசைகொள்
கருவி
படுதம்பலவும்
பயில்வார்,
ஆடல்அரவம்
உடையார்,
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :ஒப்பற்ற இடபத்தின்
மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார்.
பாடல் இசைக் கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர்
எம் பெருமான் அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 4
இறைநின்று
இலங்கு வளையாள்
இளையாள்ஒருபால்
உடையார்,
மறைநின்று
இலங்கு மொழியார்,
மலையார்மனத்தின்
மிசையார்,
கறைநின்று
இலங்கு பொழில்சூழ்
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
பிறைநின்று
இலங்கு சடையார்,
அவர் எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :முன் கையில் நின்று
விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர்.
வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து
தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர்.
பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 5
வெள்ளைஎருத்தின்
மிசையார்,
விரிதோடுஒருகாது
இலங்கத்
துள்ளும்இளமான்
மறியார்,
சுடர்பொன்சடைகள்
துளங்கக்
கள்ளநகுவெண்
தலையார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
பிள்ளைமதியம்
உடையார்,
அவர்எம்பெருமான் அடிகளே.
பொழிப்புரை :வெண்மை நிறமுடைய
எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில்
ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான
தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம் பிறையைச்
சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.
பாடல்
எண் : 6
பொன்தாதுதிரு
மணங்கொள்
புனைபூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றாவெள்ஏறு
உயர்த்தது
உடையார்அதுவே ஊர்வார்
கன்றுஆஇனஞ்சூழ்
புறவில்
கடவூர்மயானம்
அமர்ந்தார்
பின்தாழ்சடையர்
ஒருவர்
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :பொன்னிறமான மகரந்தம்
உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக்
கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள்
மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து
தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 7
பாசமான
களைவார்,
பரிவார்க்குஅமுதம்
அனையார்
ஆசைதீரக்
கொடுப்பார்,
அலங்கல்விடைமேல்
வருவார்,
காசைமலர்போல்
மிடற்றார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
பேசவருவார்
ஒருவர்,
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :பாசங்களைப்
போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர்.
மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்கவரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய
அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 8
செற்றஅரக்கன்
அலறத்
திகழ்சேவடிமெல்
விரலால்
கற்குன்றுஅடர்த்த
பெருமான்
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
மற்றுஒன்றுஇணைஇல்
வலிய
மாசுஇல் வெள்ளி மலைபோல்
பெற்றுஒன்றுஏறி
வருவார்,
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :சினம் மிக்க இராவணன்
அலறுமாறு, விளங்கும் தம் சேவடி
விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில்
எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற
வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.
பாடல் எண் : 9
வருமாகரியின்
உரியார்,
வளர்புன்சடையார், விடையார்,
கருமான்உரிதோல்
உடையார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
திருமாலொடுநான்
முகனும்
தேர்ந்துங்காணமுன்
ஒண்ணாப்
பெருமான்எனவும்
வருவார்,
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :தம்மைக் கொல்ல வந்த
பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை
உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத
பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.
பாடல் எண் : 10
தூயவிடைமேல்
வருவார்,
துன்னாருடைய மதில்கள்
காயவேவச்
செற்றார்,
கடவூர்மயானம்
அமர்ந்தார்,
தீயகருமம்
சொல்லும்
சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேய்என்ன
வருவார்,
அவர்எம்பெருமான்
அடிகளே.
பொழிப்புரை :தூய விடைமீது
வருபவர். பகைவர் தம் முப்புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும்
சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர்
எம் பெருமான் அடிகள் ஆவார்.
பாடல்
எண் : 11
மரவம்பொழில்சூழ்
கடவூர்,
மன்னுமயானம் அமர்ந்த
அரவம்அசைத்த
பெருமான்
அகலம்அறிய லாகப்
பரவுமுறையே
பயிலும்
பந்தன்செஞ்சொல் மாலை
இரவும்பகலும்
பரவி
நினைவார்வினைகள்
இலரே.
பொழிப்புரை :குங்கும மரங்கள்
செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள்
முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும்
இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 247
செங்குமுத
மலர்வாவித்
திருக்கடவூர் அணைந்துஅருளி,
பொங்கியவெங்
கூற்றுஅடர்த்த
பொன்அடிகள்
தொழுதுஏத்தி,
குங்குலியக்
கலயனார்
திருமடத்தில்
குறைவுஅறுப்ப,
அங்குஅவர்பால்
சிவனடியார்
உடன்அமுது
செய்தார்கள்.
