அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆதிமக மாயி (ஊதிமலை)
முருகா! உன்னையே வணங்க அருள்
தானதன
தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமக
மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ
தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
பூதமது
வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ...... ளறியாதே
பூணுமுலை
மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு ...... மடியேனை
நீதயவ
தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ
னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை
யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர
ஊனுமுயி
ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆதி
மகமாயி,
அம்பை,
தேவி, சிவனார்
மகிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா!
ஆதரவு
அதுஆய் வருந்தி, ஆதி அருணேசர் என்று
ஆளும் உனையே வணங்க ...... அருள்வாயே!
பூதம்
அது ஆன ஐந்து, பேதம் இடவே அலைந்து
பூரண சிவ ஆகமங்கள் ...... அறியாதே,
பூணுமுலை
மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து
போகம் உறவே விரும்பும் ...... அடியேனை
நீ
தயவு அது ஆய் இரங்கி, நேச அருளே புரிந்து,
நீதி நெறியே விளங்க ...... உபதேச
நேர்மை, சிவனார்
திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ரம்.
நீல மயில் ஏறி வந்த ...... வடிவேலா!
ஓதுமறை
ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து
ஊழி உணர்வார்கள் தங்கள் ...... வினைதீர,
ஊனும்
உயிராய் வளர்ந்து, ஓசையுடன் வாழ்வு தந்த,
ஊதிமலை மீது உகந்த ...... பெருமாளே!
பதவுரை
ஆதி மகமாயி --- முதன்மைபெற்ற பெரிய
மாயியாக விளங்குபவரும்,
அம்பை --- அம்பிகையும்,
தேவி --- ஒளிபெற்றவரும்,
சிவனார் மகிழ்ந்த ஆவுடைய மாது ---
சிவபெருமான் மகிழ்கின்ற ஆவுடையாள் என்னும் சிறப்பையுடையவளுமாகிய உமாதேவியார்,
தந்த --- பெற்றருளிய,
குமர ஈசா --- திருக்குமாராகிய தலைவரே!
பூதம் அது ஆன ஐந்து பேதம் இடவே ---
பூதம் என்ற மண்நீர் தீ காற்று வான் என்ற ஐந்துவகையும் பேதமுற்று உடம்பாகி வர,
அலைந்து --- இவ்வுடம்பு கொண்டு அவமே அலைந்து,
பூரண சிவ ஆகமங்களை அறியாது --- நிறைவுடைய
சிவாகமங்களை அறிந்து கொள்ளாமல்,
பூணும் முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து
--- ஆபரணங்களை அணியும் முலைகளையுடைய பெண்களுடைய ஆசையையே நினைந்து,
போகம் உறவே விரும்பும் அடியேனை ---
அவர்களுடன் போகத்தை நுகர்தற்கே விரும்புகின்ற அடியேனை,
நீ தயவதாய் இரங்கி --- தேவரீர் மிக்க
கருணையுடன் இரக்கங்கொண்டு,
நேச அருளே புரிந்து --- நேசத்துடன் திருவருள்
செய்து,
நீதி நெறியே விளங்க --- சைவ நீதியும்
சன்மார்க்க வழியும் நன்கு விளங்குமாறு,
உபதேச நேர்மை --- உபதேசம் செய்த தன்மையானது,
சிவனார் திகழ்ந்த காதில் உரை வேதமந்திரம் ---
சிவபெருமானுடைய திகழ்கின்ற திருச்செவியில் உரைத்த வேதமுதலாகிய மந்த்ரமேயாம்,
நீல மயில் ஏறிவந்த --- (அங்ஙனம் அடியேனுக்கு
உபதேசிக்கும் பொருட்டு) நீலமயில் மேல் ஆரோகணித்து வந்தருளிய,
வடிவேலா --- கூர்மை பொருந்திய வேலாயுதத்தை
யுடையவரே!
ஓதும் மறை ஆகமம் சொல் --- ஓதப்பெறுகின்ற, வேதம்
ஆகமம் என்ற பெருநூல்களால் பேசப்பெறுகின்ற,
யோகம் அதுவே புரிந்து --- சிவயோகத்தையே
செய்து,
ஊழி உணர்வார்கள் தங்கள் --- ஊழிகாலத்தையும்
உணர்கின்ற அழிவற்ற ஆன்றோர்களுடைய,
வினைதீர --- வினைகள் நீங்குமாறு,
ஊனும் உயிராய் வளர்ந்து --- அவர்களுடைய
ஊனாகியும் உயிராகியும் கலந்து வளர்ந்து,
ஓசையுடன் வாழ்வு தந்த --- பிரம நாதத்துடன்
சிவஞானாநுபவப் பெருவாழ்வைத் தந்தருள்கின்ற,
ஊதிமலை மீது உகந்த --- ஊதிமலைமேல் உள்ளம்
உவந்து வாழுகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
ஆதரவது ஆய் வருந்தி --- அன்புடன்
பதியாகிய தேவரீரை அடையவேண்டுமென்று வருந்தி,
ஆதி அருணேசர் என்று --- முழுமுதலாகிய
செம்பொருள் தலைவர் என்று துதித்து,
ஆளும் உனையே வணங்க --- ஆட்கொள்கின்ற தேவரீரையே
வணங்கி உய்ய,
அருள்வாயே --- திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
முதன்மை பெற்ற பெரிய மாயையாக விளங்குபவரும், அம்பிகையும், ஒளியையுடையவரும், சிவபெருமான்
மகிழ்ந்த ஆவுடையாள் என்ற பீடத்தானமாக இலகுபவருமாகிய உமாதேவியாருடைய திருக்குமாரரே!
ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய
உடம்புடன் அலைந்து, அறிவு நிறைந்து சிவாகமங்களை அறிந்து
கொள்ளாமல், ஆபரணங்களைப் பூண்டுள்ள முலைகளை உடைய பெண்களுடைய ஆசையையே நாளும்
நினைந்து அவர்களுடன் போகமுற விரும்புகின்ற அடியேனை ஆட்கொள்வதற்காக
திருவுள்ளமிரங்கி அன்புடன் அருள் புரிந்து சைவநீதியும் சன்மார்க்கமும் விளங்குமாறு
உபதேசித்த தன்மையானது சிவபெமானுடைய திருச்செவியில் உபதேசித்தருளிய மறைமுதன் மொழியாகிய
மௌ மொழியேயாம்; அங்ஙனம் அடிமையேனுக்கு அருள்புரிய நீல நிறமுடைய மயில்வாகத்தில்
ஏறிவந்தருளிய கூர்மை பொருந்திய வேலாயுதக் கடவுளே!
ஓதப்பெறுகின்ற வேதங்களும் ஆகமங்களும்
கூறுகின்ற சிவயோகத்தைச் செய்து உகாந்த காலத்தையும் உணர்கின்ற தன்மையுடைய
பெரியோர்களது வினை தீருமாறு அவர்களுடைய ஊனும் உயிருமாகி வளர்ந்து பிரமநாதத்துடன்
பேரின்ப வாழ்வு தந்தருளி ஊதிமலை என்னுந் திருமலை மீது எழுந்தருளிய
பெருமிதமுடையவரே!
“அடியேன் மிக்க அன்புடன் தேவரீரை அடைய, வேண்டுமென்று
வருந்தி “முழுமுதலாகிய செம்பொருள் தலைவரே” என்று துதித்து ஆளுடைய உம்மையே வணங்கி
உய்யத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
ஆதி
மகமாயி
---
உலகத்தோற்றத்திற்கும்.
உயிர்கள் உய்தற்கும். அம்பிகையே முதன்மை பெற்றவராதலாலும்,
மாயையின்
முதல்வியாதலாலும் “ஆதிமகமாயி” என்றனர்.
உனையே
வணங்க அருள்வாயே ---
முருகவேளை
அன்றி மறந்தும் புறந்தொழாத உறுதியை சுவாமிகள் வற்புறுத்துகின்றார்கள்.
“உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்” --- நக்கீரர்.
“கற்றா மனம்எனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது” --- மணிவாசகர்.
தேவரே
முதல் உலகங்கள் யாவையும்
சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே
எதிர் வருகினும் மதித்திடேன்,
முருக! நின் பெயர்சொல்வோர்
யாவரேனும்
என் குடிமுழுது ஆண்டு எனை
அளித்தவர் அவரேகாண்,
தாவ
நாடஒணாத் தணிகையம் பதியில்வாழ்
சண்முகப் பெருமானே. --- திருவருட்பா.
பூதம்
அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து ---
தேவலோகத்துள்ள
உடம்பு பூதசாரதநு; நரக லோகத்துள்ள உடம்பு பூததநு; மண்ணுலகத்துள்ள
உடம்பு பூத பரிணாமதநு; மண் புனல் தீ காற்று வெளி என்ற
ஐம்பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய உடம்பு.
“ஐந்துவிதம் ஆகின்ற பூதபேதத்தினால்
ஆகின்ற யாக்கை” --- தாயுமானார்.
பூரண
சிவாகமங்கள் ---
எல்லாப்
பொருள்களும் நிறைந்து ஞானவிளக்கமாய் விளங்குவது சிவாகமங்கள். ஆகமம் என்ற
சொல்லுக்கு “வந்தது” என்பது பொருள். இறைவன் திருவாக்கினின்றும் வந்தது. காமிகம் முதலாக
வாதுளாந்தமாக உள்ள சிறப்பு நூல்கள் யாவும் ஞானபாதமாம்.
உபதேச
நேர்மை...............வேதமந்த்ரம் ---
குமாரபரமேஸ்வரர்
சிவபெருமானுடைய திருச்செவியில் உபதேசித்தருளிய உபதேசப் பொருளையே
அருணகிரியாருக்கும் உபதேசித்தருளினார்.
“நாதா குமார நம! என்று அரனார்
ஓதாய் என ஓதியது எபொருள் தான்?” --- கந்தர் அநுபூதி
“விசும்பின் புரத்ரயம் எரித்த பெருமானும்
நிருப குருபர குமர என்றென்று பக்திகொடு
பரவ அருளிய மவுன மந்த்ரதனைப் பழைய
நினதுவழி அடிமையும் விளங்கும் படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே”
--- (அகரமுத)
திருப்புகழ்.
நீலமயில் ---
மயிலின்
கழுத்து நீலநிறமுடைது.
“நீலக்ரீவ ரத்னக்கலாப மயிலே” --- மயில்விருத்தம்.
ஓதுமறை..........ஊழியுணர்வார்
---
சிவயோகம்
புரியும் சிவஞானிகள் திருவிகற்ப சமாதியில் ஊழி ஒரு கணமாக அசைவற்றிருப்பர்.
ஊனும்
உயிராய் வளர்ந்து ---
இறைவன்
எங்கணும் அத்துவிதமாகக் கலந்திருக்கின்றனன்.
கருத்துரை
பார்வதி தேவியின் பாலரே! அடியேனுக்கு
உபதேசித்த அருட்சுடரே! ஊதிமலை மேவிய இறையரே! தேவரீரையே வணங்க அருள் புரிவீர்.
No comments:
Post a Comment