அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடினதட கும்ப (குன்றக்குடி)
முருகா! மாதர் மயல் ஒழிய அருள்
தனதனன
தந்த தானன
தனதனன தந்த தானன
தனதனன
தந்த தானன ...... தனதான
கடினதட
கும்ப நேரென
வளருமிரு கொங்கை மேல்விழு
கலவிதரு
கின்ற மாதரொ ...... டுறவாடிக்
கனவளக
பந்தி யாகிய
நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
கனியிதழை
மென்று தாடனை ...... செயலாலே
துடியிடைநு
டங்க வாள்விழி
குழைபொரநி ரம்ப மூடிய
துகில்நெகிழ
வண்டு கோகில ...... மயில்காடை
தொனியெழவி
ழைந்து கூரிய
கொடுநகமி சைந்து தோள்மிசை
துயிலவச
இன்ப மேவுத ...... லொழிவேனோ
இடிமுரச
றைந்து பூசல்செய்
அசுரர்கள்மு றிந்து தூளெழ
எழுகடல்ப
யந்து கோவென ...... அதிகோப
எமபடரு
மென்செய் வோமென
நடுநடுந டுங்க வேல்விடு
இரணமுக
சண்ட மாருத ...... மயிலோனே
வடிவுடைய
அம்பி காபதி
கணபதிசி றந்து வாழ்தட
வயலிநகர்
குன்ற மாநக ...... ருறைவோனே
வகைவகைபு
கழ்ந்து வாசவன்
அரிபிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல்
கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கடின
தட கும்பம் நேர் என
வளரும் இரு கொங்கை மேல்விழு
கலவி
தருகின்ற மாதரொடு ...... உறவாடி,
கன
அளக பந்தி ஆகிய
நிழல்தனில் இருந்து, தேன்உமிழ்
கனி
இதழை மென்று, தாடனை ...... செயலாலே,
துடி
இடை நுடங்க, வாள்விழி
குழை பொர நிரம்ப, மூடிய
துகில்
நெகிழ,
வண்டு கோகிலம், ...... மயில்,காடை
தொனி எழ, விழைந்து
கூரிய
கொடு நகம் இசைந்து, தோள் மிசை
துயில்
அவச இன்ப மேவுதல் ...... ஒழிவேனோ?
இடிமுரசு
அறைந்து பூசல்செய்,
அசுரர்கள் முறிந்து தூள் எழ,
எழுகடல்
பயந்து கோ என, ...... அதிகோப
எமபடரும்
என் செய்வோம் என
நடுநடு நடுங்க, வேல்விடு
இரணமுக
சண்ட மாருத ...... மயிலோனே!
வடிவு
உடைய அம்பிகாபதி
கணபதி சிறந்து வாழ்,
தட
வயலிநகர்,
குன்றமாநகர் ...... உறைவோனே!
வகைவகை
புகழ்ந்து வாசவன்,
அரி,பிரமர், சந்த்ர சூரியர்,
வழிபடுதல்
கண்டு,
வாழ்வுஅருள் ...... பெருமாளே.
பதவுரை
இடி முரசு அறைந்து பூசல் செய் ---
இடிபோல் முழங்கும் பேரிகைளை ஒலித்து போர் செய்யும்,
அசுரர்கள் முறிந்து தூள் எழ --- அசுரர்கள்
மாண்டு துகளாகுமாறும்,
எழுகடல் பயந்து கோ என --- ஏழு
சமுத்திரங்களும் அஞ்சி “கோ” என்று ஓலமிடவும்,
அதி கோப --- மிகுந்த கோபமுள்ள,
எம படரும் என் செய்வோம் என --- யம தூதர்களும் என் செய்வோம் என்று,
நடு நடு நடுங்க --- நடுக்கங் கொள்ளவும்,
வேல் விடு --- வேலாயுதத்தை விடுத்தருளிய,
இரணமுக சண்ட மாருத --- போர்க் களத்தில்
பெருங்காற்றைப் போல் பறக்கும்,
மயிலோனே - மயில் வாகனரே!
வடிவு உடைய அம்பிகாபதி கணபதி சிறந்து
வாழ் --- அழகு நிறைந்த பார்வதி நாதரும் பொய்யாக் கணபதியும் சிறப்புடன் வாழ்கின்ற,
தட வயலி நகர் --- சக்தி தீர்த்தத்துடன் கூடிய
வயலூரிலும்,
குன்ற மாநகர் --- குன்றக்குடியிலும்,
உறைவோனே --- வாழ்பவரே!
வகை வகை புகழ்ந்து --- விதம் விதமாக
உம்மைத் துதிசெய்து,
வாசவன் --- இந்திரனும்,
அரி --- திருமாலும்,
பிரமர் --- பிரமதேவனும்,
சந்த்ரசூரியர் --- சந்திரனும், சூரியனும்,
வழிபடுதல் கண்டு --- வழிபடுவதைக் கண்டு,
வாழ்வு அருள் --- அவர்கட்கு நல் வாழ்வு
தந்தருளிய,
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
கடின தட --- வலிமையும் விலாசமும் உள்ள,
கும்பம் நேர் என --- குடத்துக்கு நிகராக,
வளரும் --- வளர்கின்ற,
கலவி தருகின்ற --- கலவி இன்பத்தைத் தருகின்ற,
மாதரொடு உறவு ஆடி --- பொது மாதர்களின் நட்பு
கொண்டு,
கன அளக பந்தி ஆகிய --- பெரிய கூந்தல்
கட்டாகிய,
நிழலில் இருந்து --- நிழலில் இருந்து,
தேன் உமிழ் களி இதழை மென்று --- தேன் துளிக்கின்ற
கொவ்வைக்கனி போன்ற அதரத்தை மென்று,
தாடனை செயலாலே --- தட்டுதல் செய்து,
துடி இடை நுடங்க --- உடுக்கை போன்ற இடை துவளவும்,
வாள் வழி குழை பொர --- ஒளி பெற்ற கண்கள் குழைகள்
வரை சென்று போரிடவும்,
நிரம்ப மூடிய துகில் நெகிழ --- நிரம்பவும்
மறைந்திருக்கின்ற ஆடை தளர்ந்து விழவும்,
வண்டு கோகிலம் மயில் காடை தொனி எழ --- வண்டு குயில் மயில் காடை என்ற
பறவைகளின் ஒலி குரலில் உண்டாகவும்,
விழைந்து கூரிய கொடு நகம் இசைந்து ---
விரும்பி கூர்மையான நகக் குறிகள் வைத்தும்,
தோள்மிசை துயில் --- அம்மகளிரின் தோன் மீது
தூங்குகின்ற,
அவச இன்பம் மேவுதல் --- மயக்க இன்பத்தை
விரும்புவதை,
ஒழிவேனோ --- ஒழிக்க மாட்டேனோ.