பொழிப்புரை : சிவந்த ஆம்பல்
மலர்கள் மலரும் பொய்கைகளை யுடைய திருக்கடவூரினைச் சேர்ந்து, சினம் மிகுந்து வந்த கூற்றுவனை உதைத்த
இறைவரின் அழகிய திருவடிகளை வணங்கி,
குங்குலியக்
கலய நாயனாரின் திருமடத்தில் எழுந்தருள, அவருடன்
இருந்தருளிய ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், சிவனடியார்களுடன் உணவு கொண்டருளினர்.
பெ.
பு. பாடல் எண் : 248
சீர்மன்னும்
திருக்கடவூர்த்
திருமயா னமும்வணங்கி
ஏர்மன்னும்
இன்னிசைப்பாப்
பலபாடி இனிதுஅமர்ந்து
கார்மன்னும்
கறைக்கண்டர்
கழல்இணைகள்
தொழுதுஅகன்று
தேர்மன்னும்
மணிவீதித்
திருஆக்கூர்
சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : அவ்விருவரும், சீர்மை பொருந்திய திருக்கடவூர்த்
திருமயானம் என்ற திருப்பதிக்கும் சென்று வணங்கி, அழகு உடைய இனிய இசை கொண்ட தேவாரப்
பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி,
இனிதாய்
அங்கு வீற்றிருந்தருளி, மேகத்தின் தன்மை
பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர்
பொருந்திய திருஆக்கூரைச் சென்று சேர்ந்தனர்.
குறிப்புரை : திருக்கடவூர்த்
திருமயானத்தில் `இன்னிசையாப் பலபாடி` என்றாரேனும் இதுபொழுது ஒரு திருப்பதிகமே
கிடைத்து உள்ளது. `குழைகொள்` (தி.5 ப.38) - திருக்குறுந்தொகை.
5. 038 திருக்கடவூர் மயானம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குழைகொள்
காதினர், கோவண ஆடையர்,
உழையர்
தாம்,கட வூரின் மயானத்தார்,
பழைய
தம்அடி யார்செய்த பாவமும்
பிழையும்
தீர்ப்பர் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர் ; கோவண ஆடையினர் ; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க
அண்மையில் உள்ளவர் ; தம் பழைய அடியார்கள்
செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர் .
பாடல்
எண் : 2
உன்னி
வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல்
தேன்கடவூரின் மயானத்தார்,
தன்னை
நோக்கித் தொழுதுஎழு வார்க்குஎலாம்
பின்னை
என்னார் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , தம்மை
உன்னித்தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும்
இனிப்பவர் ; தம்மை நோக்கித்
தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் `
பிறகு
அருள்செய்வோம்` என்னாது அப்போதே
அருளும் பெருங்கருணை உடையவர் .
பாடல்
எண் : 3
சூலம்
ஏந்துவர், தோல்உடை ஆடையர்,
ஆலம்
உண்டுஅமு தேமிகத் தேக்குவர்,
கால
காலர், கடவூர் மயானத்தார்,
மாலை
மார்பர், பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , சூலம்
ஏந்தியிருப்பவர் ; புலித்தோலை
உடுத்திருப்பவர் ; ஆலம் உண்டு அமுதைப்
பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர் ; மாலையணிந்த மார்பினர் .
பாடல்
எண் : 4
இறைவ
னார்இமை யோர்தொழு பைங்கழல்
மறவ
னார், கட வூரின் மயானத்தார்,
அறவ
னார்அடி யார்அடி யார்தங்கள்
பிறவி
தீர்ப்பர் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , தேவர்கள் தொழுகின்ற
பைங்கழலை உடைய இறைவர் ; வீரம் உடையவர் ; அறமே வடிவானவர் ; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர் .
பாடல்
எண் : 5
கத்து
காளி கதம்தணி வித்தவர்,
மத்தர்
தாம்கட வூரின் மயானத்தார்,
ஒத்துஒவ்
வாதன செய்துஉழல் வார்ஒரு
பித்தர்
காணும் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர் ; மதம் பொருந்தியவர் ( ஊமத்தமலரைச்
சூடியவர் ) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற
பித்தர்போல்வர் ; காண்பீர்களாக .
பாடல்
எண் : 6
எரிகொள்
மேனி இளம்பிறை வைத்தவர்,
கரியர்
தாம்கட வூரின் மயானத்தார்,
அரியர்
அண்டத்து உளோர்அயன் மாலுக்கும்
பெரியர்
காணும் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , சிவந்த தழல் வண்ணம்
கொண்ட திருமேனியும் , இளம்பிறை வைத்த
சடையும் உடையவர் ; அயிராவணம் என்ற ஆனையை
உடையவர் ; அயன் , திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும்
காண்டற்கு அரியர் ; பெரியர் ; காண்பீர்களாக .
