அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காம அத்திரமாகி
(விராலிமலை)
முருகா! உமது கருணைத்
திறத்தை ஒருபோதும் மறவேன்
தானாத்தன
தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன ...... தனதான
காமாத்திர
மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை ......யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால்
ஏகாப்பழி
பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே
சீமாட்டியு
மாய திரிபுரை
காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை
சீகார்த்திகை
யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக்
கோமாற்குப
தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே
கோடாச்சிவ
பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காம
அத்திரம் ஆகி, இளைஞர்கள்
வாழ்நாள் கொடு போகி, அழகிய
காது ஆட்டிய பார இருகுழை ...... அளவுஓடி,
கார்
போல் தவழ் ஓதி நிழல் தனில்,
ஆர்வாள் கடை ஈடு கனகொடு
கால் ஏற்று, வைவேலின் முனை கடை
......யமதூதர்,
ஏமாப்பு
அற, மோக இயல் செய்து,
நீலோற்பல ஆசில் மலருடன்,
நேர் ஆட்ட விநோதம் இடும்விழி ...... மடவார்பால்,
ஏகாப்
பழி பூணும் மருள் அற,
நீ தோற்றி முன் நாளும் அடிமையை
ஈடேற்றுதலால், உன் வலிமையை ...... மறவேனே,
சீமாட்டியும்
ஆய திரிபுரை,
கால அக்கினி, கோப பயிரவி,
சீல உத்தமி, நீலி, சுரதிரி ...... புவனஈசை,
சீ
கார்த்திகை ஆய அறுவகை
மாதாக்கள் குமாரன் என,வெகு
சீராட்டொடு பேண, வடதிசை ...... கயிலாசக்
கோமாற்கு, உபதேசம் உபநிட
வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி எனவரும் ...... இளையோனே!
கோடாச்
சிவ பூஜை, பவுருஷம்,
மாறாக் கோடை நாளும் மருவிய
கோனாட்டு விராலி மலை உறை ...... பெருமாளே.
பதவுரை
சீமாட்டியும் ஆய திரிபுரை --- பெருமாட்டியாகிய
மூன்று உலகங்கட்கும் தலைவியும்,
கால அக்கினி --- உகாந்த காலத்தில் தோன்றும்
நெருப்பு போன்ற,
கோப பயிரவி --- கோபத்தையுடைய பயிரவியும்,
சீல உத்தமி --- நல்லொழுக்கமுள்ள உத்தமியும்,
நீலீ --- நீல நிறமுடையவரும்,
சுர திரிபுவன ஈசை --- விண்ணுலக முதலிய மூன்று
புவனங்கட்குத் தலைவியும், ஆய பார்வதியும்,
சீ கார்த்திகை ஆய --- பெருமையுடைய
கார்த்திகையாய,
அறுவகை மாதாக்கள் குமாரன் என --- ஆறுவகைப்
பெண்களும் குமாரன் என்று,
வெகு சீராட்டொடு பேண --- மிகவும் பாராட்டுடன்
உம்மை வளர்க்க,
வடதிசை கயிலாய கோமாற்கு --- வடதிசையில் உள்ள கயிலாயமலைக்குத்
தலைவராகிய சிவபெருமானுக்கு,
உபநிட வேத அர்த்த மெய்ஞான நெறி அருள் --- உபநிடதம்
வேதம் இவற்றின் பொருளான உண்மையான மார்க்கத்தை உபதேசித்து,
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே --- குற்றத்தை
நீக்கிய குருமூர்த்தியென விளங்குகின்ற, இளையவரே!