பொழிப்புரை
இடிபோல் பேரிகைகளைக் கொட்டிப் போர்புரியும், அசுரர்கள்
மடிந்து பொடியாகவும், ஏழுகடல்களும் அஞ்சி “கோ” என்று கதறவும், மிகுந்த
கோபமுள்ள இயம தூதர்களும் என்செய்வோம் என்று நடுக்கங் கொள்ளவும் வேலை
விடுத்தருளியவரே!
போர்க்களத்தில் பெருங்காற்றைப் போல் பறக்கும்
மயிலை வாகனமாக உடையவரே!
அழகு நிறைந்த அக்கினீச்சுரரும் பொய்யாக்
கணபதியும் சிறப்புடன் எழுந்தருளியுள்ள சக்தி தீர்த்தமுடைய வயலூரிலும், குன்றக்குடியிலும்
வாழ்கின்றவரே!
இந்திரன் திருமால் பிரமன் சந்திரன் சூரியன்
ஆகிய இவர்கள் விதம் விதமாகப் புகழ்ந்து வழிபடுவதைக் கண்டு அவர்கட்கு நல்வாழ்வு
தந்தருளும் பெருமிதமுடையவரே!
வலிமையும் விசாலமும் பொருந்திய குடத்துக்குச்
சமானமாக வளர்கின்ற தனங்களின்மேல் விழுகின்ற கலவியின்பத்தைத் தருகின்ற போது
மாதர்களுடன் நட்பு கொண்டும், பெரிய கூந்தல் காட்டின் நிழலில் இருந்து, தேன்
துளிக்கின்ற கனிபோன்ற வாயிதழைப் பருகி, தட்டுதல் செய்தும் உடுக்கைபோன்ற
இடைதுவளவும், ஒளிபெற்ற கண்கள் காதுவரை நீண்டு போரிடவும், நன்கு
மூடிய ஆடை அகலவும் வண்டு குயில் மயில் காடை என்ற பறவைகளின் ஒலியை எழுப்பவும் கூரிய
நகக் குறியமைத்தும் அம்மாதரின் தோள் மீது தூங்குகின்ற மயக்க இன்பத்தை விரும்புவதை
ஒழிக்கமாட்டேனோ?
விரிவுரை
இத்
திருப்புகழில் முதற் பகுதி மாதர் மீதுள்ள மையல் அயலாக இறைவனை அடிகளார்
வேண்டுகின்றார்
எம
படரும் என்செய்வோம் என ---
முருகப்பெருமான்
போரில் வேல் ஏவியபோது உண்டாகிய அதிர்ச்சியினால் உலகமெல்லாம் அஞ்சின, அஞ்சுவது
என்பதே அறியாத இயம படர்கள் இனி நாம் என்செய்வோம் என்று அஞ்சி நடுநடுங்கினார்கள்.
சண்ட
மாருத மயிலோனே ---
“மயில்வாகனம் பறக்கும் போது, அதன் வீலியின் காற்றினால் மகமேரு கிரி
அசைந்தது” என்கின்றார்.
“அருளிற்சீர் பொயாத கணபதி
திருவக்கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே” --- (கமலத்தேகு) திருப்புகழ்.
வடிவுடைய
அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ்தட வயலி ---
வயலி
- வயலூர். வயலூரில் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அருள்புரிந்து, திருப்புகழில்
வயலூரையும் வைத்துப் பாடு என்று அருளிச் செய்தார்.
ஒரு
தலத்தை வைத்துப்பாடு என்று இறைவன் அருளினான் என்பது வேறு எங்கேயும் எந்த
வரலாற்றிலும் இல்லாத ஒன்று.
மிகப்பெரும்
தெய்விகமுடைய திருத்தலம் வயலூர். அதனால் அருணகிரிநாதர் சென்ற சென்ற இடந்தோறும், இந்த
வயலூரை மறவாது ஆங்காங்கே நினைத்து பாடுவாராயினார். வயலூரில் சிவமூர்த்தி - அக்கினீச்சுரர்; கணபதி
- பொய்யாக் கணபதி.
“விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
அசைபடு கால்பட் டசைந்தது மேரு” ---
கந்தரலங்காரம்.
வகைவகை
புகழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ரசூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் ---
மூவர்க்குந்தேவர்க்குந்
தனிப்பெருந் தலைவர் முருகப்பெருமானே யாகும். அப்பெருமானை வானோரும் ஏனோரும் போற்றி
வழிபட்டு வாழ்வு பெறுகின்றார்கள்.
கருத்துரை
குன்றக்குடி
வாழும் குமரேசா! மாதர் மயல் அயலாக அருள் செய்வீர்.
No comments:
Post a Comment