திருக் கடவூர் வீரட்டம்




திருக்கடவூர் வீரட்டம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "திருக்கடையூர்" என்று சொல்லப்படுகின்றது.

         மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் (இரயில் மார்க்கமும் இதுவே. திருக்கடையூர் நிலையத்திலிருந்து 1 கி. மீ. தொலைவில்) இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.


இறைவர்         : அமிர்தகடேசுவரர், அமிர்தலிங்கேசுவரர்.

இறைவியார்      : அபிராமி

தல மரம்          : வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)

தீர்த்தம்           : அமிர்த தீர்த்தம், சிவகங்கை.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் -   சடையுடை யானும்.

                                         2. அப்பர்   - 1. பொள்ளத்த காய,
                                                               2. மருட்டுயர் தீர,
                                                               3. மலைக்கொ ளானை.

                                      3. சுந்தரர்  -     பொடியார் மேனியனே.


    திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால், 'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.

          மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத் தருளிய தலம். பிரமனுக்கு உபதேசம் செய்த இடம்.

          மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு. இதனால் இத்தலத்திற்கு 'பிஞ்சிலராண்யம் ' என்றும் பெயர். (தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர்.)

          அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.

          திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

          உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.

          அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.

          இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.

          மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)

          சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.

          மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும். பூமிதேவி அருள் பெற்ற தலம்.

          ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும் என்று சொல்லப்படுகிறது.

          ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.

          இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.

          பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.

          கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.

          கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.

          இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

          ( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)

          இப்பதியில் அவதரித்த குங்குலியக் கலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில் சாய்ந்து யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.

          அவதாரத் தலம்   : திருக்கடவூர் (திருக்கடையூர்)
          வழிபாடு             : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்      : திருக்கடவூர்.
          குருபூசை நாள்    : ஆவணி - மூலம்

குங்குலியக் கலய நாயனார் வரலாறு

         திருக்கடவூர் சோழ நாட்டிலுள்ள ஒரு தலம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் அமிர்தகடேசுவரர் என்ற திருநாமம் கொண்டு நம்மை உய்விக்கிறார் . பால் மணம் மாறாத பாலகன் மார்க்கண்டேயனின் அன்பு அணைப்பிலே கட்டுப்பட்ட பெருமான் காலனைக் காலால் உதைத்து காலசம்மார மூர்த்தியாக வெளிப்பட்ட தலம் இதுவே.

         இத்தகைய புராணப் பெருமைமிக்க தலத்தில் வேதியர்கள் பலர் வாழ்ந்தனர் அவர்களுள் கலயனாரும் ஒருவர்  இவர் கங்கை அணிந்த மாதொருபாகன் திருவடியை இடையறாது வணங்கும் நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். தூய உள்ளமும், நல்லநெறியும் சிறந்த பக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற கலயனார், திருக்கோயிலுக்கு குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை, தவறாது பக்தியோடு செய்து வந்தார்.

         எம்பெருமானுக்குத் தூய மணம் கமழும் குங்கிலியத் தூபமிடும் தொண்டினைச் செய்ததால் இவர் குங்குலியக் கலயர் என்று பெயர் பெற்றார். கலயனார் குடும்பத்தில் வறுமை தாண்டவம் புரிந்தது. வறுமையையும் ஒரு பெருமையாகக் கொண்டு சற்றும் மனம் தளராது திருத்தொண்டினை மட்டும் இடைவிடாது சிறப்பாகவே செய்து வந்தார் கலயனார். வறுமை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. நிலங்களை விற்றார். வீட்டில் உள்ள அசையும் அசையாத பொருட்களை விற்றார். பசியினால் சுற்றமும் மக்களும் மனைவியும் பெரிதும் துன்புற்றார்கள் . இரு நாட்களாக உணவில்லாமல் வாடினர் கலயனார் தமது வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொண்டாரே தவிர குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டினை மட்டும் நிறுத்தவில்லை.

         வறுமையின் நிலை கண்டு குடும்பத்தலைவி மனம் வருந்தி தமது திருமாங்கலியத்தைக் கழற்றிக் கணவரிடம் தந்து, அதனை விற்று, நெல் வாங்கி வருமாறு கூறினார்.  

         திருமாங்கல்யத்தைப் பெற்று அதை விற்று நெல் வாங்கும் பொருட்டு புறப்பட்டார். அந்த சமயம் எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாக்  குங்குலியப் பொதியினைக் கொண்டு வந்தான் நாயனார் அவனிடம் இது என்ன பொதி ? என்று வினவினார். அவன் இது குங்குலியம் என்றான் அது கேட்ட கலயனார் அகமும் முகமும் மலர்ந்தார் .

         இறைவனின் திருவருளை என்னென்பது! கையிலே பொன்னையும் கொடுத்து, எதிரில் குங்குலியத்தையும் அல்லவா அனுப்பி வைத்திருக்கிறார். இந்த பாக்கியம் உலகில் வேறு யாருக்குமே கிட்டாது. எம்பெருமானின் திருவுள்ளம் இந்த ஏழைக்காக இரங்கியதை என்னென்பது என்று எண்ணி மகிழ்ந்தார் கலயனார். களிப்புடன் வணிகனை அணுகி, இந்த பொன்னை எடுத்துக் கொண்டு, குங்கிலியப் பொதியைக் கொடு என்றார். கலயனார், தாலியை வணிகனிடம் கொடுக்க மகிழ்ச்சியோடு வணிகனும் குங்குலியப் பொதியை அவரிடம் கொடுத்தான்.