கோடா சிவ பூஜை --- நெறி தவறாத சிவ பூஜையும்,
பவுருஷம் --- ஆண்மையும்,
மாறாகொடை நாளும் மருவிய --- இல்லை என்னாத
கொடையும் பொருந்தியுள்ள,
கோனாட்டு விராலி மலைஉறை --- கோனாட்டைச் சேர்ந்த
விராலி மலையில் வாழ்கின்ற
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
காம அத்திரம் ஆகி --- மன்மத பாணமாகி,
இளைஞர்கள் வாழ்நாள் கொடு போகி --- இளைஞர்களுடைய
வாழ்நாளைக் கொண்டுபோய்,
அழகிய காது ஆட்டி --- அழகிய காதுகளில்
ஆடுகின்ற,
பார இரு குழை அளவு ஓடி --- கனத்த இரு தோடுகள்
வரையும் ஓடிச்சென்று,
கார் போல் தவழ் --- மேகம் போல் தவழ்ந்து
விளங்கும்,
ஓதி நிழல் தனில் --- கூந்தலின் நிழலில்
ஆர் வாள் கடை ஈடு கனகொடு --- நிறைந்து வாள்
முனைபோன்று ஈடு கனம் கொண்டு,
கால் ஏற்று --- கருநிறம் கொண்டு,
வை வேலின் முனை கடை --- கூரிய வேலின்
முனையில் நுனி போன்று,
யம தூதர் ---இயம தூதர்களும்,
ஏமாப்பு அற --- இறுமாப்பு நீங்க,
மோக இயல் செய்து --- மோகத் தன்மையைச் செய்து,
நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் --- குற்றமில்லாத
நீலோற்பல மலருடன் ஒப்பான,
ஆட்டம் விநோதம் இடு விழி --- நடன விநோதத்தைச்
செய்யும் கண்களையுடைய,
மடவார் பால் --- பொது மாதர்களிடத்தே,
ஏகா பழி பூணும் மருள் அற --- நீங்காத பழியைக்
கொண்டிருந்த,
மயக்கம்
அடியேனை விட்டு அகல,
நீ தோற்றி --- தேவரீர் அடியேன் முன் தோன்றி,
முன் ஆளும் அடிமையை --- முன்பு ஆண்ட அடிமையாகிய
என்னை
ஈடேற்றுதலால் --- காத்தருளிய காரணத்தால்,
உன் வலிமையை மறவேனே --- உமது அருளின் ஆற்றலை
ஒருபோதும் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
பெருமாட்டியும், திரிபுரசுந்தரியும், ஊழித் தீயைப் போன்ற கோபமுடைய பயிரவியும், நல்லொழுக்கமுள்ள உத்தமியும், நீல நிறமுடையவரும், தேவலோக முதலிய மூன்று உலகங்கட்கும்
தலைவியுமான பார்வதியும் சிறந்த கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எங்கள் மகனே என்று
பாராட்டி வளர்க்க, வடதிசையில் உள்ள
திருக்கயிலாயகிரிக்கு தலைவராய சிவபெருமானுக்கு உபதேசமாக, வேத உபநிடதப் பொருளாகிய உண்மை ஞான
நெறியையருளிய குருநாதர் என விளங்கும் இளம்பூரணரே!
குன்றாத சிவபூசையும், ஆண்மையும், மாறாத தருமகுணமும் என்றும் நிறைந்துள்ள
கோனாட்டில் விராலி மலையில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!
மன்மத பாணமாகி, இளைஞர்களுடைய வாழ்நாளைக் கொண்டுபோய், அழகிய காதில் ஆடுகிற இரண்டு குழைகள் வரை
ஓடிச்சென்று, மேகம்போல் தவழ்கின்ற
கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று,
வாள்முனைபோல்
வலிமையும், பெருமையும் கொண்டதாய், கருநிறங்கொண்டு, கூரிய வேலின் முனைபோல், யமதூதர்களும், இறுமாப்பு நீங்க மோகத்தை விளைக்கும்
குற்றமில்லாத நீலோற்பல மலர் போன்றதாய் நடனவிதம் புரியும் கண்களையுடைய பொது
மாதரிடம், நீங்காத பழியைக்
கொண்டிருந்த மயக்கம் எனைவிட்டு அகலத்தேவரீர் என்முன் தோன்றி முன்னால் ஆட்கொண்டு
உய்யுமாறு செய்த கருணையின் வலிமையை ஒருபோதும் மறவேன்.
விரிவுரை
காமாத்திரம்
---
காம
அத்திரம். மன்மதபாணம் உயிர்களை மயக்குவதுபோல், பொது மாதர்களின் கண்கள் இளைஞர்களை
மயக்கும் வலிமையுடையது. வாழ்நாளையுண்ணும் கொடுமையுடையது.
இருகுழை
அளவு ஓடி ---
கண்கள்
நீண்டு காது வரை ஓடிப்புரள்வன.
யமதூதர்
ஏமாப்பற ---
இயம
தூதர்கள் கண்களைப் பார்த்து, இக்கண்கள் புரியும்
கொடுமைக்கு நாம் எம்மாத்திரம் என்று இறுமாப்பு ஒழிகின்றார்கள்.
ஏகாப்பழி
பூணும் மருள் அற நீ தோற்றி,
முன்
ஆளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே ---
இது
அருணகிரியாரது சரித்திரக் குறிப்பு. சுவாமிகள் உலக நெறியில் உழன்று துன்பமடைந்தபோது, முருகவேள் அவர்முன் தோன்றி
கருணைபுரிந்து ஆட்கொண்டருளினார்.
“இத்தகைய கருணைத்
திறத்தை அடியேன் ஒருபோதும் மறவேன்” என்று நன்றியுணர்வுடன் நவில்கின்றார்.
கோடாச்
சிவபூசை பவுருஷம் மாறாக் கொடை
நாளும் மருவிய கோனாடு ---
விராலிமலை
கானாட்டில் உள்ள திருமலை. அந்தக் கோனாட்டில் உள்ளவர்கள், குன்றாத சிவபூசையும், ஆண்மையும், இடையறாத கொடைக்குணங்களும் உடையவர்கள்.
கருத்துரை
விராலிமலையுறை
முருகா! உமது கருணைத் திறத்தை ஒரு போதும் மறவேன்.
No comments:
Post a Comment