பாடல்
எண் : 7
அணங்கு
பாகத்தர், ஆரண நான்மறை
கணங்கள்
சேர்,கட வூரின் மயானத்தார்,
வணங்கு
வார்இடர் தீர்ப்பர், மயக்குறும்
பிணங்கொள்
காடர், பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , உமை ஒருபாகம் உடையவர்
; ஆரணங்களாகிய
நான்மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர் ; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத்
தீர்ப்பவர் ; மயக்கம் மிகுவிக்கும்
பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர் .
பாடல்
எண் : 8
அரவு
கையினர், ஆதி புராணனார்,
மரவு
சேர்கட வூரின் மயானத்தார்,
பரவு
வார்இடர் தீர்ப்பர், பணிகொள்வர்,
பிரமன்
மாற்கும் பெருமான் அடிகளே.
பொழிப்புரை :கடவூர் மயானத்தாராகிய
பெருமான் அடிகள் , அரவம் உடைய கையினர் ; ஆதியிற்றோன்றிய பழமையானவர் ; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத்
தீர்ப்பவர் ; அவர்களைப் பணியும்
கொள்பவர் ; பிரமன் , மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர் .
* * * * * * * * *
9, 10. * * * * * * * * * * * * *
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருநள்ளாற்று இறைவரைத் தொழுது
திருக்கடவூர் சென்று பணிந்து, திருக்கடவூர் மயானம்
வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புா.145)
பெ.
பு. பாடல் எண் : 145
அங்கணரைப்
பணிந்துஏத்தி,
அருளினால் தொழுதுபோய்,
மங்குல்அணி
மணிமாடத்
திருக்கடவூர்
வந்துஎய்தி,
திங்கள்வளர்
முடியார்தம்
திருமயா னமும்பணிந்து,
பொங்கும்இசைப்
பதிகம் "மரு
வார்கொன்றை"
எனப்போற்றி.
பொழிப்புரை : அழகிய
நெற்றிக்கண்ணையுடைய இறைவனை அத்திருப்பதியில் பணிந்து போற்றித் திருவருள்
முன்னிற்கத் தொழுது நீங்கிப் போய்,
மேகங்கள்
தவழும் அழகிய மாடங்கள் நிரம்பிய திருக்கடவூர் என்னும் திருப்பதியை வந்தடைந்து, பணிந்து, இளம்பிறை மலரும் சடைமுடியையுடைய
பெருமானது திருமயானம் என்னும் திருப்பதியையும் பணிந்து, பொங்கும் இசையுடைய பதிகமான `மருவார் கொன்றை\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப்
போற்றி செய்து,
இத்திருப்பதிகளில்
அருளிய பதிகங்கள்:
1. திருநள்ளாறு:
செம்பொன்மேனி - தக்கேசி (தி.7 ப.68)
2. திருக்கடவூர் மயானம்:
மருவார் கொன்றை - பழம்பஞ்சுரம் (தி.7
ப.53)
7. 053 திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மருஆர்
கொன்றை மதிசூடி,
மாணிக் கத்தின்
மலைபோல
வருவார், விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப்
படைசூழ,
திருமால்
பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர்
தானவர்க்கும்
பெருமான், கடவூர் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும் திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலை
வருவதுபோல விடையின்மேல் வருவார்;
`திருமால், பிரமன், இந்திரன்` என்ற பெருந்தேவர்கட்கும், `மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்` என்பவர்கட்கும் அவரே தலைவர்.
பாடல்
எண் : 2
விண்ணோர்
தலைவர், வெண்புரிநூல்
மார்பர், வேத கீதத்தர்,
கண்ணார்
நுதலர், நகுதலையர்,
கால காலர், கடவூரர்,
எண்ணார்
புரமூன்று எரிசெய்த
இறைவர், உமையோர் ஒருபாகம்
பெண்ஆண்
ஆவர் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை
உடைய வரும், வேதத்தை உடைய இசையைப்
பாடுகின்றவரும், கண் பொருந்திய
நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத்
தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும்,
காலனுக்குக்
காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த
இறைவரும், உமை ஒருபாகமும் தாம்
ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.
பாடல் எண் : 3
காயும்
புலியின் அதள்உடையர் ,
கண்டர், எண்தோள் கடவூரர்,
தாயும்
தந்தை பல்லுயிர்க்கும்
தாமே ஆய தலைவனார்,
பாயும்
விடைஒன்று அதுஏறிப்
பலிதேர்ந்து உண்ணும்
பரமேட்டி,
பேய்கள்
வாழும் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : பேய்கள் வாழ்கின்ற
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய
சிவபெருமானார், சினங்கொள்கின்ற
புலியின் தோலாகிய உடையை உடையவர்;
நீல
கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை
யுடையவர்; திருக்கடவூரைத் தம்
ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும்
தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல்
ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில்
இருப்பவர்.