         உடனே கலயனார், குங்குலியப்பொதியோடு விரைந்து கோயிலுக்கு சென்று குங்குலிய மூட்டையைச் சேர்த்துச் சிந்தை மகிழ்ந்தார். இறைவனின் திருநாமத்தைப் போற்றியவாறு மனைவி மக்களையும் மறந்து எம்பிரானை நினைந்து அயரா அன்புடன் வழிபாடு செய்து அங்கேயே தங்கிவிட்டார்.

         கங்கையைச் சடையிலே தரித்த சிவபெருமானின் திருவருளின்படி குபேரன் கலயனாரது திருமாளிகை முழுவதும்  நெல்லும், நவமணியும், பொன்னும், பட்டும் அளவிட முடியாத அளவிற்கு குவித்து வைத்தனன். இறைவன் களைத்து துயிலும் கலயனாருடைய மனைவியாரின் கனவில் எழுந்தருளி தமது திருவருளால் செல்வம் நிறைந்த தன்மையை உணர்த்தியருளினார்.   கலயனார் மனைவி துயிலெழுந்து வீட்டில் பொன்னும், மணியும், நெல்லும், குவிந்து கிடப்பது கண்டு திருவருளை வியந்து போற்றினார். விடியற்காலை நேரமாதலால் குளித்து முழுகி கணவனாருக்கு உணவைப் பக்குவம் செய்யத் தொடங்கினாள்.

         கலயனார்பால், காலனைச் செற்ற கண்ணுதற் கடவுள் எழுந்தருளி, "அன்பனே! உன்னுடைய இல்லத்திற்குச் சென்று, பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு பசி தீர்ந்து மகிழ்வாயாக" என்று திருவாய் மலர்ந்தார். குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க தமது  திருமனைக்கு ஓடோடி வந்தார்.

         இல்லத்தில் இருநிதிக் குவியல்கள் சேர்ந்த செல்வம் கண்டார் . திருமாங்கல்யத்துடன் திகழும் மனைவியை நோக்கி, "எப்படி இதெல்லாம்" என்று வினவ அம்மையார் தொழுது, "எம்பெருமான் அருளினால் வந்தது" என்றார். நாயனார், "எம்மையும் ஒரு பொருட்டாக ஆட்கொண்ட எந்தை ஈசனின் திருவருள் தான் என்னே?" என்று தலைமேல் கை கூப்பி வணங்கினார். பின் பலகாலும் நாயனாரும் அவர்தம் மனைவியாரும் அடியார்க்கு அமுது செய்வித்து திருத்தொண்டாற்றி வருவாராயினர்

         திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலே, பாரே வியக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை இறைவர் ஏற்படுத்தினார். திருப்பனந்தாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்தாள் தாடகை என்னும் பெண்ணொருத்தி.  இறைவழிபாடு முடிந்த பிறகு இறைவனுக்கு மாலையை அணிவிக்கும் சமயத்தில் அம்மங்கை நல்லாளின் ஆடை சற்று நெகிழ்ந்தது.

         ஆடையை இரண்டு முழங்கைகளினாலும் இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனுக்கு மாலையைப் போட முயன்ற அப்பெண் மாலையை அணிவிக்க முடியாமல் தவிக்க இறைவன், அப்பெண்ணுக்காக இரங்கிச் சற்றுச் சாய்ந்து கொடுக்க தாடகையும் மாலையணிவித்து, மகிழ்வோடு சென்றாள். அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.

         இந்நிலையில், திருப்பனந்தாள் ஆலயத்தில் சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட  நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன் முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான். திருமேனி நிமிரவில்லை. அன்பின் மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தி குங்குலியக் கலயனார் கேட்டார் இறைவனுக்குத் திருத்தொண்டு புரிந்து வரும் குங்குலியக் கலயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோயிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால் சந்நிதியைத் தூபமிட்டார் .  கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தை எம்பெருமான்  திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். கயிறு இறுகி உயிர் போகும் என்று  கவலைப்பட வில்லை நாயனார்! இறைவனுக்கு இச்சிறு தொண்டினைச் செய்ய முடியாத இந்த உயிர் இருந்தாலென்ன? பிரிந்தாலென்ன? என்ற முடிவோடு தமது முழுப் பலம் கொண்டு இழுத்தார். இறைவனைக் கயிற்றால், தன் கழுத்தோடு கலயனார் பிணைத்து இழுத்த செயல் எம்பெருமானுக்குத் தம்மைப் பக்தி எனும் கயிற்றால் கட்டி இழுப்பது போல் இருந்தது.

         அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது. எம்பெருமான் திருமேனியாம் சிவலிங்கத்தின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலயனாரின் பக்தியையும், இறைவனைக் கட்டுப்பட வைத்த அன்பின் திறத்தினையும் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, "ஐயனே! உங்கள் அன்பின் திறத்தினை என்னென்பது ! திருமாலும் அறியப்படாத எம்பெருமானின் மலரடியை அன்புமிக்க அடியார்கள் அல்லாது வேறு யாரால் அடைய முடியும் ? உம்மால் யாமும் எம் குடிமக்களும் உய்ந்தோம்  உலகிற்கே உய்வு தங்களால்தான் ஏற்பட்டது" என்றார். அரசன் திருப்பணிகளும், திருவிழாக்களும் நடத்தினான். அரசன் கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான். பின் மன நிறைவோடு தன்னகர் அடைந்தான்.

         கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். முன்போல் ஆலய வழிபாட்டை செய்யலானார்.

         திருக்கடவூர்க்கு எழுந்தருளிய சீர்காழிப் பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமானையும், திருநாவுக்கரசு நாயனாரையும் அடியார் குழாங்களையும் அன்பின்  மிகுதியினால் எதிர் கொண்டு அழைத்து, வணங்கி, தமது திருமனைக்கு புகுத்தி அருசுவை உண்டியும் படைத்து குருவருளும் திருவருளும் ஒருங்கே பெற்றார்.

