மாறாத கலை கற்றும்




12. பதர்கள் பலவிதம்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாய்இலா தவன்ஒரு பதர்;
  வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தான்ஒரு பதர்;

ஏறா வழக்குஉரைத்து அனைவருஞ் சீசியென்று
     இகழநிற் பான்ஒரு பதர்;
  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்துஅவளோடு
     இணங்கிவாழ் பவன்ஒரு பதர்;

வேறுஒருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
     வீண்பேசு வான்ஒரு பதர்;
  வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
     விட்டுவிடு வான்ஒரு பதர்;

ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

இதன் பொருள் ---

     ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல! - தீராத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள் செய்கின்ற, இயல்பாகவே மலமற்ற தூயவனே! (இன்பமும் துன்பமும் இல்லானே என்பது மணிவாசகம்.  இன்பமும் துன்பமும் வேண்டுதல் வேண்டாமை என்னும் இச்சைகளால் வருவன.  அவை இறைவனுக்கு இன்மையால், அவனால் தான் பிறருக்கு வரும் துன்பத்தைத் தீர்த்து வைக்க இயலும்.)

     எமது அருமை மதவேள் --- எமது அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     மாறாத கலை கற்றும் நிலைபெற்ற சபையிலே வாய் இலாதவன் ஒரு பதர் --- என்றும் மாறுபடாத பொருளைத் தரும் உயர்ந்த நூல்களைக் கற்றிருந்தும், பெரியோர் கூடியுள்ள நிலைபெற்ற சபையிலே தான் கற்றதை எடுத்துக் கூறும் திறமை அற்றவன் பயன்றறவன்.

     வாள் பிடித்து எதிரி வரின் ஓடிப் பதுங்கிடும் மனக் கோழை தான் ஒரு பதர் --- எதிரி வாளைப் பிடித்துப் போருக்கு வந்தால், அஞ்சி ஓடி பதுங்குகின்ற மன உறுதி இல்லாத கோழையானவன் பயன்றறவன்.

      ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி! என்று இகழ நிற்பான் ஒரு பதர் --- செல்லுபடி ஆகாத ஒரு வழக்கைச் சொல்லி,  யாவரும் சீசி! என்று பழிக்கும்படி நிற்பவன் பயன்றறவன்.

      இல்லாள் புறம் செலச் சம்மதித்து, அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் --- தன்னுடைய மனைவியானவள் அயலானிடத்தில் போக மனம் இசைந்து, அவளுடன் கூடி வாழ்பவன் பயனற்றவன்.

      தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர் --- பிறபால் புகழப் படாமல், தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு, டம்பப் பேச்சுப் பேசுபவன் பயன்றறவன்.

     வேசையர்கள் ஆசை கொண்டு உள்ள அளவும் மனையாளை விட்டு விடுவான் ஒரு பதர் --- பரத்தையரிடம் ஆசை வைத்து, காலம் எல்லாம் தனது மனைவியைப் பிரிந்து அவளைத் தவிக்க விடுபவன் பயன்றறவன்.

     குறிப்பு --- "பதர்" என்னும் சொல்லுக்கு உள்ளீடு இல்லாத நெல், குற்றம் உள்ளது, பயன்றறது என்று பொருள்.

     "பயன் இல் சொல் பாராட்டுவானை, மகன் எனல், மக்கள் பதடி எனல்" என்றார் திருவள்ளுவ நாயனார். பதடி என்னும் சொல்லுக்கு, "அறிவு என்னும் உள்ளீடு இன்மை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...