கோயில் இல்லாத ஊர்
10. ஒன்று இல்லாமல் பயன்படாதவை

கோவில் இல்லாத ஊர், நாசிஇல் லாமுகம்,
     கொழுநன் இல் லாத மடவார்,
  குணம்அதுஇல் லாவித்தை, மணம்அதுஇல் லாதமலர்,
     குஞ்சரம் இலாத சேனை,

காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,
     கதிர்மதி இலாத வானம்,
  கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,
     காவலர் இலாத தேசம்,

ஈவதுஇல் லாததனம் நியமம்இல் லாதசெபம்,
     இசை லவணம் இல்லா தவூண்,
  இச்சைஇல் லாதபெண் போகநலம், இவை தம்மின்
     ஏதுபலன் உண்டு? கண்டாய்!

ஆவிஅனை யாட்குஇடம் தந்தவா! கற்பதரு
     ஆகும்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

      இதன் பொருள் ---

     ஆவி அனையாட்கு இடம் தந்தவா --- உயிரைப் போன்றவளாகிய உமையம்மைக்குத் தனது உடம்பில் இடப்பாகத்தைத் தந்து அருளியவரே!,

     கற்ப தரு ஆகும் --- நினைத்ததை எல்லாம் தருகின்ற, தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தைப் போன்று, தன் மக்களுக்குப் பயன்படுகிற

     எமது அருமை மதவேள் --- எமது  அருமை பொருந்திய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு ---- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!.

     கோவில் இல்லாத ஊர் --- திருக்கோயில் இல்லாத ஊரும்,

     நாசி இல்லா முகம் --- மூக்கு இல்லாத முகமும்,

     கொழுநன் இல்லாத மடவார் --- கணவன் இல்லாத பெண்களும்,

     குணம் அது இல்லா வித்தை --- நற்பண்பு இல்லாத கல்வியும்,

     மணம் அது இல்லாத மலர் --- நறுமணம் இல்லாத பூவும்,

     குஞ்சரம் இல்லாத சேனை --- யானை இல்லாத படையும்,

     காவல் இல்லாத பயிர் --- வேலியிட்டுக் காக்கப்படாத பயிரும்,

     பாலர் இல்லாத மனை --- மழலைச் செல்வம் இல்லாத இல்லமும்,

     கதிர்மதி இல்லாத வானம் --- சூரியனும் சந்திரனும் உலவாத வானமும்,

     கவிஞர் இல்லாத சபை --- புலவர்கள் இல்லாத அவையும்,

     சுதி லயை இலாத பண் --- சுருதியும், தாள அடைவும் இல்லாத இசையும்,

     காவலர் இலாத தேசம் --- அரசன் இல்லாத நாடும்,

     ஈவது இல்லாத தனம் --- பிறருக்குக் கொடுத்து உதவாத பொருளும்,

     நியமம் இல்லாத செபம் --- ஒழுங்கு இல்லாத வழிபாடும்,

     இசை லவணம் இல்லாத வூண் --- பொருந்திய அளவு உப்பு இல்லாத உணவும்,

     இச்சை இல்லாத பெண் போகம் --- விருப்பம் இல்லாத மங்கையிடம் பெறுகின்ற இன்பமும்,

     இவை தம்மின் ஏது பலன் உண்டு --- ஆகிய இவற்றால்  என்ன நன்மை உண்டு?   (நன்மை ஏதும் இல்லை என்பது பொருள்)

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...