பாடல் 20 - பொன்னொடு





பொன்னொடு மணி உண்டானால்
     புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு,
     சாதியில் மணமும் செய்வர்;
மன்னராய் இருந்த பேர்கள்
     வகைகெட்டுப் போவார் ஆகில்,
பின்னையும் யாரோ என்று
     பேசுவார் ஏசுவாரே!              20.

     பொன்னும் இரத்தினங்களும் ஒருவனிடத்தில் இருக்குமானால், அவன் நீசனாக இருந்தாலும், நம்முடைய சுற்றத்தான் என்று சொல்லித் துதிபாடிக் கொண்டு, தம்முடைய உயர்ந்த சாதியிலே அவனுக்குத் திருமணமும் செய்து வைப்பார்கள்.

     முன்னே அரசராக இருந்தவர்கள், தமது அரசை இழந்து, தாழ்ந்த நிலையை அடைவார்களானால், அவரை நேரில் கண்டாலும், இவர் யாரோ என்று பேசுவதோடு, இந்த நிலைக்கு வந்த பின்னும் இவன் உயிரோடு இருக்கின்றானே என்று ஏளனமும் செய்வார்கள்.


     குறிப்பு --- "தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் தம் நிலையின் இழிந்தக் கடை" என்னும் திருக்குறள் கருத்தோடு இதனை வைத்து எண்ணுக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...