         காலனையும் காமனையும் காய்ந்த கடவூர்ப் பெருமானுக்குத் தொண்டு பல புரிந்து, காலம் புகழ்பட வாழ்ந்த குங்குலியக் கலயனார், இறுதியில் இறைவன் திருவடி நீழலை இணைந்த பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

    காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.

          அவதாரத் தலம்   : திருக்கடவூர் (திருக்கடையூர்)
          வழிபாடு             : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்      : திருக்கடவூர்.
          குருபூசை நாள்    : மாசி - பூராடம்.

காரி நாயனார் வரலாறு

         மறையோர் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார். அவர் வண்தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.

         அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.

          குங்குலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.

          அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.

          மூவர் பெருமக்கள் பாடல் பெற்றத் திருத்தலம்.

      வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாறு அகற்றி நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் தென்கடையூர் ஆனந்தத் தேறலே" என்றும் "வன்மை இலாச் சொல் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும் நல் கடவூர் வீரட்ட நாயகனே" என்றும் போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 533
இன்ன வாறுசொல் மாலைக
         ளால்துதித்து இறைஞ்சி,அங்கு அமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக்
         காதல்செய்து, அருளிப் போய்,
மன்னு கோயில்கள் பிறபதி
         வணங்கியே, வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவு உற,
         கலயரோடு அடியவர் எதிர்கொண்டார்.

         பொழிப்புரை : இங்ஙனம் சொல்மாலைகளினால் போற்றிப் பணிந்து, அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நாள்களில், பகைவரால் அழிக்கப்படாத பெருமதில் சூழ்ந்த திருக்கடவூரினைத் தொழுவதற்கு மிகவும் விருப்பம் கொண்டு சென்று, வழியில் பிற பதிகளில் உள்ள கோயில்களில் இறைவரை வணங்கிய வண்ணம், திருநாவுக்கரசருடனே அப்பெரும்பதியான `திருக்கடவூரை\' அடையும்போது, குங்குலியக் கலைய நாயனாருடன் அடியார்கள் வந்து வரவேற்றனர்.

         பிறபதி மன்னும் கோயில்கள் என்பன வழுவூர், வீரட்டம், திருவிடைக்கழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவி மணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 534
மற்றுஅவ் வண்பதி அணைந்து,வீ
         ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு,
         காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன்சி லம்புஅணி தாமரை வணங்கி,முன்
         போற்றி உய்ந்து, எதிர்நின்று
பற்று அறுப்பவர் "சடைஉடை
         யான்"எனும் பதிகஇன் இசைபாடி.

         பொழிப்புரை : முற்கூறிய அந்த வளம் பொருந்திய பதியைச் சேர்ந்து, இளமை பொருந்திய ஆனேற்றையுடைய இறைவரின் வீரட்டத் திருக்கோயிலின் சுற்று மாளிகையை வலமாக வந்து, இயமனை உதைத்து உருட்டிய செம்பொன் சிலம்பணிந்த திருவடித் தாமரைகளைத் தொழுது, துதித்து, உய்ந்து, இனிய இசையுடன் `சடையுடையானெனும்' (தி.3 ப.8) எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி,

          `சடையுடையானும்' (தி.3 ப.8) எனத் தொடங்கும் பதிகம் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்ததாகும்.


பெ. பு. பாடல் எண் : 535
பரவி ஏத்திஅங்கு அரிதினில்
         போந்து,பார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புஉடைக் குங்குலி
         யப்பெரும் கலயர் தம் மனைமேவி,
கரைஇல் காதல்மற் றுஅவர்அமைத்து
         அருளிய விருந்து இனிது அமர்ந்து,அங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
         னமும்பணிந்து இருந்தனர் சிறப்புஎய்தி.

         பொழிப்புரை : வணங்கிப் போற்றி, அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய திருநாவுக்கரசருடனே, பொருந்திய நட்புடைய குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி, எல்லையில்லாத அன்பினால் அவர் அமைத்தளித்த விருந்தை இனிதாய் உண்ட பிள்ளையார், அருகிலுள்ள திருக்கடவூர்த் திருமயானத்தையும் பணிந்து சிறப்பெய்தித் தங்கியிருந்தார்.



3. 008    திருக்கடவூர் வீரட்டம்       பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சடையுடை யானும்,நெய் ஆடலா னும்,சரி கோவண
உடைஉடை யானும், மை ஆர்ந்த ஒண்கண் உமைகேள்வனும்,
கடையுடை நல்நெடு மாடம் ஓங் குங்கட வூர்தனுள்
விடைஉடை அண்ணலும், வீரட்டா னத்து அரன் அல்லனே.

         பொழிப்புரை :சடை முடியுடையவனும் , பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும் , சரிந்த கோவண ஆடையுடையவனும் , மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணையுடைய உமாதேவியின் கணவனும் , வாயில் களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக் கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ ?


பாடல் எண் : 2
எரிதரு வார்சடை யானும்,வெள் ளைஎருது ஏறியும்,
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்து ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும் , வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும் , சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட , அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

பாடல் எண் : 3
நாதனும், நள்ளிருன் ஆடினா னும்,நளிர் போதின்கண்
பாதனும், பாய்புலித் தோலினா னும்,பசு ஏறியும்,
காதலர் தண்கட வூரினா னும்,கலந்து ஏத்தவே
வேதம் அதுஓதியும் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :எல்லா உலகங்கட்கும் தலைவனும் , மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும் , அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும் , புலித்தோலாடை உடையவனும் , இடபவாகனனும் , அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?


பாடல் எண் : 4
மழுவமர் செல்வனும், மாசிலா தபல பூதமுன்
முழஒலி யாழ்குழல் மொந்தைகொட்ட முது காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித்து ஆடினா னும், கட வூர்தனுள்
விழஒலி மல்கிய வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :மழுப்படையேந்திய செல்வனும் , குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும் குழலும் இசைக்க , மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?