பாடல்
எண் : 4
நறைசேர்
மலர்ஐங் கணையானை
நயனத் தீயால்
பொடிசெய்த
இறையார்
ஆவர், எல்லார்க்கும்
இல்லை என்னாது
அருள்செய்வார்,
பறையார்
முழவம் பாட்டோடு
பயிலும் தொண்டர்
பயில்கடவூர்ப்
பிறையார்
சடையார், மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு
பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும்
பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன்
பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற்
சாம்பலாக்கிய இறைவராவர்; `இல்லை` என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர்
விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை
யுடையவர்.
பாடல்
எண் : 5
கொத்தார்
கொன்றை மதிசூடிக்
கோள்நா கங்கள் பூணாக
மத்த
யானை உரிபோர்த்து
மருப்பும் ஆமைத்
தாலியார்,
பத்தி
செய்து பாரிடங்கள்
பாடி ஆடப்
பலிகொள்ளும்
பித்தர்
கடவூர் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும், பிறையையும் திருமுடியிற்சூடி, கொல்லுந் தன்மையுடைய பாம்புகள்
அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத்
தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பையும், ஆமையின் ஓட்டையும் உடைய
தாலியையுடையவராய், பூத கணங்கள்
அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை
ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர்.
பாடல்
எண் : 6
துணிவார்
கீளும் கோவணமும்
துதைந்து, சுடலைப் பொடிஅணிந்து,
பணிமேல்
இட்ட பாசுபதர்,
பஞ்ச வடிமார்
பினர்கடவூர்,
திணிவார்
குழையார், புரமூன்றும்
தீவாய்ப் படுத்த
சேவகனார்,
பிணிவார்
சடையார், மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர் மயானத்தில்
எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும்
நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப்
பூசி, பாம்புகளை மேலே
அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்;
பஞ்சவடியை
அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின்
வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்;
கட்டிய
நீண்ட சடையையுடையவர்.
பாடல்
எண் : 7
கார்ஆர்
கடலின் நஞ்சுஉண்ட
கண்டர், கடவூர் உறைவாணர்,
தேர்ஆர்
அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால்
ஊன்றினார்,
ஊர்தான்
ஆவது உலகுஏழும்
உடையார்க்கு ஒற்றி
யூர்ஆரூர்
பேர்
ஆயிரவர் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய
நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்;
திருக்கடவூரில்
உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய
அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக்
கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு
ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.
பாடல்
எண் : 8
வாடா
முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில்
வேடுவனாய்க்
கோடுஆர்
கேழல் பின்சென்று,
குறுகி விசயன்
தவம்அழித்து,
நாடா
வண்ணம் செருச்செய்து,
ஆவ நாழி
நிலைஅருள்செய்,
பீடுஆர்
சடையார் மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களையுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று
போர்புரிந்து, பின்பு அவனுக்கு
அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.
பாடல்
எண் : 9
வேழம்
உரிப்பர், மழுவாளர்,
வேள்வி அழிப்பர், சிரம்அறுப்பர்,
ஆழி
அளிப்பர் அரிதனக்கு,
ஆன்அஞ்சு உகப்பர், அறம்உரைப்பர்,
ஏழை
தலைவர், கடவூரில்
இறைவர், சிறுமான் மறிக்கையர்,
பேழைச்
சடையர், மயானத்துப்
பெரிய பெருமான்
அடிகளே.
பொழிப்புரை : திருக்கடவூர்
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து
பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்கு
அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத்
தலைவராவர்; திருக்கடவூரில்
தங்குவர்; சிறிய மான்கன்றைப்
பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை
யுடையவர்.
பாடல்
எண் : 10
மாட
மல்கு கடவூரின்
மறையோர் ஏத்தும்
மயானத்துப்
பீடை
தீர அடியாருக்கு
அருளும் பெருமான்
அடிகள்சீர்
நாடி
நாவல் ஆரூரன்
நம்பி சொன்ன
நல்தமிழ்கள்
பாடும்
அடியார் கேட்பார்மேல்
பாவம் ஆன பறையுமே.
பொழிப்புரை : மாடங்கள் நிறைந்த
திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற
மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற,
அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள்
செய்கின்ற பெருமானடிகளது புகழை,
திருநாவலூரில்
தோன்றிய, `ஆரூரன்` என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப்
பாடல்களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்கின்ற
அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment