திருத் திலதைப்பதி




திருத் திலதைப்பதி
(செதலபதி - சிதலைப்பதி)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்திருத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மீ. கூத்தனூர் சரஸ்வதி கோயில். இங்கிருந்து அருகில் இருக்கிறது.

     திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சாலையில் வருவோர், பூந்தோட்டம் ஊருக்குள் செல்லாமலே, அரிசிலாற்றுப் பாலத்திற்கு முன், இடப்புறமாகச் செல்லும் கும்பகோணம் நாச்சியார் கோயில் சாலையில் கூத்தனூர் சென்று, அங்கிருந்து செல்லலாம்.

     மற்றத் திருத்தலங்களில் திருப்பெயர்களும் மருவி வழங்கப்படுவதைப் போலவே, இத்திருத்தலத்தின் பெயரும் மருவி, இப்போது, "செதலபதி" அல்லது "சிதலைப்பதி" என்று ஆகி உள்ளது.

இறைவர்               : மதிமுத்தர், முத்தீசர்

இறைவியார்           : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி

தல மரம்                : மந்தாரை

தீர்த்தம்                : சந்திரதீர்த்தம், அரிசிலாறு

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பொடிகள் பூசிப் பல

     ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும் படி கட்டளையிட்டு நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார். பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயினியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.

         நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

         தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மனனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். இராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

         கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், இராம இலக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாக காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார்.

         இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

         இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

         இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாகினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் இராமர்.

         திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் "திலதைப் பதி - மதி முத்தம்" என்றே குறிப்பிடுகிறார். ஊரின் பெயர் "திலதைப்பதி". திருக்கோயிலின் பெயர் "மதிமுத்தம்".

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், வளம் கோவை நாடும் திலத நயப் புலவோர் நாள்தோறும் பாடும் திலதைப் பதி நிதியே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 549
ஓங்குபுனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்குஆர் திலதைப் பதிமுத்த மும்பணிந்து,
வீங்குஒலிநீர்வீழி மிழலையினில் மீண்டும் அணைந்து,
ஆங்குஇனிது கும்பிட்டு, அமர்ந்து உறையும் அந்நாளில்.

         பொழிப்புரை : பெருகும் நீர்வளம் கொண்ட திருப்பேணுபெருந்துறையையும் அதனை உள்ளிட்ட அருகிலுள்ள திலதைப்பதி மதிமுத்தத்தினையும் போய் வணங்கிப் பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த திருவீழிமிழலையினில் மீண்டும் எழுந்தருளி, அங்கு இனிதாய் வணங்கி விருப்பமுடனே இருந்து வரும் நாள்களில்,

         பேணுபெருந்துறையில் அருளிய பதிகம் `பைம்மா நாகம்' (தி.1 ப.42) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         திலதைப்பதி மதிமுத்தத்தில் அருளிய பதிகம் `பொடிகள் பூசி' (தி.2 ப.118) எனத் தொடங்கும் செவ்வழிப்பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.118 திருத்திலதைப்பதி                  பண் - செவ்வழி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதுஏத்த நின்ற அழகன்இடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.

         பொழிப்புரை :வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மன மாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம் , கொடிகள் ஓங்கி அசைந் தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத் திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும் .


பாடல் எண் : 2
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புஉணர நின்ற குழகன்இடம்
தெண்திரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே.

         பொழிப்புரை :தெளிந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரை யிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதி முத்தம், நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து . அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும் .


பாடல் எண் : 3
அடல்உள்ஏறு உய்த்து உகந்தான், அடியார் அமரர்தொழக்
கடல்உள்நஞ்சு அமுதாக உண்ட கடவுள்இடம்,
திடல்அடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடல்உள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.

         பொழிப்புரை :திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்கு வதும் , மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங் களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும் , அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும் .


பாடல் எண் : 4
கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்இடம்
செங்கயல்பாய் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்த அழகார் மதிமுத்தமே.

         பொழிப்புரை :கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும், மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம், கங்கை, பிறை, வன்னி, எருக்கு, கூவிளம், நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும் .


பாடல் எண் : 5
புரவிஏழும் மணிபூண்டு இயங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்,
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே.

         பொழிப்புரை :ஞாழல் , கோங்கு , வேங்கை , சுரபுன்னை , கடம்பு , முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித் தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும் .


பாடல் எண் : 6
விண்ணர்,வேதம் விரித்துஓத வல்லார், ஒருபாகமும்
பெண்ணர்,எண்ணார் எயில் செற்றுஉகந்த பெருமான்இடம்,
தெண்நிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்உளார்வந்து அருள்பேண நின்றம் மதிமுத்தமே.

         பொழிப்புரை :விண்ணுலகிலுள்ளவரும் , வேதங்களை அருளிய வரும் , ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும் , தம்மை எண் ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள்செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம் , தெளிந்த நிலா வொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும் .


பாடல் எண் : 7
ஆறுசூடி அடையார்புரம் செற்றவர், பொன்தொடி
கூறுசேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்,
தேறல்ஆரும் பொழில் சூழ்ந்த அழகார் திலதைப்பதி
மாறுஇலாவண் புனல்அரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.

         பொழிப்புரை :கங்கையைத் தலையில் சூடியவர் . திரிபுரப் பகை வருடைய கோட்டைகளை அழித்தவர் . மாதொரு கூறர் . அவ் விறைவர்க் குரிய இடம் , தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் , அழகியதும் , நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும் .


பாடல் எண் : 8
கடுத்துவந்த கனல்மேனி யினான்,கரு வரைதனை
எடுத்தவன்தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடமாவது,
புடைக்கொள்பூகத்து இளம்பாளை புல்கும் மதுப்பாய,வாய்
மடுத்துமந்தி உகளும் திலதைம் மதிமுத்தமே.

         பொழிப்புரை :சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க , அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம் , தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பாளைவழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும் .


பாடல் எண் : 9
படங்கொள்நாகத்து அணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொள்நால்வே தனும்ஏத்த நின்ற இறைவன்இடம்,
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

         பொழிப்புரை :ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும் , புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம் , தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும் .


பாடல் எண் : 10
புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறுஇலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமான்இடம்,
பத்தர்சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

         பொழிப்புரை :புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமை யில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.


பாடல் எண் : 11
மந்தம்ஆரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேல்
கந்தம்ஆரும் கடற்காழி ஊள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றுஏத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.

         பொழிப்புரை :தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப் பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறு மணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி .
                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...