பாடல் எண் : 5
சுடர்மணிச் சுண்ணவெண் நீற்றினா னும்,சுழல் வாயதுஓர்
படமணி நாகம் அரைக்கசைத்த பர மேட்டியும்,
கடமணி மாவுரித் தோலினானும் கட வூர்தனுள்
விடம்அணி கண்டனும் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந் துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவனும் , அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும் , மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் , திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? விடமணி கண்டன் - ` நீலமணி மிடற்று ஒருவன் போல` ( ஔவையார் , புறநானூறு.) நினைவுகூர்க .


பாடல் எண் : 6
பண்பொலி நான்மறை பாடிஆடிப்பல ஊர்கள்போய்
உண்பலி கொண்டுஉழல் வானும்வா னின்ஒளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் திங்களா னும் கட வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ?


பாடல் எண் : 7
செவ்அழ லாய்,நிலன் ஆகிநின் றசிவ மூர்த்தியும்,
முவ்அழல் நான்மறை ஐந்தும் ஆயமுனி கேள்வனும்,
கவ்அழல் வாய்க்கத நாகம்ஆர்த் தான்கட வூர்தனுள்
வெவ்அழல் ஏந்துகை வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும், ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும், ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும், வெப்பமுடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?


பாடல் எண் : 8
அடிஇரண்டு ஒர்உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள்,தச
முடிஉடை வேந்தனை மூர்க்குஅழித்த முதல் மூர்த்தியும்,
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை ஏந்தியும் வீரட்டா னத்துஅரன் அல்லனே.
        
         பொழிப்புரை :ஓர் உடம்பில் இரண்டு கால்களும் , இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும் , முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும் , திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ ?


பாடல் எண் : 9
வரைகுடை யாமழை தாங்கினா னும்,வளர் போதின்கண்
புரைகடிந்து ஓங்கிய நான்முகத் தான்,புரிந்து ஏத்தவே
கரைகடல் சூழ்வையம் காக்கின்றா னும்,கட வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும் , ஆயர்களையும் காத்த திருமாலும் , குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க , பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன் , திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

பாடல் எண் : 10
தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரரும் சொற்பொருள் ஆகிநின் றஎமது ஆதியான்,
கார்இளங் கொன்றைவெண் திங்களா னும்,கட வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்துஅரன் அல்லனே.

         பொழிப்புரை :புத்தர்களும் , அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தெளிந்தறிதற்கரிய சொல்லும் , பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான் , கார்காலத்தில் மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும் , வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடி யுள்ளவனும் , வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய , திருக்கட வூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ ?


பாடல் எண் : 11
வெந்தவெண் நீறுஅணி வீரட்டா னத்துஉறை வேந்தனை
அந்தணர் தம்கட வூர்உளா னை,அணி காழியான்
சந்தம்எல் லாம்அடிச் சாத்தவல் லமறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடி ஆடக்கெடும் பாவமே.

         பொழிப்புரை :விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய் , அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை , அழகிய சீகாழியில் அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும்.

                                             திருச்சிற்றம்பலம்

    
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 246
திருநீல நக்கஅடிகள், சிறுத்தொண்டர், முருகனார்,
பெருநீர்மை அடியார்கள் பிறரும்விடை கொண்டுஏக,
ஒருநீர்மை மனத்துஉடைய பிள்ளையார் உடன்,அரசும்
வருநீர்செஞ் சடைக்கரந்தார் திருஅம்பர் வணங்கினார்.

         பொழிப்புரை : திருநீலநக்கரும், சிறுத்தொண்ட நாயனாரும் பெருமையுடைய மற்ற அடியார்களும் மற்றவர்களும் விடைபெற்றுக் கொண்டு செல்ல, ஒன்றுபட்ட உள்ளத்தவர்களான ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசும், வானினின்று இறங்கிவரும் கங்கைப் பெருக்கைச் சிவந்த சடையில் மறைந்து வைத்த இறைவரின் திருஅம்பர்த் திருப்பதியை வணங்கினர்.


பெ. பு. பாடல் எண் : 247
செங்குமுத மலர்வாவித் திருக்கடவூர் அணைந்துஅருளி,
பொங்கியவெங் கூற்றுஅடர்த்த பொன்அடிகள் தொழுதுஏத்தி,
குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறைவுஅறுப்ப,
அங்குஅவர்பால் சிவனடியார் உடன்அமுது செய்தார்கள்.

         பொழிப்புரை : சிவந்த ஆம்பல் மலர்கள் மலரும் பொய்கைகளை யுடைய திருக்கடவூரினைச் சேர்ந்து, சினம் மிகுந்து வந்த கூற்றுவனை உதைத்த இறைவரின் அழகிய திருவடிகளை வணங்கி, குங்குலியக் கலய நாயனாரின் திருமடத்தில் எழுந்தருள, அவருடன் இருந்தருளிய ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், சிவனடியார்களுடன் உணவு கொண்டருளினர்.

         குறிப்புரை : இது பொழுது பாடியருளிய பதிகங்கள்:

1.    `பொள்ளத்த` (தி.4 ப.31) - திருநேரிசை.
2.    `மருட்டுயர்` (தி.4 ப.107) - திருவிருத்தம்.
3.    `மலைக்கொளானை` (தி.5 ப.37) - திருக்குறுந்தொகை.


பெ. பு. பாடல் எண் : 248
சீர்மன்னும் திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி,
ஏர்மன்னும் இன்னிசைப்பாப் பலபாடி இனிதுஅமர்ந்து,
கார்மன்னும் கறைக்கண்டர் கழல்இணைகள் தொழுதுஅகன்று,
தேர்மன்னும் மணிவீதித் திருஆக்கூர் சென்றுஅணைந்தார்.

         பொழிப்புரை : அவ்விருவரும், சீர்மை பொருந்திய திருக்கடவூர்த் திருமயானம் என்ற திருப்பதிக்கும் சென்று வணங்கி, அழகு உடைய இனிய இசை கொண்ட தேவாரப் பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி, இனிதாய் அங்கு வீற்றிருந்தருளி, மேகத்தின் தன்மை பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர் பொருந்திய திருஆக்கூரைச் சென்று சேர்ந்தனர்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 031   திருக்கடவூர் வீரட்டம்               திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொள்ளத்த காய மாயப் பொருளினை, போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில், விரும்புமின், விளக்குத் தூபம்
உள்ளத்த திரிஒன்று ஏற்றி உணருமாறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : துவாரங்கள் பல உடைய உடம்பெனும் மாயப் பண்டங்களாயப் போகந் தரும் சாதனங்களான மாதர் தொகுதியில் ஏற்படும் பற்றை அறவொழிக்க வேண்டில் சிவபெருமானுக்குத் தீபம் ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருத்தொண்டுகளை விரும்பி மேற்கொள்ளுங்கள் . உள்ளமாகிய தகழியிலே உயிராகிய திரியை முறுக்கியிட்டு ஞானமாகிய தீபமேற்றிக் கொண்டிருந்து உணரு மாற்றால் உணரவல்லவர்களின் கொடுமைகள் அனைத்தையும் போக்குவர் திருக்கடவூர்ப் பெருமான் .

  
பாடல் எண் : 2
மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மையல் எய்தில்,
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வார்ஆர்,
பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : இந்நிலவுலகிலே உமக்குக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின் , யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்க விரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார் ? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப் பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார் .


பாடல் எண் : 3
பொருத்திய குரம்பை தன்னுள் பொய்ந்நடை செலுத்து கின்றீர்,
ஒருத்தனை உணர மாட்டீர், உள்ளத்தில் கொடுமை நீக்கீர்,
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : உயிரைத் தன்னுள் பொருந்தச் செய்த மனித உடம்பில் இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர் . உணர வேண்டிய ஒப்பற்ற கடவூர் வீரட்டராகிய அவரை உணர்ந்து , பெருமானாரை உணராதீராய் மனத்தில் ஏற்பட்டுள்ள தீங்கான எண்ணங்களை நீக்காதீராய் உள்ளீர் . தம்மைத் துன்புறுத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளைச் செயற்படாதொழியச் செய்யும் வழியிலே முயன்று அவற்றை அடக்கிய ஞானியருடைய கருத்தில் எப்போதும் உள்ளார் கடவூர் வீரட்டனார் .


பாடல் எண் : 4
பெரும்புலர் காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து,
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : வைகறையாமத்தில் நீராடிப் பெருமானிடத்தில் பத்தர்களாகி அரும்புகளையும் மலர்களையும் முறைப்படி பறித்துக் கொண்டு உள்ளத்தில் அன்பை ஆக்கி விருப்பத்தோடு நல்ல விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடவல்ல அடியவர்களுக்குக் கருப்பங்கட்டி போல இனிப்பவராவார் கடவூர் வீரட்டனார் .

 
பாடல் எண் : 5
தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவாறு ஒன்றும் இன்றி
விலக்குவார் இலாமை யாலே விளக்கத்தில் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தின் உள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன், கடவூர்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கடவூர் வீரட்டனீரே ! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி , ஏற்ற செயல் எதுவும் செய்யாமல் , தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால் , செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன் . என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன . யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன் .


பாடல் எண் : 6
பழி உடை ஆக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழ மாட்டேன், மாயமும் தெளிய கில்லேன்,
அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன், கடவூர்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : கடவூர் வீரட்டனீரே ! குறைபாடுகள் யாவும் உள்ள இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ் நிலத்தில் , பயன்படும் நீரை வீணாகப் பாய்ச்சி , நேரிய வழியில் வாழ மாட்டாதேனாய் , இவ்வுலக வஞ்சனையை உள்ளவாறு தெளிந்து உணரமாட்டேனாய் , பாழாகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போல உள்ளேன் .


பாடல் எண் : 7
மாயத்தை அறிய மாட்டேன் மையல்கொள் மனத்தன் ஆகிப்
பேய்ஒத்துக் கூகை ஆனேன், பிஞ்ஞகா, பிறப்புஒன்று இல்லீ,
நேயத்தால் நினைய மாட்டேன், நீதனேன் நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன், கடவூர்வீ ரட்ட னீரே.

         பொழிப்புரை : தலைக்கோலம் அணிந்தவனே ! பிறப்பில்லாதவனே ! கடவூர் வீரட்டனே ! பொய்ப்பொருளைப் பொய்ப்பொருள் என்று அறியமாட்டாதேனாய் மயக்கம் பொருந்திய மனத்தேனாகிப் பேயை ஒத்து அலைந்து திரிந்து , கோட்டானைப் போலத் தெளிவின்றிக் கலங்குகிறேன் . அன்போடு உன்னைத் தியானிக்க ஆற்றல் இல்லாத , கீழாருள் கீழேனாகிய அடியேன் , இவ்வுடம்பை இழப்பதற்கும் மனம் இல்லாதேனாய் உள்ளேன் .

  
பாடல் எண் : 8
பற்றுஇலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்,
உற்றுஅலால் கயவர் தேறார் என்னுங்கட் டுரையோடு ஒத்தேன்
எற்றுஉளேன், என்செய்கேன் நான் இடும்பையால் ஞானம்ஏதும்
கற்றிலேன், களைகண் காணேன், கடவூர்வீ ரட்டனீரே.

         பொழிப்புரை : கடவூர் வீரட்டனீரே ! சிவனடிப் பற்றில்லா வாழ்க்கை வாழ்ந்து பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன் . அநுபவித்தால்தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன் . யான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ! யான் யாது செய்ய வல்லேன் ! ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே ஞான நூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை . ஆதலின் அடியேனுக்குப் பற்றுக் கோடாக இருப்பார் ஒருவரையும் காணேன் .


பாடல் எண் : 9
சேலின் நேர் அனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கு அன்பாய்,
பாலும்நல் தயிர்நெய்யோடு பலபல ஆட்டி,என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக, அன்று
காலனை உதைப்பர் போலும் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : கடவூர் வீரட்டனார் , சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் எம்பெருமானை பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலகமயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர் .


பாடல் எண் : 10
முந்துஉரு இருவ ரோடு மூவரும் ஆயி னாரும்,
இந்திர னோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய
வந்துஇரு பதுகல் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : ஐந்தொழிற் கருத்தாக்கள் நிரலில் முற்படக் கூறப்படும் அயன் , அரி எனும் இருவருடன் உருத்திரன் , மகேசன் , சதாசிவன் என்போரும் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு , இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும் , கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப் பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார் .
                                             திருச்சிற்றம்பலம்


4. 107    திருக்கடவூர் வீரட்டம்                திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மருள்துயர் தீரஅன்று அர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்றுஎரி போலும்குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

         பொழிப்புரை : தன்னை மயக்கிய யமபயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த பிரமசாரியான மார்க்கண்டேயனுக்காகக் கரிய உடம்பு , வளைந்த ஒளி பொருந்திய பற்கள் தீயைப் போன்ற சிவந்த மயிர்முடி , மடித்த நா இவற்றை உடைய கொடிய கூற்றுவன் உடல் நடுங்குமாறு அவனை உதைத்து அவ்விடத்திலே அவனை உருளச்செய்த சிவந்த திருவடிகளை உடையவன் திருக்கடவூரில் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவான் .


பாடல் எண் : 2
பதத்துஎழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்துஎழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டுஅடர்த்த
கதத்துஎழு காலனைக் கண்குரு திப்புனல் ஆறுஒழுக
உதைத்துஎழு சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : ஐந்து சொற்களாக அமைந்த திருவைந்தெழுத்தை ஓதி விருப்பினோடும் தன் நன்மை கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமசாரியான மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்கு அவனை வெகுண்டு கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் குருதியைச் சொரியுமாறு உதைத்துச் செயற்பட்ட சேவடியான் கடவூர் உறை உத்தமனே .


பாடல் எண் : 3
கரப்புஉறு சிந்தையர் காண்டற்கு அரியவன், காமனையும்
நெருப்புஉமிழ் கண்ணினன், நீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன், காலனைப் பண்டுஒருகால்
உரப்பிய சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு அரியவனாய் , மன்மதன் மீது நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய் , கங்கையும் பாம்பும் சூடிய சிவந்த சடையினை உடையவனாய் , வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் கூற்றுவனை முன்னொரு காலத்தில் பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் உறை உத்தமன் .


பாடல் எண் : 4
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனம்மகிழ்ந்து
குறித்துஎழு மாணிதன் ஆருயிர் கொள்வான், கொதித்த சிந்தைக்
கறுத்துஎழு மூவிலை வேல்உடைக் காலனைத் தான்அலற
உறுக்கிய சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : மான்குட்டி விளங்கும் கையினனாய் , தேவர் தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கைப்பற்றுதற்காகக் கொதிக்கும் உள்ளத்தோடு வெகுண்டு புறப்பட்ட , மூவிலை வேலை ஏந்திய கூற்றுவன் வாய் விட்டுக் கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவன் , கடவூர் உறை உத்தமன் .


பாடல் எண் : 5
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்துஎழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த
தழல்பொதி மூவிலை வேல்உடைக் காலனைத் தான்்லற
உழக்கிய சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : குழையணிந்த காதுகளை உடைய , தேவர் தலைவனாகிய தன்னை நீராடி வழக்கமாக அருச்சித்த மாணியின் அரிய உயிரைக் கைப்பற்ற வந்த தீப்பொறி கக்கும் முத்தலைச் சூலம் ஏந்திய கூற்றுவன் கதறுமாறு அவனைச் சிதறச்செய்த சேவடியான் கடவூர் உறை உத்தமன் .


பாடல் எண் : 6
பாலனுக் காய்அன்று பாற்கடல் ஈந்து பணைத்துஎழுந்த
ஆலினில் கீழ்இருந்து ஆரணம் ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்துஅடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே வழங்கி , பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் செய்திகளைச் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு உபதேசித்துச் சிறந்த முனிவனான மார்க்கண்டேயனுக்காகச் சூலமும் பாசக் கயிறும் கொண்டு தொடர்ந்து அவனை நெருங்க ஓடிவந்த காலனை வெகுண்ட பெருமான் , கடவூர் உறை உத்தமனாவான் .


பாடல் எண் : 7
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துஉழல் மேனியன், உண்பலிக்கு என்று உழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேல்உடைக் காலனைத் துண்டம்அதா
உடறிய சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : பரவிய சடையிலே கொன்றைமாலை , பாம்பு மாலை , பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய் , உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய் , ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன் .


பாடல் எண் : 8
வெண்தலை மாலையும் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்தணி நாயகன், பேய்உகந்து ஆடும் பெருந்தகையான்,
கண்தனி நெற்றியன், காலனைக் காய்ந்து, கடலின்விடம்
உண்டுஅருள் செய்தபி ரான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய் , நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய் , கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன்.


பாடல் எண் : 9
கேழல் அதுஆகிக் கிளறிய கேசவன் காண்புஅரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்இடந்து இட்டஅம் மாலவற்குஅன்று
ஆழியும் ஈந்து அடுதிறல் காலனை அன்றுஅடர்த்து
ஊழியும் ஆய பிரான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய் , தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய் , ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய் , எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன் .


பாடல் எண் : 10
தேன்திகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்திகழ் ஐந்துஉகந்து ஆடும் பிரான்,மலை ஆர்த்துஎடுத்த
கூன்திகழ் வாள்அரக் கன்முடி பத்தும் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் அணிந்த அழகிய முடியின் மீது பஞ்சகௌவிய அபிடேகத்தை விரும்பும் பிரானாய் , ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட வளைந்த வாளை உடைய இராவணன் பத்துத் தலைகளும் சிதறிவிழுமாறு அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் கடவூர் உறை உத்தமன் ஆவான் .
                                             திருச்சிற்றம்பலம்



5. 037   திருக்கடவூர் வீரட்டம்   திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மலைக்கொள் ஆனை மயக்கிய வல்வினை
நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே,
கொலைக்கை யானையும் கொன்றிடும் ஆதலால்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : திருக்கடவூரில் மேவும் பெருமான் , மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் . கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர் .


பாடல் எண் : 2
வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்,
உள்ள வாறுஎனை யுள்புகும் ஆனையார்,
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்,
கள்ள ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார் ; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார் ; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர் ; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 3
ஞானம் ஆகிய நன்குஉணர் ஆனையார்,
ஊனை வேவ உருக்கிய ஆனையார்,
வேனல் ஆனை உரித்துஉமை அஞ்சவே
கானல் ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார் ; உடற் பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார் ; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர் ; கானல் ஆனையும் போல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 4
ஆலம் உண்டுஅழ காயதொர் ஆனையார்,
நீல மேனி நெடும்பளிங்கு ஆனையார்,
கோலம் ஆய கொழுஞ்சுடர் ஆனையார்,
கால ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார்; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார் ; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார்; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர் ; காண்பீர்களாக .

  
பாடல் எண் : 5
அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்,
வெளுத்த நீள்கொடி ஏறுஉடை ஆனையார்,
எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்,
களித்த ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார் ; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார் ; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் களிப்புற்ற யானை போல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 6
விடுத்த மால்வரை விண்உற ஆனையார்,
தொடுத்த மால்வரை தூயதொர் ஆனையார்,
கடுத்த காலனைக் காய்ந்ததொர் ஆனையார்,
கடுத்த ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார் ; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார் ; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 7
மண் உளாரை மயக்குறும் ஆனையார்,
எண் உளார்பலர் ஏத்திடும் ஆனையார்,
விண் உளார்பல ரும்அறி ஆனையார்,
கண்ணுள் ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார் ; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார் ; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 8
சினக்கும் செம்பவ ளத்திரள் ஆனையார்,
மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்,
அனைக்கும் அன்புடை யார்மனத்து ஆனையார்,
கனைக்கும் ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார் ; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார் ; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார் ; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 9
வேதம் ஆகிய வெஞ்சுடர் ஆனையார்,
நீதி யால்நிலன் ஆகிய ஆனையார்,
ஓதி ஊழி தெரிந்துஉணர் ஆனையார்,
காதல் ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர் . நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க . வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர். அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர்; காண்பீர்களாக .


பாடல் எண் : 10
நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டும் என்றுபுக் கார்கள் இருவரும்
மாண்ட ஆரழல் ஆகிய ஆனையார்,
காண்டல் ஆனைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : நெடியோனாகிய திருமாலும் , நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .


பாடல் எண் : 11
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள் இறநெரித்த ஆனையார்,
கடுத்த காலனைக் காய்ந்ததொர் ஆனையார்,
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

         பொழிப்புரை : எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கை வேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார் ; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார் ; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர் ; காண்பீர்களாக .

                                             திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நம்பியாரூரர் திருநள்ளாற்று அமுதைத் தொழுது, திருக்கடவூர் அணைந்து வீரட்டேசுவரரை வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12 ஏயர்கோன். புரா. 145)

பெரிய புராணப் பாடல் எண் : 145
அங்கணரைப் பணிந்துஏத்தி அருளினால் தொழுதுபோய்,
மங்குல்அணி மணிமாடத் திருக்கடவூர் வந்துஎய்தி,
திங்கள்வளர் முடியார்தம் திருமயா னமும்பணிந்து,
பொங்கும்இசைப் பதிகம் "மருவார்கொன்றை" எனப்போற்றி.

         பொழிப்புரை : அழகிய நெற்றிக்கண்ணையுடைய இறைவனை அத்திருப்பதியில் பணிந்து போற்றித் திருவருள் முன்னிற்கத் தொழுது நீங்கிப் போய், மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிரம்பிய திருக்கடவூர் என்னும் திருப்பதியை வந்தடைந்து, பணிந்து, இளம்பிறை மலரும் சடைமுடியையுடைய பெருமானது திருமயானம் என்னும் திருப்பதியையும் பணிந்து, பொங்கும் இசையுடைய பதிகமான `மருவார் கொன்றை' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி செய்து,


பெ. பு. பாடல் எண் : 146
திருவீரட் டானத்துத் தேவர்பிரான், சினக்கூற்றின்
பொருவீரம் தொலைத்தகழல் பணிந்து,"பொடி யார்மேனி"
மருஈரத் தமிழ்மாலை புனைந்துஏத்தி, மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப் பெருகுஆர்வத் தொடும்சென்றார்.

         பொழிப்புரை : திருக்கடவூர் வீரட்டானத்து அமர்ந்தருளும் தேவாதி தேவனது சினம் மிக்க இயமனின் வீரத்தைத் தொலைத்த திருவடிகளைப் பணிந்து, `பொடியார் மேனியனே\' எனத் தொடங்கும் கசிந்துருகும் தமிழ் மாலையைப் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் மேருமலையை வளைத்த பெருவீரராய சிவபெருமான் அமர்ந்து அருளும் திருவலம்புரம் என்னும் திருப்பதிக்குப் பெருகிய ஆர்வத்தோடும் சென்றார்.

         திருக் கடவூரில் அருளியது, `பொடியார் மேனியனே' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.28).


7. 028    திருக்கடவூர் வீரட்டம்           பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொடிஆர் மேனியனே, புரி நூல்ஒரு பால்பொருந்த
வடிஆர் மூவிலைவேல் வளர் அங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே, கட வூர்தனுள் வீரட்டத்து, எம்
அடிகேள், என்அமுதே, எனக்கு ஆர்துணை நீஅலதே.

         பொழிப்புரை : திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே , புரியாகிய நூல் , ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க , கூர்மை பொருந்திய முத்தலை வேல் ( சூலம் ) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லது வேறு யார் துணை !


பாடல் எண் : 2
பிறைஆ ரும்சடையாய், பிர மன்தலை யில்பலிகொள்
மறையார் வானவனே, மறை யின்பொருள் ஆனவனே,
கறைஆ ரும்மிடற்றாய், கட வூர்தனுள் வீரட்டத்து,எம்
இறைவா, என்அமுதே, எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : பிறை பொருந்திய சடையை உடையவனே, பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற, வேதத்தை ஓதுகின்ற தேவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே, திருக்கடவூரினுள், ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை?


பாடல் எண் : 3
அன்று ஆலின்நிழற்கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலன்,உயிர் கொடுத் தாய்மறை யோனுக்கு,மான்
கன்று ஆருங்கரவா, கட வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : மான் கன்று பொருந்திய கையை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ , அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி , காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய் ; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய் ; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை !


பாடல் எண் : 4
போர் ஆருங்கரியின் உரி போர்த்துப்பொன் மேனியின்மேல்
வார்ஆரும்முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே,
கார்ஆ ரும்மிடற்றாய், கட வூர்தனுள் வீரட்டானத்து,
ஆரா என்அமுதே எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும் , அம் மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களை யுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே , கருமை பொருந்திய கண்டத்தை உடையாய் , திருக்கடவூரினுள் ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !


பாடல் எண் : 5
மைஆர் கண்டத்தினாய், மத மாவுரி போர்த்தவனே,
பொய்யாது என்உயிருள் புகுந் தாய் இன்னம் போந்துஅறியாய்
கையார் ஆடுஅரவா கட வூர்தனுள் வீரட்டத்துஎம்
ஐயா என்அமுதே எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : கருமை பொருந்திய கண்டத்தை யுடையவனே, யானையின் தோலைப் போர்த்தவனே , கையின் கண் பொருந்தி நிற்கும் , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் ; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந்தறியாய் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !


பாடல் எண் : 6
மண்ணீர் தீவெளிகால் வரு பூதங்கள் ஆகிமற்றும்,
பெண்ணோடு ஆண்அலியாய்ப் பிற வாஉரு ஆனவனே,
கண்ணார் உள்மணியே, கட வூர்தனுள் வீரட்டத்துஎம்
அண்ணா, என்அமுதே, எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : ` நிலம் , நீர் , தீ , காற்று வானம் ` என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும் . அப் பூதங்களாலாகிய , ` பெண் , ஆண் , அலி ` என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று , நீ உருவங்கொள்ளுமிடத்து , யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே , கண்ணின் உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !


பாடல் எண் : 7
எரிஆர் புன்சடைமேல் இள நாகம் அணிந்தவனே,
நரி ஆரும்சுடலை நகு வெண்தலை கொண்டவனே,
கரிஆர் ஈர்உரியாய் கட வூர்தனுள் வீரட்டத்துஎம்
அரியாய், என்அமுதே, எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே , நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள , சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே , யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , எங்கள் அரிய பொருளானவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !


பாடல் எண் : 8
வேறா உன்அடியேன் விளங் குங்குழைக் காதுஉடையாய்,
தேறேன் உன்னைஅல்லால் சிவ னே,என் செழுஞ்சுடரே,
காறுஆர் வெண்மருப்பா, கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறுஆர் செஞ்சடையாய், எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே , சிவனே , என்னுடைய செம்மையான விளக்கே , காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனே, உன் அடியவனாகிய யான் , உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !


பாடல் எண் : 9
அயனோடு அன்றுஅரியும் அடி யும்முடி காண்பரிய
பயனே, எம்பரனே, பர மாய பரஞ்சுடரே,
கயம் ஆருஞ்சடையாய், கட வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே, என்அமுதே எனக்கு ஆர்துணை நீ அலதே.

         பொழிப்புரை : முன்னொரு ஞான்று , பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே , எங்கள் கடவுளே , மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே , மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் , என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற பிறப்பில்லாதவனே ` என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !


பாடல் எண் : 10
கார் ஆரும்பொழில்சூழ் கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும்இறையைத் துணை யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்அடியான் அடித் தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார், பர லோகத்து இருப்பாரே.

         பொழிப்புரை : மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் ` என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து , அழகிய திரு நாவலூரில் தோன்றியவனும் , திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின் , சிவலோகத்தில் இருத்தல் திண்ணம் .
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...